ஆழமில்லாத நீர்

 

இரவெல்லாம் மழை முழங்கிக்கொண்டிருந்தது. காலையில் துளிச்சாரலும் காற்றும் சூழ்ந்திருக்க  நடக்கச் சென்றேன். இன்று இந்த மண்ணில் படும் முதல் மானுடக்காலடி என்னுடையது. எனக்குமுன் ஒரு நாய் சென்றிருக்கிறது. சில பறவைகள். அனேகமாகக் கொக்குகள். செம்மண்ணில் மழை கூழாங்கற்களை சற்று மேலே தூக்கிப் பரப்பியிருக்கிறது. முன்பு பல ஆயிரமாண்டுகள் தொடர்ந்து பெய்த ஆதிமழையால் இவ்வண்ணம் எழுப்பப்பட்ட கற்களே அதோ அந்த மலைமேல் உச்சிப்பாறைகள் என அமைந்திருக்கின்றன. அந்த மழையில் உருவான ஓடைகளே பள்ளத்தாக்குகள்.

ஒவ்வொன்றும் கழுவப்பட்டு குளிர்ந்த ஒளிகொண்டிருந்தன. இலைப்பரப்புகள் குழந்தைகளின் கன்னங்கள் போலிருந்தன. உயிர்ப்பரப்புகளில் இருக்கும் இந்த மெருகை பளிங்கில்கூட காணமுடியாது. வெறுமே நோக்கிக்கொண்டு செல்கையில் ஏன் அடிக்கடிப் பெருமூச்சுவிடுகிறேன் என்று தெரியவில்லை. நான் துயரமாக இருக்கிறேனா? மகிழ்ச்சி என நான் நினைவுகூரும் தருணங்கள் எல்லாமே கொப்பளிப்பானவை, நிலையழிந்தவை. ஆழ்ந்த நிகர்நிலையின் அமைதிகூடிய இத்தருணங்களில் நான் மெய்யாகவே மகிழ்ச்சியாக இல்லையா?

இனிய இசை துயருடையது என்று ஒருவரி. பாரதி எழுதியது. இனிய காட்சிகள் துயருடையவை. இனிய தருணங்களே சற்று துயர்கலந்தவைதான். அது நாம் உணரும் நம் எளிமை அளிக்கும் துயர். நமது அகத்தனிமையின் துயர். அது துயரென்பதே ஒரு பாவனைதான். அது ஒரு மெல்லிய நலுங்கல். நீர்த்துளி இலைநுனிகளில் ஒளிகொண்டு நடுங்குவதுபோல. 

எங்கும் நீர் நிறைந்திருந்தது. வயல்களில்கூட நீர்தான். இப்போது நாற்றுகள் வேர்பரப்பி கரும்பசுமைகொள்ளும் காலம். ஜூனின் திருவாதிரை ஞாற்றுவேலையில் நடப்பட்டவை. அழாமல் பள்ளிக்கூடம் செல்ல தொடங்கிவிட்ட குழந்தைகளைப்போல. சில பள்ளமான வயல்களில் நாற்றுக்களின் மேல்நுனிகள் மட்டும் தெரிந்தன. ஓய்வாக சில கொக்குகள் நீள்கால்களை தூக்கி வைத்து நடந்துகொண்டிருந்தன. நீரில் தென்னைமரத்தின் பாவைகள் நெளிந்தாடின. விதவிதமாக சுருட்டி நெளித்து நீட்டப்படும் பட்டுத்துணி போல ஓடைநீர் சென்றுகொண்டிருந்தது. கற்களில் கண்ணாடிவளைவென தாவியது. சிறிய இடைவெளியில் சுருண்டு முறுகி அப்பால் சென்று அகன்றது.

