பகுதி மூன்று : பலிநீர் – 3
கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர். அவர்களில் பலர் முன்னரே கிளம்பிச்சென்றுவிட்டிருந்தமையால் அவை ஒழிந்து கிடந்தன. பலர் அப்போதுதான் விழித்தெழுந்து கிளம்பிக்கொண்டிருந்தனர். இருளுக்குள் அவர்களின் கலைந்த குரல்களின் முழக்கம் எழுந்து சூழ்ந்திருந்தது. விண்ணில் தொலைவில் ஒளிமிக்க சில விண்மீன்கள் மட்டும் துலங்கின. கைப்பிடி அளவிற்கு உப்புப் பரல்களை எடுத்து வீசி எறிந்ததுபோல் என்று தோன்றியது. அவற்றை அடையாளம் காணவோ வடிவு வகுத்துக்கொள்ளவோ கனகரால் இயலவில்லை.
முகப்பில் சென்ற காவல்படையினர் சாலையெங்கும் நிறைத்து சென்றுகொண்டிருந்த மக்கள்திரளை அகற்றி வழி உருவாக்கி அவற்றினூடாக அரசியரின் தேர்களை செல்லவைத்தனர். அந்நிரையின் இறுதித் தேர் மிகப் பின்னால் அப்பொழுதும் அஸ்தினபுரியின் கோட்டைக்கு உள்ளே இருந்தது. கனகர் தன் புரவியில் உடல் தளர அமர்ந்து, இடக்கையால் கடிவாளத்தை பற்றிக்கொண்டு துயிலில் எடைகொண்டு கீழ்சரிந்த இமைகளுடன், ஒன்றையொன்று தொட்டுத் தொட்டுச் செல்லும் எண்ணங்களுடன் அமர்ந்திருந்தார். உடலின் அசைவில் அங்கு மீண்டு வந்து, சூழலை உணர்ந்து வியப்புற்று, நீள்மூச்சுடன் விழிசுழற்றி நோக்கி, மீண்டும் எங்கோ அமிழ்ந்து, எங்கோ எழுந்து, நினைவுகளையோ பொருளிலா எண்ணங்களையோ தொட்டு மயங்கிக்கொண்டிருந்த சித்தத்துடன் சென்றுகொண்டிருந்தார்.
சாலையோரங்களை நிரப்பி சென்றுகொண்டிருந்த அந்த மக்கள்திரள் இருளுக்குள் ஓசைகளாக, நிழலசைவுகளாக, விழிமின்னாக, உலோகங்களின் மிளிர்வாக, விலங்குகளின் செருக்கடிப்போசையாக, பலநூறு குளம்படி ஓசைகளாக தோன்றியது. பந்தங்களின் வெளிச்சம் அவர்களின் மீது பட்டபோது அச்சுறுத்தும் யவன ஓவியங்களிலென முகங்கள் தெளிந்து பின் இருளில் அமிழ்ந்தன. எந்த முகமும் இயல்பான உணர்வுநிலை கொண்டிருக்கவில்லை. உச்ச சினத்தில் சீறி எழுந்தவைபோல், வசைச் சொல்லொன்றை கூவியபடி நெஞ்சில் அறைந்து அலறவிருப்பதன் முந்தைய கணத்தில் நின்றுவிட்டவைபோல், கனவில் எதையோ கண்டு அஞ்சி விதிர்ப்பு கொண்டவைபோல், நோயுற்று வலிப்புகொண்டவைபோல், பெருவலியில் இழுத்துச் சுழித்தவைபோல் தோன்றின. பேரெடையொன்றை தலைக்குமேல் தூக்கி கொண்டுசெல்பவைபோல் கன்னத்தசைகளும் கழுத்து நரம்புகளும் இறுகிய பற்களும் கொண்டவை.
