‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-12

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 6

களம் ஒருங்கி வஜ்ரநாகினியின் உருவம் முழுமையாகவே எழுந்துவிட்டிருந்தது. அதை மலர்களில் அமைப்பது ஏன் என கனகர் எண்ணிக்கொண்டார். அவள் காட்டில் விரிந்த மலர்ப்பரப்பில் இயல்பான வண்ணங்களாக தோன்றியிருக்கக்கூடும். ஒரு மெல்லிய சாயலாக. அதைக் கண்ட யாரோ ஒரு மூதன்னை அதை மீண்டும் தன் கைகளால் களமுற்றத்தில் அமைத்திருக்கக்கூடும். தொல்நாகர் குலத்து அன்னை. வஜ்ரநாகினி அன்னை புவியின் உயிர்க்குலங்கள் அனைத்தையும் படைத்த முதலன்னை கத்ருவின் மகள் குரோதவசையின் மகளான புஷ்டியின் நூற்றெட்டு மகள்களில் ஒருத்தி. கருக்குழவிகளை காப்பவள். கருவறைக்குள் சிறிய நாகக்குழவியெனச் சென்று தானும் உடனிருந்து அவற்றுடன் விளையாடுபவள். கருவுற்ற பெண்கள் அவளை கனவில் காண்கிறார்கள். எட்டு மாதம் கடந்த பின் அசைவென அவளை வயிற்றில் உணர்கிறார்கள்.

பத்து தலைகொண்ட நாகங்களின் பீடத்தில் அன்னை சுருளுடல் படிந்து அமர்ந்திருந்தாள். பாரதவர்ஷமெங்கும் மகவுப்பேறுக்குரிய தெய்வங்கள் அனைத்தும் நாகங்களே. பேராலயங்களின் புறச்சுற்றில் கல்பீடத்தில் அவை அமர்த்தப்பட்டுள்ளன. விண்ணளந்தோனும் விடமுண்டவனும் கதிரோனும் மின்னோனும் மைந்தனும் கரிமுகனும் மூவன்னையரும் அங்கே கோயில்கொண்டு அமர்ந்திருந்தாலும் அன்னையரும் கன்னியரும் நாகங்களை வணங்காது கடந்துசெல்வதே இல்லை. நாகங்களை மட்டும் வணங்கி மீள்பவர்களும் உண்டு. நாகபஞ்சமி நாளில் பிறிதொரு தெய்வத்தை எண்ணவும் கூடாதென்கின்றன நெறிகள். பிறவிநூலில் நாகக்குறை இருக்குமென்றால் அது காமத்தில், கருவுறுதலில், குடிப்பெருகுதலில் தீங்கென வெளிப்படும் என்று நிமித்திகர் கூறுகிறார்கள்.

இப்புவியே ஒருகாலத்தில் நாகங்களால் நிறைந்திருந்தது என்று சொல்லும் நூல்களை அவர் படித்திருந்தார். அவையன்றி வேறு உயிர்களே இல்லை. அன்று ஆண் என்று எவருமில்லை. நாகங்கள் அனைத்தும் ஆண்களே. அவை தங்களுடன் தாங்களே விளையாட தங்கள் வால்முனைகளை ஆண்களாக்கிக்கொண்டன. வால்களை வாயால் கவ்வி விழுங்கி தங்களைத் தாங்களே புணர்ந்தன. அவ்விளையாட்டின் விளைவாக தங்களுள் ஊறிய தனியுணர்வுகள் சிலவற்றை ஆண்களுக்கு அளித்தன. அவ்வியல்புகள் கூர்கொண்டு திரண்டு விலங்குகள் ஆயின. பறவைகளும் பூச்சிகளும் புழுக்களும் ஆயின. மானுடர் ஆயின. நிமிர்வு யானையாகியது. சீற்றம் சிம்மம் ஆகியது. நிலைகொள்ளாமை குரங்காகியது. சுடர்வு பருந்தாகியது. தண்மை மயிலாகியது. அவை நாகங்களுடன் புணர்ந்து மேலும் விலங்குகளை ஆக்கின. விலங்குகள் பெருகிப்பெருகி நாகங்களை வென்றன. அவற்றுடன் பொருதி வெல்ல நாகங்களால் இயலவில்லை. ஏனென்றால் அவையனைத்துமே நாகங்களின் குழவிகள்.

