பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்
வைகுண்டம் மற்றும் திருவாசகம் அவர்களின் கடிதம் கண்டேன்.
இருவருமே, ‘மனச் சாய்வு, மேட்டிமை வாதம்’, ஆகியவற்றால் புண்பட்டிருக்கிறார்கள் எனப் புரிகிறது. அவை வசைகள் அல்ல. அவர்கள் பேசும் வாதத்தை, நான் முறைப்படுத்தினேன். They are certainly biased and elitist arguments.
2013 ஆம் ஆண்டு, ஜக்தீஷ் பக்வதி/ அர்விந்த் பனகாரியா என்னும் பொருளியல் பேராசிரியர்கள், ‘why growth matters ’ என்னும் பொருளியல் புத்தகத்தை வெளியிட்டார், அதுதான் 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், குஜராத் மாதிரி என முன்வைக்கப்பட்டது. அது, குஜராத்தில் நிகழ்ந்த பொருளியல் வளர்ச்சியே, அதன் சமூக வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதுதான் அதன் அடிப்படை. வைகுண்டம் முன்வைக்கும் ஒரு பார்வையின் அடிப்படை.
அதே ஆண்டு, “An uncertain Glory” என்னும் புத்தகத்தை, அமர்த்தியா சென்னும், ஜான் ட்ரெஸ்ஸூம் வெளியிட்டார்கள். தொழிற்வளர்ச்சிக்கு முன்பே, அரசுகள் சமூக முன்னேற்றக் கட்டமைப்பில் முதலீடு செய்வதே மேம்பட்ட சமூக வளர்ச்சியைத் தரும் என்னும் வாத்த்தை முன்வைத்தார்கள். அதற்கான முன்மாதிரியாக, கேரள மாநிலத்தை முன்வைத்தார்கள்.
அதை எதிர்த்த ஜக்திஷ் பகவதி, கேரளம் பல காலம் முன்பாகவே சமூக முன்னேற்றக் கட்டமைப்புகளில் முதலீடு செய்து விட்டது. எனவே, அதையும் குஜராத்தையும் ஒப்பிடக் கூடாது என்றார். ஆனால், நவீனத் தொழில்துறை, அதிலிருந்து வரும் வரிவருமானம் எனப் பொருளாதாரம் மாறும் முன்பே, கேரள அரசும், சமூகமும், சமூக முன்னேற்றக் கட்டுமானங்களான கல்வியிலும், சுகாதாரத்திலும் பெரும் முதலீட்டைச் செய்தார்கள் என்பதுதான் நான் முன்வைக்கும் புள்ளி.
இதனூடக, பேராசிரியர் கலையரசன், தமிழகத்தையும், குஜராத்தையும் ஒப்பீடு செய்து ஒரு ஆய்வை முன்வைத்தார். 1990களில், தமிழகமும், குஜராத்தும் கிட்டத்தட்ட ஒரு அளவு சமூக முன்னேற்றம் கொண்டிருந்தன. இரண்டுமே தாராள மயப் பொருளியல்கள் கொள்கைகளை முன்னெடுத்தன.
பத்தாண்டுகளுக்குப் பின்னர், குஜராத், தமிழகத்தை விட வேகமான பொருளியல் வளர்ச்சி வேகத்தைக் கண்டிருந்தது. ஆனால், சமூக முன்னேற்றக் குறியீடுகளில், தமிழகத்தை விடப் பின் தங்கியிருந்தது என்னும் வாதத்தை, தரவுகளுடன் முன்வைத்தார். அதற்கான காரணங்களாக, தமிழகம் சமூக முன்னேற்றத்திட்டங்களான இலவ்ச அரிசி, சுகாதாரக் கட்டுமானம்,நூறுநாள் வேலை போன்றவற்றில் ஒப்பீட்டளவில் மேம்பட்டவகையில் கவனம் செலுத்தியது என்பதே அவர் வாதம்.