ஒவ்வொரு முகமும் தனக்கெதிரான வஞ்சமொன்றை கரந்திருப்பதாக கனகருக்குத் தோன்றியது. பந்த வெளிச்சத்தில் முகங்களைப் பார்த்ததுமே அவர் கடிவாளத்தை இழுத்து தன் புரவியை பின்னடையச்செய்து இரு பந்தங்களுக்கு நடுவே இருக்கும் குறைவான ஒளிகொண்ட பகுதிக்கு சென்றார். ஆயினும் சீறி முட்டிமோதிக்கொண்டிருந்த அக்கூட்டத்தின் நடுவே சீரான ஒழுக்காக வண்டிகள் செல்ல இயலவில்லை. முன்னால் சென்ற தேரோ வண்டியோ எங்கேனும் முட்டி நின்றுவிட்டால் அங்கிருந்து ஏவல்பெண்டுகள் அகல்சுடரை சுழற்றியும், கொம்போசை எழுப்பியும் ஆணைகளை இட்டனர். அந்த ஆணை பின்னிருப்போரால் பெற்று கையளிக்கப்பட்டு வண்டிநிரையின் இறுதி வரை காற்றில் பறந்து சென்றது. அதற்கேற்ப அனைத்து வண்டிகளும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு, சகடக்கட்டைகள் இறுக்கப்பட்டு, மரம் உரசும் ஒலியும் அச்சு சுழன்று இறுகும் ஒலியுமாக முனகலும் அலறலும் விம்மலும் விதும்பலுமாக தேங்கி நின்றன. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் தலை திருப்பி மூச்சிரைத்தன. காளைகள் தலை தாழ்த்தி கொம்புகளால் நுகத்தை தட்டின. குளம்புகளால் தரையை அறைந்து மூச்சு சீறலோசை எழுப்பின. அந்தத் தேங்கலில் பந்த ஒளியில் மீண்டும் அச்சமூட்டும் முகங்கள் தெரிந்தன.
அம்முகங்களை பார்க்காமல் இருக்கவும் இயலவில்லை. மீண்டும் மீண்டும் அவற்றை பார்த்தபோது மெல்ல அம்முகங்களை அவரால் அடையாளம் காண இயன்றது. குலப்பெண்டிர். முதுமகளிர். முதியவர்கள். உழவரும் ஆயரும் நெசவாளரும் குயவரும் என எளிய மக்கள். பெண்கள் தங்கள் தோள்களில் கட்டிய தூளிகளில் குழந்தைகளை தொங்கவிட்டிருந்தனர். முதியவர்களின் தோள்களில் தலையைப் பற்றியபடி குழந்தைகள் உடல்துவள துயின்றுகொண்டிருந்தன. முதுமக்கள் சில குழந்தைகளை நடக்க வைத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தனர். பெரும்பாலான குழந்தைகள் துயிலில் இருந்தன. நடக்கும்போதே துயிலில் துவண்டு முட்டிமோதின. வெறித்திருந்த விழிகள் எவற்றிலும் ஒரு சொல்கூட இல்லை. கல்விழிகள். வடுக்கள்போல, வண்டுகள்போல, கூர்முனைகள்போல வெறும்விழிகள். ஒரு சிறுவனின் விழிகளை அருகே கண்டு அவர் திடுக்கிட்டார். குழந்தைவிழி அவ்வண்ணம் வெறுமைகொள்ள இயலுமென அவர் எண்ணியதே இல்லை.
இத்தனைபேர் அஸ்தினபுரியைவிட்டு ஒவ்வொரு நாளும் அகன்று சென்றுகொண்டிருக்கிறார்களா என்ன? அஸ்தினபுரியின் அமைச்சரென அங்கு அமர்ந்திருந்தபோது இதை ஏன் அறியாமலிருந்தேன்? அவர் கடிவாளத்தை இழுத்து வண்டி ஒன்றைக் கடந்து தனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒற்றனிடம் “எங்கு செல்கிறார்கள் இவர்கள்?” என்றார். அவன் புரவியில் அமர்ந்தபடியே துயின்றுகொண்டிருந்தவன் போலிருந்தான். அவருடைய கேள்வியை சற்று பிந்தியே அவன் உளம் வாங்கியது. கடிவாளத்தை இழுத்து புரவியை விசையழியச்செய்து கையால் முகத்தையும் வாயையும் துடைத்தபின் “என்ன கேட்டீர்கள், உத்தமரே?” என்றான். “இத்தனை குடிமக்கள் எங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்?” என்றார் கனகர். அவன் “ஆம்” என திரும்பி நோக்கினான். மீண்டும் முகத்தை துடைத்தான். “ஏராளமானவர்கள்!” என்றான்.