மானுடனாகியது எது? ஞானமுழுமைக்கான தேடலே மானுடனை நாகங்களில் இருந்து உருதிரட்டி எழச்செய்தது என்று நூல்கள் கூறின. அறிவை உணர்ந்ததுமே அறியாமையை கண்டடைந்தான். கனிவை அறிந்ததும் கசப்பை. பணிதலை உணர்ந்ததும் சீற்றத்தை. மானுடன் எப்போதும் நாகமென தன்னை உணர்ந்தபடியும் இருக்கிறான். ஆகவேதான் துயர்களில் சுருண்டுகொள்கிறான். வலியில் நெளிகிறான். துயரில் துவள்கிறான். உவகையில் குழைந்தாடுகிறான். மானுடப்பெண்கள் அனைவரும் நாகினிகளே. பெண்ணில் அவள் ஆழமெழுகையில் அவள் நாகமாகிறாள். விழிவெறித்து உடல்மெழுக்குகொண்டு நெளிய மூச்சு சீறி எழுகிறாள். நாகங்களையே ஆண்கள் புணர்கிறார்கள். நாகங்களுடன் போரிடுகிறார்கள். நாகங்களை வென்று நிலைகொள்கிறார்கள். செயலற்றவர்களாக நாகங்களிடமே மன்றாடவும் செய்கிறார்கள்.

சிற்றமைச்சர் சூரியசேனர் விரைந்து வந்து கனகரிடம் “அரசியர் அரண்மனையிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்கள் புறப்பட்டுவிட்டன” என்றார். கனகர் சீற்றத்துடன் அவரை நோக்கி பற்களைக் கடித்தபடி  “அரைநாழிகைக்கு ஒருமுறை எவரேனும் என்னிடம் வந்து இதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்… அவர்கள் கிளம்பிவிட்டார்களா என்று எவரேனும் பார்த்தார்களா?” என்றார். சூரியசேனர் விழிகளிலும் சீற்றம் தெரிந்தது. ஆயினும் தணிந்த குரலில் “நான் எனக்கு கூறப்பட்டதைத்தான் இங்கு கூற முடியும். உரைக்க வேண்டியதில்லை என்று ஆணையிலிருந்தால் அதை கூறுக!” என்றார்.

கனகர் துயில்நீப்பால் சிவந்த விழிகளால் அவரை பார்த்தார். அவர் தலை நடுங்கிக்கொண்டிருந்தது. உதடுகளை மடித்து கடித்திருந்தார். சூரியசேனரும் தன் விழிகளை விலக்கவில்லை. மிக இளையவர். முகத்தில் தாடி மென்மையாக படிந்திருந்தது. பெண்களுடையவை போன்ற உதடுகள். ஒளி ஊடுருவும் காதுமடல்கள். மார்பில் அகல்விளக்கின் மேல் கரி படிந்ததுபோல் கரிய மயிர்த்தீற்றல். அவர் சாதுவனை நினைவுகூர்ந்தார். அவரால் இளம் அகவை கொண்டவர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு பழக முடிவதில்லை. சில தருணங்களில் மிகைநெகிழ்வு, சிலதருணங்களில் அதை மறைக்கும் பொருளிலாச் சீற்றம்.

கனகர் பெருமூச்சுடன் தளர்ந்தார். “செய்யும் பணியை முறையாகச் செய்க… சொல்லொடு சொல் நிற்பதற்கு அமைச்சுத்தகுதி வேண்டியதில்லை” என வேறெங்கோ நோக்கியபடி சொன்னார். மேலும் கூர்மையாக ஏதேனும் சொல்லலாம் என்று எண்ணினார். ஆனால் சொல்லவேண்டிய சொற்கள் எவையும் எழவில்லை. அவர் உள்ளம் களைத்து துவண்டிருந்தது. அத்துடன் தன்  சீற்றத்தின் பொருளின்மையும் அவருக்கு எப்போதும் தெரிந்துகொண்டுதானிருந்தது. சற்று முன்பு வரை அரசியர் அங்கிருந்து கிளம்பவில்லை என்ற செய்திதான் அவருக்கு வந்துகொண்டிருந்தது. “கிளம்பிவிட்டார்களா இல்லையா? அங்கே என்ன செய்கிறார்கள் அமைச்சர்கள்?” என அவர்தான் ஏவற்பெண்டிடம் கூச்சலிட்டார்.

