பகுதி மூன்று : பலிநீர் – 2
கனகர் முதற்புலரியில் தன்னை எழுப்பும்படி ஏவலரிடம் ஆணையிட்டுவிட்டுதான் படுத்தார். ஏவலன் விழிகளில் தெரிந்த நம்பிக்கையின்மையைக்கண்டு உரத்த குரலில் ”என்ன?” என்றார். அவன் இல்லை என்று தலையசைத்தான். ”முதற்புலரியில், கருக்கிருளிலேயே!” என்றார். அவன் ஆம் என்று தலையசைத்தான். ”ஒளியெழுவதற்குள் இங்கிருந்து அனைவரும் கிளம்பிவிட வேண்டும். முதல் நாழிகைக்குள் நகரிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்று நிமித்திகர் கூற்று. அதற்குள் நான் நீராடி ஒருங்க வேண்டும். செல்வதற்கு முன் ஒற்றர்களை சந்தித்து ஆணைகளை பிறப்பிக்கவேண்டும். இயற்றுவதற்கு பணிகள் மிகுந்துள்ளன” என்றார். ”ஆம், அமைச்சரே” என்றான் ஏவலன். “ஒன்று தவறினாலும் நாளெல்லாம் நான் இடர்ப்படவேண்டியிருக்கும்” என்றார். அதை அவர் தனக்கேதான் சொல்லிக்கொண்டார். அவனும் அதை உணர்ந்திருந்தான் என்று தோன்றியது.
செல்க என்று கையசைத்துவிட்டு கனகர் தன் மஞ்சத்தறைக்குள் சென்றார். மேலாடையைத் தூக்கி சிறு பீடத்தில் வீசிவிட்டு கைகளை சோம்பல் முறித்தபின் மஞ்சத்தில் அமர்ந்தார். தலை எடை கொண்டிருந்தது. வாய் கசந்தது. அன்று பகல் முழுக்க அவர் இனிப்பு கலந்த மாவுக்கூழை மட்டுமே அருந்தியிருந்தார். அதுவும் ஒவ்வொரு முறையும் அரைக்குடுவை மட்டுமே. ஓரிரு வாய் உள்ளே சென்றதுமே வயிறு குமட்டி உடல் உலுக்கிக்கொண்டிருந்தது. துயில் அமைந்தால் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடலாம். ஆனால் கணம்நூறு அலை வந்து அறைந்தாலும் கரையாத கடற்பாறை போலிருந்தது தன்னுணர்வு. அகிபீனாவின் துயில் உள்ளத்தை மட்டுமே கரைந்தழியச் செய்யும். ஆனால் காலையிலெழுந்தால் உடல் நெடும்பொழுது உழைத்து சலித்ததுபோல் களைத்திருக்கும்.
ஒருவேளை மஞ்சத்திலேயே துயிலில் புரண்டுகொண்டும் கைகால்களை அசைத்தபடியும் இருக்கிறோமோ? இருமுறை அவர் ஏவலரிடம் ”நான் இரவில் எப்படி துயில்கிறேன்?” என்று கேட்டிருக்கிறார். அவர்கள் விழிகளில் எந்த உணர்வும் தெரியவில்லை. ”நன்கு துயில்கிறேனா? கேட்ட வினாவுக்கு மறுமொழி சொல்க!” என்று உரக்க கேட்டபோது ஏவலன் தயக்கமாக “நிறைய பேசுகிறீர்கள்” என்றான். அவர் ”என்ன பேசுகிறேன்?” என்றபோது அவன் “கூச்சலிடுகிறீர்கள்” என்று மேலும் தாழ்ந்த குரலில் சொன்னான். அவர் ஐயத்துடன் “என்ன கூச்சலிடுகிறேன்?” என்றார். ”தெரியவில்லை. நான் உள்ளே வருவதில்லை. குழறலாகப் பேசுவதால் சொற்களும் புரிவதில்லை. நீங்கள் என்னை அழைக்கிறீர்களா என்று மட்டும்தான் பார்ப்பேன். இல்லையெனில் விலகிவிடுவேன்” என்று அவன் சொன்னான்.
