மானுட உரிமைகளும் தனிமனிதர்களும்

 

பாதை பிரச்னை: பெண் தீக்குளித்து தற்கொலை – 12 பேர் மீது வழக்கு 

மேலே உள்ள செய்தியை வாசித்தபோது ஒரு வகை அமைதியின்மை ஏற்பட்டது. இத்தகைய செய்திகள் நம்மை வந்தடைந்து அடுத்த கணமே அடுத்தகட்டச் செய்திகளால் அழிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் இச்செய்திக்குள் செல்லத்தக்க ஓர் அகத்தூண்டல் எனக்கு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் எங்களூரில் ஒருகுடும்பம் இப்படி குளக்கரையில் வீடு கட்டி குடியிருந்தது. அவர்கள் ஒரு சிறுபான்மைச் சாதியினர். ஊரில் அச்சாதியில் அவர்கள் மட்டுமே. அவர்களை ஊரை விட்டு விரட்ட ஊரே இணைந்து முனைந்தது. புறம்போக்கு ஆக்ரமிப்பு என புகார்கள் சென்றன. பலவகையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவர்களின் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாதபடி குளத்தின் வரம்பில் ஒரு மதகு கட்டப்பட்டது. மூன்றாண்டுகள் போராடினர். கெஞ்சினர். இறுதியாக எங்கோ பேச்சிப்பாறைப்பக்கம் சென்றுவிட்டனர்

 

இந்தச் செய்தியும் அதையே காட்டுகிறது. அந்தப்பெண்மணி குடியிருந்தது சொந்த நிலத்தில். அவர்களின் குடும்பம் பற்றிய சித்திரத்தைப்பார்த்தால் பெண்கள் மட்டுமே உள்ள வீடு. அவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லமுடியாதபடி ஏன் சுவர் கட்டுகிறார்கள்? அத்தனை சட்டவெறி கொண்டதா நமது ஊராட்சிப்பஞ்சாயத்துக்கள்? இந்தியச் சட்டம் தெள்ளத்தெளிவாகச் சொல்லும் ஒரு நெறி உண்டு, ஒரு வீட்டுக்கோ நிலத்துக்கோ செல்லும் வழியை மறிக்க எவருக்கும் உரிமை இல்லை. தனியாருக்குக்கூட. அவர்கள் பாதை விட்டே ஆகவேண்டும். அப்படி இருக்க பஞ்சாயத்து எப்படி ஒரு இல்லத்திற்கான பாதையை மறித்தது? அந்நிலம் புறம்போக்கு என்பது தெளிவு. அங்குதான் அத்தனை குடிநீர்ப்பணிகளும் செய்யவேண்டுமா என்ன?

 

அக்குடும்பம் நீதிமன்றம் சென்றிருக்கிறது. நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன்பின்னரும் கிராமநிர்வாகம் அந்த ஆணையை கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு வழி அளிக்கவில்லை. அங்கேயே மீண்டும் கட்டுமானவேலையைச் செய்திருக்கிறார்ககள். கிராம ஊராட்சி அதை தானாகவே செய்யாது. அதிகாரிகளுக்கு  ஆதரவாக கிராம மக்கள் திரண்டிருக்கிறர்கள். அவர்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள். ஒரு குடும்பத்துக்காக மக்கள் நலனை மறுக்கக்கூடாது என்று கோரியிருக்கிறார்கள். இந்தியாவில் நீதிமன்றம் என்ன சொன்னாலும் அறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் உள்ளூர் அதிகாரிகள். அவர்களை ஆள்வது உள்ளூர் அதிகாரங்கள். அரசியல்,சாதி ஆதிக்கங்கள். கூடவே ஊர் என்னும் அதிகார அமைப்பு

 

அந்தக்குடும்பம் என்ன சாதி? பெரும்பாலும் அந்த ஊரின் பெரும்பான்மை சாதி அல்ல. அந்த ஊரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எண்ணிக்கை கொண்டவர்களாகவும் இருக்க முடியாது. ஊருக்கு வெளியே வாழ்ந்திருக்கிறார்காள். ஊரை எதிர்த்து போராடிப்பார்த்திருக்கிறார்கள். எல்லா வாசல்களும் மூடப்பட்டபோது இருவருமே தற்கொலைக்கு முயன்று ஒருவர் இறந்துவிட்டிருக்கிறார். எவ்வளவு கொடிய முடிவு. ஊர் முன் அறம்பாடி சாவதுபோல. எவ்வளவுபெரிய சத்யாக்கிரகம். ஒரு உக்கிரமான புனைவின் நிகழ்வு போலிருக்கிறது.

 

அப்பட்டமான, நேரடியான மானுட உரிமை மீறல் இது. ஆனால் செய்திகூட எப்படி கவனமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது, அதன் மொழியில் ஊர் என்னும் மாபெரும் குற்றவாளி எப்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். செய்தியை அந்த ஊரைச்சேர்ந்த செய்தியாளரே எழுதியிருக்க முடியும். அவர் எப்படி பெரும்பான்மையை பகைக்க முடியும்? இங்கே அரசியல், அரசு எல்லாமே பெரும்பான்மைக்குரியது. ஏனென்றால் அதுவே ஜனநாயக நெறி

 

இனி என்ன ஆகும்? ஒன்றுமே ஆகாது. ஒப்புக்கு போலீஸ் கேஸ். விசாரணை. சாட்சிக்கும் அந்த ஊர்தானே வரவேண்டும்? அந்த ஊரிடம்தான் அவர்கள் எவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் உள்ளது. அதைமீறி சட்டம் எதுவுமே செய்யமுடியாது. நீதி என்பது அந்த ஊரின் பொதுவான ஏற்புதான். அதற்கு அப்பால் இங்கே ஒன்றும் கிடையாது. மிக எளிதாக அந்தக்குடும்பத்தை முத்திரைகுத்தி அவதூறுசெய்து வசைபாடி கடந்துசெல்வார்கள். சென்றகாலம் என்றால் தீக்குளித்து இறந்தவர் தெய்வமாகிவிடுவார். அவருக்கு ஆண்டுக்கொரு கோழி பலி கொடுக்கப்படும். இப்போது அதுகூட இல்லை. நாம் மறக்கும் கலையை தேர்ந்துவிட்டோம்

 

இந்த வன்முறை இன்றும் தமிழகத்தில் உச்சத்தில் நிகழ்கிறது. தலித் ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறோம். அவர்கள் திரள் ஆகிவிட்டார்கள். அவர்கள்மீதான வன்முறை இன்று எளிதல்ல. ஆனால் இத்தகைய உதிரிகளை எவருமே கண்டுகொள்வதில்ல்லை. அடிப்படை மானுட உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிடுகிறது. சிறிய சாதிகள், ஊரோடு ஒட்டாத தனியர்கள் போன்றவர்களின் உரிமைக்காகவே இனி மானுடஉரிமைப் போராளிகள் பேசவேண்டும். இன்றைய சமூகத்தில் முற்றாகவே கைவிடப்பட்டவர்கள் இவர்கள்தான். அவர்களுக்கு ஓட்டுவல்லமை இல்லை. ஆனால் அவர்களின் உரிமைகள் பேணப்படும்போதே நாம் மெய்யான நவீன சமூகமாக ஆகிறோம்.

முந்தைய கட்டுரைஅமேஸான் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-15