சில்லென்று சிரிப்பது
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்
செங்காட்டு கள்ளிச்செடி சில்லென்று சிரிப்பது குறித்தான உங்களின் பதிவை விரும்பி வாசித்தேன். கள்ளிச்செடிகளைக்குறித்து அத்தனை அழகாக சொல்லியிருந்தீர்கள். எனக்குத்தெரிந்து கள்ளிகளை யாரும் இத்தனைக்கு கவனித்து பாடல்களோ கவிதையோ கட்டுரைகளோ எதுவும் எழுதினதேயில்லை தாவரவியல் ஆய்வுக்கட்டுரைகளும் கூட அதிகமில்லை. வைரமுத்து சில பாடல்களிலும் கள்ளிக்காட்டு இதிகாசத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் ஈராறு கால் கொண்டெழும் புரவியில் திருகுகள்ளியைப்பற்றி சொல்லியிருக்கிறீர்கள்
இந்தப்பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் சில விவரணைகளெல்லாம் ஒரு தாவரவியலாளராக என்றென்றைக்கும் நினைவிலிருக்கும் எனக்கு. மாணவர்களிடமும் சொல்லிக்கொண்டேயிருப்பேன் இனி. எருக்கின் மலர்க்கொத்தை படிகக்கொத்து என்றதும் அம்மலர்களின் ஊதா நிறத்தை ’’கரியபெண்ணின்ஈறுகளைபோல’’ என்றதும் அத்தனை பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கின்றது.
// எத்தனை கசந்தால் இத்தனை முள்சூடியிருக்கும்//
//எத்தனை அஞ்சினால் இலையிலும் கிளையிலும் இத்தனை நஞ்சு நிறைத்துக்கொண்டிருக்கும்//
//கடுமையான முகம்கொண்ட அன்னை ஒருத்தி சட்டென்று சிரிப்பதுபோல//
//பொட்டல் மலர்கள் நாணமும் எச்சரிக்கையுமாக’’சற்றே’’ சிரிப்பவை//
//கள்ளி வெடித்துச்சிரிக்கும்// ஆம் அந்த வெடித்து என்பதை கள்ளியின் மலர்களை பார்க்கையில் மிகச்சரியாக உணரலாம்.
அத்தனை அழகு அத்தனை வசீகரம் கள்ளிமலரகள். பெரும்பாலும் அடுக்கடுக்காகவே இருக்கும் மலர்களின் நிறங்களும் வடிவமும் கண்ணையும் மனதையும் நிறைத்துவிடும். நீங்கள் சொல்லியிருப்பது போல அல்லியோ என மயங்கச்செயும் பல கள்ளி மலர்கள்
கள்ளி மலர்களை தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகளுடன் வவ்வால்களும் மகரந்தச்சேர்க்கை செய்யும். எந்தக்கள்ளியின் மலர்களும் ஏனோ காற்றினால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதேயில்லை
கள்ளிப்பழங்களும் அப்படியே கள்ளி முட்களினிடையில் பழங்களைப்பார்ப்பதே பெரும் கவர்ச்சியாக இருக்கும் பலநிறங்களில் பழங்கள் இருப்பினும் சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகியவையே உண்ணத்தகுந்தவை
நான் சிறுமியாக இருக்கையிலிருந்தே கள்ளிப்பழங்களின் காதலி. முதன்முதலில் கள்ளிப்பழமொன்றை அதன் சதைப்பற்றான சிவப்பு நிறத்தில் கவரப்பட்டு அப்படியே பிட்டு வாயிலிட்டுக்கொண்டேன். பூமுட்கள் நாக்கெல்லாம் குத்தியதில் வாய் மூடமுடியாமல் அலறிக்கொண்டே வீடு வந்து, முதுகில் கூடுதலாக மொத்துவாங்கி அப்பா வெகுநேரம் செலவழித்து நாக்கிலிருந்து முட்களை ஒவ்வொன்றாக எடுத்துவிடும் வரை வாயைத்திறந்தபடியே கண்ணீர் வழிய நின்றிருந்தேன் கள்ளிப்பழங்களின் சுவை அபாரமாக இருக்கும். இப்போது அதிகம் விற்பனையாகும் டிராகன் பழங்களும் கள்ளிப்பழங்களே.
உணவாகவும் கள்ளியின் மலரரும்புகள், டேபிள் டென்னிஸ் மட்டைகளைப்போலிருக்கும் சப்பாத்திக்கள்ளியின் தண்டுகள். தண்டினுள்ளிருக்கும் சோறு போன்ற பகுதிகள் ஆகியவை பயன்படுகின்றது. மெக்ஸிகோவில் காய்கறி சந்தைகளில் சாதாரணமாக கள்ளிச்செடிகளின் அனைத்துபாகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். நெடுங்காலமாகவே பச்சைகுத்தும் ஊசிகளாக கள்ளிமுட்களே பயன்பாட்டில் இருக்கின்றன. மெக்சிகோவின் பழங்குடியினர் சில வகை கள்ளித்தண்டுகளை உலரவைத்து போதைமருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.
கள்ளிகளின் வடிவமும் அப்படியே, பெருமரங்களாகவும், மிகச்சிறிய கூழாங்கற்களைபோலவும் கள்ளிகள் இருக்கின்றன. இலைக்கள்ளி, பந்துக்கள்ளி, குச்சிக்கள்ளி, தண்டுக்கள்ளி என்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளில் கள்ளிகள் இருக்கின்றன. ஒரு பெரிய சதைப்பற்றான முழுவதும் கூரிய முட்களாலான உருண்டைக்கள்ளிக்கு ஆங்கிலத்தில் mother in laws cushion என்று பெயர்
20 மீட்டர் உயரம் வளரும் யானைக்கள்ளியிலிருந்து ஒருசில மில்லிமீட்டரளவில் இருக்கும் லில்லிபுட் கள்ளிகள் வரை உலகெங்கும் விரவிக்கிடக்கின்றன. ஹரியானாவில் பஞ்ச்குலா என்னுமிடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய கள்ளித்தோட்டம் அமைந்திருக்கிறது இங்கு 3500 கள்ளிச்செடிவகைகள வளர்க்கப்பட்டுவருகின்றன. வெறும் பத்துரூபாய் நுழைவுக்கட்டணத்தில். 7 ஏக்கரில் வளர்ந்திருக்கும் உலகின் அத்தனை வகைக்கள்ளிகளையும் பார்த்துவிடலாம். மார்ச் மாதத்தில் கள்ளிக்கண்காட்சியும் இங்கு நடைபெறுகின்றது.
பச்சைமட்டுமல்லாது நீலம், ஊதா மற்றும் காப்பிக்கொட்டை நிறங்களிலும் கள்ளிகள் உள்ளன.போன்சாய் கள்ளிகளும் கூடஇருக்கின்றன. ’’Thanks giving day’’ அன்று பரிசளிக்கவென்றே ஒரு அழகிய இளஞ்சிவப்புமலர்களுடனான கள்ளிச்செடி இப்போது பிரபலமாகி வருகின்றது.
வகுப்பில் முதலாமாண்டு மாணவர்களுடன் இக்கட்டுரையை பகிர்ந்துகொண்டேன். நன்றி
அன்புடன்
லோகமாதேவி
***