ஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…

“அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களைச் சுற்றிலும் அவர்களது உதவியாளர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் இளமையாக இருந்தனர். நீதிமன்ற வளாகத்தின் எஞ்சிய பகுதிகளில் இவர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டுள்ள நூற்றுக்கணக்கான ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அந்தந்தநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

பிரச்சனையின் காரணகர்த்தாவான உலகவங்கிப் பிரதிநிதிகள், ‘எத்தனை கோர்ட் படிகள் நாங்கள் ஏறி இறங்கி இருப்போம்’ என்ற மிதப்பில், மவுனமாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வழக்கு கிட்டத்தட்ட இருபது நாட்கள் நடைபெற்றது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை நான்கு முப்பது மணிவரை நடந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமான கோட்-சூட்களை அணிந்து அவர்கள் வந்தார்கள்.

வழக்காடு மன்றத்தின் இன்னொரு பக்கத்தில் நான்கே நான்கு பேர் அமர்ந்திருந்தனர். ஒரு வழக்கறிஞர், இரண்டு உதவியாளர்கள்… நான்காவது நபர் வழக்குத் தொடுத்தவர். எண்பத்தைந்து வயது இளைஞர்! சிறிதும் வளையாத அவரது நிமிர்ந்த முதுகினால் பார்ப்பதற்கு உயரமாகத் தெரிந்தார். சிரிக்கும்போது ஏற்படும் கன்னச் சுருக்கங்களைத் தவிர அவர் முகத்தில் ஒரு சுருக்கத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை. தன் வலுவான கால்களை மிக நிதானமாக எடுத்துவைத்து நடந்து செல்கிறார். கண்களின் மேலே சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்ததன் அடையாளமாக பச்சைத்துணி போடப்பட்டிருந்தது. அதற்கு மேலாக பெரிய கண்ணாடி அணிந்திருக்கிறார். யாராவது பேசினால் அந்த திசையில் காதை நகர்த்தி கையைக் குவித்துக் கேட்கிறார்.

அந்த நீதிமன்ற அறையில் சவுகரியமான ஆடையை அணிந்திருப்பது அவர் ஒருவர் மட்டுமே. ஒரு வெள்ளை நிற வேட்டி… கதர் சட்டை. கழுத்தில்லாத அந்தச் சட்டை தோளில் இருந்து மிகவும் தொளதொளவென தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சட்டையும் வேட்டியும் அவராலேயே நெய்யப்பட்டவை. கடந்த ஐம்பது வருடங்களாக, அவர் தன் கையால் நெய்த கதராடைகளை மட்டுமே அணிந்து வந்திருக்கிறார். ஒரு ரப்பர் செருப்பு அணிந்திருக்கிறார். அவர் பெயர் ஜெகந்நாதன்!

இந்த முதியவர் ஆணித்தரமான ஒன்றை முன்வைத்து வழக்குத் தொடுத்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை ஒரேயடியாக மூடச்சொல்லி பத்து ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் வழக்குத் தொடுத்துள்ளார். புவி முழுவதும் தன் கரங்களைப் பரப்பியுள்ள உலக வங்கியையும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத்துறையையும் தனி ஒரு நபராக எதிர்த்து நிற்கிறார். அவர் யாருக்காகப் பேணிரணிடுகிறாரோ அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம்கூட அவருக்கு எதிரணிகவே களத்தில் நின்று கொண்டிருக்கிறது.

ஃபிலிப்பைன்ஸ் முதல் ஈக்வடார் வரை பன்னாட்டு முதலாளித்துவம் பாழ்படுத்திய கடலோர வாழ்க்கைகளுக்கு பதில் சொல்லும்படிக் கேட்கிறார். வாழ்வாதாரங்களைப் பறிகொடுத்து வறுமையில் வாடும் லட்சக்கணக்கான விவசாய மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லும்படிக் கேட்கிறார். ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா முதலான நாடுகளின் சூப்பர் மார்கெட்களில் கூறுகட்டி விற்கப்படும் மூன்றாம் உலக நாட்டு மக்களின் துயரத்துக்கான நியாயம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்.

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது… ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்…? அவர் தன் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைத் திறக்க ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலம் சரித்திரத்தின் இன்னொரு பக்கத்தையும் அவர் எழுப்பும் எளிய கேள்விகளுக்கு அவரிடமே அற்புதமான பதில்கள் இருக்கின்றன.

யாராலும் செவிமடுக்கப்படாமல் போகும் அந்த பதில்களை அவர் தன் மெலிந்த, உறுதியான குரலில் எடுத்து வைக்கிறார். அவர் தன் தரப்பு வாதங்களை மெல்லமெல்ல முன்வைக்கும்போது கோட்-சூட்கள் இருக்கைகளில் நெளியத் தொடங்குகிறார்கள். ஃபைல்களால் விசிறிக் கொள்கிறார்கள். தங்கள் டைகளை தளர்த்திவிட்டுக் கொள்கிறார்கள். ‘எண்ணிக்கை அல்ல, தர்மமே வெல்லும்’ என்பது மெல்ல அவர்களுக்கு விளங்க ஆரம்பிக்கிறது.

