அன்புள்ள ஜெ,
நலமா, நான் நலம்.சிறிது நாட்களுக்கு முன்பு இலக்கிய அமைப்புகள் பற்றி கலைச்செல்வி எழுதிய கடிதம் ஒன்று உங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. கலைச்செல்வி எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் அந்த கடிதத்தில் கலைச்செல்வி பதிவு செய்திருக்கும் வாசகசாலை என்கிற இலக்கிய அமைப்பு பற்றி மட்டும் எனக்கு நிறைய முரண்பாடுகள் உள்ளது. இந்த அமைப்பை ஆரம்ப கட்டத்திலிருந்து கூர்ந்து கவனித்து வருகிறேன். தீவிர இலக்கிய அமைப்பாக தன்னை ஊர் ஊராக பறைச் சாற்றிக் கொள்ளும் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு தயவு செய்து ஒருமுறை போய் வரவும். அதன் பிறகு நீங்களே அவர்களை எதிர்த்து எழுத ஆரம்பித்து விடுவீர்கள். அவ்வளவு மேசமான இலக்கிய உளறல்கள்.
ஒரு நிகழ்ச்சியில் அசோகமித்ரன் சிறுகதை மற்றும் பட்டுகோட்டை பிரபாகர் சிறுகதை. நிகழ்வில் பேசும் இலக்கியம் பேச்சுகளில் எந்த வித அர்த்தமும், இலக்கிய கற்றல்களும் சுத்தமாக இல்லை. அவை வேறும் வம்பு பேச்சுகள், ஆரம்ப காலத்தில் சென்னையில் சில கூட்டங்களுக்கு போய் வந்த நான் பின்பு போவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன் காரணம் அங்கு பேசுவது வேறும் அரட்டைகள் இவற்றிலிருந்து கற்றுக் கொள்ள எதுவுமில்லை என்பது என் கருத்து. கடைசியாக நான் வைக்கும் கோரிக்கை தயவு செய்து விஷ்ணுபுரம் மாதிரியான நல்ல இலக்கிய அமைப்புகளை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த சொல்லுங்கள்.
சில மேசமான அமைப்புகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து தயவு செய்து தமிழ் இலக்கியத்தை மீட்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்.
தேவி ஸ்ரீராம்.
அன்புள்ள தேவி ஸ்ரீராம்
நீங்கள் எழுதிய கடிதம் எனக்கு வந்து சேர்ந்த அன்றே வந்த இன்னொரு கடிதம் இது. இக்கடிதத்தில் நீங்கள் சொன்ன அனைத்துக்கும் பதில் உள்ளது
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
என் பெயர் க.விக்னேஷ்வரன் வேலூர் இலக்கிய வாசகர் வட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும் நண்பர்களில் நானும் ஒருவர் மொத்த இதுவரை மூன்று நிகழ்வுகளை நடந்தியிருக்கிறோம். கடந்த சனிக்கிழமை நடந்த மூன்றாவது நிகழ்வில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டு ஜே.எம். கூட்ஸி எழுதிய பீட்டர்ஸ்பெர்க் நாயகன் (The Master of Petersburg / J.M. Coetzee) நாவல் மற்றும் தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்க்கை பற்றியும் சிறப்பானதொரு பேருரை ஒன்றை வழங்கினார்.
அன்று மாலை வேலூரில் நல்ல மழை. வாசகர்கள் வருவார்களா, வரமாட்டார்களா என்கிற தயக்கம் எங்களுக்கு நிறையவே இருந்தது. மழையை மீறி மொத்த அரங்கம் நிரம்பிப் போகும் அளவுக்கு (கிட்டத்தட்ட 110 பேர் அதுவும் சென்னை, தஞ்சாவூர், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற ஊர்களிலிருந்து) வந்து கலந்துக் கொண்டு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையை கேட்டு மகிழ்ந்தார்கள்.