”என்ன கூச்சலிட்டேன்? எவரிடம் கூச்சலிட்டேன்? சொல்!” என்று அவர் மீண்டும் கேட்டார். அவன் பேசாமல் நிற்க ”சொல்!” என்றார். ”உத்தமரே, நீங்கள் இரவில் தெய்வங்களிடம் பேசுவதுபோல் இருந்தது” என்றான். ”தெய்வங்களுடனா?” என்று அவர் கேட்டார். “ஆம், நீங்கள் பேசும் ஒலியும் மொழியும் தெய்வங்களிடம் பேசுவதுபோலத்தான் இருந்தது” என்றான். “விலகிச்செல்லுங்கள்! விட்டுவிடுங்கள்!” என்று அவன் சொல்லிக்காட்டினான். அவர் வெறுமனே நோக்கினார். “மன்றாடி கூச்சலிடுவதுபோல் தோன்றியது” என்றான். அவர் கண்களைக் கூர்ந்து அருகே வந்து “ நன்கு எண்ணிச்சொல், தெய்வங்களிடமா இல்லை உயிர் நீத்தாரிடமா?” என்றார். ”அதை என்னால் அறியக்கூடுவதில்லை. ஆனால் பெரும்பாலும் விட்டுவிடுங்கள், விட்டு அகன்றுவிடுங்கள் என்று மன்றாடினீர்கள். சில முறை அழுதீர்கள். சில முறை நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு அலறினீர்கள். ஓரிருமுறை எழுந்து அறைக்குள் சுழன்று ஓடுவது போலவும் விழுவது போலவும் கூட தோன்றியது” என்றான்.
“ஒரே ஒருமுறை மஞ்சம் ஓசையிட்டபோது நான் உள்ளே வந்து பார்த்தேன். நீங்கள் மஞ்சத்தின் விளிம்பில் மோதி அதன் காலடியிலேயே விழுந்து கிடந்தீர்கள். உங்களைத் தூக்கி படுக்க வைத்தேன்” என்றான். ”நீ என்ன கேட்டாய்? சொல், நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றார். ”விட்டுப்போங்கள் என்று மட்டும்தான்” என்றான். அவர் அவன் விழிகளை மேலும் அணுக்கமாக நோக்கினார். “அல்ல, அதற்கு மேல் ஏதோ சொன்னேன். உன் விழிகளில் தெரிகிறது அது” என்றார். அவன் விழி தாழ்த்தி தனக்குள் என “நீங்கள் அவர்களை வசை பாடினீர்கள்” என்றான். “நானா?” என்று அவர் கேட்டார். ”ஆம், மிகக்கீழ்மை நிறைந்த சொற்கள்…” என்றான். “கீழ்மை நிறைந்த சொற்கள் என்றால்?” என்று அவர் கேட்டார். “அந்தணர் நாவிலிருந்து ஒருபோதும் எழுந்துவருமென நான் கேட்டிராத சொற்கள். ஆகவேதான் அவை உங்களுடையதல்ல என்று தெளிந்தேன்.”
பெருமூச்சுவிட்டு கனகர் அவரிடம் “செல்க!” என்றார். அவன் சென்றபின் அந்த அறையை அச்சத்துடன் நோக்கினார். இந்த அறைக்குள் அத்தெய்வ உருவங்கள் இருக்கின்றனவா? நீத்தாரா? என்னை வந்து சூழ்ந்துகொள்ளும் அளவுக்கு எவரும் அக்களத்தில் உயிரிழக்கவில்லை. அரசர்களுக்கு என் முகமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எனில் எவர்? எங்கும் எவரும் உயிரிழக்கும்படி நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. உண்மையில் வாழ்நாளெல்லாம் முடிவென எதையுமே எடுத்ததில்லை. பிறர் முடிவுகளை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பிறர் முடிவுகளுக்கு ஏற்ப துணை முடிவுகளை எடுக்கிறேன். என்வாழ்வை குறித்துக்கூட எந்த முடிவையும் எடுத்ததில்லை. எந்த முடிவையும் எடுக்காதவர்கள் இப்புவியில் எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியதில்லை. அவர்களை எந்த தெய்வமும் முனியப்போவதில்லை.
ஆனால் எவரும் அவர்களை மதிப்பதுமில்லை. எவரிடமிருந்தும் நன்றியில் விழி நனைந்த ஒரு சொல்லை கேட்டதில்லை. எவரும் அடைக்கலமென வந்து முன் நின்றதும் இல்லை. எவரும் உளம் கனிந்து தோளில் தொட்டு ஒரு நற்சொல் உரைத்ததில்லை. இயற்றும் செயல் பிழையானால் மட்டுமே அவர் ஒருவர் இருப்பது அவர்களுக்கு தெரிகிறது. அப்பிழைக்கென அவரை கடிந்துகொள்கையில் மட்டுமே விழிநோக்கி சொல்லெடுக்கிறார்கள். எண்ணியிராக்கணத்தில் அவருடைய உளம் உருகி, தன்னிரக்கம் பெருகி கண்ணீர் வழியத்தொடங்கியது. அவர் அகிபீனா கலந்த லேகியத்தை எடுத்து அதிலிருந்து ஒரு உருளையை உள்ளங்கையில் உருட்டிக்கொண்டார்.
