மணற்கடிகை

அன்பு ஆசிரியருக்கு,

நான் பள்ளியில் பயின்ற தொன்னூறுகளில் எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் வேலைக்காக வெளியூர் சென்றார்கள்.திருவிழா நாட்களில் அவர்கள் வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் மேலும் மேலும் வளமானவர்களாக மாறியபடியே வந்தனர்.ஒவ்வொருவரும் வெவ்வேறு பணிகளில் இருந்ததாகக் கூறப்பட்டது.ஒருவர் உணவகத்திலும் ஒருவர் சந்தையிலும் பிறர் கம்பெனிகளிலும் என.சென்னையில் பணிபுரிபவர்களெல்லாம் ஒரே நிலையிலேயே பல வருடங்கள் நீடிக்க திருப்பூர் சென்றவர்களின் வளர்ச்சி வேகமானதாக இருப்பது ஆச்சரியத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்தினாலும் யாரும் அவர்களிடம் கேட்டதில்லை.ஊர் செலவுகளில் அவர்களின் பங்கு கணிசமாகயிருந்ததால்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த வளர்ச்சியின் சூட்சமம் பிடிபட்டது எம்.கோபாலகிருஷ்ணனின் “மணல் கடிகை”நாவலை வாசித்தபோது.

இந்நாவல்   திருப்பூரில் வசிக்கும் ஐந்து நண்பர்களின்,  மேல்நிலைக் கல்வி முடித்ததிலிருந்து அடுத்த இருபது வருட வாழ்க்கையை ஊரின் வளர்ச்சியோடு கூறுகிறது.
ஐவரும் வெவ்வேறு படிநிலைகளில் வெவ்வேறு உறவுகளுடன் வாழ்கிறார்கள்.வளர ஆரம்பிக்கும் ஊரின் வேகத்தில் இவர்களின் வாழ்வு எவ்வாறு அலைக்கழிக்கப்பட்டது என்பதை துண்டு துண்டான கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரமாய் தீட்டிச் செல்கிறார் ஆசிரியர்.
நகரின் கதை எனும்போது எப்போதும் நினைவில் எழுவது ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”தான்.விஷ்ணுபுரம் நாவலில் காட்டப்படுவது பிரமாண்ட தேர் நகரும்போது அதனோடு இணைந்தும் இடிபட்டும் சக்கரத்தில் மாட்டியும் மாயும் மனித சித்திரம். நகரத்தின் மிகப் பெரிய ஓவியத்தில் சிறுசிறு புள்ளிகளாக மாந்தர்கள் இருப்பார்கள்.ஆனால் மணல்கடிகை நாவலில்     மனிதர்களின் வாழ்வோவியம் நகரத்தை பின்ணணி வண்ணமாகக் கொண்டது.
ஐந்து நண்பர்களுமே வெவ்வேறு தத்தளிப்புடன் வாழ்வைத் தொடர்கிறார்கள்.சண்முகம் பேன்சி ஸ்டோரில் பகுதி நேரமிருந்து சில கவிதைகள் எழுதி பல பெண்களுடன் உறவாடுகிறான்.பரந்தாமன் இரு பெண்களை மணந்து இரண்டுமே நிலைக்காமல் தடுமாறுகிறான்.திரு அப்பாவை இழந்து மாமன் மகளை மணந்து சீட்டுக் கம்பெனி நடத்துகிறான்.அன்பு தொடரும் துரோகங்களால் அவதியுற்று வடமாநிலங்களுக்கு ஏஜண்டாக செல்கிறான்.இவர்களில் சற்று நல்ல வாழ்வு அமைந்த சிவா வேறு வேறு பெண்களிடம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவால் நிம்மதியிழக்கிறான்இவர்களின் வாழ்க்கையை கூறிச்செல்லும்போதே ஊடும் பாவுமாக நகரத்தில் ஏற்படும் மாற்றத்தையும் அதனால் மனிதர்களுக்கு உண்டாகும் பாதிப்பையும் எப்பக்கமும் சாயாமல் நேர்மையாக கூறிச்செல்லும் ஆசிரியர் இடையிடையே இராஜீவ் மரணம், பாபர் மசூதி இடிப்பு என வரலாற்றையும் பதியவைக்கிறார்.
வளர்ச்சி என ஒன்று உண்டாகிறதென்றாலே நிகரான மற்றொன்று துலாக்கோலின் தட்டுப்போல  தாழும் என்பதே விதி.இந்நாவலில் பலரை மிதித்தபடி ஒவ்வொருவரும்  ஏறிச் செல்கிறார்கள் அல்லது நேரம் பார்த்திருக்கிறார்கள்.நண்பர்களில் ஒருவனான சிவா, உடன் இருக்கும் ஒருவனை தள்ளிவிட்டபின்தான் மேலே ஏறுகிறான்.துரோகம் செய்யத் தயங்கியிருந்தால் மற்ற நண்பர்களைப் போலவே இவனும் துன்பத்தில் உழன்றிருக்கக்கூடும்.மீண்டும் மீண்டும் துரோகங்களின் காட்சி தெரிந்துகொண்டேயிருக்கிறது.

