ஃபாசிசம் -கடிதங்கள்

ஃபாசிஸத்தின் காலம்

வணக்கம் ஜெ

 

இன்று வளர்ந்துவரும் ஃபாஸிசம் பெரிய உளச்சோர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக இந்து சமுதாயத்திற்குள் வளரும் ஃபாஸிசம் இந்து மதத்திற்கே எதிராய் முடியும். இதற்கு முக்கியக் காரணம் பிற அடிப்படைவாதத் தரப்புகளைப் பார்த்து அப்படியே ‘காப்பி’யடிக்கும் போக்கு. இஸ்லாமின் மதவாதத் தரப்பையும், கிறிஸ்தவத்தின் அடிப்படைவாதத் தரப்பையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்து மதமும் அப்படி இருக்கவேண்டுமென்று விழைகிறார்கள்.

 

அதாவது ராணுவ ஒழுங்கு, கடுமையான விதிமுறைகள், மத விசுவாசம், மத நிந்தனை, மத உணர்வைப் புண்படுத்துதல், இன்னும் பல… இதற்கு இன்னொரு முக்கியக் காரணம் இங்குள்ள முற்போக்கின் போலித்தனங்களும், போதாமைகளும். இவர்களின் அதீத சிறுபான்மை சாய்வுப் போக்கு. சிறுபான்மை என்ன செய்தாலும் அதை நியாயப் படுத்த முயல்வது, சிறுபான்மையினர் பாவம், வஞ்சிக்கப்பட்டவர்கள், நீதான் பெரும்பான்மையாச்சே….உனக்கென்ன கேடு… என்பதுதான் இந்த முற்போக்கின் நியாயம்.

 

இன்று இந்துத்துவத்தைப் பார்த்து என்ன விமர்சனத்தை வைத்தாலும் அதை எளிதில் அவர்கள் இந்த இரண்டு தரப்புகள் பக்கம் திருப்பி விடுவார்கள். ஈ.வே.ரா. ராமர் சிலைக்கு செருப்புமாலை அணிவித்ததை, தி.க. காரர்கள் விநாயகர் சிலைகளை உடைத்ததை இன்று சுட்டிக் காட்டி நியாயம் கேட்கிறார்கள். அது ஒரு அறிவிலித் தனம். அதைச் சுட்டிக்காட்டி நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும் ? இப்படி ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி தங்களது அராஜகத்தையும், ஃபாஸிசப் போக்கையும் நியாயப்படுத்திக் கொண்டால் இதன் விளைவு என்ன ? இன்று ஒருபுறம் ஆன்மிகம், ஜனநாயகம், கருத்து சுதந்திரம் போன்றவைகள் வளர்ந்து வந்தாலும், மறுபுறம் அதைவிடப் பலமடங்கு வீரியமாக மதவாத ஃபாஸிசம் வளர்ந்து வருகிறது.

 

இன்று ஃபாஸிசம் குறித்து பேசும்போது குடும்பங்களில் உள்ள ஃபாஸிசப் போக்கையும் பேசவேண்டியிருக்கிறது. ஒருவகையில் இது அடிப்படையானதும் கூட. இன்று நம் குடும்ப அமைப்பே ஒருவித ராணுவ அமைப்பாகச் செயல்படுகிறது. செயற்கையான நம்பிக்கைகள், உணர்ச்சிகளைக் கொண்டு ஒரு ராணுவப் படையைப்போல குடும்பங்களை நடத்த விரும்புகிறார்கள் (குறிப்பாக ஆண்கள்). மதம், வழிபாடு போன்ற விஷயங்களில் கூட பிற மதத்தவரைக் காப்பியடிக்கிறார்கள். அவனைப் பார்… ஐந்து வேளை தொழுகிறான், இவனைப் பார்… தினம் சர்ச்சுக்குப் போய் மணிக்கணக்கில் ஜெபம் பண்ணுகிறான். நீயெல்லாம் ஒரு இந்துவா ? என்கிறார்கள்.

 

இவர்கள் இப்படிப் பேசுவதற்கு முக்கியக் காரணம், இங்கு ஏற்கெனவே வளர்ந்து வலிமை பெற்ற அசட்டு நாத்திகவாதம். அதனால் ஏற்பட்ட அச்சம். அதற்கு எல்லாவற்றையும் கிண்டல் செய்யத்தான் தெரியும். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதம் என்கிற உணர்வுநிலையில் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளனர். இந்துமதத்தையும் அவ்வாறு உறுதியாகக் கட்டவில்லையெனில் மதம் சிதைந்து அழிந்து விடுமோ என்கிற அச்சமே இவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

 

ஒரு மனிதன், அவனுடைய தனிப்பட்ட தேடல்கள், அறிதல்கள், உணர்தல்கள், அவன் ஒரு முழுமையான மனிதனாக வாழவேண்டும் என்கிற எல்லாவற்றையும் விட ‘மதம்’ என்கிற ஒரு கூட்டிற்குள் ஒரு உறுப்பினராய் இருந்தால்மட்டும் போதும் என்கிறார்கள். இது வெறுமனே ஒரு அடையாளப்படுத்துதல் மட்டுமே. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இருப்பதைப் போல நடி; மத அடையாளத்தோடு உன்னை வெளிப்படுத்திக்கொள், என்று மறைமுகமாக போதிக்கிறார்கள். இதெல்லாம் ஒருநாள் மாறும் என்ற அசட்டு நம்பிக்கையுடன் நடந்து செல்ல வேண்டியதுதான்.

 

விவேக்

 

அன்புள்ள ஜெ

 

பாசிசத்தின் காலம் என்னும் கட்டுரையை வாசித்தேன். அதைப்பற்றி இணையத்தில் வந்த எதிர்வினைகளை தேடிவாசிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒரு எதிர்வினை, ஒரே ஒரு எதிர்வினைகூட நீங்கள் சொன்ன உணர்வுகளைப் புரிந்துகொள்வதாக இல்லை. எல்லா தரப்பினருமே தங்கள் எதிரித்தரப்பாக உங்களை உருவகித்திருந்தார்கள். எல்லாருமே உங்கள் நேர்மை, ஆளுமை, அறிவுத்துறன் ஆகியவற்றைக் கொச்சைப்படுத்தி வசைபாடியிருந்தனர். நீங்கள் திமுகவுக்குத் துண்டு போடுவதாக இந்துத்துவக்கும்பல் வசைபாடியிருந்தது [நான் வாசித்தவரை எல்லா அரசியல்கூட்டமும் எதிர்தரப்பென எண்ணுவதை வசைபாடுபவர்கள்தான். ஆனால் அந்த ‘எதிரியின்’ தகுதியை, ஆளுமையைப்பற்றி எந்த மதிப்பும் இல்லாமல் கீழிறங்கி வசைபாடுபவர்கள் இந்துத்துவர்கள்தான். அவர்களுக்கு எவர்மேலும் எந்த மரியாதையும் இல்லை. இந்துத்துறவிகள், ஞானிகள்மீதுகூட மதிப்பில்லை] இந்தச் சூழலில் இத்தகைய கட்டுரைகளை எவருக்காக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

 

ராஜ் கண்ணன்

முந்தைய கட்டுரைபி.எஸ்.என்.எல்- கடிதம்
அடுத்த கட்டுரைமுற்றழிக!