அதை வாயிலிடுவதற்குமுன் வேண்டியதில்லை என்று அவருக்குள்ளிருந்து ஒரு குரல் எழுந்தது. இதை உண்டால் நாளை புலரியில் என்னால் எழ முடியாது. அகிபீனா சித்தத்தை மயங்க வைக்கிறது. உள்ளே உறையும் அனைத்துக் குரல்களையும் எழுப்பி ஒன்றுடன் ஒன்று போராட வைக்கிறது. உள்ளம் கொப்பளித்து நுரையடங்குகையில்தான் அவற்றுக்குமேல் படியும் ஓர் இருள் என துயில் அணைகிறது. அதற்கு நெடுநேரம் ஆகும். பெரும்பாலும் புலரியிலேயே ஆழ்ந்த துயில் அமைகிறது. எழும்போது முகம் உறைந்தது போல், வாய் உலர்ந்து ஒட்டிக்கொண்டது போல் தொண்டையில் மணல் சிக்கிக்கொண்டது போல், கைகால்கள் தளர்ந்து மூட்டுகள் குடைச்சலெடுத்து விழிகள் எரிய காய்ச்சல் கண்டது போல் தோன்றவைக்கிறது. அகிபீனா உண்டு துயின்றெழுந்தால் ஒருநாழிகைப்பொழுது உடல் ஒன்றுடன் ஒன்று ஒத்திசையாத உறுப்புகளின் தொகையாக இருக்கும், உள்ளம் சொற்களின் பெருக்காக இருக்கும். வேண்டியதில்லை. அவர் அந்த லேகியக்குளிகையை மீண்டும் புட்டிக்குள் போட்டு மூடி அப்பால் வைத்தார் கால்களை நீட்டி மஞ்சத்தில் படுத்துக்கொண்டார்.
அவ்வறை மிதந்ததுபோல் அசையலாயிற்று. கூரை மிகத்தாழ்ந்து வந்து அருகே நின்றது. அவர் கண்களை மூடிக்கொண்டபோது சுவர்கள் அனைத்திலுமிருந்த வெவ்வேறு வடிவம்கொண்ட கறைகள் மட்டும் பிரிந்து அவரைச்சூழ்ந்தன. அவை கண்களாயின. மீன்களென துடிக்கத்தொடங்கின. பின்னர் மிகச்சிறிய குழந்தைகளாயின. குருதியிலிருந்து எடுத்த குழந்தைகள். சற்றே பெரிய புழுக்கள். புழுக்களுக்கு மட்டும் ஏன் விழிகள் இத்தனை பெரிதாக இருக்கின்றன? ஏன் அவை இமைக்காமல் வெறித்து உலகை நோக்குகின்றன? அருகணைந்து கூர்ந்து நோக்குகின்றன என்னை. ஓசையிடும் புழுக்களுண்டா? அவற்றுக்கு குரலில்லையா? குரலின்மையால்தான் அத்தனை பெரிய விழிகளை அடைந்தனவா? அவர் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்துகொண்டார். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
எழுந்து சென்று நடுங்கும் கைகளால் புட்டியைத்திறந்து ஒரு குளிகையை எடுத்து வாயிலிட்டார். நீரை அருந்திவிட்டு கண்களை மூடி அமர்ந்திருந்தார். குருதியின் மணம் வரத்தொடங்கியது. இவ்வறைக்குள்ளிருந்தா? அவர் சூழ நோக்கினார். அறை அவரை இறுக அணைக்க விழைவதுபோல் அதிரும் சுவர்களுடன் நின்றிருந்தது. அவர் கண்களை மூடியபடி விழுவதுபோல படுத்தார். கண்கள் சுழலும் பம்பரத்தின் மையச்சுழி என தோன்றின. குமட்டல் எடுக்க கண்களை திறந்தார். சுவர்மூலையில் குருதியைக்கண்டார். எழுந்து அமர்ந்து ”குருதியா?” என்றார். மீண்டும் அருகே சென்று பார்த்தபோது அது தரையில் விழுந்த சிறிய நீர்க்கறை என்று தெரிந்தது. காலால் அதை தொட்டுப்பார்த்தார். ஆனால் குருதியின் மணம் இருக்கிறது. பசுங்குருதியின் மணம். இது புண்குருதியல்ல, புதுக்குருதியல்ல. கருக்குருதி. இது பிறிதொரு மணம் கொண்டது. அதில் நீந்தும் உயிர்களின் மணம். மெல்லிய குமிழ்கள் வெடிக்க உயிர் கொண்டு தளும்புவது. செம்மண்ணில் உதிர்ந்து மணிகளெனச் சுருண்டு கிடக்கையில்கூட உள்ளே சிறு உயிரின் துடிப்பு இருந்தது.