உலகில், வறுமை பற்றிய பொருளியல் கோட்பாடுகளை உருவாக்கிய அமர்த்தியா சென், சீனம் கல்வியிலும், மருத்துவத்திலும் செய்த முதலீடுகளை உலகளாவிய அளவில் கவனப்படுத்தியவர். உலகின் மிக ஏழ்மையான நாடாக இருந்த போதே, சீனம் அடிப்படைக் கல்வியிலும், சுகாதாரத்திலும் (வெறும் பாத மருத்துவர்கள் https://asiasociety.org/
ஒரு முதலாளி, தன் தொழிலில் வரும் உபரியில், ஒரு சிறு பகுதியை தொழிலாளருக்கு ஊதியமாக வழங்க வேண்டும் என்னும் மனநிலை கொண்டவராக இருப்பார். அது அவரளவில் சரி.
ஆனால், அரசு என்பது அப்படி லாப நட்டம் பார்க்க வேண்டிய ஒரு நிறுவனம் அல்ல. அது அனைத்து மக்களையும் சமமாகப் பாவித்து, அவர்களின் சமத்துவமான (equitable) முன்னேற்றத்தை நோக்கி உழைக்க வேண்டிய ஒன்று.
மக்கள் முன்னேற்றத்தை முதன்மையாகப் பார்த்த அனைத்துத் தலைவர்களும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதை தங்கள் கடமையாகப் பார்த்தார்கள். பொருளாதாரம் வளர்ந்து, அரசு ஊழியர்கள் ஊதியம், இதர செலவுகள் எல்லாம் கழிந்து, உபரி இருந்தால் மக்களை முன்னேற்றலாம் எனக் காத்திருக்கவில்லை. வைகுண்டமும், திருவாசகமும் சொல்வது போல், இன்றைய அதீத நுகர்வுப் பொருளாதாரம் உருவாகி, அதில் அதிக வரி வசூல் செய்து, அதன் பின் சமூக முன்னேற்றக்கட்டுமானத்தை உருவாக்கலாம் என அவர்கள் காத்திருந்தால், 90 களுக்குப் பிறகே, தமிழகத்தில் இலவசக் கல்வியையும், சுகாதாரத்தையும் வழங்கியிருக்க முடியும். ஆனால், தமிழகம், சமூக முன்னேற்றக் கொள்கைகளை கொணர்வதில் ஒரு முன்னோடி மாநிலமாக சுதந்திரம் பெறும் முன்னரே விளங்கியது.
1920 களில், பள்ளிகளில் மாணவர்கள் படிக்க வருவதை ஊக்குவிக்க, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச உணவு வழங்கப்பட்டது. இதனால் அதிக மாணவர்கள் படிக்க வந்தார்கள். அப்போது, நாம் இன்று காணும் திருப்பூர்களும், ஒரகடங்களும் இல்லை. அதன் மூலம் வரும் விற்பனை வரி, கலால் வரி, வருமான வரி என்பதெல்லாம் இருக்கவே இல்லை.
1950 களில் காமராசர் இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்த போது, தொழிற்பேட்டைகள் துவங்கியிருந்தாலும், தமிழகம் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலமாகவே இருந்தது. நிதியாதாரங்கள் இல்லை எனப் புலம்பிய அரசு அதிகாரிகளிடம், (இதைத்தான் மனச்சாய்வு எனக் குறிப்பிடுகிறேன்), பிச்சையெடுத்தேனும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவேன் என அவர் சொன்னதாகக் கதைகள் உண்டு. மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்ததோடல்லாமல், புதிதாக 12000 பள்ளிகளைத் திறந்தார். காமராசருக்கும் அவருக்கு முந்தய ஆட்சியாளருக்கும் இருந்த வித்தியாசம் அதுதான். நிதி அல்ல பிரச்சினை. இருக்கும் நிதியை எவ்வாறு, எதற்காகச் செலவிட வேண்டும் என்னும் மனச்சாய்வுதான் பிரச்சினை.
