அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று காலைதான் ராஜன் சோமசுந்தரத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி தங்களின் நலனைத் தெரிந்துகொண்டேன். சுனில் ஆரம்பித்து வைத்த வாசிப்புச் சவாலில் இன்று இருநூறைத் தாண்டிவிட்டேன். ராதா முந்நூற்று முப்பதில் இருக்கிறாள். போன செப்டம்பரில் நான் காடு வாசித்தேன். இந்த செப்டம்பரில் அவள் காடு வாசித்தாள். உனக்கு காடு நாவலில் பிடித்த பாத்திரம் யார் என்று கேட்டதற்கு காடுதான் என்றாள். இன்று ஏழாம் உலகம் நாவலை வாசித்துவிட்டு கண்கலங்கி ராதாவிடம் பேசினேன். கண்கள் கலங்கியது , நாவல் தந்த சோகத்தால் அல்ல. இப்படி ஒரு நாவலை கொடுத்த ஜெயமோகன் எழுத்தை என்ன என்று சொல்வது என்று கண்களில் வந்த ஆனந்தக் கண்ணீர்.
ஒரு நாவலை வாசித்தால், அதன் பாதிப்பில் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை எனக்குள் ஊறப்போடுவேன். இப்பொழுது முத்தியம்மை எல்லோருக்கும் மேல் இருக்கிறாள். நாளை பண்டாரமாக இருக்கும். மூன்றாம் நாள் ஏக்கியம்மையாக இருக்கும். அப்புறம் இதில் யார் நல்லவர்கள் என்று எடை போடும். மாங்காண்டி சாமியின் பாடல்கள் வந்து காதில் ரீங்கரிக்கும். அகமதுவின் ஆங்கிலம் நினைவில் வந்து குறுநகை வரவைக்கும். அப்புறம் இரண்டாம் முறை வாசிப்பேன். அப்படித்தான் . ஏழாம் உலகத்தின் வாசிப்பு அனுபவத்தையும் எழுதவிருக்கிறேன். கா. நா. சு , அவரது ‘நாவல் கலை’ நூலில் ஒவ்வொரு நல்ல நாவலையும் மூன்று முறை வாசிக்க வேண்டும் என்கிறார். இதுவரை இரண்டு முறை வாசிப்பதற்கு என்னாலான முயற்சி செய்கிறேன்.
சுனிலின் வாசிப்பு சவால் இல்லை என்றால் புதுமை பித்தனின் நூற்று எட்டு கதைகளையும் வாசித்து இருப்போமா என்று தெரியவில்லை. செல்லம்மா அகல்யை , காஞ்சனை , சாப விமோசனம் கதைகள் அன்றாட பேசுபொருளாக இருந்திருக்க வாய்ப்பில்லை. போன வருடம் விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய எஸ் செந்தில் குமாரின், விலகிச் செல்லும் பருவம் வாசித்து, மேஜிக்கல் ரியலிசம் பற்றி எடுத்துச் சொல்ல அவரது பகலில் மறையும் வீடை உதாரணம் காட்ட முடிகிறது. வண்ணநிலவனின் எம். எல். வாசித்து, எழுபதுகளின் வாழ்வையும் , சாரு மஜூம்தார் அவர்களின் பாதிப்பையும் அறிந்தோம். சு. வேணுகோபாலின் ஆட்டம் வாசித்து கபடி ஆட்டம், காம ஆட்டம், சாமி ஆட்டம் என பல ஆட்டங்கள் சொல்லும் நாவலில் ஒரு முழு வாழ்வின் ஆட்டத்தைக் கண்டோம்.
அன்றன்றே வாசித்ததோடு மட்டுமல்லாமல், உங்கள் ஜப்பான் அனுபவங்களை ஒரு புத்தகம் போல் ஒரு வார விடுமுறையில் முழுதாக வாசித்தோம். என்னதான் இணையத்தில் தேடியது கிடைக்கும் என்றாலும், மதுரையையும் ஜப்பானையும் ஒப்பிட்டுச் சொல்லும் உங்களது போன்ற எழுத்துக்கள் அனுபவங்கள் விக்கிப்பீடியாவில் கிடைக்காதுதானே? தங்களின் அமெரிக்க பயணம் முடிந்ததுதும் இப்படி ஒன்றை எதிர் பார்க்கலாமா ?
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்,
ஆஸ்டின்.
அன்புள்ள சௌந்தர்
அட்லாண்டாவில் உங்களையும் ராதாவையும் சந்தித்த்தில் மகிழ்ச்சி. இந்தப்பயணத்தை முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாகவே திட்டமிட்டேன். நிகழ்ச்சிகள் எதையும் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. ஆனாலும் ராஜனுக்காக சில நிகழ்ச்சிகளை ஏற்கவேண்டியிருந்தது. பலவற்றைத்தவிர்த்துவிட்டேன். என் தளத்திலும் என் பயணச்செய்திகளை வெளியிடவில்லை
இப்பயணம் திட்டமிடாமலேயே அமெரிக்க கருப்பரினப் போராட்டம்- மனித உரிமைகள் போராட்டம் ஆகியவை சார்ந்த இடங்கள் வழியாக அமைந்துவிட்டது. ஆனால் இப்போது எழுதமுடியுமா என தெரியவில்லை. சென்றதுமே சினிமாவேலைகள் சூழ்ந்துகொள்ளவிருக்கின்றன
ஜெ