அறிவின்மை. வெறும் உளமயக்கு. பித்து. வெறுங்குருதியில் உயிரா? ஆனால் வெறுங்குருதியில்தான் உயிர்கள் முளைக்கின்றன. குருதிக்குள் வாழும் உயிர்கள். அவர் தலையை இரு கைகளாலும் இறுக பற்றிக்கொண்டார். அங்கே களத்தில் பெருகியது ஆண்களின் குருதி. இங்கு பெருகுகின்றது பெண்களின் குருதி. ஒரு துளிப் பெண்குருதி நூறாயிரம் ஆண்களின் குருதிக்கு நிகர். ஆண்குருதியில் உயிர்களில்லை .பெண்குருதி விதைத்தொகுதி போல. அவர் எழுந்து அக்குடுவையை எடுத்து மேலும் மேலுமென மூன்று குளிகைகளை அருந்தினார். மீண்டும் சென்று படுத்தபோது வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சிக்கொண்ட நிறைவு எழுந்தது. இதோ என் குருதி வழிந்து வெளியேறுகிறது. மஞ்சம் முழுக்க என் குருதி பரவுகிறது. மஞ்சம் நனைந்து சேறென ஆகிறது. சேற்றில் புழுவென நான் படுத்திருக்கிறேன். இல்லை. தேனில் எழுந்த புழு. சிறகுகளை கனவுகாண்பது. இதோ மென்குருதி என்னை ஏந்தித் திரிகிறது. இளவெம்மையுடன் மென்மையாக அணைத்திருக்கிறது. குருதி ஒரு போர்வை போல். மெத்தை போல். இளங்காற்று போல்…
இதுவே எனது துயர். இப்போரில் எனது குருதி விழவில்லை. நான் குருதி வீழ்த்தியிருக்க வேண்டும். எனது குருதியை, எனது மைந்தர்களின் குருதியை, எனது உற்றாரின் குருதியை நான் வீழ்த்தியிருக்கவேண்டும். இந்நகரில் எந்த அந்தணரேனும் இவ்வுணர்விலாது இன்று இருக்க முடியுமா? குருதி வீழ்த்தியவர்கள் நல்லூழ் செய்தவர்கள். இழக்கையில் ஏற்படும் நிறைவை அடைந்தவர்கள். இழக்காதவர்கள் இழக்கப்படாத அனைத்தையும் தன்னுள் கொண்டவர்கள். அழுகிய உடல் உறுப்பு போல் அகற்றவும் கொள்ளவும் இயலாது அது ஒட்டியிருக்கிறது. அவர் எப்போது துயின்றார் என்று தெரியவில்லை. ஏவலன் அவரை உலுக்கி, பின்னர் நன்றாகவே அறைந்து எழுப்பியபோது ன் அவர் விழிப்பு கொண்டு எழுந்து அமர்ந்தார். குருதியில் இருந்த அவரை எவரோ தூக்கி எடுத்தது போலத் தோன்றியது. அவர் அகன்றபின்னரும் அக்குருதி பெருஞ்சுனையின் சுழியாக விசையுடன் சுழன்றுகொண்டிருந்தது. அதன் மையத்தில் ஆழ்ந்த இருண்ட பிலம் ஒன்றிருந்தது. அவர் அதை நோக்கி சுழன்றபடி சென்றுகொண்டிருந்தார்.
வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்த அவரிடம் ”பொழுது எழுந்துவிட்டது, அமைச்சரே. ஒவ்வொருவரும் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்” என்றான் ஏவலன். ”ஏன்? முன்னால் எழுப்புவதற்கென்ன?” என்றபடி அவர் எழுந்தார். ஆனால் உடல் நிலையழிய பிடித்து தள்ளப்பட்டவர்போல் ஒருபக்கமாக சென்று விழுந்தார். ஏவலன் அவரை பிடிப்பதற்குள் தரையில் உடல் அறைபட முகம் மரப்பலகையில் பட்டது. உதடுகளில் கிழிசல் விழுந்து குருதி சுவைக்க அவர் மீண்டும் தன்னிலையழிந்தார். ஏவலன் குனிந்து அவரைப்பிடித்துத் தூக்கி உலுக்கினான். அருகிருந்த குவளையிலிருந்த இன்நீரை எடுத்து அளித்து அதட்டலாக “அருந்துக!” என்றான். இருகைகளாலும் அதைப்பற்றி அருந்தினார். உடலுக்குள் இன்நீர் சென்று நிறைந்தபோது மெல்ல தவிப்படங்கி உடலெங்கும் நூற்றுக்கணக்கான குருதிக் குமிழிகள் வெடித்தமைய, கண்களுக்குள் சிற்றலைகள் பரவி விசையழிய, மூச்சு தளர உடலில் வியர்வை குளிரத்தொடங்க அவர் மீண்டு வந்தார்.
கனகர் நீராடி ஆடையணிந்து தலைப்பாகையை அழுத்திப் பிடித்தபடி உடல் தசைகள் குலுங்க ஓடி அரண்மனை முகப்பை அடைந்தபோது அங்கு ஏற்கெனவே பந்தங்களின் ஒளி நிறைந்திருந்தது. ஏவற்பெண்டுகள் அணிநிரந்து நின்றிருந்தன.ர் முகப்பில் நின்றிருந்த முதிய காவற்பெண்டு விழிகளைச் சுழற்றி அவரை தேடிக்கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் அவள் கண்களில் தெரிந்த சினம் அவரை குன்றவைத்தது. உடல் விசையழிய, கால்கள் தரையில் உரசி நீள, அவர் நோக்கைத் திருப்பி மெல்ல நடந்து வந்தார். அவளருகே சென்றதும் அவள் “அரசி தங்களை பல முறை கேட்டுவிட்டார், அமைச்சரே” என்றாள். “ஆம், நான் சில ஒற்றர்களை சந்திக்க வேண்டியிருந்தது. நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். “ஒற்றர்களும் தங்களை தேடினார்கள்” என்றாள். அவர் சீற்றத்துடன் அவளை திரும்பிப்பார்க்க அவள் அவரைக்கூர்ந்து நோக்கியபடி “அமைச்சர்கள் ஆற்றக்கூடாத சில உள்ளன” என்றாள். “நீ எனக்கு அறிவுரை சொல்கிறாயா?” என்றார். “ஆம், அறிவுரையேதான்” என்று அவள் சொன்னாள்.
அவர் அவளிடமிருந்து விலகி பற்களைக்கடித்தபடி உள்ளே சென்றார். அவருக்குப் பின்னால் அவளுடைய ஆணை எழ காவற்பெண்டுகள் வாள்களையும் வேல்களையும் தூக்கி தோள்களிலும் கைகளிலும் வைத்தபடி நெடுநிலை கொண்டனர். ஆணைகள் ஒலித்துக்கொண்டிருந்தன. தேர்கள் ஒருங்கி நின்றிருந்தன. அவர் படிகள் மேல் ஏறி இடைநாழியினூடாக பேரரசியின் அறை நோக்கி சென்றார். தன் உடலில் இருந்த தள்ளாட்டமும் நடுக்கும் வெளித்தெரிகிறதா என்று ஐயுற்றார். அந்த காவற்பெண்டின் முகம் நினைவுக்கு வந்தது. ஒருபோதும் ஒரு காவலர்தலைவன் அவ்வாறு பேசுவதில்லை. முதிய பெண்டிர் ஓர் அகவைக்குப் பின் தங்களை எங்கும் அன்னையராக உணர்கிறார்கள். எவரையும் அவர்களால் குறைசொல்லவும் திருத்த முயலவும் முடியும். எதற்கும் அவர்கள் அஞ்சுவதும் இல்லை. உண்மையில் அச்சொற்களை ஒரு காவலர் தலைவன் சொல்லியிருந்தால் அதற்குள் அவனை சிறைப்பிடிக்கவே ஆணையிட்டிருப்பார். அன்னைக்கு எதிராக சொல்லெடுக்க இயல்வதில்லை.
