பி.எஸ்.என்.எல்லில் நிகழ்வது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

நீங்கள் முன்னாள் BSNL ஊழியர்..  உங்களுக்கு தற்போதைய BSNL நிலை தெரியும் என்று நினைக்கிறன்..  இந்த வருடம் மூன்று முறைகள் ( பெப்ரவரி ஜூலை ஆகஸ்ட் மாதங்கள்) சம்பளம் தள்ளிப்போனதில் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளார்கள் ..அரசு BSNLக்கு CELLULAR FIELD நுழைய தாமதமாகத்தான் அனுமதி கொடுத்தது..  தொடர்ந்து 3G லைசென்சும் தாமதமாக வழங்கப்பட்டது .தற்போது 4G கேட்டும் அரசு தாமதப்படுத்துகிறது. இதனால் LEVEL PLAYING FIELD என்பது கேள்விக்குறியாகிறது. இதை பற்றியும் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறன்.

‘’நான் பொதுவாக சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை’’ என்று தற்போது சொல்ல வேண்டாம்.மேலும் நீங்கள் BSNL தொழிற்சங்கத்தில் இருந்தவர் என்பதாலும்,  உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் உங்கள் தரப்பு கருத்துக்காக காத்திருக்கிறேன்..

ஆர் பத்ரிநாத்

***

அன்புள்ள பத்ரிநாத்,

இம்மாதிரியான சூழல்களில் பொதுமக்களின் எண்ணங்களைக் கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுத்துறைகள் அழியட்டும், அதன் அழிவால் தனியார்த்துறை வளர்ந்தால் சேவை மேம்படும் என்பதே பொதுக்கருத்து. பொதுத்துறைகளின் அழிவுக்கு முதன்மைக்காரணமாக ஊழியர்களின் அலட்சியப்போக்கு, சோம்பல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவார்கள். அதிகாரிகளின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மிகமிக்க்குறைவு. எனக்குத்தெரிந்து உயரதிகாரிகளின், கொள்கை வகுப்பாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் எவருமே இல்லை.

பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடம் அடிப்படையான குறைகள் உண்டு என்பதே என் எண்ணம். அரசூழியர்களுக்குரிய மெத்தனம், மக்களை பொருட்டாக நினைக்காத தன்மை. சமீபகாலம் வரை நான் பி.எஸ்.என்.எல் இணைய இணைப்பு வைத்திருந்தேன். இரவு பன்னிரண்டு மணிக்குமேல் அது செயலிழந்துவிடும். காலை ஏழுமணிக்குமேல் செயல்பெறும். அல்லது பத்துமணி ஆகிவிடும். ஊழியர் என்றவகையில் இது எவ்வாறு நிகழ்கிறது என மிகத்தெளிவாக உணர்ந்திருந்தேன். அந்த கருவி ஏதோ காரணத்தால் நின்றுவிடுகிறது. அதைத் திரும்ப இயக்கவேண்டிய இரவுப்பணி ஊழியர் தூங்கிவிடுகிறார். அல்லது அவர் கவனிப்பதில்லை. அடுத்த ஊழியர் வந்தபின் அதை திரும்ப தொடங்கிவிடுகிறார். எத்தனை புகார் செய்தாலும் இதுவே தொடரும். ஏனென்றால் இதற்கு எந்த மேலதிகாரியும் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏதேனும் காரணம் சொல்லி குற்றச்சாட்டுக்கு சட்டபூர்வ பதிலைச் சொல்லிவிடமுடியும். மிஞ்சிப்போனால்கூட ஒரு எச்சரிக்கை அவ்வளவுதான் தண்டனை.நான் பிஎஸ்என்எல் இணைப்பை திரும்ப அளித்துவிட்டேன்.

