கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?- எதிர்வினை

கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

ஜெ’ யின் வலைதளத்தில் ” கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா ? ” என்று எழுதிய கடிதத்திற்கு ஜெ நல்ல பதிலை கொடுத்துள்ளார் .

 

ஆனால் ஜெ பயன்படுத்தும் ஆய்வு உபகரணங்கள் பலவும் கடும் காலனிய தாக்கம் உடையவை .ஏன் எனில் இது தான் அந்த தலைமுறை அறிவுஜீவிகளுக்கு கிடைத்தது .ஹிந்துத்துவ அறிவு ஜீவிகள் கூட ராதாகிருஷ்ணனிடமிருந்தும் தேவி பிரசாத் சடோபாத்யாவிடம் இருந்தும்தான் ஹிந்து தத்துவ மரபுகளை குறித்து அறிந்து கொண்டனர் . ஜெ நித்ய சைதன்யரின் தொடர்பால் , வழிகாட்டுதலாம் ஹிந்துத்துவர்களை விட கொஞ்சம் தெளிவாக இருக்கிறார் .இருப்பினும் அவர் தனது ஆய்வு உபகரணங்களை மறு பரீசிலனை செய்ய வேண்டும் .

 

அவர் முன் வைக்கும் கோட்பாடுகள் ஏன் ஹிந்து மதத்திற்கு பொருந்தாது என்று விளக்க முயல்கிறேன் .

அ) ஜெ அரசன் இறைவனாவது , இறைவனுக்கு அரச தன்மையை கற்பிப்பது என்னும் மேற்குலக கோட்பாட்டை முன் வைக்கிறார் . கோவில் என்னும் வார்த்தை தொடங்கி பல சடங்குகள் வரை பல இடங்களிலும் இதற்கான சான்றுகள் இருப்பதாக தோன்றும் .பல ஆய்வாளர்களும் இப்பாதையில் பயணித்து எழுதி குவித்துள்ளனர் .ஆனால் எகிப்தியவியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் இந்த கோட்பாடு ஏன் இந்திய மதங்களுக்கு பொருந்தாது என்று பார்ப்போம் .

ஆ) கேள்வியும் பதிலும் வாசுதேவ க்ருஷ்ணனை குறித்தது என்பதால் இந்த கோட்பாட்டை தச அவதாரங்களுக்கு பொருத்தி பார்ப்போம் . மத்ச்ய, கூர்ம, வராக , ந்ருசிம்ஹ, வாமன , ராம , ராம , க்ருஷ்ண, க்ருஷ்ண கல்கி என்பது எங்கள் கணக்கு .மீன் , ஆமை , வராகம் , ந ம்ருகம் ந மனுஷம் என்னும் சிங்கவேள் ஆகியோர் அரசர் கணக்கில் வரமாட்டார்கள் . வலிமை மிகுந்த விலங்கை கடவுள் ஆக்கினான் என்றால் ஆமை இடிக்கும் .ஆமையின் நீண்ட ஆயுளால் அது பல கலாச்சாரத்திலும் வழி படப்படுகிறது என்றால் வலிமைக்கு பயப்படுதல் கோட்பாடு பொருந்தாது . வாமன மூர்த்தி சிறு பாலகன் . அந்தண ப்ரும்மச்சாரி . வலிமை மிகுந்த அரசன் அல்ல .பரசுராமன் க்ஷத்ரியர்களை வென்ற அந்தணன் .அவர் வென்ற இடத்தை , உருவாக்கிய இடத்தை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுத்தாரே அன்றி ஆளவில்லை .எனவே அரச வழிபாடு அவருக்கு பொருந்தாது .தசரத ராமன் அரசன் .ஆனால் ஒரு சொல் , ஒரு வில் , ஒரு இல் என்று இருப்பவர் .ராவணன் பகை தொடங்குவதே ஸ்ரீ ராமன் சூர்பநகையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் .எனவே அரசன் தீராக் காதலன் .அதனால் தெய்வமும் அப்படி என்ற கோட்பாடு இங்கு செல்லாது . வாசிஷ்ட க்ருஷ்ணன் அரச குலங்களை உருவாக்கினார் ; ஆனால் அரசாளவில்லை. கோபி ஜன வல்லபன் என்ற வாசுதேவ க்ருஷ்ணனை போற்றும் நாம் அதே மூச்சில் அவரை அநாதி ப்ரும்மசாரி என்கிறோம் .ஆக க்ருஷ்ணர் சாதாரண காதல் மன்னன் அல்ல ( ஸ்ரீ க்ருஷ்ண உபாசனை அசாத்திய வைராக்யத்தை அளிக்க வல்லது என்பது அனுபவ பாடம் ) .எனவே அரசன் தெய்வமாவது தெய்வத்திற்கு அரச குணம் என்னும் எகிப்திய இறையியல் கோட்பாடு இங்கு பொருந்த வில்லை .சொக்கரும் மீனாக்ஷி மணாளராக இருந்து லீலை புரிந்தாரே அன்றி அரசருக்கான கல்யாண குணங்களை காட்டவில்லை . பன்றி குட்டிகளுக்கு தாயாக இருந்து அருள் புரிவது என்பது ஒரு உதாரணம் .

இ) பலி கேட்கும் சிறு தெய்வங்களுக்கு பொருந்தும் இலக்கணம் பெருந்தெய்வங்களுக்கு பொருந்தாது . கீதையில் க்ருஷ்ணன் இலையானாலும் ஒரு துளி நீரானாலும் போதும் என்கிறார் .இதுவும் தவிர யோக நெறியில் இருந்து விழுந்தவனுக்கும் கூட அடுத்த பிறவியில் வாய்ப்பு கொடுப்பேன் என்கிறார் . இதனால் அடிபணிந்து படையல் இட்டோருக்கு அருளல் மற்றவர்கள் தலையில் இடியை இறக்குதல் என்னும் அபிரகாமிய கோட்பாடு ஹிந்து மத பெருந் தெய்வங்களுக்கு பொருந்தாது . இங்கு கர்ம கணக்கு உண்டு .அதனால் ஈசன் கல்லால் அடித்தவருக்கும் அருள் புரிந்தார் .

இதே விதத்தில் மேற்படி கோட்பாட்டை பயன்படுத்தி பார்த்தால் அதன் பொருந்தாமையும் போதாமையும் புலப்படும்

 

அனீஷ்கிருஷ்ணன் நாயர்

[முகநூலில் இருந்து]

முந்தைய கட்டுரைவாசகசாலை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுப்பு ரெட்டியார்- கடிதம்