«

»


Print this Post

அசோகமித்திரனும் சாதியும்


[email protected] என்ற மின்னஞ்சலில் இருந்து இந்தக் கட்டுரைக்கான இணைப்பு என் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இது ஒரு போலி முகவரி என்பதில் ஐயமில்லை. இந்த முகவரியை இவ்வாறு சில நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்குவதும் உண்டு. இந்தக்கட்டுரையை எனக்கு அனுப்பியவர் கூடவே எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடிதத்தின் தலைப்பு ‘நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும்’ என கட்டுரையாசிரியரின் ஒருவரியாக இருந்தது.

 

என் கவனத்திற்கு இதைக்கொண்டு வருவதில் இருந்தே இவருடைய நோக்கத்தை ஊகிக்க முடியும். சிலசமயங்களில் பிராமணர் என தோன்றும்படி போலியான முகவரி உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கூகிள் புரஃபைலில் சென்று பார்த்தால் அது போலி முகவரி என மிக எளிதாக காணமுடியும்.

“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்

 

மு.வி.நந்தினி என்னும் இந்தப்பெயரை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அந்தப்பெயரை அடித்து தேடி அவர் எழுதிய சில கட்டுரைகளை வாசித்தேன். இனி எக்காலத்திலும் இந்தப்பெயர்கொண்டவரிடமிருந்து எதையும் அறிவார்ந்தோ, கலைசார்ந்தோ எதிர்பார்க்கவேண்டியதில்லை என தெளிந்தேன். பயிலாமை, அறியாமை இருவகை. ஆர்வம் என்னும் கூறு சற்றேனும் இருந்தால், தன் அறியாமை குறித்த புரிதல் சற்றேனும் இருந்தால் எதிர்காலத்தில் எதையேனும் அறிந்துகொள்ள வாய்ப்புண்டு. இவருடைய எழுத்துக்களில் இருப்பது அனைத்தறிந்து தெளிந்த பாவனை. அது இன்றிருக்கும் நிலையில் எதிர்காலம் முழுக்க நிறுத்தி வைத்திருக்கும்.

 

இத்தகைய அறிவுத்தரம் கொண்ட ஒருவர் ஏன் அசோகமித்திரனைச் சந்திக்க சென்றார் என்பதே ஆச்சரியமானது. இவர் சென்றதுமே அசோகமித்திரன் எச்சரிக்கை அடைந்ததில் ஆச்சரியமில்லை. அவர் சிறியபறவைகளுக்குரிய பாதுகாப்பின்மையும் எச்சரிக்கையுணர்வும் கொண்டவர். இவருடைய நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உடனடியாக உணர்ந்திருப்பார். முழுக்கமுழுக்க அவதூறுகளும் காழ்ப்புகளும் திரிப்புகளும் கொண்ட இவருடைய இப்போதைய எழுத்துக்களைப் பார்க்கையில் அசோகமித்திரன் எப்படி முன்னுணர்ந்தார் என்னும் ஆச்சரியமே ஏற்படுகிறது. கிழம் பொல்லாதது, நமக்குத்தான் அத்தகைய கூருணர்வு வாய்ப்பதில்லை.

 

அசோகமித்திரன் சாதிய நோக்கம் கொண்டவரா? நானறிந்தவரை அல்ல. அவரை இன்றைய முற்போக்காளர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். மரபான பார்வை கொண்டவர்தான். ஆனால் ஆசாரவாதி அல்ல. மானுடரிடையே பேதம் பார்ப்பவர் அல்ல. அவர் பார்க்கும் பேதம் ஒன்று உண்டு, அவருடைய பார்வையில் அத்தனை ஏழைகளும் ஒன்றுதான். அவர்கள் கஷ்டப்படுபவர்கள், போராடிக்கொண்டிருப்பவர்கள், ஆகவே அவரைப்போன்றவர்கள். அவர்களின் சில்லறைத்தனம் அவருக்குத் தெரிந்தாலும் அதை பொருட்படுத்தமாட்டார். அதேசமயம் அத்தனை பணக்காரர்களும் அவரை எச்சரிக்கை கொள்ளச் செய்வார்கள். அவர்களை அவர் நம்புவதில்லை. அணுகுவதுமில்லை இரண்டுக்குமே ஓரிரு சொந்த அனுபவங்கள் எனக்கு உண்டு

 

நான் அவரைச் சந்திக்கச் சென்ற காலகட்டத்தில் எல்லாம் என்னுடன் இருந்தவர்கள் என் அன்றைய வடசென்னை நண்பர்கள். பலர் தலித் சாதியினர். எவரிடமும் அவர்கள் என்ன சாதி என அவர் கேட்டதில்லை. எனேன்றால் அவர்கள் என்னுடன் வந்தார்கள்.  இலக்கியம் பற்றிப் பேசினார்கள். அவர்களில் ஒருவருக்கு குடும்பத்தில் ஒரு சிக்கல், வெளியே விவாதிக்கமுடியாதது. என்ன செய்வது என என்னிடம் கேட்டார். நான் அசோகமித்திரனிடம் சொல்லும்படிச் சொன்னேன். அவர் எப்போதுமே முதிர்ந்த லௌகீகவாதி. லௌகீகமான ஆலோசனையை விரிவாகச் சொன்னார்.