1982 ஆம் ஆண்டு, எம்,ஜி,ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்திற்கான நிதித் தேவை 120 கோடி. அன்று தமிழகத்தின் வருமானம் 900 கோடி. வருடாந்திர மாநிலத் திட்ட சீராய்வுக்காக, தில்லி சென்று, அன்றைய திட்டக் கமிஷனின் துணைத்தலைவரான, டாக்டர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கிறார். 900 கோடி வருமானத்தில், 120 கோடியை யாராவது இலவசத்திட்டத்திற்குச் செலவிடுவார்களா எனக் கேட்கிறார் மன்மோகன் சிங். ’எம்.ஜி.ஆர், கோப்பைத் தூக்கியெறிந்து விட்டு, கோபத்துடன் வெளியேறினார்’, எனச் சொல்கிறார், அன்று அவருடன் சென்றிருந்த அரசு அதிகாரி எஸ்.நாராயண். இதுதான் நான் குறிப்பிட்ட மனச்சாய்வு. . (1993 ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், மதிய உணவுத்திட்டத்தை நாடெங்கும் அமுல்படுத்தியது அந்தத் திட்டத்தின் உண்மையான வெற்றி)
கடைக்கோடி மனிதனுக்கு நல்ல கல்வியும், சுகாதாரமும், உணவும் கிடைக்கும் வகையில் சமூகமும் பொருளாதாரமும் மாறும் போது, அந்த அடிப்படை அலகின் செயல் திறனும் பயன் திறனும் அதிகரிக்கிறது. அந்தக் கண்ணி வலுவாகும் போது நாடும், பொருளாதாரமும் வலுவடைகின்றன.
மன்மோகன் சிங் உள்ளிட்ட பல நவீனப் பொருளியல் அறிஞர்கள் தவறவிட்ட முக்கியமான புள்ளி இது. (எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரத் தேற்றங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரிடம் மனிதாபிமானம் இருந்தது).
இதைத்தான் நான் மேட்டிமை வாதம், மனச்சாய்வு எனக் குறிப்பிட்டிருந்தேன். (வைகுண்டம், குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தல் போல என்றொரு பதத்தை உபயோகித்திருந்தார். நூறு நாற்காலிகள் மற்றும் வணங்கான் நாயகர்களை, கல்வி எப்படி உயர்த்தியது என்பதை அறிவோம்).
காந்தியப் பொருளியல் முதலாளித்துவத்தை ’வழக்கமான பொருளில்’ எதிர்க்கவில்லை. அது லாப நோக்கை, நுகர்வு வெறியை முன்னெடுத்து, வளங்களை நீடித்து நிற்கும் வகையில்லாமல், சுரண்டுகிறது என்னும் விமர்சனத்தை முன்வைக்கிறது. அதற்கு மாற்றாக நீடித்து நிற்கும், மக்கள் அனைவரையும் அர்த்த்தோடு இணைக்கும், அனைவருக்கும் பயன் தரும் வகையிலான தொழில்முறைகளை முன்வைக்கிறது. ராஜேந்திர சிங் ஆர்வரி நதியை மீட்டது போல.
குமரப்பாவின் கூற்றான, ட்ராக்டர் சாணி போடாது என்பது, ஒரு காலத்திற்கான தீர்வாக அவர் முன்வைத்த பதில். ட்ராக்டர் வந்தது. காளை மாடுகளின் தேவை குறைந்தது. ஆனால், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்ததை விட, இன்று கால்நடைகளின் எண்ணிக்கை 50% அதிகம். ஏன் என யோசித்தால், மாறுதல் புரியும். இன்றைய சூழலுக்கு, குமரப்பாவின் கொள்கைகள் எவ்வாறு பொருந்தும் என யோசிக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.
வைகுண்டம் அவர்களுக்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க விரும்பவில்லை. மதுரையில் வசிக்கும் அவர், அங்கே இருக்கும் அர்விந்த் கண் மருத்துவமனையினர், அடுத்த முறை எங்கே இலவசக் கண்ணொளி முகாம் நடத்துகிறார்கள் என அறிந்து, முடிந்தால் அங்கே ஒரு நாள் நேரத்தைச் செலவு செய்யுங்கள் எனப் பரிந்துரைக்கிறேன்.
அன்புடன்
பாலா