சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி
தம்மமும் தமிழும்
தம்மம் தோன்றிய வழி…
அன்புள்ள சார்,
இது நிகழ்ந்து பல வருடங்கள் இருக்கும். அன்று என் அலுவலகத்தின் தணிக்கைநாள். கணினி பாதுகாப்புத் தணிக்கை. அதற்கு முந்தைய வருடங்களில் பல ஓட்டைகள் கண்டடையப்பட்டிருந்ததால் இம்முறை அதற்கு மேலதிகாரிகளிடத்திலிருந்து கூடுதல் கவனம் இருந்தது. நானும் அந்நேரத்தில் அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்திருந்தேன். காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்த தணிக்கை ஒவ்வொரு மணிக்கும் சான்று அளிக்கக் கூடிய விவரங்களையும் செயலிகளையும் இயக்கி அதற்கான ஒப்புதல் அளித்தபின் அடுத்த ஒன்றிற்கு என நகர்ந்து கொண்டிருந்தது. மதியம் ஒருமணிக்கு தணிக்கையாளர் உணவு இடைவேளைக்குச் சென்றாலும் நான் தேநீர் மற்றும் ரொட்டிகளை அங்கேயே தின்று முடித்து பணியைத் தொடர்ந்தேன். எங்களது வாடிக்கையாளரும் அன்றைய தணிக்கை மீது பெரும் கவனம் கொண்டிருந்தார். ஒருவழியாக மாலை ஐந்து மணிக்கு முடிந்தது. அதற்குள் அதன் விவரங்களைக் கேட்டு பல மின்னஞ்சல்கள். ஒவ்வொன்றிற்கும் பதிலளித்து அவ்வறையை விட்டு வெளியே வந்தேன். நல்ல பசி. மாலைதான் என்றாலும் பரவாயில்லை நல்ல உணவகமாகப் பார்த்து உண்ண வேண்டும் என்று எண்ணி அலுவலகத்தின் மூன்றாம் அடித்தளத்தில் இருந்த என் இருசக்கர வண்டியை எடுத்துக்கொண்டு மேலே ஏறி தரைதளம் வந்து வெளியேறியவன் ஒருகணம் திகைத்து வண்டியை நிறுத்தினேன். எனது வாடிக்கையாளர் கனடாவைச் சேர்ந்தவர். நான் அவ்வளவு நேரம் அவர்களின் நேரப்படியே எல்லாம் செய்து ஒரு உணவகம் தேடி வந்திருக்கிறேன். என் அன்றைய நாளின் நினைவுப்படி எனக்கு மாலை ஐந்தரைதான். ஆனால் இப்பொழுது நிதர்சனத்திலோ நள்ளிரவு இரண்டு மணி. மதிய உணவிற்கு அவர்கள் சென்ற நேரம் நான் என் இரவு உணவை முடித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு கணத்தில் என் மனம் அதை மறந்துவிட்டிருந்தது. நான் அந்நேரப்படி இங்கே இருந்திருக்கிறேன்.
எழுத்தாளர் விலாஸ் சாரங் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் மொத்த சிறுகதைகளும் The Women in Cages என்ற தொகுப்பில் வந்திருந்தன. நம் நண்பர், ஸ்ரீநிவாசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் “கூண்டுக்குள் பெண்கள்’ என்னும் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் இருந்த ’கடிகாரத்தில் சிலந்தி’ என்கிற கதையைப் படித்ததும் எனக்கு மேற்கண்ட நிகழ்வு நினைவிற்கு வந்தது. தான் சாவி கொடுத்து வைத்திருக்கும் கடிகாரத்தில் ஒருநாள் சிலந்தி ஒன்று மாட்டிக்கொள்கிறது. முள்ளை திருப்பித் திருப்பி அதை தாக்குகிறான் அந்த நாயகன். இறுதியில் பல அடிகள் வாங்கி பலவீனமான அந்த சிலந்தி மணி முள்ளும் அலார முள்ளும் இணைந்து உருவாக்கிய ஒரு சிலுவைக் குறியில் நசுங்கி இறக்கிறது. அந்த ஆசுவாசத்தோடு அவனுக்கு அடுத்த பிரச்சனை துவங்குகிறது. நேரத்தை குறித்து வைக்கவில்லை. கடிகாரமோ பன்னிரெண்டரையைக் காட்டுகிறது. அந்த ஒரு கணத்தில் சரி மணி பன்னிரெண்டரை என்று வைத்துக் கொண்டு அந்த நாளைத் தொடரலாம் என்று எண்ணுகிறான். அந்தக் கதையும் அதற்குப் பின் அப்படியே தொடர்கிறது. அதன் நாலு மணிக்கு எழுக! எழுக! என்ற அலாரம் அவனை எழுப்புகிறது
ஒரு கனவில் சிறுகதையின் முடிச்சு தோன்றுவதைக் குறித்து நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். உங்களின் படுகை கதை அவ்வாறு உதித்த ஒன்றுதான் என்றும் பாண்டிச்சேரி உரையில் கூறினீர்கள். ஒரு தற்செயல் பொருத்தம் போல விலாஸ் சாரங்கின் சில கதைகள் உங்களுடைய துவக்க கால சிறுகதைகளை நினைவூட்டின. சந்திப்பு, நிழல் போன்ற சிறுகதைகளை. தனது சிறுகதைகளை ஐந்து வகைகளுக்குள் அடக்கியிருக்கிறார். வேட்கைச் சூழல், சிற்றுயிர்கள், நிர்வாணத்தின் தரிசனங்கள், குலாக்கின் நிழல் மற்றூம் கடலோர நகரம் என. அது அவரது பகுத்தல் முறை என்றாலும் வாசிக்கையில் அவை ஒன்றோடு ஒன்று பிணைந்துதான் இருக்கின்றன. துவக்கத்தில் அனைத்தையும் தன் அகச்சிக்கல்களாகவே எதிர்கொள்கிறார். வர வர அதிலிருந்து ஒரு தரிசனத்தை அடைகிறார்.
