தினமணி- கடிதங்கள்

தினமணியும் நானும்

வணக்கம் ஜெ,

தினமணி எங்கள் வீட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, என் தாத்தா காலத்தில் இருந்து, வந்துகொண்டிருக்கிறது. அன்று தமிழ் நாளிதழ்கள் அவ்வளவாக இல்லை. இப்போது நிறைய இதழ்கள் வருகின்றன. இருப்பினும் தினமணியின் சிறப்பு அதன் மொழிநடை. தற்போது ‘தமிழ் இந்து’ உருவாகி வருகிறது. இவையிரண்டையும் தாண்டி ஏனைய பத்திரிக்கைகள் டீக்கடை வாசகர்களை திருப்தி செய்யும் மொழியிலேயே வருகின்றன. டீக்கடைகளில் தினமணி சீண்டப்படுவதில்லை. ‘தினமணி தான் ஒழுங்கா போடுறான்’ என்று என் ஐயா அடிக்கடி சொல்வார். இன்று தினமணியில் பல மாற்றங்கள் வரவேண்டும் என்று கருதுகிறேன். குறிப்பாக அவற்றின் நடுப்பக்க கட்டுரைகள், துணை இதழ்களின் கட்டுரைகள் போன்றவைகளில்… தினமணி வலதுசாரி சாயல் கொண்டது. அதில் தவறில்லை. அந்தத் தரப்பிலும் கூட அறிவியக்கத் தன்மையுடனும், கூரிய விமர்சனங்களுடனும் கட்டுரைகள் வர வேண்டும்.

நான் நெல்லை.சு.முத்து, ஆர்.எஸ்.நாராயணன், கோபாலகிருஷ்ணன், ஜோதிர்லதா கிரிஜா, கோதை ஜோதிலட்சுமி போன்றோர்களின் கட்டுரைகளை விரும்பி வாசிப்பதுண்டு. இலக்கியங்களும் அறிவுத்தரப்பு உரையாடல்களும் இனி அதிக அளவு வரவேண்டும் என்று எண்ணுகிறேன். இந்துத்துவத் தரப்பிலேயே கூட அர்ஜுன் சம்பத் போன்றோர்களின் கட்டுரைகளே வருகிறது. அதே வேளையில் அரவிந்தன் நீலகண்டன் போன்றோரின் கட்டுரைகளும் வரவேண்டும். ‘தமிழ் இந்து’வின் கருத்தியல் தரப்புக்கு வலுவான மாற்றுத் தரப்பாக தினமணி உருவாகி வரவேண்டும். அதற்கு அது சற்றேனும் மறுகட்டமைப்பு செய்யப்படுவது அவசியம். இல்லையேல், தினமணி பணி ஓய்வு பெற்ற ‘மூத்தோர்களுக்கான’ பத்திரிக்கையாகவே எஞ்சிவிடும்.

விவேக்

***

அன்புள்ள ஜெ

தினமணி குறித்த உங்கள் குறிப்பு சுவாரசியமாக இருந்தது. தினமணியை உங்களைப் பாதித்த மூன்று ஆளுமைகளைக்கொண்டு மதிப்பிட்டிருக்கிறீர்கள்.அவர்காள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் சுருக்கமாகச் சொல்லியிருப்பது முக்கியமானது. சிவராமன் அவர்கள் ஒரு ஜனநாயக அரசியலை அறிமுகம் செய்தார். ஐராவதம் அவர்கள் நவீனச் சிந்தனைகளையும் இலக்கியத்தையும் கொண்டு வந்தார். சம்பந்தம் அவர்கள் ஒரு ஜனநாயகவெளியாக தினமணியை மாற்றினார். தினமணி தமிழில் நிகழ்ந்த ஓர் அறிவியக்கம் என்பதில் ஐயமில்லை

சந்தோஷ்

****

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18
அடுத்த கட்டுரைசென்னையில் வாழ்தல்- கடிதம்