“ஆம், அவர்கள் செல்வது எங்கே?” என்றார் கனகர் எரிச்சலுடன்.
“இவர்கள் ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள், உத்தமரே. இன்று பதினாறாம் நாள். ஆகவே நீர்க்கடனுக்காக கங்கைக்கரைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “எவருக்கு?” என்று கனகர் கேட்டார். அவன் அவரை திகைப்புடன் சில கணங்கள் பார்த்துவிட்டு “போரில் உயிர் நீத்தவர்களுக்கு” என்றான். “ஏழாம் நாள் நீர்க்கடன் அளிப்பவர்கள் சிலர் உண்டு. பதினாறாம் நாள் நீர்க்கடன் சிலருக்கு… அரிதாக சிலருக்கு நாற்பத்தோராம் நாள். உடல் கிடைக்காதவர்களுக்கு நூற்றெட்டாம் நாளில் நீர்க்கடன் செய்யலாம் என்பது மரபு” என்றான். “இவர்களில் பெரும்பாலானவர்கள் நாற்பத்தொன்றாம் நாள் வரை அங்கு கங்கைக்கரையிலேயே தங்கிவிட்டு அதன் பின்னரே அஸ்தினபுரி திரும்புவார்கள் என தோன்றுகிறது.”
கனகர் மீண்டும் பந்தங்களின் ஒளியில் துலங்கி துலங்கி இருளில் மூழ்கிய பேய்த்தோற்றம் கொண்ட முகங்களைப் பார்த்தபின் “அவர்களின் வஞ்சத்தைப் பார்த்தால் மீண்டும் அஸ்தினபுரிக்கு வருவார்கள் என்பதே ஐயம்தான்” என்றார். பெருமூச்சுடன் ஒற்றன் “மெய்யாகவே அவர்களில் பலர் திரும்பி வருவதில்லை. கங்கைக்கரையிலிருந்து அப்படியே படகுகளில் ஏறி பிற நாடுகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். நானே பலமுறை இதை தங்களிடம் வந்து உரைத்திருக்கிறேன், அமைச்சரே” என்றான். “ஆம், ஆம் நினைவிருக்கிறது” என்று கனகர் கூறினார். “இது பழிபடர்ந்த நிலம் என நினைக்கிறார்கள். தெற்கே புதிய நிலங்கள் உள்ளன என்று இவர்கள் இடையே ஒரு சொல் உலவுகிறது. அங்கே சென்றுகொண்டிருக்கிறார்கள்.” கனகர் “மெய்யாகவே இருக்கிறதோ என்னவோ” என்றார். அவன் புன்னகைத்து “ஆம், ஆனால் இவர்கள் சென்றால் அங்கும் சில தலைமுறைகளுக்குள் குருக்ஷேத்ரம் எழும்” என்றான். கனகரும் புன்னகைத்தார்.
வண்டிநிரை முனகலோசை எழுப்பி தேங்கியது. வண்டியோட்டிகளின் கூச்சல்களும் சவுக்கோசைகளும் குளம்புகளின் மிதிபடும் ஒலிகளும் எழுந்தன. காந்தாரியின் தேர் முன்புறம் தயங்கி நின்றிருந்தது. அங்கிருந்து கனகருக்கான அழைப்பு ஒளியசைவாக வந்தது. கனகர் தன் புரவியைத் தட்டி ஊக்கி பெருநடையில் வண்டிகளுக்கு இணையாகவே சென்றார். சென்றுகொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் உடைமைகள் ஏதும் இல்லாமல் இருப்பதை அவர் கண்டார். உடைமைகள் இல்லாமல் கிளம்புகிறார்கள் என்றால் அவர்கள் திரும்பி வரும் எண்ணத்துடன்தான் அஸ்தினபுரியிலிருந்து வெளிவருகிறார்கள் என்று பொருள். கங்கைக்கரைக்குச் சென்று நீர்க்கடன் முடித்த பின்னர்தான் அவர்களுக்குத் தோன்றுகிறது திரும்பிச் செல்லவேண்டாம் என்று. உள்ளிருந்து ஏதோ ஆணை எழுகிறது. அன்றி, உயிர்நீத்தோர் வந்து அவ்வண்ணம் அவர்களிடம் சொல்கிறார்களா என்ன?