அவர் ஏதேனும் ஒரு ஆடியில் தன்னை பார்த்துக்கொள்ள விழைந்தார். நீராடிக்கொண்டிருக்கையிலேயே அவர் ஆடி நோக்க விழைவுகொண்டிருந்தார். முகம் எவ்வண்ணம் இருக்கிறது என்று நோக்கி நெடுநாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஆடை அணியும்போதும் அவர் இரு கைகளாலும் சுவடிகளைப் பிரித்து ஒற்றுச் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சொல்லும் சித்தத்தில் ஏறவில்லை. பின்னர் சுவடிகள் அனைத்தையுமே சுரேசர் பார்த்திருப்பார் என்ற எண்ணம் வந்தது. அவற்றை அப்படியே அடுக்கி அருகிருந்த ஏவலன் கையில் கொடுத்துவிட்டு தலைப்பாகையை கையில் வாங்கி தானே தலையில் அழுத்தியபடி கிளம்பினார். அரண்மனை இடைநாழிகள் எங்கும் ஆடிகள் இல்லை. ஆடி நோக்குவது அத்தருணத்தில் உகந்ததுதானா என்றும் தெரியவில்லை முற்றிலும் அறியாத பிறர் ஒருவரைக் கண்டு திகைத்துவிடக்கூடும்.
அவர் முகப்புக்கூடத்திற்குள் நுழைந்தபோது அங்கு வாயிலில் நின்றிருந்த சத்யசேனை அவரைப்பார்த்து சினத்துடன் பற்களைக் கடித்து ”வருக!” என்றாள். அவர் அருகணைந்து “ஒற்றர்களின் செய்திகள் வந்துகொண்டிருந்தன, அரசி. அனைத்தையும் தொகுத்து சில ஆணைகளை…” என்று தொடங்க கையமர்த்தி “சுரேசர் அரசியுடன் இருக்கிறார்” என்றாள். அவர் தலைவணங்கி உடலைக் குறுக்கியபடி உள்ளே சென்றார். காந்தாரி அகன்ற பீடத்தில் அமர்ந்திருக்க அவர் அருகே சுரேசர் அமர்ந்திருந்தார். துணையரசிகள் அப்பால் நின்றனர். அவர் அருகணைந்து தலைவணங்கினார். காந்தாரி அவரை ஓசையால் அடையாளம் கண்டு “தாங்கள் கிளம்ப பொழுதாகும் என்றார்கள்” என்றாள். “இல்லை, நான் ஒற்றர் செய்திகள்…” என்றபின் அவர் சுரேசரை பார்த்தார். சுரேசர் “இன்னும் பொழுதாகவில்லை. நாம் கிளம்புவதற்கு உரிய தருணம் இது” என்றார். கனகர் ஆறுதல் அடைந்தார். சுரேசர் “மேலும், இளவரசியருக்கு நாம் சற்று பொழுதளிக்கவேண்டியிருந்தது. அவர்களில் சிலர் உடல் நலம் குன்றியிருக்கிறார்கள். அவர்களுடன் மருத்துவப் பெண்டிரும் வரவேண்டுமென்று நான் ஆணையிட்டிருந்தேன். அவர்கள் ஒவ்வொருவராக இப்பொழுதுதான் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றார்.
காந்தாரி “கிளம்புவோம்” என்றபடி எழுந்தாள். பின்னர் “பயணம் செய்ய முடியாத நிலையில் எவரேனும் உள்ளனரா?” என்றாள். ”அப்படி எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அனைவருமே குருதிவார்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் எவரும் நிலை மறந்தவர்களாகவோ எழமுடியாதவர்களாகவோ இல்லை” என்று சுரேசர் சொன்னார். சத்யசேனை “எவ்வண்ணமிருப்பினும் அவர்கள் அங்கு சென்றாக வேண்டும். அவர்கள் அங்கு இயற்றப்போகும் சடங்குகளினூடாகவே அவர்களின் கொழுநர்கள் அவர்களிடமிருந்து விடுவித்துக்கொள்கிறார்கள். அவர்களும் கொழுநர்களிடமிருந்து விடுபடுகிறார்கள்” என்றாள். சத்யவிரதை “கொழுநர்களிடமிருந்து விடுபடுவது இன்றியமையாதது. அது இரும்பு நங்கூரம்போல் அவர்களை துயரத்தில் ஆழ்த்துகிறது” என்றாள்.
காந்தாரி ”விடுபட இயன்றால் நன்று” என்றாள். சுரேசர் பேச முற்படுவதற்குள் கனகர் “பெண்டிர் கைம்மைத்துயரிலிருந்து எளிதில் விடுபடுவார்கள் என்று நூல்கள் சொல்கின்றன. ஆகவே அவர்களுக்கு நோன்புகளை அத்தனை கடுமையாக விடுத்து அமைத்திருக்கிறார்கள். பிறிதொரு ஆணின் துணையிருந்தால் முந்தைய ஆணை முற்றாக மறக்க அவர்களால் இயலும். ஏனெனில் படித்துறைகளில் தன்னை முற்றாக புதிய பேருடன் புதிய நீருடன் அடையாளப்படுத்திக்கொள்வது நதிகளின் இயல்பு” என்றார். சத்யசேனை மீண்டும் சீற்றத்துடன் பற்களைக் கடித்து அவரை பார்த்தாள். தான் ஏதேனும் பிழையாக சொல்லிவிட்டோமா என்று கனகர் குழம்பினார். பெருமூச்சின் ஒலியில் “செல்வோம்” என்றபடி காந்தாரி எழுந்தாள்.