இம்மாதிரியான பொறுப்பின்மைகள் ஓங்கித்தெரிவதனால்தான் பிஎஸ்என்எல் போன்ற அரசுசார் பொதுத்துறைகள் அழிகின்றன. சேவைத்துறைக்குத் தேவையான பொறுப்பும், பணிவும்,செயல்திறனும் அரசூழியர்களுக்குரிய உளநிலை கொண்ட பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடம் இல்லை. அவற்றை அவர்களுக்குக் கற்பிக்க அரசு பலவாறாக முயன்றும் பயனில்லை. ஏனென்றால் அரசூழியர் அரசேதான் என்பது ஓர் இந்திய உளவியல். குடிகள் அவ்வரசின் ஏவலர்கள், அடிமைகள். இந்த உளநிலை அதிகாரிகளிடம் பல மடங்கு அதிகம். ஒர் பிஎஸ்என்எல் அதிகாரி தன்னை மாவட்ட ஆட்சியர் என்றுதான் எண்ணிக்கொண்டிருப்பார். சேவைபெறுபவர் போதுமான அளவுக்கு பணிவுடன் இல்லை என்றால் சீற்றம் கொள்வார். அவரை முடிந்தவரை காக்கவைக்க, முடிந்தவரை பிரச்சினைகளை ஒத்திப்போட முயல்வார். நானே என்னுடைய பென்ஷன் பணத்தை பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடமிருந்து பெற இரண்டு ஆண்டுக்காலம் போராடவேண்டியிருந்தது.நான் அதை பதிவுசெய்திருக்கிறேன்.

இந்த அக்கறையின்மை மேலிடம் வரை தொடர்கிறது என நாம் அறிவோம். இன்று  பி.எஸ்.என்.எல் ஓரு வணிக நிறுவனம், போட்டியில் நின்று லாபம் ஈட்டியாகவேண்டியது. அதன் அனைத்துமுடிவுகளையும் எடுக்கும் உயர்மட்ட அதிகாரிகள் உண்மையில் பெருவணிகநிறுவனங்களின் தலைமைச் செயல்அலுவலர்களுக்கு நிகரானவர்கள். அவர்களிடம் போட்டியிட்டு வெல்லவேண்டியவர்கள். அத்தகைய திறன் கொண்டவர்கள்தான் அப்பதவிகளில் இருக்கிறார்களா? இல்லை என நாம் அறிவோம். அவர்கள் ஓரிரு போட்டித்தேர்வுகளில் வென்று அப்பதவிகளுக்கு வந்தவர்கள். பதவிக்கு வந்தபின் முழுக்க முழுக்க பணிமூப்பின் அடிப்படையில் உயர்பதவிபெற்றவர்கள். அவ்வளவுதான். வேறு எவ்வகையிலும் அவர்கள் தங்கள் தகுதியை நிறுவியர்கள் அல்ல. தகுதியை பெருக்கிக்கொண்டவர்களும் அல்ல

அந்த முதல் போட்டித்தேர்வை எழுதியபின் அவர்களில் பெரும்பாலானவர்கள் எதையுமே படிப்பதில்லை. எதையுமே தெரிந்துகொள்வதிலை. அவர்களுக்கு பி.எஸ்.என்.எல் செயல்படும் செய்தித்தொடர்புத்துறை பற்றியே எதுவுமே தெரிந்திருக்காது. தொழில்நுட்ப அறிவு அறவே இருக்காது. வெறும் நிர்வாகிகள் அவர்கள்.இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்குரிய நிர்வாகமுறைமைகள் சில உண்டு. அவற்றை மட்டுமே அவர்கள் அறிந்திருப்பார்கள். அவற்றை இயந்திரத்தனமாகச் செய்வார்கள். அரசு உயரதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்களில் சுகபோகங்களில் திளைப்பார்கள்.[ அவை பிரிட்டிஷ் கால உயரதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்டவை. அரசர்களுக்குச் சமானமானவை]