அவர் புரவிக்குக் குறுக்காக ஒருவன் விழுந்தான். புரவியை இழுத்து விசையழியச் செய்தார். தனக்கு குறுக்காக வந்த முதியவர் ஒருவரை தோளில் தொட்டு “மண்நோக்கி காலெடுத்து வையுங்கள், மூத்தவரே” என்றார். முதியவர் சீற்றத்துடன் திரும்பி “சீ! கையை எடு, இழிமகனே! எவ்வுரிமையில் நீ என்னை தொடுகிறாய்?” என்றார். கனகர் திகைத்து கையெடுத்து பின்னர் “முதியவரே, நான்…” என்றார். “நீ யாரென்று தெரியும் எனக்கு. நீ உயிருடன் இருப்பதே நீ கீழ்மகன் என்பதற்கான சான்று” என்றார் முதியவர். இன்னொரு முதியவர் “இங்கு உயிருடன் இருக்கும் அத்தனை மானுடரும் கீழ்மக்களே. நானும் கீழ்மகனே. உயிருடன் இருப்பதே மாபெரும் கீழ்மை என்று ஆக்கிவிட்டு களத்தில் விழுந்தனர் என் மக்கள்” என்றார். “ஆம், அவர்கள் மேலே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து காறி உமிழ்கிறார்கள். இந்த மண்ணை மேலும் மலப்பெருக்காக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் முதல் முதியவர். கைகளை விரித்து “மலம்! நாற்றமெடுக்கும் மலம்… மலப்புழுக்கள். புழுத்த மலத்தில் நெளியும் உயிர்கள் நாம்!” என்றார்.
அவர்களின் உளம் கலங்கியிருப்பதை முகம் காட்டியது. கண்கள் அலைபாய்ந்தன. முகம் துடித்துக்கொண்டே இருந்தது. “ஆம்” என்றபடி அவர் புரவியை முன்னால் செலுத்த பல கைகள் அவர் புரவியை பற்றிக்கொண்டன. “நில்! எங்கே செல்கிறாய்? எங்கள் கேள்விக்கு மறுமொழி கூறிவிட்டுச் செல்!” என்று கூவின. “நில்! நில்! பிடி அந்த அந்தணனை!” ஒருவன் அருகே வந்து வெறிப்புகொண்ட முகத்துடன் கூவினான். “இத்தனை பேரின் சாவுக்கு விளக்கம் கூறாமல் நீ சென்றுவிடுவாயா என்ன? உன்னால்தான் என் குடி அழிந்தது. உனது சொற்களால்தான் இப்பேரழிவு…” ஒருவர் கைநீட்டி அருகே வந்தார். “உனது சொற்கள் இங்கே நிறுவப்படவேண்டுமெனில் எங்கள் மைந்தர் களம் விழவேண்டுமா என்ன?”
இன்னொருவர் நெஞ்சில் ஓங்கி அறைந்தபடி கனகரை நோக்கி வந்தார். எலும்புருவான உடல். நரம்புகள் புடைத்த கழுத்து. கண்கள் குழிக்குள் மின்னிக்கொண்டிருந்தன. வெறியுடன் துள்ளிய உடல். வலக்கையால் ஓங்கி ஓங்கி நெஞ்சில் அறைந்தார். “கீழ்மகனே! கீழ்மகனே! உன் ஆணவத்திற்கு என் மைந்தரை பலி கொடுத்தேன்! என் இளமைந்தரை பலி கொடுத்தேன்! என் பெயர்மைந்தர் அனைவரையும் பலிகொடுத்தேன்! இன்று இதோ ஏழு பெண்களுடன் குருதி வழியில் ஓர் உயிர்கூட எஞ்சாமல் கருகிய மரம்போல் இங்கு நின்றிருக்கிறேன். நிறைவுற்றாயா நீ? இப்போது உன் சொல் ஒளிகொண்டதா? ஒளி குறைகிறதென்றால் சொல், வந்து உன் சொற்களுக்கு மேல் என் கழுத்தறுத்து விழுகிறேன்.” “கீழ்மகன்! இழிதகையன்!” என்று கூச்சல்கள் எழுந்து சூழ்ந்தன.
