முற்றழிக!

கீழ்க்கண்ட செய்தியை வாசிக்கையில் அட்லாண்டாவில் இருந்தேன். ஒரு கணத்தில் குமரிநிலத்திற்குத் திரும்பி மீண்டேன். அலையலையாக நினைவுகள். வெவ்வேறு எண்ண ஓட்டங்கள்.

`தங்கத்துக்குப் பதில் தகரம்’ – திருவட்டார் கோயில் திருட்டு வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு

 

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமணத்திற்காக குலசேகரம் சென்றிருந்தேன். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் நடுவே ஒரு கிசுகிசுச் செய்தி பரவியது. அவர்களில் ஒருவர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நகைக்கொள்ளை செய்தவரின் நெருக்கமான உறவினர். அனைவரும் அவரையே நோக்கினார்கள்.அவர் அருகே நின்றவர்கள் ‘சோலி கெடக்கு’ என்ற பாவனையில் விலகினார்கள். அவர் தன்னந்தனியாக நின்றார், அரைமணிநேரத்தில் கிளம்பிச் சென்றார்.

 

27 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டார் ஆதிகேசவன் கோயிலில் திருட்டு நிகழ்ந்த செய்தி வந்தது. அப்போது நான் தர்மபுரியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். என்னை நிலைகுலையச் செய்தது அச்செய்தி. திருட்டு மட்டும் அல்ல. திருட்டுதான் எல்லா ஆலயத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறதே. ஆதிகேசவப்பெருமானின் நெஞ்சிலும் தலையிலும் இருந்த பொன்னாலான கவசங்கள் திருடப்பட்டு மாற்றாக தகரம் அறைந்துவைக்கப்பட்டது என்னும் செய்தி. தகரடப்பா சூடி கிடந்த பச்சைமாமலைபோல் மேனியை என்னால் என் சிந்தையிலிருந்து விலக்கவே முடியவில்லை. அது ஒரு குறியீடாகவே தோன்றியது

 

அன்று விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்தேன். விஷ்ணுபுரத்தின் முன்னுதாரணமான ஆலயம் திருவட்டாறு. மூன்று கருவறைகளை நிறைத்துக் கிடந்த மண்ணளந்த விண்பேருருவம். நினைக்க நினைக்க என் கண்களுக்குள் வந்துகொண்டிருந்தது பொன்மின்னும் திருமேனிதான். அன்றெல்லாம் இப்போதுபோல நாளும் ஆலயத்தின் மூன்று வாயில்களும் திறப்பதில்லை. மையக்கருவறை மட்டுமே திறந்திருக்கும். அங்கிருக்கும் வெண்கலச்சிலைக்கு மட்டுமே பூசனை நிகழும். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே மூன்று வாயில்களும் திறக்கும்

 

அன்று முதற்புலரியில் பெருமாளை பார்க்க முந்தையநாள் உச்சிவெயிலிலேயே வரிசையில் நிற்பார்கள். முழு இரவும் நின்று முதற்காலையில் ஆலயத்துக்குள் நுழைந்து கருவறை முகப்பை அடைவார்கள். கருவறைக்குள் நிறைந்து இருளுக்குள் இருள் என கிடக்கும் பெருமானின் உருவைக் காண்பார்கள். ஒருசில கணங்கள்தான் நின்றிருக்க முடியும். கண் திறந்து நோக்கி உளம் நிறைத்துக்கொண்டு அகன்றுவிடவேண்டும். அது ஒருவகை கனவு.

 

நான் பாட்டியுடன் சென்று நாலைந்து முறை ஆதிகேசவப்பெருமாளைப் பார்த்திருக்கிறேன். ’கும்பிடு கும்பிடு’ என்று பாட்டி சொல்வார்கள். எங்கே எங்கே என்று விழி பதைத்து அலையும். ஒன்றுமே தென்படாது. இருட்டு, அதற்குள் சில ஒளிபரப்புகள். சட்டென்று கரிய பேருரு கண்முன் வடிவம் கொள்ளும். ஒரு திடுக்கிடல்போலிருக்கும் அந்தக் கணக்காட்சி. ஐயமறச் சொல்வேன், இந்தியாவில் இன்றிருக்கும் மிகமிக அழகிய சிலை அதுதான். கருமையில் எழுந்த கருமை. மூக்கின் அற்புதமான குழைவு. கன்னங்களின் ஒளி. புன்னகையோ என மயங்கச்செய்யும் உதட்டுக்குவிவு

 

