ஆழ்மன நங்கூரங்கள்

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க

நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க

குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை

இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.

தங்கள் நலம் விழைகிறேன்.

இன்று ஒரே மூச்சில் கிண்டிலில் தங்களது “தேவதைகள்; பேய்கள்; தேவர்கள்” தொகுப்பினை வாசித்து முடித்தேன்.

கதைக்கட்டுரைகளாக விரியும் இவை ஒவ்வொன்றும் மெல்ல மனதிற்குள் தனித்தனி வரலாறாக விரிந்தன. சிதல்புற்றினைத் தன் வாழ்நாளில் கண்டிராத அச்சிறு ஜீவன்களுக்கு அவற்றைக் கட்டுவதற்கான பொறியியல் தெரிந்திருப்பது எத்தனை பெரிய குறியீடு. மீறலின் தெய்வங்கள், அவசங்களின் தெய்வங்கள், கண்ணீரின் தெய்வங்கள்.

எத்தனைத் தலைமுறைகளாய் எத்தனை கோடி கற்பனைக் காட்சிகளும் கதைத்தொடர்களும் விடாமல் ஆழ்மனத்தில் நிலைகொண்டிருக்கின்றன.

இந்த கதைகளில் பொதுவான தன்மைகள் பெரிதும் காணப்பட்டும், சில சிறிய சூழல் வளைவுகளாலேயே முற்றிலும் வேறுபட்ட கதையாகத் தெரிவதுமாய் நிறமாறிய வண்ணம் இருந்தன. பாம்பைக் கொல்லும் கீரியின் கதை எத்தனை தொன்மையானது அது மகாபாரதத்தையும் கடந்து சென்று காலத்தை அளப்பது வியப்பைத் தந்தது.

பெரும்பாலான நாட்டார் கதைகள் அறத்திற்கான தவிப்பாகவும், தவறிழைத்ததாய் அஞ்சும் மனத்தின் குற்ற உணர்வுகளாகவுமே இருக்கின்றன. பல கதைகளில் தூய உளங்கொண்ட பலரும் தான் கொல்லப்படும் தருணத்தில் வெளிப்படுத்தும் ஒற்றை வாக்கியம் அலறலாக வெளிப்பட்டு காற்றில் நிலைக்கிறது என்பது பீதிக்கு உச்சம். ‘அடப்பாவி’ ‘இப்படி பண்ணிட்டியே’ ‘ உன்ன சும்மா விட மாட்டேன்’ என்பதெல்லாம் பேய்களாக ஐம்பூதங்களை ஊடகமாக்கிச் சுழன்று திரிகின்றன. அவற்றை வணங்கும் மனம் கொண்டவர்கள் உருவான பின்னரே தெய்வங்களாக சிலைக்கின்றன.

அடுத்ததாய் வன்மக் காட்சிகள். குருதி கொப்பளிக்க தங்கள் நாவினை மாறி மாறி பிடுங்கிக் கொள்ளும் சகோதரிகளாகட்டும், நிறைசூலியின் வயிற்றைப் பிளந்து கருவைச் சிதைப்பதாகட்டும், கிணற்றுக்குள் தள்ளிவிடப்பட்டு முட்டையென உடையும் மண்டையாகட்டும் அத்தனையும் தான் நமக்கு பேய்களாய் மீள்கின்றன. கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், நம்முள் அசைந்து கொண்டிருக்கும் வன்மத்தின் பிம்பங்களே பேய்கள். அதனால்தான் அவற்றின் மீது அத்தனை நெருக்கமாய் அஞ்சமுடிகிறது. நம் நாட்டில் கலவரங்கள் நிகழ்கையில் இது போன்ற வன்முறைகள் இன்றளவும் நிகழ்வது கவனிக்கப்படவேண்டியதாகிறது. ’நானாக இருந்தால் நாக்கை பிடுங்கி கொண்டு செத்திருப்பேன்’ என்று குமுறலாய் சர்வ சாதாரணமாய் வெளிவரும் சொற்களுக்கு கூட எத்தனை ஆழமான வேர் இருக்கிறது.

தொகுவிசையிலிருந்து தன்னைத் தான் செதுக்கிக் கொண்டு முன்வரும் மதங்களில் நாட்டார் தெய்வங்களிலிருந்து தத்துவ தெய்வங்கள் வரை ஊடாடும் ஒரு பரிணாமத் தொடர்ச்சியினை வெகு தெளிவாக நோக்க முடிந்தது. திரிசிரஸின் அடிப்படை மூவிழியுடையானை எங்கும் வைத்துப் பார்க்க வழிதருகிறது. அது விழியறியா ஒரு நூல்கொண்டு அத்தனை மானுடனையும் ஒற்றைச் சரடில் கோர்க்கிறது. அற்புதம்.

இந்நூலிலிருந்து தங்களிடம் புதியதாகக் கற்றுக் கொண்டது குறியீடுகளின் வழியே நிகழும் இயக்கங்கள்தான் தெய்வங்களின் அடிப்படை என்பது. துரத்தும் நாய் விரைந்து அருகில் வரும் இருளின் குறியீடு என்பதும், வெண்காளை வெளிச்சத்தின் குறியீடென்றும், கட்டில் கூட பல மனித உணர்ச்சிப் பொருளைத் தரும் ஒன்றென்பதும் வியக்கவும் சுவாரஸ்யம் கொள்ளவும் ஆய்ந்து கவிதையுணர்வு கொள்ளவும் வழி தந்தன.

பெரும்பாலான கதைகளைப் படிக்கும் போதும் ஊடே காந்தியின் இறப்புக் காட்சி நினைவிற்கு வந்தது. தூய்மையின் குறியீடாகவும் அகிம்சை பேசுபவரையும் சுற்றி ஒரு வித வன்முறைக் கும்பல் எப்போதும் அலைந்த வண்ணம் இருந்தது.  அவர் இந்த கதைகளின் மனிதர்களைப் போல துப்பாக்கி குண்டு படுகையிலும் சபிக்கவில்லை. அறத்தை அவரே முன்வைக்கும் விதமாக அவர் நம்பிய கடவுளைத்தான் அழைத்திருக்கிறார். மூன்று குண்டுகள் தொப்புளின் மேலே, ஏழாவது நெஞ்செலும்பிடைப் பகுதி, மார்புக்காம்பிற்கு நான்கு இன்ச் வலப்புறம் என அவை பாய்கின்றன. அப்படியும் அவர் சபிக்கவில்லை.

ஆனால் உலகிற்கே குற்ற உணர்வு உருவாகிறது. வெளி நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என 3441 இரங்கற் செய்திகள் வந்து குவிகின்றன. அது மட்டுமின்றி கலிபோர்னியாவிலும் நியுயார்க்கிலும் இவர் இறப்பிற்காக அழும், இறைவனை இறைஞ்சும் பலரைப் பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அவரது இறுதி சடங்கு இந்து முறைப்பட நடைபெற்றாலும் அதை ‘இரண்டாவது சிலுவையேற்றம்’ என்று ஒரு நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். கொஞ்சமேனும் அறமூறும் மனங்களுக்கு இன்றும் காந்தி ஒரு குற்ற உணர்வூட்டும் பேயும் பரவசமூட்டும் தெய்வமும் ஆக இருக்கிறார்.

நன்றி.

தங்கள் அன்புள்ள,

கோ.கமலக்கண்ணன்.

***

நற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19
அடுத்த கட்டுரைஜெயகாந்தன் -கடிதங்கள்