சுப்பு ரெட்டியார்- கடிதம்

 

நமது ஊற்றுக்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூல் குறித்து எழுதிய கடிதத்திற்கு தாங்கள் அளித்த பதிலில் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் குறித்து குறிப்பிட்டு அவர் நூல்களுக்கான இணைப்பை வழங்கியிருந்தீர்கள். அவருடைய சுயசரிதையான ‘’நினைவுக் குமிழிகள்’’ஐ வாசித்தேன். நான்கு பாகங்கள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். ஓர் அறிஞரின் வாழ்க்கை என்று சொல்லலாம். அவருடைய அவதானங்கள் பிரமிப்பூட்டின. நூலின் துவக்கத்தில் தனது கிராமத்தை அவர் சித்தரிக்கும் விதமே அவருடைய கூர்மதியையும் கலை உணர்வையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. தான் சந்தித்த மனிதர்களை அவர்களுடைய இயல்புகளை அவர்களின் பணிகளை என பல ஆண்டுகளுக்குப் பின்னும் துல்லியமாக நினைவுகூர்ந்து எழுதுகிறார்.

 

அவருடைய வாழ்க்கையில் அவர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் வெவ்வேறு ஆசிரியர்களிடம் தமிழ் பயின்ற பால பருவம் ஒளி மிக்கதாயிருக்கிறது. வள்ளுவரும் கம்பனும் அருணகிரிநாதரும் குமரகுருபரரும் நம்மாழ்வாரும் அவர்களின் சொல்லின் வழியே சுப்பு ரெட்டியாரின் மனத்தை ஆட்கொண்டு விடுகின்றனர். அப்போது அவர் அறிந்த தமிழ் அவர் வாழ்நாளின் ஏனைய பகுதி முழுதும் எழுந்து வருவதை அவர் சுயசரிதையில் காண்கிறோம். கல்வியறிவு என்பது மிகக் குறைவாயிருந்த அந்த காலகட்டத்தில் கல்வி மீதும் அறிவின் மீதும் அறிவியக்கத்தின் மீதும் நம்பிக்கை கொண்டு தீவிரமாகச் செயலாற்றும் ஓர் அறிஞரின் சித்திரத்தை அந்நூல் காட்டுகிறது.

அடுத்து அவர் மகிழ்வாயிருக்கும் தருணம் காரைக்குடியில் இருந்த போது.  சா. கணேசன், ராய. சொ, சோமலெ போன்ற அறிஞர்களுடனும் எழுத்தாளர்களுடனும் இருப்பது அவரை மகிழ்வூட்டுகிறது. அறிவுச் செயல்பாடுகளையும் தமிழையும் ஆதரிக்கும் செட்டிநாட்டு மக்களின் தன்மை பேராசிரியருக்கு பல விதத்திலும் நம்பிக்கையளிக்கிறது.

 

அறிஞரான அவர் ஆசிரியப் பணிக்கு வரும் போதும் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் போதும் நிர்வாகங்கள் அவருக்கு பலவிதமான இடையூறுகளையும் தடைகளையும் உண்டாக்குகின்றன. நூலில் பலமுறை ‘’திக்கற்றவருக்குத் தெய்வம் துணை’’ என்ற நம்பிக்கையால் கடந்து வந்தேன் என்கிறார்.

 

ராஜாஜி, சுவாமி சித்பவானந்தா, சா.கணேசன் ஆகியோர் குறித்தும் அவர்களின் இலக்கிய, சமூகப் பணிகள் குறித்தும் விரிவாக பதிவு செய்கிறார்.

 

சமயம், இலக்கியம், அறிவியல், மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவை குறித்து அவர் எழுதியுள்ள நூல்கள் நவீன வாசகனை வியக்க வைக்கின்றன. ‘’அறிஞர்’’ என்ற அடைமொழி சுப்பு ரெட்டியார் போன்ற அறிவுச் செயல்பாட்டாளருக்கு மட்டுமே உரியது. வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று வந்து எழுதிய பயண நூல்களான சோழ நாட்டுத் திருப்பதிக

ள், மலை நாட்டுத் திருப்பதிகள் ஆகிய நூல்களையும் வாசித்தேன்.

 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

 

பேராசிரியர் சுப்புரெட்டியார் நூல்கள் வாசிக்க http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm

 

நினைவுக்குமிழிகள் வாசிக்க http://www.tamilvu.org/library/nationalized/pdf/35-subbureddiyar/518-ninaivukkumizhikal-part-1.pdf

முந்தைய கட்டுரைகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை
அடுத்த கட்டுரைஅஞ்சலி : மகரிஷி