ஃபாசிசம் -கடிதம்

ஃபாசிஸத்தின் காலம்

 

இனிய ஜெயம்

தீயின் எடை முடித்து ஒரு சிறிய இடைவெளி. எதையும் வாசிக்கவில்லை. சிறு மழைப் பயணம். தினசரி பொருநைக் குளியல். நெல்லையப்பர் கோவில் உலா, அம்மன் சன்னதி நண்பர்கள் சூழ அல்வா அரட்டை. உறவுகள் இடையே சிறிய இனிய சுப நிகழ்வு. மனமே குளிர்ந்து, கூழாங்கல் தெரியும் தெளிந்த ஆழம் கொண்ட நதி போல கிடக்கிறது.

ஒரு வாரம் கழித்து இணையம் திறந்தேன். உலகம் மிக வேகமாக என்னை உதிர்த்து விட்டு முன்னே சென்று விட்டது. :) எனக்குப் புதிதான,ஒரே வாரம் பழைய செய்தி வெளி நபர்களுக்கு எங்கோ புராதான பழங்காலத்தில் நடந்த ஒன்றாக இருக்கிறது. இந்த வினோத சூழலில்தான் இன்றைய பாசிசத்தின் காலம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவேதான் அது கருத்துக்களை கைவிட்டு, கூப்பாட்டையும்,கூப்பாட்டையும் கைவிட்டு வன்முறை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறது. [ரெண்டு அடிகள போட்டாத்தான் என்னிக்கும் நினைப்புல நிக்கும் கேட்டீயளா ].

கருத்தைக் கருத்தால் எதிர் கொள்வது எனும் நிலை இங்கே வழுவும் மற்றொரு காரணம், எதிர்ப்பாளர்களுக்கு தங்கள் கருத்தின் மீது அதன் வலிமை மற்றும் ஆயுள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை எனும் சூழலில் இருந்தே பிறக்கிறது.

அடுத்த காரணம் முகநூலும் வலைப்பூக்களும் வழங்கும் சம வாய்ப்பு. எந்தத் தகுதியும் அற்ற எவரும் எந்த துறை சார்ந்த வல்லுனரையும் உள்ளே புகுந்து பேசி அவமானம் செய்யலாம். பத்ம விருது பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர் செய்திருப்பது ஒரு நெடிய பணி.அந்தப் பணியில் அவர் ஈடுபட ஒரு முறைமையும்,அதைக் கற்றுத் தர ஒரு அறிஞர் மரபும் அவருக்கு பின்புலமாக உண்டு. அவரை பத்து புத்தகத்தை அரைவேக்காட்டுத் தனமாக படித்து விட்டு ப்ளாக் எழுதும் பாப்கார்ன் அறிவு ஜீவி ஒருவர் வந்து கேள்வி கேட்பார். இந்த பாப்கார்ன்களை சும்மா கிட என்று சொல்ல இங்கு ஒரு அறிவுத் தரப்பு கிடையாது.

அறிவுத் தரப்பு என்று நிலைபெற்று விட்ட தரப்பு செய்யும் தமாஷ்கள் இன்னும் அதிகம். சிறந்த உதராணம் சமீபத்தில் அவர்கள் கும்பலாக சென்று கராத்தே கட்டாஸ் போட்டு சுகி சிவத்தை குமுறி எடுத்த சம்பவம். பாரதத் தாயின் தவப்புதல்வனுக்கு ஒரு வணக்கத்தை சொல்லி ஆரம்பித்து, இந்த தமாஷ்கள் ‘மண்டபத்தில் வைத்து எழுதித் தருவது’ எதுவோ அதை மேடையில் பேசி விட்டு, மாரிதாஸ் அவர்களின் புகழ் ஓங்குக என்று சுகி முடித்தால் அதுதானே சரியான கருத்தாக இருக்க முடியும். இல்லாவிட்டால் அது கசவாளித்தனம்தானே. காணொளிக் காட்சி ஒன்றில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை என்கிறார் சுகி.

சுகி பேசியதன் அடிப்படை ஆய்வுகள் பழைய காலத்தை சேர்ந்தது என்றால் இந்த தமாஷ்கள் பேச வேண்டிய இடம் எது?

http://murugan.org/tamil/shanmugampillai.htm

இதோ இப்படி ஒன்றை தொடர்ந்தே சுகி பேசுகிறார் எனில். இந்த அறிவுஜீவி தமாஷ்கள் உரையாட வேண்டியது இன்ஸ்டியுட் ஆப் ஏசியன் ஸ்டடிஸ் உடன் தானே அன்றி சுகியை பதற வைத்து அவர்க்கு ஏதேனும் ஒரு பட்டம் கட்டி விடுவதில் என்ன லாபம்.?

இந்த அறிவுத் தரப்பு உண்மையாகவே ஒரு தமாஷ் தரப்பு என்பதன் மற்றொரு உதாரணம் இந்த தரப்பு ‘உருவாக்கி’ உலவ விட்ட இந்துத்து அம்பேத்கர் எனும் கான்செப்ட். தாங்கள் உருவாக்கிய கருத்தில் தங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதையும், அந்தக் கருத்து எந்த பாதிப்பையும் உருவாக்க வில்லை என்பதையும், சமீபத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட போது,இந்த அறிவுத் தரப்பு மொத்தமும் ராஜகம்பீர மௌனம் பூண்டதில் இருந்து அறியலாம்.

ரஞ்சித்தோ, நாகசாமியோ,சுகி சிவமோ ஒரு உதாரணம் மட்டுமே. அடிப்படையில் அறிவுத் தரப்பை அரைவேக்காடுகள் அவமதிப்பது, ‘குறிப்பிட்ட’ அறிவுத் தரப்பு எதனுடன் உரையாட வேண்டுமோ அதை விட்டு விட்டு அதன் விளைகனியை வெறி நாய் போல துரத்துவது. பிரதானமாக இந்த இரண்டு புள்ளிகளில்தான் இன்று நாம் காணும் சரிவு முடுக்கம் கொள்கிறது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்
அடுத்த கட்டுரை’ஜக்கு’ ஜெகதீஷ்- கடிதங்கள்