விரலிடுக்கில் நழுவுவது

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம் கலையாகிறதோ அங்கெல்லாம் அது அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திருப்பதைக் காணலாம்.

காமம் மானுட உறவுக்குக் குறியீடாக ஆகும். இயற்கையுடனான முயங்கலின் அடையாளமாகும். காலம் வெளியென தழுவி விரியும் பேருணர்வாகும். இறையனுபவமாக ஆகும். நாம் கொண்டாடும் மகத்தான அகத்துறைப் பாடல்கள் அனைத்துமே அவ்வகையில் காமம் என்னும் எல்லையை கடந்தவையே. இயற்கை இல்லாத சங்கப்பாடல்கள், பெருமாள் இல்லாத ஆழ்வார்களின் நாயகிபாவப் பாடல்கள் எப்படி கவிதையாகியிருக்கமுடியும்?

நவீனத்துவக் கவிதை காமத்தை மட்டுமே காண்கிறது. ஒவ்வொன்றையும் அது எதுவோ அதிலேயே நிறுத்துகிறது அதன் யதார்த்த நோக்கு. ஆனால் ஒவ்வொன்றிலிருந்தும் உச்சத்தை, முடிவிலியை நோக்கி எழுகிறது கற்பனாவாதக் கவிதை. அனைத்தையும் அங்குசெல்வதற்கான வழியாக ஆகிறது. கற்பனாவாதக் கவிஞனுக்கு வாழ்க்கையின் அனைத்துக்கூறுகளும் பறவைக்குக் கிளைநுனி போல எம்பி எழுவதற்கான தளங்கள் மட்டுமே.

நவீனத்துவத்தின் பார்வைக்குள் கற்பனாவாத அழகியலுடன் எழுதப்படும் கவிதைகளில் பல வெறுங்காமத்தையே வெளிப்படுத்துகின்றன. அவை அந்தக் கவிஞன் என்னும் தனிமனிதனின் அக அவசங்களை நோக்கி மட்டுமே நம்மைக் கொண்டுசெல்கின்றன. அவற்றுடன் நாம் நம்மை அடையாளம்கண்டுகொள்கையில் நம்மை பாதிக்கின்றன. நம் உணர்வுகளை அலைக்கழிக்கின்றன.ஆனால் அலைக்கழிக்கும் எந்த உணர்ச்சியிலிருந்தும் நாம் எளிதில் விடுபட்டுவிடுகிறோம். அதைப்போலவே நவீனத்துவக் கவிதை அளிக்கும் அந்த உணர்வூசலை மிக எளிதில் நிறுத்திக்கொள்கிறோம்.

ஜே. பிரான்ஸிஸ் கிருபாவின் கவிதைகளில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று அவருடைய பித்தின்கசப்பு கனிந்து எழும் கருணை வெளிப்படும் வரிகள். அத்தகைய அமரத்துவம் வாய்ந்த சிலவரிகளாலேயே ஃப்ரான்ஸிஸ் கவிஞன் என கருதப்படுகிறார். இன்னொன்று அப்பித்து அமர்விடமோ பிடிமானமோ தேடி அலையும் தவிப்புக்கள் வெளிப்படும் வரிகள். அவருடைய சமீபத்தைய கவிதைத்தொகுதியான சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் இரண்டாம் வகைக்கவிதைகள் மட்டுமே நிறைந்திருக்கும் நூல். ஆகவே எளிதாகக் கடந்துவிடக்கூடிய உணர்வுநிலை சார்ந்த படைப்புக்களே இதில் மிகுதியாக உள்ளன.

உதாரணமாக ‘மொத்தத்தில்’ என்ற கவிதை. முத்தங்களைப் பற்றியது. கசந்த முத்தங்களைப்பற்றிய கவிதைகளின் பெருக்கம் நிறைந்து சென்றகாலம் நிறைந்து கவிந்துவிட்டபின் இந்தக் கவிதையை நாம் படிக்கிறோம். மீண்டுமொரு கசந்தமுத்தம். முன்பு முத்தங்கள் எப்படிக் கசந்தனவோ அப்படியே இதுவும் கசந்திருக்கிறது. ஒருவேறுபாடில்லை.

நாள் முழுக்க

நாடி நரம்புகளெங்கும்

ஒரு புதிர்குறித்த புரிதல்வேண்டி

முத்தங்களின் கருத்தரங்கங்கள்

நடந்துகொண்டிருக்க

பகலோரமாய் நிழலில் அமர்ந்து

மணற்கிண்ணத்தில் நிரம்பியிருந்த மதுவை

நிதானமாய் அருந்திக்கொண்டிருந்தது இரவு

அப்போது அவ்வழியாய்

நொண்டியடித்தபடி கண்டும் காணாமலும்

சென்றுகொண்டிருந்தது ஒரு கனவு

ஆனால் கவிதை என்பது எப்போதும் புதியதாகவே நிகழமுடியும். என்றுமுள்ள மலைகள்கூட கவிதையில் அக்கணத்தில் பிறந்தவையாகவே அமைய முடியும். இக்கவிதைகள் முழுக்க சென்றகாலத்தின் நெடியே தெரிகிறது. அதிலும் இரவு கனவு போன்றவற்றை உருவகங்களாக்குவதும் முத்தங்களின் கருத்தரங்கு போன்ற சொல்லாட்சிகளும் மிகமிக பழகிய தேய்வழக்குகள்.

