அஞ்சலி : ‘ஜக்கு’ ஜெகதீஷ்

2017 கோவை புத்தகத்திருவிழாவில்தான் நான் ஜக்குவை முதன் முதலில் பார்த்தேன்.  ஜெயமோகனின் அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் திரு அமைத்திருந்த ஸ்டாலுக்கு ‘பனி மனிதன்’ புத்தகத்தைத் தேடி வந்திருந்தார்.

இன்னும் நடை பயிலாத குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டு போகும் வகையிலான ஒரு சக்கர நாற்காலியில் அவர் பிணைக்கப்பட்டிருந்தார். தலை அசையாமலிருக்க கழுத்துப்பட்டை. இரு கால்களும் அசைவற்று திசைக்கொன்றாய் விலகிக்கிடந்தன. கைகள் எதிரெதிராய் திருகி வளைந்திருந்தன. தூரத்துப்பார்வைக்கு அமர்சேவா மையம் ராமகிருஷ்ணன் போலிருந்தார். கொசுவம் கட்டிய ஒரு பாட்டியம்மாவும் சில நண்பர்களும் உடனிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆகையால் பல பிரபலஸ்தர்கள் இருந்தனர். பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது. அனைத்துப் பற்களும் தெரிய சிரித்த முகத்துடன் உற்சாகமாக அனைவருடனும் தற்படங்கள் எடுத்துக்கொண்டார்.

திருக்குறளரசி மறுநாளே புத்தகத்தை வரவழைத்துக் கொடுத்தாள். என் அலுவலகத்திலிருந்து சில நூறடி தூரத்தில் இருக்கும் ஜக்கு வீட்டில் அதைக் கொடுப்பதற்கு நான் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டேன். எதையும் தார்க்குச்சி வைத்து குத்தி குத்திதான் என்னைச் செய்ய வைக்கமுடியும். திரு எரிச்சலடைந்தாள். ‘ஆமா உடனே படிச்சு கிழிச்சுட்டுத்தான் அவரு அடுத்த வேலய பாப்பாரு’ என நானும் பதிலுக்குச் சீறினேன். ஒரு சிறிய விஷயத்தை வளர்க்க வேண்டாமே என ஜக்குவை தேடிச் சென்றேன்.

சிறிய வீடு. நடுக்கட்டில் சுவர் ஓரமாக ஒரு கட்டில். அதில் ஒரு குழந்தையைப் போல ஜக்கு ஒருக்களித்து கிடந்தார். தலையணையின் இடது ஓரத்தில் ஒரு லேப்டாப். அருகே ஒரு செல்போன். ஒரு கையின் விரல்கள் மட்டுமே செயல்படும். திரும்பிப் படுக்கவோ, கால்களை அசைக்கவோ முடியாது. உண்ணவும் உடுத்தவும் இதர உபாதைகளுக்கும் உடனிருந்து உதவ ஆள் தேவை. உணவை திரவமாக கடைவாயில் ஊற்ற வேண்டும். அப்படியே ஜன்னல் சிறுகதையில் வரும் சுந்தரராமசாமி. ஆனால் ஜக்குவின் ஜன்னல் வேறு வகையானது.

ஜக்கு என்னை அருகே அமரச் செய்து அவர் உருவாக்கிய டிசைன்களை, இணையதளங்களை, ஒருங்கிணைத்த நிகழ்வுகளை, எழுதிய புத்தகங்களைக் காண்பித்தார். கணிணி, இணையம், மாற்றுத்திறனாளிகளுக்கான மென்பொருட்கள், குரலை சொல்லாக மாற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியோடு அவர் தன் உலகை வடிவமைத்திருந்தார். அன்றைய தினத்தின் பணிகளை மறந்து அரைநாள் அவரோடு இருந்தேன். தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வின் எல்லைகளை ஆன்ம பலத்தினால் அநாயசமாகக்  கடந்து விட்ட பொருள் பொதிந்த வாழ்வு. நான் என்பது என் உடனல்ல என உரக்கச் சொல்லும் செயல்பாடுகள். எவ்வித பிரசங்கங்களும் தேவையின்றி தன் இருப்பினாலேயே அவர் என் ஆசிரியர் ஆனார்.  என்னை விட 12 வயது இளையவரான அவரை ‘அண்ணா’ என்றழைக்கத் துவங்கினேன்.  என் பிள்ளைகளுக்கு அவர் ஏன் போற்றுதலுக்குரியவர் என்பதை அன்றிரவே சொல்லிக்கொடுத்தேன். எந்த நெருக்கடியில் இருந்தாலும் நான் தொலைபேசி அழைப்பை ஏற்கக் கூடிய இரு நபர்களுள் ஜக்கு ஒருவர்.