எந்நிலையிலும் எவரிடமும் சீற்றம் கொள்பவராக அவர் ஆகிவிட்டிருந்தார். அச்சீற்றம் பொருட்களின்மீது கூட திரும்பியது. அன்று காலையில்கூட அவர் ஒரு கலத்தை தூக்கி வீசி உடைத்தார். ஏவலனை வசைபாடி கையோங்கி அறையச் சென்றார். அவரிடம் பேசவே ஏவலர் அஞ்சினர். அவர் அறைகளுக்குள் நுழைந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு காத்திருந்தார்கள். கனகர் எவரிடமென்றில்லாமல் “அறிவிலிகள்!” என்று உறுமிவிட்டு  திரும்பி ஆலயத்தை நோக்கி சென்றார். செல்லும் வழியிலேயே வாயில் ஏதோ புகுந்ததுபோல் இரு பக்கமும் துப்பிக்கொண்டார்.  அவர் காலில் கல் ஒன்று இடறியது. காலில் அணிந்திருந்த குறடு அப்பால் தெறித்தது. அவர் வலியுடன் பல்லைக் கடித்தபடி நின்றார்.

அருகே நின்ற ஏவல்பெண்டு ஓடிவந்து கால்குறடை எடுத்து அவர் காலில் அணிவிக்க குனிய அவர் “உம்” என அவளை விலக்கினார். அவள் அவ்வொலியின் பொருள் புரியாமல் மீண்டும் குறடை அவர் காலடியில் அணிவிக்க முயல கனகர் “விலகு…” என்றார். அவள் அதை அவருடைய சினமாக எடுத்துக்கொண்டு முகம் சுருங்கினாள். “நான் ஷத்ரியன் அல்ல. அந்தணர் மனைவி மைந்தர் மாணவர் ஆகியோரிடமிருந்து அன்றி பிறரிடமிருந்து ஏவல்பணியை பெற்றுக்கொள்ளலாகாது…” என்றார். அவள் தலையில் கைவைத்து “மைந்தர் பெருகுக!” என்றார். அவள் விசும்பி அழுதபோதுதான் அவர் அவளை பார்த்தார். நாற்பது அகவைக்குமேல் சென்ற பேரிளம்பெண். மெலிந்து வறண்ட உடலும் குழிந்த விழிகளும் கொண்டிருந்தாள்.

தான் ஏன் அதை சொன்னோம் என அவருக்கு திகைப்பு எழுந்தது. ஆனால் அவள் தலையை பிறிதொரு முறை தொட்டு “என் நாவில் ஏன் அச்சொல் எழுந்தது என அறியேன். ஆனால் அது அந்தணன் வாழ்த்து, அதை கடைக்கொள்ளவேண்டியவை அவன் வணங்கும் தெய்வங்கள். நீ மக்களால் சிறப்பாய், குடிமுதல் அன்னையென அமைவாய்…” என்றார். அவள் விசும்பி அழுதுகொண்டிருந்தாள். கொழுநனை இழந்தவள் எனத் தெரிந்தது. மைந்தரையும் இழந்திருக்கக்கூடும். “அவர்கள் மீண்டு வருவார்கள், பெண்ணே. நீ ஒரு வாயில் அவர்களுக்கு. அதை நினைவில்கொள்க!” என்றபின் மூன்றாம்முறை அவள் தலையைத் தொட்டு வாழ்த்தியபின் நடந்தார்.

புரவியில் வந்திறங்கிய பிறிதொரு சூதக் காவல்பெண்டு “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள், அரண்மனை முகப்பை கடந்துவிட்டனர்” என்றாள். அதுவரைக்கும் அவர்கள் தேரில்தான் வந்துகொண்டிருக்கிறர்கள் என்ற உளப்பதிவு கனகரிடம் இருந்தது. அப்பதிவு ஏன் தன்னுள் உருவாயிற்று என்று அவர் வியந்தார். அவர்கள் தேரில் வரவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். தேரில் வரலாகாது என்ற ஆணையை அவர்தான் அளித்திருந்தார். நடந்து வரவேண்டும் என முதுநாகினி ஆணையிட்டிருந்தாள். அவர் மேலாடையை சீரமைத்தபடி சரிவில் ஏறிச்சென்று பெருஞ்சாலையிலிருந்து மண்பாதை பிரியுமிடத்தில் நின்றார். அள்ளிக்கொட்டிய பச்சைச்செம்மண் பரவிய பாதை உருவி நீட்டிபோட்ட குருதிக்குடல்போல கிடந்தது. அதில் நூற்றுக்கணக்கான காலடிகள் பதிந்திருந்தன.

