«

»


Print this Post

மொழி மதம் எழுத்துரு- கடிதம்


மொழி,எழுத்து,மதம்- அ.பாண்டியன்

அன்பின் ஜெ! அவர்களுக்கு

பேரரசன் அவ்ரங்கசேப் (1618 – 1707) ஆட்சியின் இறுதிப் பகுதியில் (1692-ம் ஆண்டு) (ஓரளவு சுயாட்சிகொண்ட) தனியான நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டதே கர்னாடகா நவாபுகள் எனப்படும் ஆற்காடு அரசர்களின் ஆளுகைப்பகுதி.  கிருஷ்ணா நதியிலிருந்து தொடங்கி காவிரியாற்றைக் கடந்து இன்றைய தமிழ்நிலப்பரப்பை ஆண்ட இந்த அரசர்களை கிழக்கிந்திய கம்பெனி (1600 – 1874) பின்னணியோடும் பிறகு இடைப்பட்ட 1855 – 1874 காலத்தை பிரிட்டிஷ் அரசோடு இணைப்போடும் பொருத்திப் பார்க்க வேண்டும்

.
முகலாய வீழ்ச்சியால் சிப்பாய் கலகம் வன்முறையாக ஒருபுறம் எதிர்வினையானபோது, முன்பு நீடித்த அரபு பெருமித (ஆயிரமாண்டு) காலத்தின் முடிவையும் உடனடியாக கணித்த முன்னோடி சர் செய்யத் அஹ்மத் கான் (1817 – 1898).

இந்திய துணைகண்ட முஸ்லிம்களை நவீனத்தன்மை கொண்டவர்களாக மாற்றியாக வேண்டுமென்கிற இலக்கை பொதுவாகவும், கல்வித்துறையில் குறிப்பான சாதனைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சர் செய்யித் காரணமாக இருந்தார். 1901-ல் உருவான வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் 1919-லேயே இஸ்லாமிய கல்லூரியை நிறுவிவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமிருக்கும் சிற்றூர், பேரூரென இந்த அலை நீடித்து பல்வேறு கல்விக் கூடங்களின் பின்னல் ஒன்று கட்டமைக்கப்பட்டது. அப்படித்தான் OMIET, MEASI என்று அவை வளர்ந்தோங்கின.

பழைய (வட / தென்) ஆற்காடு பகுதியான செஞ்சி, வேலூர், கிஷ்ணகிரி, ஓசுர், ஆம்பூர், பள்ளிகொண்டா, ஆற்காடு, ராணிப்பேட்டை, சென்னையின் புறநகர்ப்பகுதியின் திரட்சியான முஸ்லிம் குடியிருப்புகள் (அக/புறவயமான)  மாற்றங்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்தன.

சூறாவளியின் கண்  சாந்தமாக இருப்பதுபோல தோன்றினாலும் அது, முழு நிறையாற்றலை தனக்குள் அடைகாக்கும். முதலாளியைப்போல, மிட்டா மிராசைவிட “போலச் செய்தலில்” மிகைத்திருப்பவன் பண்ணைக்கூலி என்கிற வகையில் இந்த (வட) ஆற்காடு பகுதியென்னமோ உயர்குல நவாபுகளால் ஆளப்பட்டிருந்த போதிலும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மொழியால் தமிழர்களே. மொழிவழியாகவும், இனரீதியாகவும் உள்ள இயல்புத்தன்மையை இவர்கள் இழந்தது சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு.

என் நன்னிமா தன் எல்லா பிள்ளைகளுடன் தமிழில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். என் பெற்றோர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் முயங்கியதும், பிணங்கியதும் தமிழில். ஆனால் இன்று இந்த மாவட்ட முஸ்லிம்களில் ஐம்பது வயதுக்கு கீழுள்ள பெரும்பாலானவர்கள் தங்கள் இணையோடு, பிள்ளைகளோடு உருதுவில் பேசக்கூடிய சமூக பொறிமுறை 20-ம் நூற்றாண்டில் முஸ்லிம்களே உருவாக்கினர்.

சர் செய்யத் அஹ்மத் கானின் ’அலிகர் இயக்கம்’ தொடங்கி வைத்த சீர்திருத்த கல்வி மரபை எங்கள் மாவட்டத்தை பொறுத்தளவில் கிலாஃபத் இயக்கம் சொந்த செலவில் வைத்த சூனியமாக இந்த (அன்னிய மொழி) சனியனை கொண்டு வந்து இறக்கியது.