– லாரா கோப்பா (‘சுதந்திரத்தின் நிறம்’ நூலிலிருந்து…)

காந்தியவழியில் தங்களை ஆற்றுப்படுத்தி, வினோபாவின் பூமிதான முன்னெடுப்பினை தமிழ்நிலம் முழுக்கப் பரவச்செய்து, லாப்டி அமைப்பை நிறுவி எளியோர்களுக்கான நலவாழ்வுக்காகவே தங்களுடைய வாழ்வினை அர்ப்பணித்த காந்தியவாதிகள் ‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்’ அவர்களின் வாழ்வுவரலாற்றை ‘சுதந்திரத்தின் நிறம்’ எனும் தலைப்போடு தன்னறம் நூல்வெளி வாயிலாகப் புத்தகமாக்கும் முயற்சியைத் துவங்கியுள்ளோம். லாரா கோப்பா ஆங்கிலத்தில் நேர்காணல்களாகப் பதிவுசெய்த நூலின் எளிய தமிழாக்கம் (மகாதேவன்) இந்நூல்.

‘கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்றோர்களைப் பற்றிய உருப்படியான வாழ்க்கை வரலாறுகூட தமிழில் இல்லை’ என்ற உங்களுடைய கட்டுரைவரிகளும், இருகாந்தியர்கள் கட்டுரையும் எங்கள் எண்ணத்தில் உண்டாக்கியச் சலனமே இப்புத்தகம். ‘மாற்று நோபல்பரிசு’ எனக் கருதப்படும் right livelihood award என்ற விருதைப் பெற்று, அதற்காக அவர்கள் தந்த பெரும் தொகையையும் எளியமக்கள் வசிப்பதற்கான வீடுகள் கட்டித்தர கொடுத்துவிட்டார் கிருஷ்ணம்மாள். இப்படியொருத்தரின் வாழ்வுப்பின்புலத்தையும் அதன் இயக்குவிசையையும், நம் தலைமுறையில் ஒவ்வொருத்தரும் அறிந்திருக்க வேண்டிய அகவரலாறாகவே கருதுகிறோம்.

காந்தி, வினோபா இவர்களின் ஒற்றை வார்த்தையை வாழ்வுச்சொல்லாக ஏந்தி, அதே ஆத்மபலத்துடன் இறுதிவரை தளராத நம்பிக்கையோடும் கருணையோடும் மக்களுக்காக சேவையாற்றுகிற இந்த இணையர்களின் தன்சரிதையான இந்நூல் அவரவர் கோணத்தில் சொல்வதாக உள்ளது. இமயமலைப் பிரதேசங்களில் ‘சிப்கோ’ இயக்கம் மூலமாக மரங்களைக் காத்த காந்தியர் சுந்தர்லால் பகுகுணா அவர்களின் சிறுகுறிப்போடு இப்புத்தகம் முழுமையடைகிறது.

தகுந்த நேர்த்தியோடும் தேர்ந்த தரத்தோடும் இப்புத்தகத்தை அச்சுப்பதிப்பதற்கு ஒரு ‘முன்வெளியீட்டுத் திட்டத்தை’ முன்னெடுக்க விழைகிறோம். நண்பர்களின் வாயிலாக குறைந்தது 300 புத்தகங்கள் முன்பதிவு செய்யப்படுகையில் மட்டுமே, புத்தகம் அச்சிடத் தேவையான தொகையைத் திரட்ட இயலும். தோழமைகளின் கூட்டிணைந்த உதவிக்குவியம் மட்டுமே, இந்நூலை நிறைவேற்றுவதற்கான சாத்தியத்தை எளிதாக்கும் என நம்புகிறோம். அறிந்த தோழமைகளுக்கு நண்பர்கள் பகிர்ந்தளித்தோ, பரிசளித்தோ உதவுங்கள். அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் இப்புத்தகம் உரியவர்களின் கரங்களுக்கு, கிருஷ்ணம்மாள் ஜெகந்தானிடம் கையெழுத்துப் பெற்று அனுப்பி வைக்கப்படும்.

நெஞ்சின் நன்றிகள் அனைவருக்கும்!

சுதந்திரத்தின் நிறம்

(கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கை வரலாறு)

புத்தக விலை:ரூ 500

முன்வெளியீட்டுத் திட்டத்தில்: ரூ 400

முன்பதிவு செய்ய : http://thannaram.in/product/suthathirathin-niram/

இப்படிக்கு,

தன்னறம் நூல்வெளி

9843870059

முந்தைய கட்டுரைஅமெரிக்கா நோக்கி…
அடுத்த கட்டுரைதடம் – கடிதங்கள்