தொலைவில் ஒரு புரவிவீரன் சீரான விசையில் வருவது தெரிந்தது. அவர் அருகே வந்து புரவியை நிறுத்தி கால் சுழற்றி இறங்கி அவரை அணுகி  “அரசியர் அணுகிக்கொண்டிருக்கிறார்கள். இச்சாலையை  இறுதியாக ஒருமுறை பார்த்துவிடலாம் என்று வந்தேன்” என்றான். அது பெண் என்பதை அவர் கண்டார். எங்கோ அறிந்த முகம். “உன் பெயர் என்ன?” என்றார். சம்வகை “நான்தான், அமைச்சரே” என்றாள். அவர் “ஆம், நீதான்…” என்றபின் “இச்சாலையை காக்கவேண்டுமென்பதில்லை. இங்கு அரசியரை வாழ்த்துவதற்கும் வசைபாடுவதற்கும் எவருமில்லை” என்றார். “என் பொறுப்பு எதுவோ அதை பழுதின்றி ஆற்றுவது என் இயல்பு” என்று அவள் மீண்டும் சொன்னாள். சிறிய புன்னகையுடன் மீண்டும் புரவியிலேறி திரும்பிச்சென்றாள்.

அவர் அவள் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றார். தீர்க்கசியாமர் மீண்டும் ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தில் அமர்ந்துவிட்டாரா என அறிய விழைந்தார். ஆனால் அவள் விழிகளிலிருந்து மறைந்திருந்தாள். ஓசைகள் எதுவும் எழவில்லை. ஆனால் சாலையிலிருந்து காகங்கள் சில பறந்து அகன்றன. புரவிகள் திரும்பி நோக்கின. மீண்டும் அவள் சாலையின் எல்லையில் தோன்றினாள். அவள் சீரான விசையில் உடல் பெருக அணுகிவந்தாள். அவளுக்குப் பின்னால் தொலைவில் ஏழு சேடியர் கையில் மலர்த்தாலங்களுடன் வருவதை அவர் கண்டார். அவர்களுக்குப் பின்னால் ஒரு விறலி கையில் சங்குடன் வந்தாள். அவர்கள் அனைவருமே இளஞ்செந்நிற ஆடை அணிந்திருந்தனர். மலைவெள்ளம் அணுகுவதுபோல என அவர் எண்ணினார்.

சேடியரின் அணிநிரைக்குப்  பின்னால் காந்தாரி வருவதை கனகர் கண்டார். காந்தாரி அவ்வாறு நடக்க இயலுமென்பதையே  அவர் முன்பு கற்பனை செய்திருக்கவில்லை. அரண்மனையில் இடைநாழியில் நடக்கையில்கூட இருபுறமும் உடன்பிறந்த அரசியர் அவளை தோள்பற்றி எடைநிகர் செய்வதுண்டு. அவள் கால்கள் மிகச் சிறியவை. அப்பேருடலின் எடையை அவை தாங்குவதில்லை. இரு கைகளையும் சிறகுகள்போல சற்றே விரித்து காற்றில் துழாவி அவள் நடக்கையில் ஒரு திரைச்சீலை ஓவியம் காற்றில் நின்று நெளிவதாகவே தோன்றும். அவள் ஓர் இடைநாழியை கடப்பதற்கு கால் நாழிகைப்பொழுது தேவைப்படும். அவள் நடப்பதை நோக்கி நிற்கையில் உள்ளம் பலமுறை  நடந்து இலக்கை எய்தி பின் திரும்பி வந்து அவளுக்காக சலித்துக் காத்து நிற்பதாகத் தோன்றும்.

ஆனால் அப்பொழுது அவள் உறுதியான காலடிகளுடன், சீரான விசையில் வந்துகொண்டிருப்பதை கண்டார். பிடியானையின் நடை. அவள் கைகள் இரண்டும் சீராக அசைந்து அவள் உடலை முன் செலுத்தின. துதிக்கையை நீட்டி நீட்டி தலையை தொட்டுத் தொட்டெடுத்துச் செல்லும் யானைபோல.  அவளைத் தொடர்ந்து வந்த உடன் பிறந்த அரசியரும் அதேபோல சீர்நடை கொண்டிருந்தனர். அவர்கள் முகங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் பாவைகளென உணர்வுகளற்றுத் தெரிந்தன. அவர்களுக்குப் பின்னால் பானுமதியும் அசலையும் வந்தனர். கௌரவஅரசியர் அவர்களுக்குப் பின்னால் நான்கு நிரைகளாக வந்துகொண்டிருந்தனர். அவ்வரிசையின் மறுஎல்லை சாலைவளைவுக்கு அப்பால் சென்றிருந்தது.