அவர்களின் முடிவெடுக்காமையால், அவர்களின் தவறான முடிவால் மொத்த  பி.எஸ்.என்.எல் நிறுவனமும் அழிந்தால்கூட அவர்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை. அப்படி என்றால் பி.எஸ்.என்.எல் எப்படி லாபம் ஈட்டி வெல்ல முடியும்? பி.எஸ்.என்.எல் அரசுமுதலீடு கொண்ட பொதுத்துறை நிறுவனம். ஆனால் அதை நிர்வாகம் செய்பவர்கள் அரசு அதிகாரிகள். ஆனால் அவர்கள் அந்நிறுவனத்துடன் பிணைக்கப்பட்டவர்கள் அல்ல. அதன் வெற்றிதோல்விகளுக்குப் பொறுப்பானவர்களும் அல்ல. இந்த நிலை என்று தொடங்கியதோ அன்றே பி.எஸ்.என்.எல் அழியத்தொடங்கிவிட்டது. ஒற்றைவரியில் சொல்கிறேன், ஒரு வணிகத்தை நடத்துபவர்களுக்கு அதனால் எந்த நஷ்டமும் வராது என்றால் அந்த வணிகம் எப்படி நடக்கும்?

ஆகவே பி.எஸ்.என்.எல் மட்டும் அல்ல, இன்று இந்தியாவிலுள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் அழிவை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது. சந்தர்ப்பசூழல்களால் சில நிறுவனங்கள் தப்பிப்பிழைக்கலாம், அவ்வளவுதான். அரசுத்துறையாக இருந்து பொதுத்துறையாக வரும்போதே அரசு உயரதிகாரிகளுக்கும் மேல் பிற தனியார் துறைகளிலிருந்து திறன்மிக்க உயர்நிலைசெயல்அலுவலர்களை [சி.இ.ஓ]க்களை பணியமர்த்தி அவர்களுக்குக்கீழே நிறுவனம் செயல்பட்டாகவேண்டும், வெற்றி தோல்விகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கவேண்டும் என வகுத்திருந்தால் இந்நிறுவனங்கள் தப்பிப்பிழைத்திருக்க முடியும்.கூடவே இது வணிகநிறுவனம் , அரசுத்துறை அல்ல என்னும் உணர்வை ஊழியர்களும் அடைந்தாகவேண்டும்.

பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனங்கள் நாட்டின் அடித்தளங்கள் என நினைக்கிறேன். இன்றுகூட எங்கெல்லாம் லாபம் வருமோ அங்கு மட்டுமே தனியார்த்துறைகள் செயல்படுகின்றன. சென்ற மாதம் மகாராஷ்டிராவில் குடோப்பி பகுதிக்குச் சென்றோம்.  பி.எஸ்.என்.எல் மட்டுமே அங்கே கிடைக்கும். அங்கே சேவை அளிப்பதன்வழியாக பி.எஸ்.என்.எல் நஷ்டத்தையே அடையும். பி.எஸ்.என்.எல்லின் நஷ்டம் என்பது இத்தகைய சேவைகளின் ஒட்டுமொத்தமாக உருவாவது. ஆனால் அம்மக்களுக்கு செல்பேசி சேவை அவர்களின் வாழ்க்கையையே மாற்றும் ஒரு மகத்தான தொழில்நுட்பம்.

அரசுத்துறைகளும், பொதுத்துறைகளுமே நாட்டின் அடிப்படைவளர்ச்சிக்கு உரிய சேவைகளை வழங்க முடியும். அரசுப்பேருந்து ஐந்தே ஐந்து பேருக்காக ஒரு சிற்றூருக்கு வந்துசெல்லும். தனியார்ப்பேருந்து லாபம் இல்லாவிட்டால் நின்றுவிடும். அரசுப்பேருந்து இருப்பதனால்தான் இந்தியா இணைக்கப்பட்டிருக்கிறது. ஐயமிருந்தால் நம் சிற்றுந்துச் சேவைகளை கவனிக்கவும். பத்தாண்டுகளுக்கு முன் நம் அரசு சிற்றுந்துச் சேவையை தனியாருக்கு வழங்கியது. இன்று லாபம் வரும் வழிகளில் மட்டுமே சிற்றுந்துகள் செயல்படுகின்றன. மற்றவை நின்றுவிட்டிருக்கின்றன.