 

இலக்கியச்சூழலில் எத்தனைபேருக்கு அசோகமித்திரனிடம் அணுக்கமான உறவு இருந்திருக்கும். எவரெல்லாம் அவரை நேரில் சந்தித்திருப்பார்கள். அவர்குறித்து இவ்வண்ணம் ஒன்று எழுதப்பட்டிருக்கிறதா? அவர் சாதிபார்த்தார், பேதம் பேணினார் என்று. [ஆனால் மூச்சிளைப்பின் எரிச்சலில் அவர் கடுகடுத்தது பலருக்கு அனுபவமாகியிருக்கும். எனக்கும்தான்] மாறாக, அவரால் ஆதரிக்கப்பட்ட எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பலருக்கு தனிவாழ்க்கையிலும் அவர் உதவிசெய்யும் மூத்தவராகவே திகழ்ந்திருக்கிறார். வருடைய கதைகள் காட்டுவது அனைத்து ஏழைகளையும் தானே என்று எண்ணும் ஒரு கருணைமிக்க உள்ளத்தை.

 

எனில் இலக்கியச்சூழலில் சற்றும் இல்லாத இந்த உளப்பதிவு எதனால் உருவாக்கப்பட்டு பரப்பப் படுகிறது? இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத ஒரு கூட்டம் இதை ஏன் செய்கிறது? சரி, சாதி கேட்டார் என்றே கொள்வோம். உடனே இப்படி ஒரு உளப்பதிவை அடையும் அளவுக்கு என்னவகையான கசப்பு சேர்க்கப்பட்டிருக்கிறது? ஜெயகாந்தன் பேசி முடித்ததுமே ஈவேரா அவர்கள் ‘தம்பி என்ன ஆளுங்க?” என்றுதான் கேட்டார் என பதிவாகியிருக்கிறது. ஜெயகாந்தனேகூட அவ்வாறு கேட்டதுண்டு. சென்றதலைமுறையில் பலர் அவ்வாறு கேட்பதுண்டு.

 

சுரதா என்னிடம் பேசிய முதல் சொற்றொடரே ‘தம்பி என்ன ஆளு?’ என்பதுதான். நான் சொன்னதுமே ‘மலையாளத்தானா?” என்றபின் பேச ஆரம்பித்தார். அவரிடம் எந்த விலக்கத்தையும் நான் பார்க்கவில்லை. அதைவிட முக்கியமானது அதற்குப்பின் அவர் ஜாக்கிரதையாகி மலையாளிகள் மேல் அவருக்கிருந்த விமர்சனங்களையும் சொல்லாமல் தவிர்க்கவில்லை என்பது. அப்படி சென்றதலைமுறை தமிழறிஞர்களில் என்னிடம் சாதிகேட்டு தெரிந்துகொண்டவர்களின் நீண்ட பட்டியலை நான் அளிக்கமுடியும்.

 

இலக்கியவாசகன், இலக்கியச்சூழலினூடாக அசோகமித்திரனை தனிப்பட்டமுறையில் அறிந்தவன் இந்த அவதூறைப் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் புதியவாசகர் சிலரை இத்தகைய பிரச்சாரங்கள் அசோகமித்திரனிடமிருந்து விலக்கிவிடக்கூடும். அவர்களில் ஒருசிலர் நல்ல வாசகர்களாகவும் இருக்கக்கூடும். அது அவர்களுக்கு இழப்பாக அமையலாம். ஆகவேதான் இந்தக்குறிப்பு.மற்றபடி இந்தக்கும்பலுக்கும் நமக்கு என்னதான் பொதுவாக இருக்கமுடியும்?

 

பிகு: ஆனால் எனக்கு இப்பேட்டியில் ஆர்வமூட்டியது அசோகமித்திரன் தன் எழுத்துக்கள் பற்றி வி.எஸ்.நைபால் சொன்னதைக் குறிப்பிடும் இடம். அசோகமித்திரன் பொதுவாக தன் எழுத்துக்களை தானே மிகவும் குறைவாக, சாதாரணமாகச் சொல்லக்கூடியவர். எந்த வகையிலும் தன்னை முன்னிறுத்திப் பேசாதவர். இதை ஒரு வகை உயர்பண்பாகவே பலர் எண்ணுவதுண்டு. எழுத்தாளர்கள் அவ்வாறு ‘அடக்கமாக’ இருக்கவேண்டும் என்று அவர்கள் போதனை செய்வதுமுண்டு.

 

உண்மையில் எழுத்தாளர்களுக்கு அவர்களின் எழுத்து பற்றி தன்னம்பிக்கையே இருக்கும் என்பது என் எண்ணம். அவ்வாறு இல்லையேல் அவன் நல்ல எழுத்தாளன் அல்ல. அதைச் சொல்லவேண்டாம் என்று அவர்கள் எண்ணலாம்.சொன்னால் எழும் எதிர்வினைகளை எண்ணி சலிப்புற்றிருக்கலாம். அகத்தே தன் நல்லஎழுத்துக்களை தானே கொண்டாடுபவனாகவே அவன் இருப்பான்.

 

கூடவே தன் தோல்விகள், எல்லைகள் குறித்த ஒரு போதமும் அவனுக்கு இருக்கும். ஆனால் தன் எல்லைகளைப்பற்றி எழுத்தாளன் பேசமாட்டான். அவற்றை கடந்துவிடுவோம் என நம்பிக்கொண்டிருப்பான். இனிமேல் எழுத்தில் முன்னகரே போவதில்லை, எழுதப்போவதில்லை என உணர்ந்தபின் அவன் அக்குறைகளையும் சொல்லிவிடக்கூடும்.

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/126259