அமேஸான் – கடிதம்

 

அமேசான்

இனிய ஜெயம் ,

அமேசான் அதிருஷ்ட போட்டி மீதான உங்கள் பதில் கண்ட எதிர்வினைகளை மூன்று வகைமையின் கீழ் தொகுக்கலாம்.

ஒன்று. அப்படியெல்லாம் அமேசான் வந்து இலக்கியத்தை அழித்து விடாது. ஆசான் சூழல் தன்னை திரும்பி பார்க்க வைக்க தனது பெட் தியரியை பேசுகிறார். அவரே தேவை டான் ப்ரௌன்கள் என எழுதியவர்தான்.

இரண்டு. இணையவெளி உருவாக்கிய புரட்சிகளில் ஒன்று இத்தகு ‘அளவுகோல்களை’ முன்வைக்கும் ஆண்டைகள் வசமிருந்தது அது இலக்கியத்தை ஒடுக்கப்பட்ட வர்க்கம் நோக்கி திருப்பியது. முகநூல் பதிவர்களையும் வாசகர்களையும் அமேசான் போட்டியையும் கண்டு இலக்கிய ஆண்டை ‘நடுங்குவதன்’ வெளிப்பாடு இந்த பதில்.

மூன்று. முகநூல் அமேசான் உட்பட இந்த வெளிகள் யாவும் இன்றைய சூழலின் வெளிப்பாடு. இலக்கியவாதி இங்கேயும் இலக்கியவாதியாக இருந்துகொள்ள வேண்டியதுதான். இன்றைய சூழல் சார்ந்த ஆசானின் பயமே இந்த பதில்.

இந்த மூன்று நிலைபாடுகளிலும் ஒரு அடிப்படை அம்சம் அவை எழுத்தாளராகிய உங்களை நோக்கி என்பது. நீங்கள் பேசியது ஒரு சூழலை குறித்தும் அதில் இலக்கியவாதிகள் நிற்க வேண்டிய எல்லை குறித்தும். சூழல் சிக்கலை அப்படியே மழுங்கடித்து விட்டு எதிர்வினைகள் எழுத்தாளரை நோக்கி குவிகிறது.

முதல் நிலைப்பாட்டுக்கு நீங்கள் முன்னரே பலமுறை விரிவான பதில் சொல்லி இருக்கிறீர்கள். தொடர் வாசிப்பின் வழியே தனது ரசனையை வளர்த்துக் கொண்டு,அந்தக் கூருணர்வின் வழிகாட்டலின்படி தீவிர இலக்கிய வாசிப்பு நோக்கி ஒருவர் வரும் [முன்பிருந்த] சூழல் இன்று இல்லை. காட்சி ஊடகமும் மொபைலும் கணிப்பொறியும் நட்பு சமூக களங்களும் இன்று அந்த படிநிலை வளர்ச்சிக்கான சூழலை இல்லாமல் செய்துவிட்டன. தீவிர வாசகர் என ஒருவர் உணரவும், தீவிர இலக்கியம் அது உருவாக்கும் கலாச்சாரத் தாக்கம் நோக்கிய,அதற்கான செயற்களத்தில் இயங்கவும் க.நா.சு காலம் போல, அந்த விமர்சன மரபு உருவாக்கியதைப் போல இன்று மிகக் கறாரான வரையறை தேவை. இல்லாவிட்டால் என்னாகும். உதாரணமாக நாளையே இந்த அமேசானிய மற்றும் முகநூல் கவிக்கள் எழுத்தாளர்களை கூட்டி சாகித்ய அகாடமி உடன் இணைந்து எவரேனும் ‘இலக்கியக்’ கூட்டம் நடத்தி ஜனநாயக புரட்சிக்கு வித்திடும் சூழல் உருவாகும்.

இப்போதும் தமிழுக்கு டான் ப்ரௌன்கள் தேவைதான். ‘சும்மா’ வாசிப்பு சுகத்துக்காக படிக்கலாம் என ஒரு பெட்டிக்கடை ஓரம் நின்று தொங்கும் கதைப் புத்தகங்களை பார்த்தால். எல்லாம் பெண்களுக்கான குடும்ப நாவல்கள். ரமணி சந்திரனை பின்னுக்கு தள்ளி நன்கு விற்கும் பல குடும்ப நாவல் எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். ஆண்களுக்குத்தான் எவருமே இல்லை. ராஜேஷ் குமார் விடாபிடியாக எழுதிக்கொண்டு இருக்கிறார். சுபா பிகேபி நாவல்கள் மறுபதிப்பு மட்டுமே கிடைக்கிறது. எல்லாமே தொன்னூறுகளில் நின்று விட்ட கதை சொல்லல் பாணி.