நிகழ்ச்சி முடிவில் அத்தனைபேரும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம். இலக்கியத்திற்கு வாசகர்கள் தரும் இத்தகைய ஆதரவுகள் இன்னும் அதிக மகிழ்ச்சியை தருகிறது.
கடைசியாக வேலூர் இலக்கிய வாசகர் வட்டம் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் அவசியம் ஒரு நாள் எங்கள் நிகழ்வில் வந்து பேசிய இலக்கியம் பற்றி அறிதலை எங்கள் ஊர் நண்பர்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்.
க.விக்னேஷ்வரன்.
மேலே கண்ட இரு கடிதங்களும் சுட்டும் ஓர் உண்மை உண்டு. அதைக்குறித்து நண்பர்களிடம் பலவாறாக விவாதித்ததும் உண்டு. வாசகசாலை அமைப்பின் நிகழ்ச்சிகள் பற்றி இதேபோல பல குற்றச்சாட்டுக்களை நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். வாசகசாலை போன்ற பல சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. நூலக வாரச்சந்திப்புக்கள். பல்வேறு இலக்கிய அமைப்புக்களின் நிகழ்ச்சிகள். இவை ஓர் ஊக்கத்துடன் தொடங்கப்படுகின்றன. பங்கேற்பாளர் இல்லாமல் படிப்படியாக தேம்பி நின்றுவிடுகின்றன. சிலவற்றில் வழக்கமாகச் சிலர் மட்டும் கலந்துகொள்கிறார்கள்.வழக்கமான பேச்சுக்கள் நிகழ்கின்றன. வழக்கமான சடங்காக அவை ஆண்டுக்கணக்கில் நிகழ்கின்றன
ஏன் இந்த நிலை உருவாகிறது? நாம் பங்கேற்பாளர்களான வாசகர்களின் கோணத்தில் நின்று யோசிக்கவேண்டும். ஒருவர் வேலைகளை விட்டுவிட்டு அரிதாகக் கிடைக்கும் ஒரு விடுமுறையில் ஓர் இலக்கியநிகழ்ச்சிக்கு ஏன் வரவேண்டும்? அவருக்கு அங்கே ஏதாவது கிடைக்கவேண்டும். அவர் அங்கே சிலவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். சிந்தனையில் ஒரு சீண்டல், ஒரு திறப்பு, ஒரு முன்னகர்வு நடைபெறவேண்டும். அங்கிருக்கும் பொழுது மகிழ்வூட்டுவதாக இருக்கவேண்டும். சலிப்பூட்டக்கூடாது. மகிழ்வூட்டுவது என்றால் கேளிக்கை மட்டும் அல்ல. கல்வியைப்போல் மகிழ்வூட்டுவது வேறில்லை. அங்கே பேசப்படுவனவற்றில் இருந்து புதியவற்றை அறியமுடியும் என்றால் அது உளக்கொப்பளிப்பை ஊட்டும் அனுபவமே. அதற்குத்தான் வாசகர்கள் வருவார்கள்
பெரும்பாலான தமிழ் இலக்கியக்கூட்டங்களை ஒருங்குசெய்பவர்களுக்கு அந்த எண்ணமே இருப்பதில்லை. அவர்கள் தங்கள் குரல்களை ஒலிக்கவிடுவதற்காகவே அதை நடத்துகிறார்கள்.எந்தவித தயாரிப்பும் இல்லாமல் மேடையேறுகிறார்கள். மிகமிகப் பழகிப்போன கருத்துக்களைப் பேசுகிறார்கள். அதாவது ஓர் டீக்கடை அரட்டையில் என்னென்ன பேசப்படுமோ அவற்றை மட்டுமே பேசுகிறார்கள். எளிமையான அரசியல்கருத்துக்களை இலக்கியக்கருத்துக்களாக மாறுவேடமிட்டு மேடையேற்றுகிறார்கள். எந்த புதிய செய்தியும் சொல்லப்படுவதில்லை. எந்த கருத்தும் முன்வைக்கப்படுவதில்லை.அங்கேயே வாசகன் சலிப்படைந்துவிடுகிறான்.