மகாநிஷாதகுலத்து அரசியர் ஒழிய பிறர் அங்கு வந்திருக்கிறார்கள் என்று கனகர் உணர்ந்தார்.  அங்கு அரண்மனையில் சாளரத்தருகே பித்தெழுந்த விழிகளுடன் அமர்ந்திருக்கும் மகாநிஷாதகுலத்து இளவரசியரை நினைத்துக்கொண்டார். அவர்கள் கருவுற்றிருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து கௌரவமைந்தரின் இளந்துணைவியர் வரத்தொடங்கினர். பெரும்பாலானோர் சிறுமியர். ஓரிருவர் பன்னிரு அகவை கூட அமையாதவர். போர் அறிவித்த பின்னர்தான் கௌரவமைந்தருக்கு மணநிகழ்வுகள் நடந்தன. பல்வேறு குடிகளிலிருந்து பெண்டிர் பரிசில் பணம் கொடுத்தும் நிகர்ச்சடங்குகள் செய்தும் கொள்ளப்பட்டனர். எஞ்சிய கௌரவமைந்தர்கள் சிறுகுழுக்களாகச் சென்று பெண் கவர்ந்து வந்தனர். படைகள் போருக்கு எழுவதற்கு முந்தையநாள் இரவில்கூட நாற்பத்தொன்பது கௌரவமைந்தருக்கு மணநிகழ்வு  ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஆறு மாதங்களுக்குமுன் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் போர் நிகழக்கூடும் என்ற சூழல் இருந்தபோது கௌரவமைந்தரில்  போருக்குச் செல்லும் அனைவரும் மணம்புரிந்தாகவேண்டும் என்று அந்தணர் கூறினர். போர்ப்பயில்கை முடித்து கூந்தல் திருத்தி குண்டலமணிந்து வாளுரிமை பெற்ற பின்னரே போருக்குச் செல்ல முடியுமென்பது ஷத்ரிய நெறி. கௌரவமைந்தருக்கு மகளிரை அளிக்க அப்போது ஷத்ரிய அரசர்கள் போட்டியிட்டனர். போர் அணுகுந்தோறும் அவ்விசை குறைந்தது. இளைய அரசர்களுக்கு பெண்களை அளிக்க  ஷத்ரியர் எவரும் ஒருங்கவில்லை. எவ்வண்ணமாயினும் போர் அணுகிக்கொண்டிருக்கிறது, போருக்குப்பின் உரிய சடங்குகளுடனும் களியாட்டுகளுடனும் அந்த மணநிகழ்வை நிகழ்த்துவதே சரியாகும் என்ற மறுமொழியே வந்தது. “நம் மைந்தர் களம் மீளமாட்டார்கள் என எண்ணுகிறார்களா?” என்று துச்சாதனன் கூச்சலிட்டான். “அவர்கள் நிமித்திகரை உசாவியிருப்பார்கள்” என்றார் விதுரர். துச்சாதனன்  சொல்லடங்கி வெறுமனே நோக்கிவிட்டு கைவீசி அப்பேச்சை ஒழிந்தான்.

ஆயிரத்தவரில் இறுதி மைந்தனாகிய சுபத்ரனுக்கு பதினாறு அகவை ஆகியிருந்தது. பதினெட்டு அகவை நிறையாதபோது முடிகளைந்து குண்டலமணிந்து வாள் கைக்கொள்ளும் வழக்கமில்லை என்று படைக்கலம் பயிற்றுவித்த கிருபரின் மாணவர் சுகிர்தர் சொன்னார். “நான் முடிவெடுத்துவிட்டேன்.  போருக்குச் செல்லாது ஒழியப்போவதில்லை. உடன்பிறந்தார் போருக்குச் செல்ல நான் மட்டும் இங்கு எஞ்சினேன் எனில் அது சாவை விடக்கொடியது எனக்கு” என்று அவன் சொன்னான். கிருபர் “அவன் படைக்கலம் கொள்ளட்டும். அகவை நிறையாவிடினும்  மைந்தன் சொல்லுறுதி கொள்வானெனில் வாள் கொள்ளலாம் என்ற நெறி நூல்களில் உள்ளது” என்றார். “என் உள்ளம் உறுதிகொண்டிருக்கிறது. நான் படைக்கலம் எடுத்து களம்புகுவேன். மூத்தோரும் ஆசிரியரும் வாழ்த்தி நான் சென்றால் நன்று” என்றான் சுபத்ரன்.