கீழ்நடுத்தர வர்க்க பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறந்த ஜெகதீஷ் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது  ‘டெட்ரோப்ளேஜியா’ எனும் நோய் தாக்கியது. எழுந்து  நிற்கவோ நடக்கவோ முடியாது. ஒரு மணி நேரம் கூட நிமிர்ந்து உட்கார முடியாது. சக்திக்கு மீறிய சிகிட்சைகள் பெற்றோர்களை மேலும் வறியவர்களாக்கியது. ஜக்குவை மேலும் பலகீனப்படுத்தியது. அத்தனை தடைகளையும் மீறி பத்தாம் வகுப்பு வரை படித்தார். படுக்கையிலிருந்தபடியே சுயமாக வரைகலை தொழில்நுட்பத்தைப் பயின்றார். அவரைப் பற்றி கேள்விப்பட்ட மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வீ.கே. டி பாலன் என்பவர் அவருக்கு பணிவாய்ப்பு வழங்கினார். வீட்டிலிருந்தபடியே சிறிய வருமானத்தை உண்டாக்கிக்கொண்டார்.

கிறுக்கன் ஜக்கு எனும் புனைப்பெயரில் சமூக ஊடகங்களில் எழுதலானார். உள்ளூர் தாண்டியும் நண்பர்கள் உண்டானார்கள்.  உளச்சிக்கல்களில் அவதியுறும் சக மாற்றுத்திறனாளிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவது, அவர்களது சுயசார்புக்கு உதவுவது, உடல் உறுப்புகள் தானம், ரத்த தானம், கண் தானம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டுப் பிள்ளைகளுக்கு இணைய வகுப்பு எடுப்பது, தெருக்கூத்து போன்ற நாட்டாரியல் கலைகளை ஆதரிப்பது என பெரிய காரியங்களை சிறிய வீட்டில் இருந்தபடி செய்ய ஆரம்பித்தார். மாற்றுத்திறனாளிகள் வாசிப்பதையும் எழுதுவதையும் தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார். அவர்களது நூல்களை பதிப்பிக்கவும் வெளியிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

கோவையின் பல்வேறு சமூக சேவகர்களுடனும், தன்னார்வல அமைப்புகளுடனும் இணைந்து பட்டியலிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குப் பெரும் காரியங்களைச் செய்தார். பேரிடர் காலங்களில் நிதியும் பொருளும் திரட்டுவதில் எப்போதும் முன்நின்றார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மைக்கை சக்கர நாற்காலியில் பொருத்தி கல்லூரி கல்லூரியாகச் சென்று மாணவர்களிடம் உரையாற்றினார். சூழியல், நீர்நிலைகள் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பொதுக்காரியங்களில் முன்நின்றார். உடலின் எல்லா தடையையும் மிஞ்சி நின்றார். இறைவன் அளித்த ஓரொரு மணித்துளிக்கும் பயன்மதிப்பை உருவாக்கினார்.

ஜக்குவிடம் ஒருபோதும் கசப்பு இருந்ததில்லை. எந்தத் தோல்வியிலும் சலிப்பு கிடையாது. எந்த துக்கத்தையும் அபாரமான நகைச்சுவையில் கடந்துவிடுவார். மீச்சிறந்த வாசகர். ஒருபக்கமாக ஒருக்களித்துப் படுத்து கணிணி திரையில்தான் அவரால் வாசிக்கமுடியும். அச்சில் மட்டுமே கிடைக்கும் பல நூல்களின் சாஃப்ட் காப்பியை ஜக்குவிற்காகவே எழுத்தாளர்களிடம் பெற்று கொடுத்திருக்கிறேன். உடனே வாசித்துவிட்டு ஒருவிரலாலேயே டைப் செய்து கருத்திடுவார். வெள்ளி நிலம் சிறார் நாவலை ஒரே இரவில் படித்து விட்டு மறுநாள் காலையில் அழைத்து மதங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய சித்திரத்தை ஒரே நேர்கோடாக்கி விவாதித்தது நினைவில் எழுகிறது.

ஜக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நிதி வேண்டி சிறு குறிப்பு ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். நிறைய அழைப்புகள். ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் கெளதம் எனும் தம்பி அழைத்திருந்தார். கோவையைச் சேர்ந்தவர். அவரது கல்லூரி நாட்களில், ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி பல்வேறு போராட்டங்கள் கோவையில் நடைபெற்று வந்தன. பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் ஜக்கு பத்து நாட்களும் கலந்துகொண்டார். சில செய்திச் சேனல்கள் ஜக்குவின் பேட்டியை செய்திகளுக்கிடையே ஒளிபரப்பியது. அதைப் பார்த்து கொதித்த கெளதமின் அம்மா, ‘தடி மாடாட்டம் வீட்டுக்குள்ளயே இருக்கீயே.. போய் அந்த தம்பி கூட உட்காருடா’ என்று அனுப்பி வைத்தார் என்றார். அதுவரை செல்போனே உலகம் என வாழ்ந்த நான் ஜக்குவினால் முதன்முறையாக மக்கள் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டேன். தினமும் தூரத்தில் இருந்து அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். எஜூ தர்மாவில் என்னால் ஆன பணத்தை அனுப்பியுள்ளேன். அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடலின் அத்தனை சவால்களையும் மீறி கொளுத்தும் வெயிலில் பத்து நாட்களும் போராட்ட களத்தில் ஜக்கு  இருந்ததை நினைத்தால் உள்ளம் நடுங்குகிறது.