பி.எஸ்.என்.எல் இருப்பதனால்தான் இந்தியா முழுக்க செல்பேசி சேவை கிடைக்கிறது. நான் சென்றவரை இந்தியாதான் தொலைபேசித் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன்மை நாடு. நான் இப்போது இருக்குமிடம் அமெரிக்கா. இங்கே பெரும்பாலான காட்டுப் பகுதிகளில் செல்பேசி தொடர்பு கிடைப்பதில்லை. ஏனென்றால் தனியார் நிறுவனங்கள் மட்டுமே இங்குள்ளன. அவை காட்டுவெளியில் சேவையை அளித்து நஷ்டமடைய விரும்புவதில்லை. இந்தியாவில் மேற்குமலைகளின் அடர்காட்டுக்குள்கூட பி.எஸ்.என்.எல் தொடர்பு கிடைக்கும். ஒரே வீச்சில் இந்த அமைப்பை உருவாக்கிய சாம் பிட்ரோடாவுக்கு நம் தேசம் கடன்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்திக்கும், நரசிம்மராவுக்கும்.

ஆகவே பொதுத்துறை அரசின் தனிப்பேணுதலைப் பெற்றாகவேண்டும். அது அழியவிடப்படக்கூடாது. அது அழிந்தால் ஒட்டுமொத்தமாக நாட்டின் பொருளியலுக்கு உருவாகும் அழிவு மிகப்பெரியது. ஆனால் இந்தியாவை இன்று ஆள்பவர்கள் தனியாருக்குச் சார்பாக பொதுத்துறைக்கு எதிரான நிலைபாடு கொண்டிருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல் அவர்களால் அழியவிடப்படுகிறது. அது தனியார்ப்போட்டியில் நின்றுபோரிட முடியாமல் அதற்குரிய அனுமதிகள் மிகமிக தாமதப்படுத்தப்படுகின்றன. அதன் தொழில்நுட்பத்திற்கான முதலீடு நிறுத்தப்படுகிறது. அதன் உயரதிகாரிகள்கூட போட்டித் தனியார்துறையின் ஆணைகளுக்கு ஏற்பச் செயல்படும் பொம்மைகளாக இருக்கிறார்கள். நாட்டின் எதிர்காலத்திற்குமேல் செலுத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இது.

இன்று ஊதியம் கிடைக்காமலாகும்போதுதான் நமக்குத்தெரிகிறது இருபதாண்டுகளாக இடதுசாரிகள் எச்சரித்துவந்த அந்த அழிவு கதவைத்தட்டிவிட்டது என்று. இன்றுகூட செய்யப்படவேண்டிய சில செய்யப்பட்டால் பி.எஸ்.என்.எல் மீளும். முதலீடும் உயர்மட்டத்தில் வணிகநோக்குள்ள நிர்வாகமும் துரிதமான அரசு அனுமதிகளும் இருந்தால்போதும். இன்றைய அரசுக்கு அந்நோக்கம் இருப்பதாக தோன்றவில்லை. தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனுக்காக தொழில்துறையின் நலனை காக்கவேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டாகவேண்டிய நிலை.*

இங்கே இன்னொன்று சொல்லவேண்டும். இப்போதுகூட இதைப்பற்றி என்னிடம் எந்தத் தெளிவும் இல்லை. எல்லா அடித்தள ஊழியர்களையும்போல நானும் கடும் குழப்பத்திலும் அலைக்கழிப்பிலும்தான் இருக்கிறேன். 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றித்தான் சொல்ல வருகிறேன்.  ஆ.ராசா காலகட்டத்தில் நிகழ்ந்த தொலைதொடர்புத்துறைப் பொது ஏலம் பற்றி தணிக்கைத்துறை கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. நீதிமன்றம் அந்த ஏலத்தை ரத்துசெய்தது. பலகோடி ஊழல் என ஊடகங்கள் அலறின. நான் அன்று கடும் கொந்தளிப்பை அடைந்தேன். [ஆனால் உண்மையில் நிகழ்ந்தவை என்ன என்று தெரியவில்லை என்பதனால் எதுவும் எழுதவில்லை]

