திருச்சி இலக்கியம்- கடிதம்

இலக்கியம்- இரு கடிதங்கள்

வணக்கம் சார்

நலமா..? தங்களின் தளத்தில் வெளியான கிஷோர்குமார் என்பவரின் கடிதத்தையும் அது குறித்து தங்களின் பதிலையும் படித்தேன்.

திருச்சியை பொறுத்தவரை, நீங்கள் கூறிய பதில் மிக சரியானது. வாசகர்சாலைக்கான கூட்டத்தை திருச்சி மையநூலகத்தில் சுஜாதா சுந்தர் என்பவர் மாதந்தோறும் ஒரு சனிக்கிழமையன்று கூட்டுகிறார். அக்கூட்டம்(?) கூட்டுவதற்கு அவர் படும்பாடுகளை நான் அறிவேன். கூட்ட அரங்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசகர்களை பரவலாக அமர செய்திருப்பதே அவரின் இமாலய முயற்சிதான். தீவிர இலக்கியமெல்லாம் அங்கு விவாதிக்கப்படுவதில்லை. ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் கூட்டம், நுாலகம் பூட்டும் நேரத்தை கணக்கிற்கொண்டு ஏழு மணி அல்லது அதற்கும் கொஞ்சம் கூடுதலுக்குள் நிறைவு பெற்று விடும். எனது மாயநதி தொகுப்பு கூட அங்கு விவாதிக்கப்பட்டது. ஒரு ஆர்ஜே பெண் அதை எடுத்துக் கொண்டு விவாதித்தார். இப்படியெல்லாம் கூட கதைகளை குறித்து எண்ணம் தோன்றுமா…? அதை பேசதான் முடியுமா என்ற ஆச்சர்யத்திலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை.

மற்றபடி, இலக்கியம் வளர்க்கும்(?) இரு பெருமன்றங்களை சேர்ந்த நந்தலாலா என்பவரை போன்ற நிர்வாகிகள் சுய விளம்பரக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் இலக்கியத்துக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது தெள்ளத்தெளிவு.

கடந்த 2017 டிசம்பர் மாத கணையாழி இதழுக்காக திருச்சியை சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளை பெற்று தருமாறும், திருச்சியை சேர்ந்த படைப்பாளிகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதி தருமாறும் திரு.ம.இராசேந்திரன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்டார்கள். பெருமன்றங்கள் சார்ந்த நிர்வாகிகள் சிலரை தொடர்புக் கொண்டு கேட்டபோது, தருகிறேன் என்று கூறிய பெரும்பாலானாவர்கள், பிறகு என் அலைபேசி அழைப்பை தொடாமலேயே நிராகரித்து விட்டனர். இதை அக்கட்டுரையில் கூட பதிந்திருக்கிறேன். (சிலர் கதைகளையும் கவிதைகளையும் அளித்து உதவினர் என்பது வேறு விஷயம்)

கடந்த மாதம் ஒன்றில் அகரமுதல்வன், தனது “உலகின் மிக நீண்ட கழிவறை“ என்ற சிறுகதைத்தொகுப்பு குறித்து பேசுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டே நாட்கள் இடைவெளி என்பதால் மறுத்து, தயங்கி, பிறகு பேசினேன். அது புலியூர்முருகேசன் என்பவரின் தலைமையில் மிகப்பெரிய சர்ச்சையாக வடிவெடுத்தது. இங்கு இலக்கியம் என்பது குழு அரசியல்தான். அதை தவிர்த்து வேறில்லை. புத்தகக்கண்காட்சிகள் கூட திருச்சி கண்டால் தெறித்துத்தான் ஓடுகின்றன. ஒரே ஆறுதல், என்னை போன்ற மனநிலையோடு கிஷோர்குமார் என்ற ஒருவர் இங்கிருக்கிறார் என்பதுதான்.

அன்புடன்

கலைச்செல்வி.

***

முந்தைய கட்டுரைராஜராஜன் பற்றி பா. ரஞ்சித் பேசியதும் வரலாறும்
அடுத்த கட்டுரைசாதியென வகுத்தல்