பீபத்ஸம் எனப்படும் அருவருப்பு மற்றும் குரூர அழகியலாகவே பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. ஆனால் அதனூடாக அந்தக் கதைகளில் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளிலோ ஏக்கங்களிலோ எந்த ஒரு அருவருப்பும் ஏற்படுவதில்லை. பிச்சைக்காரர்களை மேய்க்கும் ஒருவனிடம் பணியாளாக இருக்கும் ஒரு நாயகன் அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவன் தன் அண்ணனாக இருக்கலாமோ என்ற ஐயத்தை அடைகிறான் ( கஸ்தூரிமான் ). மற்றொரு கதையில் ஒரு தீவில் மாட்டிக் கொள்ளும் நாயகன் அங்கு பெண்கள் பாதி பாதி யாக இருப்பதை காண்கிறான். அவனுக்கு பெண்ணின் மேல்பாதி வேண்டுமா அல்லது கீழ்பாதி வேண்டுமா என்று அவன் முடிவு செய்து திருமணம் செய்யவேண்டும். உண்மையில் ஒரு ஆணுக்குத் தேவை எந்தப் பாகம்… ( எம். சாக்கோவுடன் ஒரு நேர்காணல் ). ஒரு புத்தி சுவாதீனமற்ற பெண் தான் இறந்து விட்டதாகவும் இதுவே தன் பிணம் என்றும் கருதி ஒரு பொம்மையை விசிறியடிக்க அதை ஒருவன் எடுத்து வர நேர்கிறது. அது பொம்மையா அவளது பிணமா என்ற குழப்பத்துடன் வருபவனின் தனிமையை அந்த பொம்மை நிறைக்கிறது..
அத்தனை குரூரமும், அபத்த தருணங்களும், அருவருப்புமே அந்தக் கதைகளில் ஒரு சுவாரசியமான நடையில்தான் வருகின்றன. அவரது எள்ளலும் சீண்டலும் கூட வெளிப்படுகின்றன. கதைகளின் மொழிபெயர்ப்பும் அப்படியே நமக்கு கடத்தியிருக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலேயே எழுதப்பட்டுள்ள அவரது இந்தச் சிறுகதைகளின் கால வரிசைகள் எங்கும் குறிப்பிடப் படவில்லை. தீவிரவாதி உள்ளிட்ட சில கதைகள் எங்கு நிகழ்கின்றன என்றும் குறிப்பிடவில்லை. இவரது எழுத்துக்களில் காலத்தையும் தூரத்தையும் அவர் தனக்கான ஒரு உபகரணமாகத்தான் கையாள்கிறார் என்பதால் அந்தக் கதைகளும் அந்த அந்தரவெளியில் அழகாகத்தான் இருக்கின்றன.
நான் முன்பு சொன்ன அன்றைய தணிக்கை நாளில் அந்த நள்ளிரவில் சுவையான உணவுக்கான ஏக்கம் கூடிக்கொண்டே இருந்தது. கிண்டி தொழிற்பேட்டை கோயம்பேடு பேருந்து நிலையம் என்று தேடி அலைந்தேன். இறுதியில் அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு கடையில் அறுசுவை உணவுகள் இருந்தன. கடை கொள்ளாத கூட்டம். அந்தக் கடையை காலை இரண்டு மணிக்குத்தான் திறக்கிறார்கள். சுடச்சுட தோசையும் பூரியும் அந்த நேரத்தில் செய்து பரிமாறுகிறார்கள். அந்த சுவைக்கு முன் காலமோ தூரமோ ஒரு பொருட்டேயில்லை
அன்புடன்,
R.காளிப்ரஸாத்
புத்தகம் வாங்க நற்றிணை தள இணைப்பு:-