அப்பகுதி எங்கும் இருந்து முதியவர்கள் அனைவரும் அங்கே கூடத்தொடங்கினர். தன்னைச் சுற்றி முகங்கள் செறிந்ததை கனகர் கண்டார். அனைத்து முகங்களிலும் வெறியாட்டு எழும் பூசகனின் முகத்தில் தோன்றும் சீற்றம் நிறைந்திருந்தது. “நீ விழைவதென்ன சொல்? இன்னும் எவ்வளவு குருதி வேண்டும் உனக்கு? இதோ!” என்றபடி ஒரு முதியவர் தன் அருகே நின்றிருந்த முதுமகளிடமிருந்து கைக்குழந்தை ஒன்றைப் பிடுங்கி அதன் கால்கள் காற்றில் பறக்கச் சுழற்றி தலைக்கு மேல் தூக்கினார். “இதை பலிகொடுக்கவா? இதை உன் காலடியில் வீசவா? கீழ்மகனே, இதோ இதன் சங்கறுத்து குருதி குடி! அடங்கட்டும் உனது விடாய்! இதோ!” எதிர்பாராத ஒருகணத்தில் அவர் அக்குழவியை கனகரை நோக்கி வீசினார். கனகர் திகைத்து அலறி பின்னடைய அவர் அருகே நின்ற ஒற்றன் தன் பயின்ற கரங்களால் குழவியை பற்றிக்கொண்டான். அது விழித்துக்கொண்டு கதறி அழத்தொடங்கியது.
அப்பாலிருந்த முதுமகள் ஒருத்தி “நீ மானுடனல்ல… நீ மண்ணுக்கடியிலிருந்து ஊறி வந்த ஏதோ கீழ்த்தெய்வம். மானுட குலத்தை அழித்து குருதிகொண்டு நிறைவுற வந்தவன் நீ. பல்லாயிரம் ஆண்டுகள் அங்கு காத்திருந்தவன்… எந்த கெடுபிறப்போ உன் துயிலை எழுப்பினான். எந்த இழிசினனோ உன்னை இக்காலகட்டத்துக்கு கொண்டு வந்தான். எங்கள் குடியழித்தாய்! கொடிய நோயெனப் பரவி எங்கள் கொடிவழிகளையும் அழிக்கிறாய்! இனி எங்களுக்கு விண்ணிலும் தெய்வங்கள் இல்லை. உன்னை விண்ணிறங்கி வந்த தெய்வம் என்று நம்பியதனால் அங்கிருக்கும் தெய்வங்களாலும் கைவிடப்பட்டோம்!” என்று கூவினாள். “உனக்கு சங்கறுத்து குடித்த குருதி போதவில்லை. விடாய் கொண்டு எங்கள் மகளிரின் கருச்சிதைத்து உண்கிறாய்… நீ ஆழிருள்தெய்வம்… அடங்காப் பழிகொண்ட கீழமைத்தேவன்.”
ஒருகணத்தில் மெல்லிய உலுக்கலென அவர்கள் எவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கனகர் புரிந்துகொண்டார். அவருடைய உள்ளம் விந்தையானதோர் நிறைவை அடைந்தது. அவரே ஒன்று பலவாக பிரிந்து சூழ்ந்து அச்சொற்களை கூவிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கனகர் ஒற்றனை நோக்கி கைகாட்ட அவன் தன் புரவியை முன்னால் செலுத்தி கனகரை சூழ்ந்துகொண்டு கொப்பளித்த அக்கூட்டத்தின் நடுவே புரவியைச் செலுத்தி அதைப் பிளந்து ஒரு வழியை உருவாக்கினான். அதனூடாக தன் புரவியைச் செலுத்தி அவனை அணுக்கமாக தொடர்ந்து அவர்களைக் கடந்து அவர் சென்றார். அவரது ஆடையை எவரோ பற்றினார்கள். புரவியின் கடிவாளத்தைப் பற்றியபடி ஓடி வந்த ஒரு முதியவர் கீழே விழுந்தார். குழவிகள் கூவி அழுதன. முதுமக்கள் பழிச்சொற்களை கூவி உரைத்தபடி ஓடி உடன்வந்தனர்.