சென்னை வெள்ளம், கேரள வெள்ளம் போன்ற பேரிடர்களில் ஜக்கு பணியாற்றிய வேகத்தில் செயல்படக் கூடிய ஒருவரை கூட என் கார்ப்பரேட் வாழ்வில் கண்டதில்லை. ஜக்கு இறந்த செய்தியை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டன. பேரிடர் காலங்களில் ஜக்கு ஆற்றிய பணிகளை தவறாமல் குறிப்பிட்டன. கோவை மிருகக்காட்சி சாலை கூண்டுப் பறவைகளின் முட்டைகள் உடைந்து விடாமல் குஞ்சு பொறிப்பதற்கான இன்குபேட்டர் வாங்கித் தர முடியுமாவென கோரி ஒருமுறை ஜக்கு அழைத்ததாக எஸ்கேபி கருணா குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஜக்குவின் கவலைகள் விசித்திரமானவை. பொது நோக்கத்திற்காக பிரதமரையும்  அழைக்கத் தயங்கமாட்டார்.

ஜக்குவிற்கு இருந்த மிகப்பெரிய வருத்தங்களுள் ஒன்று நமது கட்டிடங்கள் எதுவும் மாற்றுத்திறனாளிகளை பொருட்படுத்துவதில்லை என்பது. பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் என எங்கும் ஒரு வீல்சேரை ஏற்றும் ராம்ப் வசதி கூட செய்யப்படுவதில்லை. கழிப்பறைகள் இருப்பதில்லை.  எந்தப் புதிய மனிதரை சந்தித்தாலும் அவர் பணியாற்றும் இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதி உண்டா என்று கேட்பார். அவற்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விரிவாகப் பேசுவார்.

ஜக்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது மருத்துவமனை சென்று அவரது அம்மாவிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினேன். ஐசியூவில் பணியாற்றும் ஒரு மருத்துவர் கதவருகே நின்று எங்களை கவனித்துக்கொண்டிருந்தார். நான் கிளம்புகையில் லிஃப்ட் அருகே மடக்கி ‘யாரு சார் இவரு.. இவரைப் பார்க்க அலையலையாக ஆட்கள் வந்துக்கிட்டே இருக்காங்க.. நிறைய மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு மேலே வந்து ஐசியூ வாசல்ல நின்னு கண்ணீரோட பிரார்த்திக்கறாங்க.. கலெக்டர், எம்பின்னு பல விஐபிக்கள் வர்றாங்க.. அவரு ஹெல்த்தை விசாரிச்சு ஃபோன் மேல ஃபோன் வந்துக்கிட்டே இருக்கு..’ என உள்ளடங்கிய குரலில் விசாரித்தார். நான் ஜக்குவைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை சொன்னேன். அவரால் நம்பவே முடியவில்லை. கறிவேப்பிலை மாதிரி கட்டிலில் கிடந்துகொண்டா இவற்றையெல்லாம் செய்தார் என்றார். அவர் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. உலகையே சொந்தமென விரித்துக்கொள்பவர்களின் ஆன்ம பலம்.

ஜக்கு விரைந்து தேறி வருகிறார் என்பதே கடைசியாகக் கிடைத்த செய்தியாக இருந்தது. ஹொய்சாள ஆலய சிற்பங்களை ரசிக்கும் சிறிய பயணத்தில் இருந்தேன். பசலூரு மல்லிகார்ஜூனா ஆலய சிற்பங்களைப் பார்த்து விட்டு அராலுகுப்பே சென்ன கேஸவ ஆலயத்திற்கு  கொட்டும் மழையில் சென்று கொண்டிருந்தபோது ஜக்குவின் உயிர்பிரிந்து விட்ட செய்தி வந்தது. கோவைக்கு ஆன்மிக முகம், தொழில் முகம், பண்பாட்டு முகம், சேவை முகம் என பல முகங்கள் உண்டு. அதில் ஜக்கு நம்பிக்கையின் முகமாக இருந்தார். ஜக்குவின் டைம்லைனுக்குச் சென்றேன். இறுதியாக அவர் பகிர்ந்திருந்த செய்தி இப்படியாக இருந்தது “ஒரு மனிதனைப் பார்க்கும்போது சகமனிதனுக்கு நம்பிக்கை வரவேண்டும் – இம்மானுடமே அந்த நம்பிக்கையில்தான்  இயங்கிக்கொண்டிருக்கிறது”

செல்வேந்திரன்

முந்தைய கட்டுரைசென்னையில் வாழ்தல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6