நீரின் நிறத்தை எழுதுவது எழுத்தாளர்களுக்கு எப்போதுமே அறைகூவலானது. நேர்க்காட்சி அனுபவங்கள் குறைவான, கற்பனையற்ற எழுத்தாளர்கள் நீலநீர் ஓடிக்கொண்டிருந்தது என்று சொல்லி கடந்துசெல்வார்கள். நீரின் நிறம் நீலமா? சிலசமயம் நீலம், அவ்வளவுதான். அதுவும் வான்நீலம் அல்ல. அதை நீர்நீலம் என்பதே சரியானது.சிலசமயம் தைலநீலம். சிலசமயம் கருங்கல் உடைசலின் நீலம்.சிலசமயம் பூவரசுத்தளிரின் மெல்லிய பசுமைநீலம். 

ஆழ்ந்த நீலநிறத்தில் நீரை நான் கண்டது அமெரிக்காவின் கிரேட்டர் ஏரியிலும் லடாக்கின் போங்கோங் ஏரியிலும்தான்.இரண்டுமே அதிதூய நீர்ப்பரப்புகள். நீராழங்கள் என்று சொல்லவேண்டும்.அவற்றின் நீலம் தூய்மையிலிருந்து வந்தது. கிரேட்டர் ஏரியினுள் மண்படாது விண்ணிலிருந்து பொழிந்த பனியுருகிய நீர் மட்டுமே உள்ளது. அரைகிலோமீட்டர் ஆழம் கொண்டது. போங்கோங் ஏரியும் பனியுருகி சேர்வது. முந்நூறு மீட்டர் வரை ஆழம்கொண்டது. அந்த ஆழத்தின் நிறம் நீலம்.

இங்கே ஓடும் நீர் சேறுகலந்தது. கால்வாயில் ஓடிக்கொண்டிருப்பதும் மழைநீர்தான். சற்றே தெளிந்தால் மீண்டும் கலங்குவது. சிற்றோடைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நீரின் நிறம் அதில் கலந்துள்ள உப்புகளால் அமைகிறதா? ஒருவகை எண்ணைப்பச்சை. சூழ்ந்திருக்கும் பசுமையால் அவ்வண்ணமா?

நீரில் காற்றின் மெல்லிய அலைகள். அலையடிக்கும் வானத்தை இவ்வாறு குனிந்துதான் பார்க்கவேண்டும். காற்றில் பசுவின் மயிர்ப்பரவல் இப்படி சிலுசிலுப்பதைக் கண்டிருக்கிறேன். மழைவழிந்தோடிய புல்பரப்பில் நீர்த்தடங்கள். அன்னைப்பசு நக்கிய கன்றின் உடலில் படிந்த மயிர்வடிவங்கள் போல. நீரோடைகளின் விளிம்பில் புல் நீண்டு கரையென்று ஆகிவிட்டிருக்கிறது. பச்சைவயல்களின் கரையென நீரே அமைந்திருக்கிறது.

நீர்நாடாக்களால் வயல்வெளி வரிந்து கட்டப்பட்டிருக்கிறது. நீர் வயல்களை பிரித்து துண்டுகளாக ஆக்குகிறது. நீர் எனும்போதே நம்முள் இருக்கும் ஓர் உணர்வு என்ன ஆழம் என உசாவுகிறது. ஆழமான நீர் அளிக்கும் அச்சமே அதை அழகாகவும் காட்டுகிறது. ஆழமற்ற நீர் காலை தொட்டு முகர்ந்து குழையும் நாய்க்குட்டிபோல. பல சமயம் நாம் அதை உணர்வதே இல்லை

ஆனால் ஆழமில்லாத நீரிலெழும் குழைவும் துள்ளலும் நோக்க நோக்க இனிதாகின்றவை. ஆழமில்லாத நீர் அசைவாலேயே நீரென்றாவது. அசைவழிந்தால் அது மறைந்துவிடுகிறது. ஒரு மெல்லிய ஒளிப்பூச்சாக அல்லது வானொளியாக உருக்கொண்டுவிடுகிறது. ஆழமில்லாத நீர்மேல் மெல்லிய பாசிப்படர்வுகள். புல்நிரைகள். அதிலும் சிறகுவீசி நீந்திக்கொண்டிருக்கின்றன சில பூச்சிகள். நீர்ச்சாடிப் பூச்சிக்கு ஆழம் என்பதென்ன என்றே தெரியாது. எல்லா நீரும் அதற்கு ஒளிரும் மெல்லிய அலைப்பரப்பு மட்டும்தான்.