பிறரிடம் சொல்வதற்கு புதியதாக ஏதேனும் இல்லாதவர்களை பேசவிடாமல் தடுப்பதே இன்று தமிழகத்தின் இலக்கிய அரங்குகளின் முதல் கடமையாக இருக்கிறது. ‘இது என் கருத்து!’ என்று அவர்கள் கூச்சலிடுவார்கள். அந்தக்கருத்தை நாங்கள் ஏற்கனவே பல வாய்களிலிருந்து கேட்டுவிட்டோம், சொல்வதற்கு புதிதாக ஏதாவது உள்ளதா என்பதே அதற்கான மறுமொழி. புதிதாக நூல்களை வாசிப்பவர்கள், அவற்றைப்பற்றி ஆர்வமூட்டும்படி ஏதேனும் சொல்பவர்கள் இல்லை என்றால் கூட்டத்தை நடத்தாமலிருப்பதே சிறந்தது.
அவ்வாறு சொல்வதற்கு இருந்தால்கூட அதை தெளிவாக முன்வைப்பதற்குரிய பயிற்சி தேவை. அப்பயிற்சி இல்லாதவர்கள் அவை நிகழ்வை பெரும் துன்பமாக ஆக்கிவிடுவார்கள்.இன்று சிற்றிதழ்சார்ந்த எழுத்தாளர்கள் பலரிடமும் பேசும் ஆற்றல் இல்லை. அவர்களால் ஒரு சிறு அரங்கைக்கூட ஈடுபாடுகொள்ளச் செய்ய முடிவதில்லை. அவர்கள் தங்கள் பேச்சை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். சிற்றிதழ்ச்சூழல் மறைந்துவிட்டது, இன்றைய உலகில் அரங்கை ஈர்ப்பது தங்கள் கடமை என்பதை அவர்கள் உணர்ந்தாகவேண்டும்.
ஆனால் அரங்கை ஈர்த்து பேசுபவர்கள் இன்றும் பலர் உள்ளனர். எஸ்.ரா மிகச்சிறந்த உதாரணம். யுவன் சந்திரசேகர் ஓர் அரங்கை தன் சொற்களில் குவிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டவன். பெருமாள் முருகன், பாவண்ணன் போல பலர் மிகச்சிறந்த பேச்சாளர்கள். அடுத்த தலைமுறையில் லக்ஷ்மி மணிவண்ணன், போகன் சங்கர்,சாம்ராஜ் என பலரைச் சுட்டிக்காட்டலாம். சுனீல்கிருஷ்ணன், விஷால்ராஜா போன்றவர்கள் இளைய தலைமுறையில் சிறப்பாக பேசுபவர்கள். அவ்வாறு நன்றாகப்பேசுபவர்கள் கலந்துகொள்ளும்போதே நிகழ்ச்சி சிறப்புற அமைகிறது.எஸ்.ரா பேசும்போது மட்டும் எங்கிருந்து கூட்டம் வருகிறது? அவர் தங்களை ஏமாற்ற மாட்டார், தாங்கள் வந்தமைக்குப் பயன் உண்டு என அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்நம்பிக்கையை உருவாக்குங்கள் , கூட்டம் வரும். அவ்வாறு திரள் வந்தால் மட்டுமே முயற்சி வெல்கிறது.