அடுத்தகணம் விலகிவிடவேண்டியிருக்கும். இன்னொரு கணம் அமைய ஓராண்டு காத்திருக்கவேண்டும். ஆனால் அந்தக்கணத்தில் கண்ட அளவுக்கு நான் பலமணிநேரம் அச்சிலைமுன் நின்றிருந்தபோது கண்டதில்லை. கனவில்தான் காலம் செறிந்து கணமென்றாகிவிடுகிறது. ஒரு முழு ஆண்டும் ஒரு கணமாக ஆகும் நிலை. கண்களுக்குள் வைத்து தைக்கப்பட்டதுபோல் இருக்கும் அக்காட்சி. ஐயோ, மறந்துவிட்டோமோ என உள்ளம் பதைக்கும். அந்த அச்சம் வந்துவிட்டால் அதன்பின் அக்காட்சி தெளியாது. தொட்டுத்தொட்டுத்தேடுந்தோறும் மேலும் மறையும் ஆனால் பின்னர் எண்ணியிராக்கணத்தில் கண்முன் என தோன்றி நின்றிருக்கும்.

 

அவ்வுருவுடன் நான் வளர்ந்தேன். அது என்னை இன்றும் ஆட்கொண்டிருக்கிறது. என் தலைமுறைகளையும் ஆட்கொள்ளும். என் மகன் அந்த உருமுன் சொல்லிழந்து நின்றிருப்பதைக் காண்கிறேன். அது அங்கிருக்கும். நாங்கள் தோன்றி மறைந்துகொண்டிருப்போம். அது ஒரு மகத்தான கலைஞனின் கனவினூடாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. ஒரு கலைக்கணம். ஒரு விண்திறப்பு. ஓர் உச்சவெளிப்பாடு

 

கொள்ளையடித்தவர்கள் அச்சிலைமேல் ஆணி அறைந்து தகரத்தை பதித்தனர். அதிலிருக்கும் ஈவிரக்கமில்லாத சூறையாடல் நாம் இன்று ஒவ்வொரு தளத்திலும் செய்துகொண்டிருப்பது. மகத்தான அனைத்திற்கும் நாம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். இன்றைய இந்தியா அதன் மாபெரும் மரபுக்குச் செய்யும் இழிவின் அடையாளம் அந்த தகர டப்பா

 

அச்செய்தியில் இருந்து என்னால் வெளியேறவே முடியவில்லை. இன்று இத்தனை ஆண்டுகளுக்குப்பின், இத்தனை தொலைவில் இருக்கையிலும் என் கை பதறுகிறது. நான் அந்த வாயில்முன் நின்று நான் பிறந்த இந்தக் காலத்தின்பொருட்டு, என் சூழலின்பொருட்டு மன்னிப்பு இரந்திருக்கிறேன். அந்தப்பேருரு அங்கிருக்கும், மானுடர் தங்கள் சிறுமைகளுடன் தோன்றிக் கடந்துசெல்வார்கள் என்று உளம்நிறைந்திருக்கிறேன். ஆயினும் உள்ளம் எழுந்து அலைகொள்கிறது

 

இருபத்தேழு ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கிறது சட்டம் அவர்களை தண்டிக்க. தண்டிக்கவே தண்டிக்காது என்றுதான் நான் எண்ணியிருந்தேன். இன்னும்கூட அவர்கள் தப்பிவிட வாய்ப்பு மிகுதி. சட்டச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்யலாம். இருபத்தேழாண்டுக்காலம் ஏன் அவர்கள் தண்டிக்கப்படவில்லை? ஏனென்றால் அவர்கள் செய்த அச்சிறுமையை நம் சூழலே எவ்வகையிலோ பகிர்ந்துகொள்கிறது.

 

ஆகவேதான் அன்று, அத்திருட்டுக்குடும்பத்தின் ஓர் உறுப்பினரை கண்டதும் உடல் எரிந்தேன். அவன் குடியும் அவனுடைய தலைமுறைகளும் முற்றழியவேண்டும் என உளம்பொங்கித் தீச்சொல்லிட்டேன். என் எல்லைகள் எனக்கு தெரியும். எளிய மானுடன். ஆனாலும் இக்கைகளால் எழுதுகிறேன். இவ்வுள்ளத்தால் அழியாச் சொற்கள் சிலவற்றை உருவாக்கியிருப்பேன் என்றே நம்புகிறேன். இந்தத் தண்டனைச் செய்தி வந்தபின்னரும் என்னால் இதையே சொல்ல முடிகிறது. இதைச் செய்தவர்கள், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் குடியுடன் குலத்துடன் முற்றழியவேண்டும் . அவர்களின் ஒரு துளிக்குருதியேனும் கொண்ட அனைத்துத் தலைமுறைகளுக்கும் இப்பழி செல்லவேண்டும்.

அனந்தபத்மநாபனின் இன்னொரு செல்வம்

நஞ்சின் மேல் அமுது

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

ஆதியும் அனந்தமும்

திருவட்டார், கோயில்கள் – கடிதங்கள்

எவருக்காக விளக்குகிறோம்?

முகிலன் மண்டபம்

முந்தைய கட்டுரைஃபாசிசம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-13