உன்

கண்மணிப் பொழுதுகள்

மெல்ல

மின்மினிப்பொழுதுகளாக

மாறிவந்த வேளையில்

மீண்டும் பொழுதோடு பொழுதாகி வந்தன

பழுதாகிக்கிடந்த என்

பரிசுத்தக்கனவுகள்

போன்ற கவிதைகள் மேலும் மேலும் பின்னகர்ந்து வானம்பாடிக்குரலாகவே ஒலிக்கின்றன. தல்ஸ்தோயின் கதையில் பைபிளை திறந்து வாசிக்கும் செம்மான் அதில் ஒரு வரி பொன்னாக மின்னுவதைக் காண்பதாக வரும். என் வாசிப்பு ஆழ்ந்த ஆனால் கவனமற்றதாகத் தோன்றும் பாவனையுடன் தொகுதியை புரட்டிக்கொண்டே இருப்பது. சட்டென்று ஒரு வரியில் பொன்மின்னும் அனுபவமே நான் தேடுவது. பிரான்ஸிஸின் முந்தைய தொகுதிகளில் அந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறது. இத்தொகுதியெங்கும் திரும்பத்திரும்ப வெற்று வரிகளே நிறைந்துள்ளன.

புறக்கணிப்பு, தனிமை, அதற்கு மாற்றாக எண்ணி ஏங்கும் காமத்தின் கசப்பு ஆகிய மூன்று உணர்வுநிலைகளின் நேரடிவெளிப்பாடுகள் மட்டுமே கொண்ட கவிதைகள் இவை. பெரும்பாலானவை புலம்பல்கள். புலம்பல்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவை உண்மையானவையாக, மிகமிகத் தீவிரமானவையாக இருக்கையிலும்கூட தேய்வழக்காகவே வெளிப்படக்கூடும். சொல்லப்போனால் அப்புலம்பலை சற்றே விலகிநின்று நோக்கும் தத்துவவாதியோ ஞானியோதான் அவற்றைக் கவிதையாக்குகிறான். அவற்றை இன்னொரு விலக்கத்துடன் நின்றுநோக்கும் மொழிவல்லுநன் தேய்வழக்குகளைக் களைந்து கவிதை நிகழாத வரிகளை அகற்றி கவிதையை மீட்டு வைக்கிறான்.

பரிதாபம்

விடியாத இரவில்

விலகாத இருளில்

மெலியாத துயரில்

கண்மணித்திரையில்

உன் முகம் வரைந்து

யாரும் காணாத

யாராலும் காணப்படாத கனவுகள்

அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கின்றன

கலைந்துபோகத் தெரியாமல்

கண்ணீரில்

கரைந்துபோகவும் முடியாமல்

என்பவை போன்ற வரிகளை விட்டு நவீனக்கவிதை நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருக்கிறது.

பட்டாசு வெடிப்புகளினூடே

ஒரு பலவீனமான இதயம்

வெடிக்கும் ஓசையைக் கேட்க

ஆவலோடு காதைத்தீட்டிக்கொண்டிருப்பவர்கள்

தீட்டிக்கொண்டே இருக்கட்டும்

போன்றவரிகள் அளிக்கும் சலிப்பால் சட்டென்று தொகுதியை மூடிவிடவே தோன்றியது.

என்ன நிகழ்கிறது? இலக்கியம் எதுவானாலும் உரிய தவத்தைக் கோருகிறது. உள்ளுணர்வு கூர்கொள்ள உடன் அறிவும் விசைகொள்ளும் ஓர் இயக்கம் அது. தன்னிச்சையான வெளிப்பாடு என ஒன்று இலக்கியத்தில் இல்லை. வாழ்விலிருந்து நேரடியாக கவிதை உருவாகிறது என்பதைப்போல் பொய்யும் பிறிதில்லை. கொந்தளிப்பும் தனிமையும் கொண்ட கவிஞரின் தனிவாழ்வில் அவர் உணர்ந்த உணர்வுநிலைகளிலிருந்து இக்கவிதைகள் எழுந்திருக்கலாம். ஆனால் வெறும் தன்னிச்சையான வெற்றொலிகளாகவே இவை நின்றுவிட்டிருக்கின்றன.

அவரில் முன்பு நிகழ்ந்தது ஒன்று இல்லாமலாகிவிட்டிருக்கிறது. அவர் இழந்தவை பல என அவரை நன்கறிந்தவன் என நான் அறிவேன். முக்கியமானது இத்தொகுப்பில் இல்லாமலாகிவிட்டிருப்பதுதான். வெறுங்கையை விரித்து இவ்வுலகைத் தழுவ எழுந்த ஒதுக்கப்பட்டவனின் கனிவு அது.

சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்

– ஜெ.பிரான்சிஸ் கிருபா

பக்கம் : 190 விலை : ரூ150

***

“படிகம்” நவீன கவிதைக்கான இதழ்
4 184 தெற்குத் தெரு
மாடத்தட்டுவிளை
வில்லுக்குறி அஞ்சல் – 629180
கன்னியாகுமரி மாவட்டம்.
அலை பேசி : 9840848681

முந்தைய கட்டுரைகல்,கல்வி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4