பணத்திற்கான வேட்கை பிற எதையும் யோசிக்கவிடாது மனிதர்களை காட்டாறு என  இழுத்துச் செல்கிறது,அதன் இழுப்புக்கு இயைந்து செல்லாதவர்களை ஓரமாக ஒதுக்கி எத்திவிட்டு .      மனிதர்கள் அனைவருமே (ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் )தங்கள் வாழ்க்கையையே ஈடாக வைக்கிறார்கள் சனிக்கிழமை பெறப்போகும் சம்பளத்திற்காய்.பணம் வந்தாலும் எவரும் நிம்மதியாய் இருப்பதில்லை என்கிற நிதர்சனத்தை எந்த பச்சாதாபமுமின்றி காட்டுகிறது சின்னச் சின்ன விவரணைகளுடன்.
பெண்களின் துயரான சித்திரங்களின் நடுவில்  வீடுகளில் சென்று துணிகளை வாங்கிவந்து வெளுத்துக்கொடுக்கும் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தனியாய் ஒரு கம்பெனியை வெற்றிகரமாக இயக்குகிறார் என மேலோட்டமாக சொல்லப்படுகிறது.இது ஒரு தகவல்போலத்தான் படுகிறதேயொழிய மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கனிகளையும் நிழலையும் தரும் மரம் இலைகளை உதிர்த்து அப்பகுதியை குப்பையால் நிரப்புவதுபோல மனிதர்களுக்கு செல்வத்தைத் தரும் நகரம் ஆலைக்கழிவுகளையும் அதனால் உண்டாகும் மாசினால் ஏற்படும் நோய்களையும் இணைப்பாகத் தருகிறது.வளர்ச்சிக்கான விலையை கொடுத்தாகவேண்டுமென்பதை பிரச்சாரத் தொணியின்றி போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.செய்யும் தவறுகளுக்கு தண்டனை  பெற்றாகவேண்டுமென்பதை, பல பெண்களுடன் உறவாடிய  சண்முகத்திற்கு பிற ஆண்களுடன் தொடர்புள்ள மனைவி அமைவது மற்றும்    அதேபோல் பழக்கம் கொண்ட  சிவா மனைவியால் ஓரங்கட்டப்படுவதை கூறி  நிறுவுகிறார்.இவை மேஜிக் ரியலிசம் போல நம்பமுடியாத ஆனால் நடந்திருக்குமோ என எண்ணும்படி எழுதப்பட்டுள்ளது.
வெவ்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் பள்ளியில் நண்பர்களாக இருக்கமுடியும் என்பதையும் பள்ளிப்பருவம் முடிந்தவுடன் மீண்டும் அதே படிநிலையில் நின்றுதான் வாழ்வை எதிர்கொள்ளவேண்டும். நிதிநிலையில் மேல் இருப்பவன் நண்பனென்றாலும் அவனிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு தன்முனைப்பு இணங்குவதில்லை.நட்பர்கள் அனைவரும் தன் துயரைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டும் ஆறுதலடைகிறார்கள்,உதவி கோருவதில்லை.               பெருநகரங்களில் உள்ளம் தளராமல் இயங்குவதே வென்றதற்கு இணையானது,தளர்ந்தால் குப்பையாக ஆலைக்கழிவுகளோடு வெளித்தள்ளப்படுவார்கள்.

அந்த நகரத்தின் ஓட்டத்தோடு ஓடிய ,ஓடிக்கொண்டிருக்கும் ,ஓடமுடியாது ஒதுக்கப்பட்டவர்களின் கருப்பு வெள்ளைச் சித்திரத்தை நகரத்தின் பின்ணணியோடு சொல்லும் இந்நாவல்  எவருடைய அகத்தையும் காட்டுவதில்லை,தாவித் தாவி செல்லும் தவளைப் பாய்ச்சல் பாணி கதை சொல்லலில் அதிகமாக தாவிச் செல்லல் என்ற  சில போதாமைகளைக் கொண்டிருந்தாலும்  சொல்லவேண்டியதை காட்டிவிட்டதென்றே கூறலாம்.
ஆசிரியர் எம்.கோபாலகிருஷ்ணனின் மொழி இலாவகமானதாகவும் நுண்சித்திரிப்புக்கு ஏற்றவகையில் நளினமானதாகவும் வாசிப்புக்கு எந்த இடையூறுமின்றி கைபிடித்து அழைத்துச்செல்வதாகவும்  சிறப்பாக உள்ளது.
ஒரு நகரின் வளர்ச்சியில் மனிதர்கள் கழிவுகளாவதைக் கூறும் இந்த மணல்கடிகைக்கு      தமிழின் பெருநாவல்களில் ஒரு முக்கிய இடமுண்டு என உறுதியாகக் கூறலாம்.

கா.சிவா

***

முந்தைய கட்டுரைபொதிகை தொலைக்காட்சியில் காந்தி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8