“கீழ்மகனே! கீழ்மகனே! உன் குடி அழியும்! எங்கள் குடியென உன் குடியும் ஒருவர் எஞ்சாது அழியும்! உன் நகர் அழியும்! உன் கொடி பறக்க விண் இலாதாகும்! உன் குருதி முளைக்க மண் இலாதாகும்! நீ என்றென்றும் அழியாப் பெரும்பழி கொண்டு இனி எங்கள் கொடிவழியினரால் நினைக்கப்படுவாய்! அழிக! அழிக! நீ அழிக! உன் குலம் அழிக! உன் சொல் அழிக! உன் புகழ் எஞ்சாதொழிக!” அக்குரல்பெருக்கு ஒற்றைமொழியென எவ்வண்ணம் ஆகிறது? அதில் ஒவ்வொரு சொல்லும் எப்படி துலங்குகிறது?
குதிரையின் கழுத்தின்மேல் தன் தலையைத் தாழ்த்தி அமைத்து, உடலை இறுக்கி, தசைகள் அனைத்தையும் குறுக்கியபடி அமர்ந்திருந்த கனகர் மெல்ல மெல்ல தளர்ந்து பெருமூச்சுவிட்டு வியர்வை குளிர்ந்த உடலுடன் மூச்சிரைக்க மீண்டு வந்தார். கண்களில் குருதியின் அனல் பறந்தது. சூழ நோக்கியபடி புரவியில் அமர்ந்திருந்தபோது அவர் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. காந்தாரியின் தேர் நின்றிருக்க அதைச் சூழ்ந்து கூச்சலிட்ட மக்களை வேல்வீரர்கள் உந்தி அகற்றிக்கொண்டிருந்தார்கள். தேரை அணுகியதும் அவர் மேலாடையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தார். பின்னர் குழலை நீவி குடுமியாக முடிச்சிட்டு தேரை அணுகி “வணங்குகிறேன், அரசி!” என்று உரக்க சொன்னார்.
தேரின் திரை விலக சத்யசேனை வெளியே பார்த்து “அமைச்சரே, என்ன நிகழ்கிறது? இதோ திரண்டு சென்றுகொண்டிருக்கும் இவர்களெல்லாம் யார்?” என்றாள். “அரசி, இவர்கள் அனைவரும் நீர்க்கடன் பொருட்டு கங்கைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார் கனகர். “நீர்க்கடன்! ஆம்!” என்று குழப்பமாக முனகிக்கொண்ட சத்யசேனை காந்தாரியின் செவிகளில் அதை சொன்னாள். பின்னர் திரும்பி “அவர்கள் சொல்லும் பழிச்சொற்கள் பேரரசியின் காதில் விழுகின்றன. அவர்கள் பழிப்பது எவரை என்று அறிய விரும்புகிறார்” என்றாள். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. “அரசியின் உசாவல் அது” என்று சற்று கூரிய குரலில் சத்யசேனை சொன்னாள். “அரசி, அவர்கள் பழிப்பது இளைய யாதவரை என்று தோன்றுகிறது” என்று அவர் சொன்னார்.
சத்யசேனை பெருமூச்சுடன் “ஆம், நானும் எண்ணினேன். ஆனால் அவர்கள் எவரும் பெயர் சொல்லவில்லை. இங்கே காற்றில் இருளென சூழ்ந்திருப்பது அவரே என்று எண்ணுகிறார்கள் போலும். எல்லாத் திசைகளையும் நோக்கி அச்சொற்களை கூவுகிறார்கள்” என்றாள். “ஆம், அரசி. இன்று அவரை எவரும் ஒரு மானுடர் என்று எண்ணவில்லை. தெய்வம் என்றாகிவிட்டிருக்கிறார். முன்னரும் அவரை இவர்கள் தெய்வமென்றே எண்ணினார்கள். ஆனால் அதில் சிறு ஐயமிருந்தது. இன்று அந்த ஐயம் விலகிவிட்டிருக்கிறது” என்றார் கனகர். “ஏனென்றால் இப்பெரும்பலியை தெய்வங்களன்றி மானுடர் கொள்ள இயலாது என்று எண்ணுகிறார்கள்.”