ஆனால் நான் அன்று சந்தித்த விஷயமறிந்த இடதுசாரித் தோழர்கள் எவரும் அப்படி ஓர் ஊழல் உண்மையில் நிகழவில்லை , அது ஒரு அரசியல்கற்பனை என்றே சொன்னார்கள். உண்மையில் நிகழ்ந்தது ஒரு வணிகக் கொடுக்கல்வாங்கல். ஆனால் முதலாளித்துவப் பொருளியலின் வணிகத்திற்குள் அது தவிர்க்கமுடியாதது என்றனர். ஆ.ராசா லாபம் அடைந்திருக்கலாம், ஆனால் அந்த லாபமே முதலாளித்துவப்பொருளியலில் செயல்திறமையையும் உருவாக்குகிறது, பொதுநன்மை, தியாகம் போன்ற இலட்சியவாதங்களுக்கு அங்கே இடமில்லை என்றனர். ஊழல் நடக்கவில்லை, ஆனால் ‘பயனடைதல்’ நடந்தது என்றும் அதை எந்த அரசும் எவ்வண்ணமும் தண்டிக்க முடியாது, தண்டிக்கவும் செய்யாது என்றும் சொன்னார்கள். ஆகவே அறுதியாக எஞ்சுவது வணிக இழப்பு மட்டுமே என்றனர்.ரிலையன்ஸ் ,பாரதிய ஜனதா, மோடி உள்ளிட்ட அனைவரும் இணைந்து ஆடும் அந்த ஆட்டத்தில் எவருமே தண்டனை பெறமாட்டார்கள் என்றனர்.

ஆனால் ஊழல்’ என்ற சொல்லே அன்று எங்களைக் கொந்தளிக்க வைத்தது. அன்றைய சூழலில் தோழர்களையும் அஞ்சவைத்தது ஊழல் என்னும் சொல்தான். அன்று மூத்த தோழர் ஒருவர் சொன்னார். தொழில்நுட்பத்துறையிலும் வணிகத்துறையிலும் நிகழ்வனவற்றை ஆராயவும் மதிப்பிடவும் இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரல் போன்ற அமைப்புக்குத் திறன் இல்லை, இந்திய நீதிமன்றங்களால் அவற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று. அவை அரசுத்துறைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்ட நெறிகளும் நடைமுறைகளும் அதற்குரிய மனநிலைகளும் மட்டுமே கொண்டவை. எழுதப்பட்ட சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று மட்டுமே அவற்றால் பார்க்கமுடியும் . ஒரு துறையை தனியார்ப் போட்டிக்கு விட்டுவிட்டு அதை அரசுத்துறைபோல ஆடிட்டிங் செய்வதும், நீதிமன்றம் அரசுத்துறைநெறிகளின்படி அதை கட்டுப்படுத்துவதும், தனக்குத் தோன்றியபடி நீதிமன்றமே அறுதி முடிவுகள் எடுப்பதும்  பேரழிவைக் கொண்டுவரும் என்று தோழர் சொன்னார்.

அதிகாரநடைமுறைகளை மட்டுமே அறிந்த இந்தியாவின் ஆடிட்டர் ஜெனரலும் , பழைமையான சட்டங்களை கையாளும் நீதிமன்றமும் சேர்ந்து  இறுதியாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை கொன்றுவிட்டார்கள், இனி இருப்பது வெறும் சடலம் மட்டுமே என்று அன்று நம் தோழர்களே சொன்னார்கள். ஆனால் எவரும் பொதுவெளியில் வாய திறக்கவில்லை. ஊழல் என்ற சொல் அளித்த அதிர்ச்சி ஒரு காரணம். அன்றைய கட்சிஅரசியல் இன்னொரு காரணம். என்ன நடக்கிறதென்றே எவருக்கும் தெரியவில்லை என்பது முழுமையான காரணம்.இன்று இன்றைய ஆட்சியாளர்கள் பெரிய பேச்சு பேசியபடி ஒவ்வொன்றாக இழுத்துமூடுவதைப் பார்க்கையில் சோர்வுதான் எஞ்சுகிறது. தோழர்கள் எல்லாரும் சேர்ந்து ஆ.ராசாவுக்கு ‘வி ஆர் ஸாரி தோழர்’ என ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம், அது மட்டுமே மிச்சம்

ஜெ

***

நீதியும் சட்டமும்

முந்தைய கட்டுரைகாமத்தையும் காதலையும் பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9