ஆழமற்ற நீருக்கு நீலநிறமே இல்லை. அது செல்லுமிடத்தின் வண்ணங்களை பெற்றுக்கொள்கிறது. அல்லது வண்ணமில்லாமல் ஒழுகிக்கொண்டிருக்கிறது. அங்கே மையப்பெருக்காக பேச்சிப்பாறைக் கால்வாய். இவை சிறு குருதிக்குழாய்கள் போல இந்நிலத்தை மூடியிருக்கின்றன. நீர் சென்றுகொண்டே இருக்கிறது. வழிந்து சுழித்து ஒசிந்து. என்னைச்சுற்றி நீர் எல்லாத்திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வெறுமே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆழமான நீர் அளிக்கும் ஊழ்கநிலையை ஆழமற்ற நீர் அளிப்பதில்லை. ஆழம் நம்மை விலக்குகிறது. ஆழமற்ற நீர் அதனுடன் விளையாட அழைக்கிறது

ஒருநாள் காலையில் நீரை பார்த்துவிட்டு இல்லம் மீண்டால் உள்ளம் பிறிதொன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இளமைமுதலே என் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. நீரால் சூழப்பட்டது திருவரம்பு. அருகே ஆறு, சூழ்ந்து ஓடை. நீரின் ஓசை எந்நேரமும். வயல்பார்க்கச் செல்வது என்பது எங்களூரின் அன்றாடவேலை. “பிள்ளை எங்க? வெள்ளம் பாக்கவா?” என்பது வழக்கமான குசலம். வயல்களில் நீர் பார்ப்பதென்பது எங்களூரில் நீர் இருக்கிறதா என்று பார்ப்பது அல்ல. நீரில்லாத நிலை இல்லை. இருக்கும் நீரை வடியச்செய்வது. நீரில் மூழ்காமல் நெல்லைக் காப்பாற்றுவது.

நாள்தோறும் நீர்பார்த்து வாழ்ந்தார் அப்பா. நான் விவசாயம் செய்யவில்லை. விவசாயியின் பதற்றங்கள் எனக்கு இல்லை. விவசாயியின் கண்களையும் இழந்துவிட்டேன். ஆனாலும் நாள்தோறும் நீர் பார்க்கிறேன். மீனவர்கள் கடல்பார்க்காமல் வாழ முடியாது என்பார்கள். என் அப்பாவின் பள்ளித்தோழரான மீனவர் காலையில் வந்து பகலெல்லாம் அப்பாவுடன் கொண்டாடிவிட்டு நள்ளிரவில் திரும்பிச் செல்வார். ”காலை எந்திரிச்சதும் தண்ணிய பாக்கல்லேண்ணா செரிவராது கேட்டியளா?”. அப்பா “ஏன் இங்க தண்ணி இல்லியா?” என்றார். அவர் “இதெல்லாம் குஞ்சுல்லா? அங்க இருக்கு தாய்க்கோளி” என்றார்

நான் மூன்றாண்டுகள் கடலோரத்தில் வாழ்ந்திருக்கிறேன். காசர்கோட்டில் இரவில் நெடுநேரம் கடற்கரையில் தனிமையாக அமர்திருப்பேன். அன்னைப்பறவை என்னை எப்போதும் ஆறுதல்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்தச் சிறுகுஞ்சுகளின் மென்சிறகுகள் போல விளையாட வந்ததே இல்லை.

***

முந்தைய கட்டுரைமொழி, எழுத்து, மதம்- அ.பாண்டியன்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்