அரண்மனை முற்றத்திற்கு கனகர் மீண்டும் வந்தபோது அங்கே கௌரவ இளவரசியர் ஒவ்வொருவராக வந்து கூடியிருந்தனர். முற்றம் முழுக்க அவர்களின் மங்கலான ஆடைகளால் நிரம்பியிருந்தது. அவற்றில் பந்த வெளிச்சம் பட்டு அங்கு செந்நிறப் புகை நிரம்பியிருப்பதுபோல் தோன்றியது. புகையின் மெல்லிய அசைவுகள் அங்கே ஒரு சிதை எரிகிறதோ என்ற எண்ணத்தை எழுப்பின. அந்த எண்ணம் எழுந்ததும் அவ்வெண்ணத்தை அவரே திகைப்புடன் துறந்தார். மேலும் அரசியர் உள்ளிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர் குருதியின் மணத்தை உணரத்தொடங்கினார். கொழுங்குருதி. உயிர்கள் நிறைந்த குருதி. என்னால் ஆகாது. இவ்வெண்ணம்தான் என்னை உணவுண்ணவிடாது தடுக்கிறது, பித்தனாக்குகிறது, துயிலொழியச் செய்கிறது. ஆனால் குருதி மணம் கூடியபடியே வந்தது. குருதி வழிந்து பளிங்குத் தரை வழுக்குவதுபோல. சுவர்களில் கையை வைத்து குருதி வழிவதை உணர்ந்து திடுக்கிட்டு விலக்கிக்கொண்டார். பின்னர் அது பந்தங்களின் செவ்வொளிதான் என்று தெரிந்தது.
இளவரசிகளின் முகங்கள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் நெளிந்து அசைந்துகொண்டிருந்தன. எவரும் அணிகள் பூண்டிருக்கவில்லை. பொற்பின்னல்கள் இல்லாத வெளிர்நிறம் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தார்கள். வெண்ணீல, இளமஞ்சள் வண்ணம் கொண்டவை. பலர் மரவுரி ஆடைகளை அணிந்திருந்தார்கள். அனைவருமே தலைகுனிந்து தங்களில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர். அவர் காவற்பெண்டிடம் சென்று “கிளம்ப வேண்டியதுதான்” என்றார். அவள் அதே பகைமை விழிகளில் தெரிய “ஆம்” என்றாள். கனகர் முன்னால் சென்று வழிநோக்கியிடம் “சாலை ஒழிந்துள்ளதல்லவா?” என்றார். “ஆம், ஆணைகளை பிறப்பித்துவிட்டேன்” என்று அவன் சொன்னான். கனகர் கையசைக்க முதற்காவல் மாடத்திலிருந்து முரசுகள் ஒலிக்கத்தொடங்கின. அஸ்தினபுரியின் ஒழிந்த தெருக்களில் இருந்த காவல் மாடங்களில் முரசுகள் ஒலித்தன. மிகத்தொலைவில் கோட்டை முகப்பிலிருந்து முரசு ஒலித்தது. நகரம் ஒரு யானைபோல் ஒலி எழுப்புவதாகப் பட்ட்து. நோயுற்ற யானை. உயிர்பிரிந்துகொண்டிருக்கும் யானை.
காவற்பெண்டு அவரிடம் கேளாமலேயே தன் இடையில் இருந்த கொம்பை எடுத்து ஊதினாள். அஞ்சித் துயிலெழுந்த பறவைகளின் ஓசைபோல கொம்பொலி எழுந்தது. படைவீரர்களும் காவல்பெண்டுகளும் வாள்களையும் வேல்களையும் தூக்கி நிலத்திலும் தோளிலும் வைத்துக்கொண்டனர். முதற்படை கிளம்பி முற்றத்தை அடைந்தது. அதைத் தொடர்ந்து புரவி வீரர்கள் சென்றனர். காந்தாரியும் உடன் பிறந்தோர் நால்வரும் சென்று முதற் தேரில் அமைவு கொண்டனர். தொடர்ந்து வந்த கூண்டு வண்டிகளில் பிற அரசியரும் ஏறிக்கொண்டனர். ஒவ்வொருவரும் தளர்ந்திருந்தனர். பிறர் தோளைப்பற்றியபடி எடைகொண்ட உடல்களை மெல்ல அசைத்து ஏறினர். அவர்களின் எடை தாளாதவை போல தேர்கள் முனகின.