வாளேற்புச் சடங்குகள் முடிந்தபின் அவனும் நான்கு உடன்பிறந்தவர்களுமாக கிளம்பிச்சென்று மச்சர் குலத்திலிருந்து பெண்களை கவர்ந்துகொண்டு வந்தனர். அது மெய்யான பெண்கவர்தல் அல்ல என்று அனைவரும் அறிந்திருந்திருந்தனர். அவர்கள் கொள்ள வேண்டிய பெண்களை மட்டும் நீர்வெளிக்கு மீன்கொள்ள அனுப்பிவிட்டு பிற பெண்களை தங்கள் குடில்களுக்குள் ஒளித்துவைத்தனர் மச்சர். முலை குவியாத சிறுமியரான அப்பெண்கள் முதிய பெண்டிருடன் தனிப்படகில் மீன் கொள்ள  வந்தார்கள். அவர்களில் இளையவளாகிய சந்திரைக்கு பன்னிரு அகவை. அவளுக்கு நிகழவிருப்பது என்னவென்று அவள் அறிந்திருக்கவில்லை. மெல்லிய எடைகொண்ட விரைவுப்படகுகளில் வந்த கௌரவமைந்தர்கள் அம்புகளால் அம்மீன்படகின் பாய்மரத்தைக் கிழித்து அதை திசையழியச் செய்து பறந்தணைவதுபோல அதை அணுகி அச்சிறுமியை தோள்பற்றித் தூக்கி தங்கள் படகில் எடுத்துக்கொண்டனர். பிற பெண்கள் கூச்சலிட்டனர். அவர்களை வேல்காட்டி அச்சுறுத்தி  தங்கள் படகில் வரச்செய்தனர்.

சந்திரை கூச்சலிட்டு கதறி அழுதபோது வாயை துணியால் கட்டி கைகளை பின்புறம் பிணைத்து படகில் இட்டனர். அஸ்தினபுரிக்கு வந்து இறங்கும்போது அவள் மயங்கிவிட்டிருந்தாள். அரண்மனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆலயத்தில் அவளை இறக்கி அங்கே மணம் புரிந்துகொண்டான் சுபத்ரன். மயங்கி விழுந்த பெண்ணை கொண்டுசென்று அரண்மனை சேர்த்தபோது அரண்மனைப்பெண்டிர் வாயிலில் கூடி நின்று குரவையொலி எழுப்பினர். அரசியர் உரக்க நகைத்துக்கொண்டிருந்தனர். தன்னினைவு கொண்ட இளவரசி  எழுந்தமர்ந்து அனைவரையும் நோக்கி மீண்டும் அஞ்சி கூச்சலிட்டு அழத்தொடங்கினாள். சுபத்ரனின் அன்னை சாந்தை வந்து அவள் தோள் பற்றி “அஞ்சாதே, நீ அரசியாகிவிட்டிருக்கிறாய். அஸ்தினபுரியின் மைந்தனின் துணைவி நீ. உன் குடி இங்கு நிலைகொண்டு வாழும். உன் குருதியிலிருந்து அரசகுடி பிறக்கும்” என்றாள். அச்சொற்களை அவள் உள்வாங்காமல் மீண்டும்  மீண்டும் கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்தாள். அவளைப் பற்றி தூக்கி உள்ளே கொண்டுசெல்கையில் மீண்டும் நினைவழிந்து நிலத்தில் சரிந்தாள். அன்னையும் சேடியருமாக அவளை தூக்கிக்கொண்டனர்.

அரசியரைத் தொடர்ந்து  வந்துகொண்டிருந்த இளவரசியர் நிரையில் அவள் இருக்கிறாளா என்று கனகர் விழிகளால் துழாவினார். அவளை இறுதி நிரையில் கண்டுகொண்டார். இரு பெண்களால் தாங்கப்பட்டவளாக, ஆற்றல் இழந்த உடல்  துணிப்பாவைபோல் தொய்ந்து இழுபட, அவள் வந்துகொண்டிருந்தாள். அவள் கால்கள் அவ்வப்போது தரையில் உரசி இழுபடுகின்றன என்று கண்டார். அவள் பெயரென்ன என்று தன் உள்ளத்தை துழாவினார். சித்திரை, சில்பை, அல்ல சிவதை… சிவாங்கியா?  பின்னர் அதை கைகளால் தொடுவதுபோல் அசைத்து விலக்கினார். அப்பெயரை ஒருபோதும் சென்றடையமுடியாது. எந்தப் பெயர் கூறினாலும் ஆயிரத்தவரின் துணைவியர் அப்பெயரில் இருப்பார்கள் என்ற இளிவரல் அரண்மனைச் சூழலில் உண்டு. அப்பெயர்கள் எவருக்கேனும் நினைவிருக்குமா? காந்தாரியோ பானுமதியோ எண்ணிச்சொல்லிவிடமுடியுமா?