சத்யசேனை “அது அவர்களுடைய சொற்கள் அல்ல, உங்கள் சொற்கள் என்று தோன்றுகிறது” என்றாள். “நானும் அவர்களில் ஒருவனே” என்று கனகர் சொன்னார். சத்யசேனை “பேரரசி சோர்வுற்றிருக்கிறார். இந்த நீண்ட பயணம் அவர் உடலுக்கு களைப்பை அளிக்கிறது. அதைவிட இருபுறமும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வெறுப்பும் பழிப்பும் பேரரசியின் அகம் சோரச் செய்கிறது” என்றாள். கனகர் “இதை நாம் முன்னரே எண்ணியிருக்க வேண்டும். ஒற்றர்கள் ஏற்கெனவே என்னிடம் சொன்னார்கள். அஸ்தினபுரியின் அத்தனை பெண்டிரும் இளைய யாதவரை இப்போது வெறுக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பழிச்சொல் பெருகிக்கொண்டிருக்கிறது” என்றார்.
பெருமூச்சுடன் தலையசைத்துவிட்டு சத்யசேனை அதை காந்தாரியிடம் சொன்னாள். காந்தாரி இரு கைகளையும் கூப்பி “அப்பழிச்சொற்கள் என் செவியில் விழலாகாது. ஆயிரம் பழிச்சொற்களில் ஒன்றாக அறியாதேனும் என் நெஞ்சில் ஒரு பழிச்சொல் எழுந்துவிடலாகாது. அதை கூறவே தங்களை அழைத்தேன்” என்றாள். கனகர் தேரின் விளிம்பைப் பற்றியபடி நெஞ்சு தளர்ந்து வாய் சற்றே திறந்திருக்க அவளை பார்த்துக்கொண்டிருந்தார். “அனைத்தும் அறிந்தவன்! மண்ணில் இறையுருவென எழுந்தவன்! இந்த யுகத்தை ஒரு மென்பீலியென சூடியவன்! ஆக்குவதும் அழிப்பதும் அவனுடைய விளையாட்டு. அதை அறிவதும் வகுப்பதும் நமக்கு இயல்வதல்ல. ஆகவே அவனை போற்றுவதும் பழிப்பதும் நமது பணியுமல்ல. ஆட்படுவதொன்றே அடியவர் செய்யக்கூடியது” என்றாள் காந்தாரி.
கனகர் புரவியில் அமர்ந்தபடி தேருக்கு இணையாக ஒழுகிச்சென்றுகொண்டிருந்த பந்தங்களின் ஒளியில் மின்னி மின்னி அணைந்த காந்தாரியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். காந்தாரி “இவையனைத்தும் அவன் விழைவு. அது பெருகி மலையிறங்கும் கங்கை போன்றது. கடலிலிருந்து எழுந்து நிலம் நிறைக்கும் பெருங்காற்றுபோல விசை கொண்டது. தன் திசையை தான் மட்டுமே அறிந்தது. நாம் சிற்றெறும்புகள். ஒழுகும் சிறுசருகுகள். அவ்விசைக்கு ஆட்படுவதன்றி வேறெந்தத் தெரிவும் இல்லாதவர்கள்” என்றாள். கனகர் எண்ணியிராக் கணத்தில் தன் உள்ளிலெழும் சீற்றத்தை உணர்ந்தார். அதை கட்டுப்படுத்த வேண்டுமென எண்ணி இரு கைகளாலும் கடிவாளத்தையும் தேர் முனையையும் அழுந்தப் பிடித்த அக்கணத்திலேயே அவருடைய வாய் எல்லை கடந்து சொற்களை கொட்டத்தொடங்கியது.