பானுமதி காந்தாரியைப்போலவே ஆகிவிட்டதாகத் தோன்றியது. அவளுடல் எடை மிகுந்து, கால்கள் மிகச்சிறுத்து நடை தள்ளாடியது. உடலுக்குள் நீர் நிரம்பியிருப்பதுபோல ததும்பியபடி அவள் தேரில் ஏறிக்கொண்டாள். அசலை அவள் அருகில் அமர்ந்தாள். தேர்கள் கிளம்பி சாலையில் செல்ல கனகர் தன் புரவியிலேறிக்கொண்டு தொடர்ந்து சென்றார். சுரேசர் அவருக்குப் பின்னால் வந்து கைகாட்ட புரவியை நிறுத்தினார். சுரேசர் அருகே வந்து “தாங்கள் இன்று புலரியில் அமைச்சுக்கு வந்து இறுதியான ஆணைகளை அளித்துவிட்டுச் செல்வீர்கள் என்று எண்ணினேன்” என்றார். “நான் சற்று துயின்றுவிட்டேன்” என்று அவர் சொன்னார். “சொன்னார்கள். ஆகவே ஆணைகள் அனைத்தையும் நானே பிறப்பித்துவிட்டேன். தங்களுக்கான செய்திகள் அனைத்தையும் ஓலையில் எழுதி இப்பெட்டியில் வைத்துள்ளேன். தங்களிடம் இருக்கட்டும்” என்றார் சுரேசர்.
கனகர் அதை வாங்கி தன் புரவியில் கொக்கியில் மாட்டியபின் அவரை நோக்காமல் “அங்கு எனக்கு பெரிய பணிகள் ஏதுமில்லை. அங்கு அனைத்தையும் நோக்குவதற்கு இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் இருப்பார்கள்” என்றார். “ஆம். ஆனால் அஸ்தினபுரியின் அமைச்சர் நீங்கள். அரசியருக்கு நீங்களே இன்னும் அமைச்சராகத் தெரிவீர்கள். அரசியருக்கும் இந்திரப்பிரஸ்தத்தின் அவையினருக்குமான தொடர்பு உங்கள் வழியாகத்தான் நிகழவேண்டும்” என்றார் சுரேசர். “ஆம்” என்று கனகர் தலையசைத்தார். ”கருதுக! எப்போதும் விழிப்பு நிலையில் உடனிருங்கள்” என்றார். சீற்றத்துடன் திரும்பி அவர் கண்களைப் பார்த்தபின் அவரை புண்படுத்தும்படி ஏதேனும் சொல்ல விரும்பினார் கனகர். சீற்றம் எழுந்ததே ஒழிய சொல் எதுவும் எழவில்லை.
பின்னர் திரும்பிக்கொண்டு “என்னால் நன்கு துயில இயலவில்லை” என்றார். சுரேசர் ”அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இன்று இயல்பாகத் துயில்பவர் இன்று எவருமில்லை” என்றார். “நான் யோகம் பயின்றவன் அல்ல, எளிய அமைச்சன்” என்று கனகர் சொன்னார். “மேலும் இவ்வுடலுக்குள் நான் சேர்த்த குருதி நிறைந்திருக்கிறது. அதில் ஒரு துளியையேனும் வீழ்த்தினால் நிறைவுற்று என்னால் விண்ணுலகம் செல்ல இயலும்”. சுரேசரின் விழிகள் மாறுபட்டன. அக்கணமே தான் சொல்லவேண்டியதென்ன என்பது அவருக்கு தெரிந்தது. ”இப்போரின் அழிவுகளைக் காண்கையில் நானும் உடன் அழியவேண்டியவன் என்றே என் மனம் உணர்கிறது. நான் நிரப்பிக்கொள்ள வேண்டிய வெற்றிடத்தைக் கண்ட நிறைவு எனக்கில்லை” என்றார். சுரேசரின் கண்களில் கடும் சீற்றமெழ முகம் சிவந்து உதடுகள் விரிவதைக் கண்டார். புரவியைத் தட்டி முன்னால் செலுத்தி அஸ்தினபுரியின் மையச்சாலையை சென்றடைந்தார்.