’ஜக்கு’ ஜெகதீஷ்- கடிதங்கள்

 

அஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்

அன்புள்ள ஜெ,

                    அஞ்சலி – ‘ஜக்கு’ ஜெகதீஷ்  பற்றிய பதிவை தங்கள் இணையத்தளத்தில் படித்தேன். இந்த பதிவை இணையதளத்தில் பதிவிட்டமைக்கு நன்றிகள். ஜக்குவை பற்றி செல்வேந்திரன் எழுதியதற்கு ஆயிரம் நன்றிகள்.

ஜக்குவை பற்றி படித்து கொண்டிருக்கும்போதே என் மனம் வெட்கி தலை குனிந்தது. எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு பொறியாளன். எனக்கு ரத்த கொதிப்பு மிக அதிகமாக இருப்பது சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ரத்த கொதிப்பு இருப்பது அறிந்து இன்னும் கோபம் தான் வந்தது. இந்த இளம் வயதில் எனக்கு Second hypertension 200 இருப்பது கண்டு வருத்தப்படாத நாட்கள் இல்லை.மாத்திரைகள் பிடிக்காத எனக்கு இரு வேளை விழுங்கும் நிலை ஏற்ப்பட்டது. இப்படி இருக்கையில் தான் ஜக்குவின் பதிவை படித்தேன்.

நான் ஒரு கல் நெஞ்சகாரன் இருப்பினும் ஜக்குவை பற்றி படிக்க படிக்க என்னை அறியாமல் கண்களில் நீர் வடிய ஆரம்பித்தது. பல தடைகளையும், கடினமான உடல் அமைப்பையும் வைத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்த ஜக்குவை பார்க்கையில் எனக்கு இருக்கும் இந்த ரத்த கொதிப்பு கண்டு தற்போது துளி அளவும் வருத்தம் இல்லை. இளம் பருவத்திலேயே இவ்வளவு சவால்களை கடந்து சாதித்து காட்டியுள்ளார் சகோதரர் ஜக்கு. உதவும் கரங்கள் உலகமெங்கும் உள்ளது என்பதை கௌதம் நிரூபணமாகியுள்ளார்.

சகோதரர் ஜக்குவை போன்ற அசத்திய மனநிலையை மற்றும் மனஉறுதியை பெற முயற்சிக்குறேன். ஜக்கு வாழ்ந்த வாழ்விற்கு முகமரியா என்னை போன்றோர்களின் கண்ணீரே சிறந்த அஞ்சலியாக இருக்கும். “ஈன்ற பொழுதில் தன் மகனை சான்றோர் என கேட்ட தாய்” என்ற வரிகளுக்கு  ஜக்குவின் பெற்றோர்களே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

எழுதிய இந்த கடிதத்தை தயவு கூர்ந்து செல்வேந்திரன் மற்றும் சகோதரர் ஜக்குவின் பெற்றோர்க்கு கொண்டு சேர்த்துவிடவும்.

இப்படிக்கு,

மு. பாலாஜி

 

அன்புள்ள ஜெ

 

சொல்வேந்திரன் அவர்கள் ஜக்கு பற்றி எழுதிய அஞ்சலி குறிப்பை இப்போது தான் உங்கள் வலைதளத்தில் படித்தேன்.

 

நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.ஆனால் ஜக்கு அளவிற்கு உடல் நிலை பாதிக்கப்படவில்லை.

குளிப்பதிலிருந்து மலம் கழிப்பது வரை மற்றொருவர் தான் செய்துவிட வேண்டும்.உட்காருவது,சாப்பிடுவது, படுப்பது எல்லாம் ஒரளவிற்கு என்னால் செய்து கொள்ள முடியும்.நானே ஒருவாறாக உடலை அசைத்து அசைத்து சிறிது தூரம் நகரவும் செய்வேன்.ஜக்குவை போலவே நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவன்.எங்கள் வீட்டிலும் ஆன மட்டிலும் எனக்கு வைத்தியம் பார்த்தார்கள்.எதுவும் பலனளிக்கவில்லை.இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டோம்.நான் இப்படி இருந்த போதிலும் என் பெற்றோர்  12 வகுப்பு வரை கஷ்டப்பட்டு என்னை பள்ளியில் படிக்க வைத்தனர். 8 ஆம் வகுப்பு வரை ஊர் பள்ளியில் படித்தேன்.அதற்கு மேல் ஊர் பள்ளியில் இல்லை. நின்று விடலாம் என்று தான் இருந்தோம்.ஆசிரியர் ஒருவர் உதவியினால் ஒரு 4 கிலோ மீட்டர் தள்ளியிருந்த பக்கத்து ஊர் மேல் நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு சேர்ந்தேன்.அப்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நல்லவர்கள்.நான் தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று எனக்கு கருணை காட்டினார்கள்.நானும் ஒன்பதாம் வகுப்பு முழுக்க தேர்வுக்கு மட்டுமே சென்றபடி வீட்டிலிருந்த படியே படித்து கொண்டேன்.பத்தாம் வகுப்பின் போது பொதுத்தேர்வாயிற்றே என்று என்னை பள்ளிக்கு வரும்படி அழைத்தனர். என் அப்பாவும் அரை நாள் கூட்டி வந்து விடுகிறேன் என்று சொன்னார்.அவர் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர். தன் வேலையை மதியமுறைக்கு மாற்றிக் கொண்டார்.காலையில் என்னை பள்ளிக்கு அழைத்து சென்று வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு வேலைக்கு செல்வார்.இப்படியே 11,12 வகுப்புகளையும் கடந்தேன். இப்போது சென்னை பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.ஏ வரலாறு முதலாமாண்டு படித்து வருகிறேன். எனக்கு பெரும்பாலும் நான் வேண்டுவன கிடைத்து விடுவதால் நான் நடக்காதவன் என்று தோன்றுவதே இல்லை. அப்படியே தோன்றினாலும் நாம் இப்படித்தான் இதிலிருந்து முன்னேறுவோம் என்ற தன்னம்பிக்கையும் உடன் தோன்றுவதும் உண்டு.

 

ஜக்கு பற்றி படிக்கும் போது ஒரு பக்கம் ஆச்சரியமும் மறுபக்கம் வெட்கமும் உடன் தோன்றியது.அவர் பத்து நாட்கள் வெட்ட வெயிலில் போராட்டம் நடத்தியதெல்லாம் நினைத்து பார்க்கவே பிரமிப்பாய் இருக்கிறது.இன்னொரு புறம் என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாய் இருக்கிறது.நான் எல்லாம் அவர் முன் ஒன்றுமில்லாதவன்.ஒருநாள் கூட மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியதில்லை.

ஜக்குவின் பெற்றோர் பெரும் மதிப்புக்கு உரியவர்கள்.எங்களை போன்றவர்களுக்கு பெற்றோர்கள் பெரும் துணையாவர்கள்.

 

சொல்வேந்திரனின் அஞ்சலியை படித்தவுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்றியது.பகிர்ந்து கொண்டேன்.

 

சக்திவேல்

முந்தைய கட்டுரைஃபாசிசம் -கடிதம்
அடுத்த கட்டுரைகாமரூபிணி