அவர்களின் கொழுநர் அறிந்திருப்பார்கள். அப்பெயரை நெஞ்சிலேற்றிச் சென்றிருப்பார்கள். போரில் களம்படும்போது சிலர்  அதை சொல்லியிருப்பார்கள். அறுதியாக எண்ணி நெஞ்சை பற்றிக்கொண்டிருப்பார்கள். இப்பொழுது இவ்வாயிரம் பேரில் நுண்வடிவில் அவர்களும் வந்துகொண்டிருப்பார்களா? தங்கள் துணைவியரை விட்டுப் பிரிந்ததை இப்போதுதான் முழுத் துயருடன் உணரத்தொடங்கியிருப்பார்கள். போருக்குச் செல்கையில் அவர்கள் அத்துணைவியரை திரும்பியும் பார்க்கவில்லை. அவர்கள் அனைவரும் களியாடிக்கொண்டிருந்தனர். கூச்சலிட்டு ஆர்ப்பரித்து காற்றில் படைக்கலங்களை வீசி நடனமிட்டனர். கரிய முகங்களில் வெண்ணிறப் பற்களும் வெண்விழிகளும் முற்றம் நிறைத்து தென்பட்டன. அது முன்புலர்காலை. கைகளில் சிற்றகல்களுடன் ஆயிரம் இளவரசியரும் அவ்வீரர்களின்  நூறுஅன்னையரும் அரண்மனை முற்றத்தில் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் கொழுநரை நோக்கிக்கொண்டிருந்தனர். கொழுநர்களோ அவர்களை ஒற்றைத் திரளென, ஒளிவிளக்குகளின் நிரையென மட்டுமே கண்டனர்.

அவர்கள் ஒற்றை உடலெனத் திரண்டவர்கள். ஒற்றை உள்ளமென்றானவர்கள். அவர்களில் ஒருவன்கூட தனியெண்ணம் கொண்டு தன் துணைவியை எண்ணியிருக்க வாய்ப்பில்லை. முன்னால் நின்றிருந்த துருமசேனன் தன் இடையிலிருந்து கொம்பை எடுத்து ஊதி “கிளம்புக!” என்று ஆணையிட்டதும் வாள்களை உருவி தலைக்குமேல் சுழற்றி “வெற்றிவேல்! வீரவேல்! அஸ்தினபுரி வெல்க! அமுதகலம் வெல்க! அரசர் துரியோதனன் வெல்க!” என்று கூச்சலிட்டபடி அவர்கள் தங்கள் புரவிகளில் ஏறிக்கொண்டனர். குளம்படிகள் மலையிடிந்து கூழாங்கற்களாகப் பொழிவதுபோல் ஒலித்தது. படை நிரைகொண்டு நீண்டு முனைகொண்டு தெருவை அடைந்து அப்பாதையினூடாக வளைந்து வழிந்தோடி மறைந்தது.

கைகளில் சுடர்களுடனிருந்த இளவரசியர் அனைவரும் விழிநீர் உகுத்துக்கொண்டிருந்தனர். அச்சுடர்கள்  அவர்கள் உடல் குலுங்கி அழுகையில் அசைந்து நீரில் என அலைகொண்டன.  அனைவரின் முகங்களும் ஒன்றாகத் தெரிந்தன. முகமிலாதவர்கள், பெயரில்லாதவர்கள். தங்கள் இல்லங்களில் அன்னையருக்கு இனியவளாக இருந்திருப்பார்கள். அவ்வரண்மனைகளில் தலைவியராக வலம் வந்திருப்பார்கள். ஆணையிட்டிருப்பார்கள். தாங்கள் பிறிதொரு நிகர் இலாதவர்கள் என்று உணர்ந்திருப்பார்கள். பின் நிரையிலிருந்து சில இளவரசிகள் மயங்கி விழுந்தார்கள். கீழே விழுந்த சுடர்கள் மேல் கால்கள் பதிந்தன. சிலர் எண்ணையில் வழுக்கி நிலையழிந்தனர். அவர்களை தூக்கும்பொருட்டு சேடியர் பிற இளவரசியரை விலக்கினர். சுடர்நிரை குழம்பி கலைந்து மின்மினிச் சுழல்போல் ஆயிற்று.

