அமெரிக்கா நோக்கி…

இன்று [9-9-2019] முற்காலை மூன்றரை மணிக்கு அமெரிக்கா கிளம்புகிறேன். 6-902019 அன்று நாகர்கோயிலில் இருந்து கிளமபி பெங்களூர் வந்தேன். இங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். நண்பர்கள் நவீன், ஸ்வேதா, திருமூலநாதன், சங்கர், விஷால்ராஜா ஆகியோர் வந்தனர். 7,8 இருநாட்களும் இலக்கியப்பேச்சு. கொஞ்சம் எழுதலாமென திட்டமிட்டிருந்தேன். ஆனால் இளம் நண்பர்களுடனான உரையாடல் அதை ஒத்திப்போடச்செய்தது. 8-9-2019 அன்று அந்தியில் கிளம்பி விமானநிலையம் வந்தேன். இன்றிரவு இங்கேதான்.

 

நேராக ராலே செல்கிறேன். அங்கே ஊர்சுற்றல். ஒரு இசை நிகழ்ச்சி. 14 அன்று Wake Country Library யில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. 15 வாஷிங்டன்.அங்கே தமிழ்ச்சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. 16 அன்று  Roanoke, 18 அன்று Charlote, 19 அன்று Atlanta, 22 அன்று New Hampshire 28 அன்று Newyork என்பது தோராயமான பயணத்திட்டம். நடுவே பார்க்குமிடங்கள் எல்லாம் நண்பர்கள் விரிவாக திட்டமிட்டிருக்கிறார்கள். 30 அன்று கிளம்பி மீண்டும் பெங்களூர்

 

இம்முறை தனியாக. ஆகவே கொஞ்சம் பதற்றம். அதோடு கைவிரல் வேறு சரியாகவில்லை. எலும்பு கொஞ்சம் பழுதாகி அப்படியே உறைந்துவிட்டது. ஆகவே சிம்பு வைத்து இன்னும் பெரிதாக கட்டிவிட்டிருக்கிறார் வைத்தியர். தைலங்கள் கொண்டுசெல்லவேண்டும். விமானத்தில் காயத்திருமேனி நாற்றம் வேண்டாமே என இரண்டுநாட்களாக தைலம் விடவில்லை. கார்ட்டூன்களில்தான் இவ்வளவு பெரிய கட்டுகளை பார்த்திருக்கிறேன். ஒரு படத்தில் ஜிம் கேரி அந்த மாவுக்கட்டுப் பொட்டலத்திற்குள் இருந்து ஊர்ந்து இறங்கி வெளியே வந்து கழிவறை சென்றுவிட்டு திரும்பச்சென்று புகுந்துகொள்வார்.

நம் உள்ளூர்தான் இந்தியா. விமானநிலையமெல்லாம் அமெரிக்காதான். எல்லாமே நாமேதான் செய்யவேண்டும். முந்தைய பயணங்களில் அருண்மொழி இந்த டிராலியை தள்ளுவாள். அதை மிக உற்சாகமாகச் செய்வாள். உலகப்பயணி என்னும் பாத்திரத்தை நடிப்பதற்கு இந்த டிராலிபோல உதவும் ‘செட் பிராப்பார்ட்டி’ வேறு இல்லை. ஆனால் இதை இரண்டு கையாலும்தான் தள்ள முடிகிறது. இதற்கு பிரேக்கும் இல்லை. பிடிவாதமாக பெரிய பின்புறம் கொண்ட பெண்களை எல்லாம் நோக்கி அதுவே செல்கிறது. பதறிப்போய் பற்றி நிறுத்தி ஓர் இடத்தில் அமர்ந்தால் விரல் வலிகாட்டி இருப்புணர்த்தத் தொடங்கிவிடுகிறது.

 

கொஞ்சம் பெரிய அடியாக இருந்தால் வீல்செயர் கேட்டுப்பெறலாம். சிறுவிரலில் வலி என்று கேட்டால் என்ன என்று எண்ணிப்பார்க்காமல் இல்லை. விமானநிலையங்களில் நான் பொதுவாக தட்டழிந்தபடித்தான் இருப்பேன். அறிவிப்புப் பலகைகளை வாசிக்க என்னால் முடியாது. மொத்தமும் வெறும் எழுத்துக்களாகத் தெரியும். அவற்றை செய்திகளாக மாற்ற அரைமணிநேரம் தேவைப்படும். சிங்கப்பூர் சென்றபோது ஒருமுறை எமிக்ரேஷன் வரிசையில் நின்றபின்னரே விசாத்தாளை எங்கோ தொலைத்துவிட்டது தெரிந்தது.

 

இங்கே இந்த விமானம் 120க்குக் கிளம்பவேண்டும். 330 என்கிறார்கள். அங்கே இணைப்பு விமானம் இருக்கும் என நம்புகிறேன். இல்லையேல் பாரீஸில் சுற்றிவரவேண்டியிருக்கும். ஆனால் இந்த மேலைநாடுகள் நம்மை அகதிகளாக எண்ணும்போதே நடுங்குகின்றன. ஆகவே நினைத்தால்கூட மூழ்க முடியாது. திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

 

அமெரிக்காவின் நிலம் என்னை கவர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்காகவே கௌபாய் காமிக்ஸ்களையும் படங்களையும் வெறிகொண்டு கவனிப்பவன் நான். விரிந்த நிலம். எல்லையின்மையை உணரச்செய்யும் நிலம். பசுமை முதல் பாலைவரை. இப்போதுகூட கண்களை மூடினால் அமெரிக்காவைப் பார்க்கமுடிகிறது.

 

முந்தைய கட்டுரைநாள்தோறும்…
அடுத்த கட்டுரைஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…