“ஆம், தெய்வங்கள் இரு வகை. அழிக்கும் தெய்வங்கள், ஆக்கும் தெய்வங்கள். அழிக்கும் தெய்வங்களுக்கு எதிராகவே ஆக்கும் தெய்வங்களை சரணடைகிறோம். நோயும் தெய்வம், இறப்பும் தெய்வம், பேரழிவும் தெய்வம்தான். ஆனால் எந்த ஆலயத்திலும் மிருத்யுவையோ வியாதியையோ காலதேவனையோ வைத்து வணங்குவதில்லை. பொலியும் திருமகளையும் சொல்லாயும் கலைமகளையும் அச்சம் கொல்லும் பாய்கலைப்பாவையையும் மட்டுமே வணங்குகிறோம். மங்கலப்பேருருவென எழுந்த மூன்று தெய்வங்களை வணங்குகிறோம்… இவன் யார்? இவன் கலியுகத்தின் தெய்வம்! தெய்வமுகம் கொண்டு வந்த இருள். மெய்யென மாற்றுருக்கொண்ட மருள். ஆக்கமென மயங்க வைக்கும் அழிவு…”
“போதும்! இனி ஒரு சொல் அவனைப் பழித்தெடுத்தால் உமது தலைகொய்து இங்கிட ஆணையிடுவேன்” என்று காந்தாரி கூவினாள். மூச்சிரைக்க “அகல்க… இனி என் முன் நில்லாதொழிக!” என்றாள். “நீங்கள் அன்னையென அமைந்து அனைவரையும் வாழ்த்தலாம். தெய்வமென இருந்து அவன் செயலையும் புரிந்துகொள்ளலாம். நான் எளிய மானுடன். என் தலைவன் அங்கு தொடையறைந்து கொல்லப்பட்ட செய்திக்குப் பின் என்னால் எந்த நெறியையும் பேண இயலாது. இச்சொற்களின்பொருட்டு என் தலை இங்கு உருளுமென்றால் அதுவும் நன்று” என்றார் கனகர். “பேரரசி, சில நாட்களாகவே என் தலையை தாங்க இவ்வுடலால் இயலவில்லை. எங்கேனும் இது உடைந்து தெறிக்குமென்றால் விடுபடுவேன். இந்த உடலுக்குள் கொதிக்கும் குருதியனைத்தையும் கொட்டிச் சிதறினாலொழிய என்னால் அமைதியடைய இயலாது… அளிகூர்ந்து அந்த வாளை எடுத்து என் தலையை வெட்டி எறியச் சொல்லுங்கள்.”
பாய்ந்து புரவியிலிருந்து எழுந்து தேருக்குள் புகவிருப்பவர்போல் எழுந்தார். “எனக்கு தெய்வம் ஒன்றே! நான் தலைகொண்ட அரசன்! அவனுக்களித்த என் சொல்! பிறருக்கு அச்சொல்லை அளிக்க என்னால் இயலாது. அஸ்தினபுரியின் அரசனை அழித்த அவன் என் இன்சொல்லுக்கு உரியவன் அல்ல. எதன் பொருட்டு என் தலைவன் கொல்லப்பட்டான்? மண்ணாசையின் பொருட்டு! மண் விழைவில்லாத மன்னனென ஒருவன் உண்டா? நெறிகளை மீறி என் அரசனைக் கொன்றவன் தெய்வமே எனினும் அவன் எனது எதிரியே… அவனை நான் தீச்சொல்லிடுகிறேன். அந்தணன் என நின்று என் முப்புரிநூல்பற்றி வேதச்சொல் சான்றாக்கி சொல்கிறேன். அவன் மைந்தர்துயரால் அழிவான்… அவன் குடி கல்பொரு சிறுநுரை என மெல்ல மெல்ல இல்லாதாகும்.”
காந்தாரி அவரை நோக்கிக்கொண்டு சிலகணங்கள் அமைந்தபின் பெருமூச்சுவிட்டாள். “உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், அமைச்சரே. இங்கிருக்கும் அனைத்து உணர்வுகளையும் நான் அறிவேன். ஆயினும் கார்வண்ணனே நீயே அறிவாய், உனக்கே அடைக்கலம், நீயன்றி பிறிதில்லை. நான் உன் அடித்தூளியன்றி வேறிலை எனும் சொற்களையன்றி வேறெதுவும் உரைப்பதாக இல்லை. அந்தணரே, அச்சொற்களை உங்கள் நாவும் உரைக்கட்டும். அதுவன்றி எதுவும் உங்களை விடுதலை செய்யப்போவதில்லை. அதிலன்றி எதிலும் நீங்கள் மெய்யை அறியப்போவதுமில்லை” என்றாள்.
கனகர் தேரிலிருந்து தன் கையைவிட்டு இரு கைகளால் கடிவாளத்தை பற்றிக்கொண்டார். தேர் நகர்ந்து முன்னால் சென்றது. அவருடைய புரவி நின்றுகொண்டே இருக்க இடப்புறம் அஸ்தினபுரியின் மக்கள்திரள் பொருளிலா வசைச்சொற்கள் கலந்த கூச்சலுடன் அவரைக் கடந்து ஒழுகிக்கொண்டிருந்தது.