அவர்கள் உள்ளே செல்லலாம் என்று அரசி பானுமதி ஆணையிட்டாள். பின் நிரையிலிருந்து ஒவ்வொருவராக அகன்று உள்ளே செல்லத்தொடங்கினர். அக்கலைவோசையின் உள்ளே விம்மல்களையும் அழுகையொலியையும் அவர் கேட்டார். முதல் அழுகையொலி எழுந்ததுமே அனைவருமே அழத்தொடங்கிவிட்டிருந்தனர். சற்று நேரத்தில் அழுது கூச்சலிட்டபடி உடல் தளர்ந்து நிலத்தில் அமர்ந்தனர். சிலர் நினைவழிந்து படுத்தனர். உடல் குழைந்து நழுவிய இளவரசியரை சேடியர் ஒவ்வொருவராக தோள்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றனர். அவர்கள் விட்டுச்சென்ற அகல் விளக்குகளால் அரண்மனை முகப்பு ஒளித்துளிகளாக சிதறிக்  கிடந்தது. எரிசுடரின் செம்மை சிந்திய எண்ணைத்தீற்றல்களை குருதியோ என எண்ணச்செய்தது.

கனகர் நீர்வழிவென ஓசையில்லாமல் வந்துகொண்டிருந்த அவ்வரசியரை பார்த்தார். அவர்களில்  அவர் அறிந்த முகம் ஒன்று இருக்கிறதா என்று விழிகளால் துழாவினார். அனைத்து முகங்களும் ஒன்றென்றே தோன்றின. திரளாக ஆவதுபோல் மானுடரை பொருளற்றவர்களாக ஆக்குவது பிறிதில்லை. அவர்களில் தனித்தன்மையை நிறுவும் அவர்களுக்குரிய தெய்வம் ஒன்று அகன்றுவிடுகிறது. அவர்களைப் பெற்ற அன்னையரேகூட தனித்தறிய முடிவதில்லை. அந்த இறுதி மச்சநாட்டு இளவரசியின் முகம் மட்டுமே அவர் நினைவில் இருந்தது. அவர்கள் அணுகி வந்துகொண்டிருந்தார்கள். அணிகளேதும்  அவர்களின் உடல்களில் இல்லை. கால்களில் குறடுகளும் இல்லை. ஆகவே மெல்லிய ஆடைச்சரசரப்பு மட்டுமே கேட்டது. இலைகள் செறிந்த குறுங்காட்டுக்குள் நீர் வருவதுபோன்ற ஓசை. அவள் பெயர் சந்திரை. அவள் முகம் சிறியது, கூரிய மூக்கும் எழுந்த நெற்றியும் கொண்டது.

மேலும் அந்த நிரை அணுகியபோது புலர்காலையில் மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தை கண்டார். அது வெளிறி சற்றே வீங்கி களிமண்ணால் ஆனதுபோல் உயிரற்றுத் தெரிந்தது.  ஒருகணத் திடுக்கிடலுடன் அது ஓர் இறந்த உடல் என்று அவர் எண்ணிக்கொண்டார். இளவரசியர் எத்தனை பேர் கருவழிந்திருக்கிறார்கள்? நாநூற்று எண்பத்தைந்து? அல்ல நாநூற்று தொண்ணூற்றாறு? எது இறுதி எண்ணிக்கை? ஐநூறா? ஐநூறு குருதிக்குமிழிகள். ஐநூறு ஆத்மாக்கள். அவை இங்கு நுண்வடிவில் உடன் வந்துகொண்டிருக்கின்றன. அவர்களை அவர்களின் தந்தையர் அறிவார்களா? அன்றி, தந்தையருடன் கை கோத்தபடி அவர்கள் இங்கே வந்து கொண்டிருக்கிறார்களா?

சம்வகை அருகே வந்து கையில் ஏந்தியிருந்த வேலைத் தாழ்த்தி தலைவணங்கி அப்பால் சென்றாள். அணிநிரை அருகே வந்தது. கனகர் ஒவ்வொரு முகத்தையாக வெறித்து நோக்கியபடி நின்றிருந்தார். அவை அவரை நோக்காமல் கடந்து சென்றுகொண்டே இருந்தன. அவர் அன்று காலை வந்த செய்தியை நினைவுகூர்ந்தார். பாண்டவர்களின் காட்டில் குடிகள் திரண்டுவிட்டார்கள். தௌம்யர் அங்கே சென்றுவிட்டிருக்கிறார். நீர்க்கடன் செய்வதற்குரிய முறைமைகள் அன்றே வகுக்கப்படும். அங்கும் இதேபோல பெண்களின் நிரை எழும். இறந்தவை போன்ற முகங்கள். அப்பால் எதையோ நோக்கி வெறித்த விழிகள். எந்த வேறுபாடும் இருக்காது.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனும் சாதியும்
அடுத்த கட்டுரைபி.எஸ்.என்.எல்- கடிதம்