எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
சமீபகாலமாக நான் தங்களது எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
தங்களது தொலைநோக்குப் பார்வை இன்றைய வாசகர்களும் படைப்பாளிகளும் கூர்ந்து
நோக்க வேண்டிய ஒன்று. தங்களது எழுத்துக்களில் இருக்கும் தெளிவை
என்னால் உணரமுடிகிறது. தற்போதுதான் தங்களது வலைப்பதிவுகளை வாசிக்கத்
தொடங்கியுள்ளேன். அதன்பின் தங்களது நூல்களைப் படிக்க முடிவு
செய்துள்ளேன்.
நான் தங்களது வலைதளத்தில் கடைசியாக வாசித்த கட்டுரை “ராஜராஜ சோழன்
காலகட்டம் பொற்காலமா?”
உங்களது இக்கட்டுரை மிகவும் நேர்த்தியாக, தெளிவாக, ஆராய்ந்து
கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றைப் படிக்கும் முறையைக் குறிப்பிட்டுள்ள
விதம் இன்றைய வாசகர்களுக்கும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கும் தேவையான
ஒன்று. தங்களது இந்தக்கட்டுரை இலக்கியச் சான்றுகளுடன்
கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் ஒத்துக்கொள்ளப் படவேண்டிய ஒன்று.
மன்னராட்சி காலத்தில் இதுவே நடந்திருக்கப்பட வேண்டியது. நிலவுடைமைச் சமூக
அமைப்பின் இயல்புகளை ஆராயும்போது இவையனைத்தும் தவறானதல்ல.
ஒவ்வொரு மன்னனும் தத்தம் குடிமக்களைக் காக்கவும், தனது நாட்டின்
வாணிபத்தைப் பெருக்கி, செல்வம் ஈட்ட, பிறநாட்டாரின்
ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்க ‘போர்’ என்ற அழிவின் பாதையை கையாண்டதையும்
தவறாகக் குறிப்பிட முடியாது. இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் தங்களை
அந்தந்த காலகட்டத்துக்கு நிலைப்படுத்தி, ராஜராஜ சோழன் மற்றும் ஏனைய
விமர்சிக்கப்படும் அரசர்களின் நிலைப்பாட்டில் நின்று வாசிக்க வேண்டும்.
ஒவ்வொரு சமூகத்தின் உருவாக்கமும் மற்றொரு சமூகத்தின் அழிவிலிருந்தே
தொடங்கப்படுகிறது
வெளிப்படையாகப் பேசினால் வாசகர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த அல்லது
தாங்கள் அறிந்த அல்லது தங்களுக்குக் கூறப்பட்ட கருத்தை வைத்தே கற்பனை
ஓவியத்தை வரைந்துக் கொள்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுச்
சரித்திர நிகழ்வுகளை வாசிக்கும் போது முறையான ஆராயப்பட்ட கற்பனை கொண்ட
பார்வையாக இருப்பது நலம்.
அன்றைய சூழலை இன்றைய காலகட்டத்துடன் நோக்குவதே தவறு. இதை வரலாற்றை
வாசிக்கத்தொடங்கும் வாசகர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியது.
இன்னும் இதுபோன்ற பல தெளிவான கட்டுரைகளை உங்களிடமிருந்து என்னைப் போன்ற
வாசகர்கள் எதிர்பார்க்கிறோம்.
சிறிய வேண்டுகோள் நான் புதிதாகத் தொடங்கியுள்ள வலைதளத்தைப் பார்வையிட
தங்களை பணிக்கிறேன். தங்களது மேலான கருத்துக்களைத் தெரிவிக்க
வேண்டுகிறேன்.
(http://entamilpayanam.blogspot.com)
நன்றி,
அருள்மொழிவர்மன்.
அன்புள்ள அருள்மொழி வர்மன்
இங்கே உள்ள முக்கியமான சிக்கல் என்னவென்றால் வரலாற்றை அணுகுவதற்கான கருத்தியல்கருவிகள் நம் கட்டுரையாளர்களிடம் இல்லை என்பதே. உதிரிதகவல்களைக்கொண்டு முடிவுக்கு வரும் போக்கே உள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் அடிமைமுறை இருந்தது, ஆகவே அவன் கெட்டவன் – இப்படி போகிறது இவர்களின் ஆராய்ச்சி
சமூகத்தின் வளர்ச்சிப்போக்கின் ஓர் ஒட்டுமொத்தச் சித்திரத்தில் ஒரு வரலாற்று காலகட்டத்தை வைத்து பார்க்கும் வழக்கமே இங்கே இல்லை. அப்படிச்செய்யும் கோட்பாட்டுப்பின்புலம் மார்க்சியர்களுக்கு உண்டு. கோசாம்பிக்குப்பின் இந்திய வரலாற்றாய்வில் அதற்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் தமிழக மார்க்ஸியர்கள் அதை அறிந்ததே இல்லை என அவர்களின் கட்டுரைகள் காட்டுகின்றன
மேலும் எந்த ஒருசந்தர்ப்பத்திலும் இந்தியாவின் தொன்மையை மட்டம்தட்டக்கூடிய, மரபை இழிவுசெய்யக்கூடிய ஒரு வாய்ப்பை தவறவிட்டுவிடக்கூடாதே என்ற எண்ணமும் நம்மவரிடம் உண்டு. அதுவே முற்போக்கு என்ற நம்பிக்கை
இதைத்தாண்டிச் சிந்திப்பதற்கான அறிகுறிகள் இன்றுதான் ஆரம்பமாகியுள்ளன
ஜெ
அன்புள்ள ஜெயன்,
நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்களுடைய தளத்தில் பழைய கட்டுரைகளைப் படிப்பது என் வழக்கம். அப்படி இன்று ஆதிச்சநல்லூர் சிதம்பரம் பற்றிப் படித்தேன். உடனே எழுந்த ஆவலில் இணையத்தைத் துழாவியபோது, 1914ல் பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் கிடைத்தது. தங்களுக்கு உபயோகப்படலாமென அனுப்பியிருக்கிறேன்.
அன்புடன்,
ஆனந்த் உன்னத்.