சென்னையில் வாழ்தல்- கடிதம்

சென்னையில் வாழ்தல்

 

வணக்கம் ஜெ

லோகமாதேவியின் சென்னை குறித்த கடிதம்  எனக்கு தனிப்பட்ட முறையில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. சென்னையின் அளவுகடந்த மக்கள் கூட்டம், வாகன நெருக்கம் எனக்கு ஒருவிதத்தில் ஒவ்வாமையே. நான் கிராமப்புறத்தைச் சேர்ந்தவன் அல்ல; நகர்புறந்தான். ஆனால் என் வீட்டு வளாகத்தில் உள்ள பத்து பதினைந்து மரம் செடிகளிடையே நான் நிறைவாக உணர்கிறேன். இதைவிட அதிகமாக இருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். நான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன். சிவகங்கை-ராமநாதபுரம் வட்டாரம் வெளிறிப்போய், வெறிச்சோடிய சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகள் தான்.  இந்த வட்டாரம் முழுக்க கண்மாய் பாசனம். இன்று எந்தக் கண்மாயிலும் நீர் இல்லை; விவசாயமும் இல்லை; தொழில் வளர்ச்சியும் இல்லை. வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டிய கட்டாயம். அப்படி பெருநகரம் செல்பவர்கள் இங்குள்ளதை விட வசதியாய் உணர்கிறார்கள்.

நீங்கள் சொன்னதுபோல சென்னை வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் பலர் உண்டு. அவர்கள் மக்கள் கூட்டத்தைக் கொண்டாடக் கற்றுக்கொண்டவர்கள். அதுவும் பலவகை முகங்கள் ஒரே நகரில் இருப்பது கூடுதல் கொண்டாட்டம். பொதுவாக நூறுபேர் மத்தியில் நின்றுகொண்டிருப்பதுகூட ஒருவித உள்ளக்கிளர்ச்சியை அளிப்பதாக இருக்கும். சினிமா திரையரங்குகள் போன்ற இடங்களில் இதை உணரலாம். இது ஒருபுறமிருக்க, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் உள்ள உயர் நடுத்தர மக்களின் எந்திரத்தனமான வாழ்க்கை சோர்வளிக்கக்கூடிய ஒன்றே. அதில் பலர் இங்கிருந்து (தெற்கிலிருந்து) சென்றவர்களே. அவர்கள் மத்தியில் நிலவும் பொதுவான கருத்து யாரையும் நம்பக்கூடாது, யாரிடமும் அதிகம் பேசக்கூடாது, வீட்டை நல்லா பூட்டி வச்சுக்கணும் போன்றவைகள். இந்த சக மனித நம்பிக்கையின்மை அங்குள்ள இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் பிரிக்க முடியாததாகிறது. காலையில் துவங்கி இரவு தூங்கப்போகும் வரை எல்லோரும் ஓடுவார்கள். அது நடப்பதற்கும் ஓடுவதற்கும் இடைப்பட்ட ஒரு நிலை. எதற்கு இப்படி இவ்வளவு வேகமாகச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது போல. லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் இருந்து இறங்கிய பின் மெதுவாக நடந்து செல்பவர்களை அரிதாகவே காணமுடியும். இந்த சக மனித உறவு சேரி, குப்பம் பகுதிகளில் இயல்பாக இருக்கிறது. ஒருவகையில் இந்த மேட்டுக்குடிகளிடம் அல்லது மேட்டுக்குடிகளாகவேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்கத்தினரிடமே இந்த போலித்தனம் காணப்படுகிறது.

காலனிய காலகட்டம் இங்கு விதைத்துச்சென்ற சுய இழிவு- சொந்த மரபை, கலாச்சாரத்தை இழிவாக எண்ணுவது- இதற்கு ஒரு முக்கியக் காரணம். டைல்ஸ் கற்கள், குளிரூட்டப்பட்ட அறைகள், சூரிய வெளிச்சம் உடலில் படாத, கால்பாதம் மண்ணில் படாத ஒரு வாழ்க்கையை விரும்புகிறவர்கள். குழந்தை விளையாட மண்ணில் போனால்கூட, ‘மண்ணுக்குப் போகாதே… செப்பல் போட்டு போ..’ என்று பெருமையாகச் சொல்வார்கள். ‘வசதிக்காக’ என்று ஆரம்பித்த சில விஷயங்கள் இன்று நாகரிகத்தின் அடையாளமாகவும், ஃபேஷனாகவும்  ஆகிப்போயின. இவர்கள் பேசும்போதுகூட சில விஷங்களை பட்டிக்காட்டுத்தனம் என்று ஏளனம் செய்வார்கள். அந்த கிராமிய வெறுப்பும், இயற்கை வெறுப்புமே நம் நடுத்தரவர்க்கத்தை ஆட்டிப்படைக்கிறது. வீட்டிற்கு நடுவில் கக்கூஸைக் கட்டிக்கொண்டு (Attached Bathroom) இருப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் சொன்னால், என்ன இந்தக் காலத்துல போய் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு…! என்பார்கள். இந்த மனநிலைகளெல்லாம் எளிதில் மாறப்போவதில்லை. காலனிய அடிமைத்தனத்தின் எச்ச சொச்சங்கள் அவ்வளவு லேசானதா என்ன ? !

விவேக்

முந்தைய கட்டுரைதினமணி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவரலாற்றின் சரடு