ஆனால் அரங்கேறி தேர்ச்சி அடைவதற்குரிய வாய்ப்பை இளையோருக்கு அளித்தாகவேண்டும். அதற்கு ஒரு முறை உள்ளது. ஒரு தேர்ந்த பேச்சாளர் பேசும் அரங்கில் அதற்கு முன்னர் ஒரு பயில்முறைப்பேச்சாளர், இளைஞர் பேசலாம். எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த மேடையிலேயே அவருக்கு முன் ஒரு இருபது நிமிடம் ஓர் இளம்பேச்சாளர் சற்று திறனில்லாத உரையை நிகழ்த்தியிருந்தால் வாசகர்கள் பொறுத்துக்கொள்வார்கள். அந்த இளம்பேச்சாளர்களுக்கும் அது ஒரு நல்ல வாய்ப்பு. அவர்கள் எஸ்.ரா பேசும் அரங்கில் தங்கள் உரையை முன்வைக்க முடிகிறது. அவர்கள் தங்கள் தரத்தை மதிப்பிட்டுக்கொள்ள, மேம்படுத்திக்கொள்ள அது வழிவகுக்கும்
ஆனால் முழுக்கமுழுக்க திறனற்ற பேச்சாளர்களே பேசி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்றால் அதனால் என்ன பயன்? அடுத்த நிகழ்ச்சிக்கு வாசகர்கள் வரமாட்டார்கள், அவ்வளவுதான். பெரும்பாலான நிகழ்ச்சிகள் இங்கே இவ்வாறுதான் நிகழ்கின்றன என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். பெரும்பாலும் கதைகளை தாங்கள் புரிந்துகொண்டபடி சுருக்கிச் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.அல்லது எளிமையான ஒரு கருத்தை அதிலிருந்து பெற்று முன்வைக்கிறார்கள். அந்தப்பேச்சு விமர்சிக்கப்படுவதில்லை. அதன் போதாமை சுட்டிக்காட்டப்படுவதில்லை. ஆகவே மீண்டும் மீண்டும் இதேபோல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.எவ்வகையிலும் முன்னகர்வு நிகழ்வதில்லை. பேசுபவர் கேட்பவர் எவருக்கும் எப்பயனும் இல்லை
என்னதான் சொன்னாலும் இலக்கியக்கூட்டம் என்பது ஒருவகை வகுப்புதான். அங்கே கற்பிப்பவனும் கற்பவனும்தான் உள்ளனர். அங்கே கற்றவன் சொல்ல கற்கவிழைபவன் கேட்டுத்தான் ஆகவேண்டும். அத்தனைபேரும் பேசுவோம் என்னும் ‘ஜனநாயகம்’ அங்கே கேலிக்கூத்தாகவே முடியும். இன்று தமிழகத்தில் நாம் செவிகொண்டாகவேண்டிய அறிஞர்கள் பலர் உள்ளனர். முக்கியமான இலக்கியவாதிகள். தொல்லியல், வரலாறு, மொழியியல், சமூகவியல் என பல துறைகளில் சாதனை செய்தவர்கள்.அவர்களைச் செவிகொள்ள, அவர்களிடமிருந்து கற்க நாம் முனையவேண்டும். அதற்கு இத்தகைய அரங்குகள் பயன்படவேண்டும். நாமே பேசி நாமே கேட்டுக்கொள்வதற்குத்தான் அரங்குகள் என்றால் அந்தக்கேலிக்கூத்து நீண்டநாள் நடைபெறாது
அதற்கு நம்மிடம் நோக்கம் தெளிவாக இருக்கவேண்டும். எதன்பொருட்டு இந்தச் சந்திப்பை நிகழ்த்துகிறோம் என்பதை நாமே புரிந்துகொண்டிருக்கவேண்டும். இங்கே பெரும்பாலான கூட்டங்களில் நிகழ்வது எந்த இலக்கும் இல்லாத பேச்சு. ஆகவேதான் எதைவேண்டுமென்றாலும் பேசலாம், எப்படிவேண்டுமென்றாலும் பேசலாம் என்னும் போக்கு நிலவுகிறது. இந்தவகையான நிகழ்ச்சிகளை எதிர்க்க வேண்டிய தேவையே இல்லை. பயனற்றவை தானாகவே அழியும்
ஜெ