கிலாஃபத் என்பது அப்பட்டமான மன்னராட்சி முறை. அந்த Sultan Abdul Hamid II (1842 – 1918) பற்றி நிறைய கதையாடலை இங்கு நாங்கள் கேட்டு வளர்ந்தோம். ஆனால் நவீனத்தின் முகமாக இருந்த பேராளுமையான Mustafa Kemal Atatürk (1881 – 1938) துரோகி என்றே அறிமுகப்படுத்தப்பட்டார். இதைப் போய் காந்தியடிகள் ஏன் ஆதரித்தார் என்று எனக்கு வியப்பாக உள்ளது.

விளைவு தமிழ் முஸ்லிம்களே உருது முஸ்லிமாக ஓடுள்ள ஆமையாக உள்ளொடுங்கி பொது வெளியோடு கலப்பற்று கிடக்கிறது. ஆரம்பக் கல்வி உருது மீடியமும், பட்டமேற்படிப்பு ஆங்கிலமும் என ஒரு தலைமுறையே இங்கு முற்றாக தன் தமிழ் வேரை இழந்து நிற்கிறது. அது இப்பொழுது transliteration முறையில் ரோமன் உருது / ரோமன் அரபு பழக்கத்துக்கும் படிப்படியாக மாறிக் கொண்டிருக்கிறது.

பன்னாட்டுவெளியில் ஒரு பதினாங்கு ஆண்டுகள் புழங்கியவன் என்கிற முறையில் சொல்கிறேன். இன்றைய துருக்கியர்கள் எல்லா விதத்திலும் நவீனமானவர்கள். பிற எந்தவொரு முஸ்லிம் நாட்டவர்களைக் காட்டிலும் அறிவியல் மனப்பான்மை கொண்டவர்கள். வரலாற்றுச் சக்கரத்தின் இயங்குதிசைக்கேற்ப தம் வாழ்வை அமைத்துக் கொண்டது மௌலானா ரூமியின் (1207 – 1273) சூஃபிய ஆன்மிகத்தை துருக்கிய சமூகம் ஒருபோதும் கைவிடாததுமே காரணம். மலேசிய இளம் பொறியாளர்களுடன் பழகியிருக்கிறேன். சென்னையில் தங்கிப் படிக்கும் மலேசிய இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களின் பள்ளிப்பருவம் முழுவதுமே ரோமன் எழுத்துருவில் கழித்த தலைமுறையது.

மலேசியாவிலுள்ள மத / மொழி / இன சிறுபான்மையினரின் அச்சமும், எங்கள் மாவட்டத்தில் நாம் கண்ட அனுபவமும் ஏதோவொரு வகையில் பொதுமைப் பண்பாக காணப்பட்டதால் இதை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கெ.பி.ராமுண்ணியின் Sufi Paranja Kathaயை குறிஞ்சிவேலன் மொழிபெயர்த்தது பிற்காலங்களில். அவரு முஸலியார் கேரள தோழர்களின் (What the Sufi Said) உதவியால் பண்டுதொட்டு அறிமுகம். வேர்களைத் தேடிய அலெக்ஸ் ஹேலியின் Kunta Kinteயும்  குர்ரத்துல் ஐன் ஹைதரின் அக்னி நதி கௌதமனும் ஆற்காடு-மலேசிய திருப்பங்களும் ஒருசேர கலந்து இன்றைய புலர்வை எங்கெங்கோ கொண்டு சென்றன.

தாஜ்மகாலின் கட்டிட நேர்த்திக்காக பலரும் காணச் செல்கையில் Arabic caliography-யின் வரியொழுங்கின் அமைதிக்காகவே பலமுறை திரும்பத் திரும்ப ஆக்ரா சென்றிருக்கிறேன்.

இன்னல்லாஹு ஜமீலுன்; யுஹிப்புல் ஜமால் என்பதே ஆன்மிக அடிநாதம். “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்கிற அந்த முன்னெழுத்து முகப்போவியம் கொள்ளை அழகு தேவியைப் போல.

சில இணைய சுட்டிகள் பார்வைக்கு :

https://www.youtube.com/watch?v=L1fiUnA92Fs
http://twocircles.net/2009sep26/urdu_speaking_tamil_muslims_vellore_tamil_nadu.html

கொள்ளு நதீம், 9442245023
ஆம்பூர், வேலூர் மாவட்டம்.

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/126080