டான் ப்ரௌனின் இன்பெர்னோ வாசித்தேன். பதிமூன்றாம் நூற்றாண்டு இத்தாலியில் சுழலும் விஞ்ஞானப் புனைகதை. மறுமலர்ச்சி கால கலைகள் இலக்கியம் இவற்றை புதிர்க்களங்களாக கண்டு அவற்றில் லாங்டன் விடைகளை கண்டு சதியை முறியடிக்கும் கதை. இந்த நாவலின் ஹைபர் டெக்ஸ்ட் மின்னூல் ஒன்றை இதற்காகவே ரசிகர் ஒருவர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவல் சுழலும் களங்கள்,பேசும் இலக்கியம், சூழல் எல்லாம் அந்த தருணத்திலேயே சொடுக்கி, யு ட்யுப் இல் இணைய வெளியில், அதற்கான பின்னணியை முழுமையாக அறிந்து கொள்ளலாம். எத்தனை பெரிய சாத்தியம். பொன்னியின் செல்வன் இந்நேரம் இந்த சாத்தியத்தை பயன்படுத்தி புதிய வாசக பரப்பை அடைந்திருந்தால் இங்கே கேளிக்கை இலக்கியம் என்ற ஒன்று இன்னும் உயிர் கொண்டு உலவிக்கொண்டிருக்கிறது என சொல்லலாம். நிலவரம் நேர் தலைகீழ். இன்றைய இருபது வயதில் கதை படிக்கும் வழக்கம் கொண்ட ஒருவர் பொன்னியின் செல்வன் வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை.காரணம்g o t போதை. ஆக இங்கே இன்று டான் ப்ரௌன் தேவை. அதற்கு வாசகர்களும் தேவை.அது தீவிர இலக்கியம் இல்லை எனும் சொரணையும் அவர்களுக்கு தேவை.

இரண்டாவது நிலைக்கு இந்த வர்க்க பேத அரசியல் கதைஞர்கள் இந்த அமேசான் கேளிக்கையில் வெல்லும் கதைகளை எழுதிய பிறகே ஏதேனும் சொல்ல இயலும். இதில் பாதி எழுத்தாளர்கள் பேனாவை தூக்கி எறிந்துவிட்டேன். ஏந்திய துப்பாக்கிக்கு எதிரே [இதோ என் நெஞ்சு] உயிர் கொடுக்கப் போகிறேன். களப்பணியில் என் உயிர் போகட்டும் என்று திங்கள் காலை முகநூல் ஸ்டேடஸ் போடுவார். வியாழக் கிழமை அரசியல் கவிதை ஒன்றை போட்டுவிட்டு லைகுசுக்கு தேவுடு காத்துக்கொண்டு இருப்பார். மார்க்கு முதலாளி கோடிகளில் சம்பாதிக்கும் அவரது முகநூல் திண்ணையில் போய் அவரது வாடிக்கையாளராக இருந்து கொண்டு வர்க்க பேதத்தை ஒழிக்கப் புறப்பட்டுவிட்ட இந்த புரட்சியாளர்களை கண்டால் எல்லா ஆண்டைகளுக்கும் பயந்து வருவது இயல்புதானே :)

மூன்றாவது சூழல் நிலை கொஞ்சம் விசித்திரமானது. போகன் முகநூலில் சிக்சர் அடித்துக் கொண்டிருப்பவர். அவரது நல்ல கவிதைகளுக்கு, நல்ல எதிர் வினை தேவை எனில் அதை வாசிக்க அவர் முக நூலில் இருந்து வெளியேதான் செல்ல வேண்டும். இன்றைய சூழல் சார்ந்து முகநூல் களத்தில் அவர் ஒரு விவாத சூழலையும் உருவாக்கிப் பார்த்தார் [ எம் டி எம் என்றொரு சிவில் எஞ்சினியர் உடன் அவர் விவாதித்ததாக நினைவு] . கொஞ்ச நாள் முன்பு தடம் இதழில் கவிஞர் சபரிநாதன் முன்வைத்த கருத்தை ஒட்டி அவரது சமகால கவிஞர்கள் வெயில் தலைமையில் முகநூலில் ஒரு விவாதம் நிகழ்த்தியதாக குறிப்புகள் தெரிவிகின்றன .[பங்கு கொண்ட எவரது முகநூல் சுவற்றிலும் இருந்த அந்த விவாதம் ‘காணாமல் போய்விட்டது’ என்று அவற்றை எனக்கு சுட்டி அளிக்கும் தோழி தெரிவித்தார்]. சுரா எழுதிய பிள்ளை கெடுத்தாள் விளை கதைகளுக்கான அத்தனை எதிர்வினைகளும் அதற்க்கு சுராவின் பதிலும் தொகுக்கப்பட்டு அன்றெல்லாம் ஒரு நூலே வெளியானது.

ஆக சூழல் நிதர்சனம் இதுதான். அமேசானும் கிரிகெட்டும் [மயிரை சுட்டு கறியை அள்ள பாத்த கதையா இந்த கிரிக்கெட் பத்தி மட்டும் எவ்ளோ எழுதப்பட்டு, பட்டுகிட்டும் கிடக்கு ] பிக்பாசும் got யும் செயல்படும் களம் வேறு. அதன் தேவையும் இலக்கும் வேறு. தீவிர இலக்கியம் எனும் பண்பாட்டுக் களம் வேறு. இந்த வேறுபாட்டை நீங்கள் கூவிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைமும்மொழி- கடிதம்
அடுத்த கட்டுரைமானுட உரிமைகளும் தனிமனிதர்களும்