‘நூறுமலையாளம் உண்டெங்கிலெந்தெடி பெண்ணே?
காறுமலையாளம் அல்லேடி மலையாளம் கண்ணே!’
ஒரு பழைய நடவுபாட்டு. நூறுமலையாள மண் இருந்தாலுமென்ன கார் மலையாளம் அல்லவா மலையாள மண்? அழகான பாடல். அக்காலங்களில் நாற்றுநடவு செய்பவர்கள் அடிக்கடிப் பாடிக்கேட்டிருக்கிறேன். ஆறுமலையாளிக்கு நூறு மலையாளம் [ஆறு மலையாளிகள் சேர்ந்தால் நூறு மலையாள உச்சரிப்பு] என்ற பழமொழியுடன் இதையும் சேர்த்துப் புன்னகைத்துக்கொள்வதுண்டு.
இரவும்பகலும் மழைபெய்துகொண்டிருக்கும் குமரிமாவட்டத்தில், சேறுகலங்கிய வயலில் முட்டளவு இறங்கிநின்று நாளுக்கு பத்துமணிநேரம் வேலைபார்ப்பவர்கள், திரும்பிச்செல்லும் வீடும் சற்றே ஒழுக, ஈரவிறகை ஊதி ஊதிப் புகையெழப் பற்றவைத்து சமைத்து உண்டு, தரையில் மண்ணீரம் ஊறிக்குளிர பனம்பாயில் துயிலவேண்டியவர்கள் அதைப்பாடியிருக்கிறார்கள் என்பது வியப்புக்குரியதுதான்.
மனிதர்களின் அடிப்படையான ரசனை வசதிகள் சார்ந்தது அல்ல. பழக்கம் சார்ந்தது. உள்ளுணர்வாக படிவதும் பழக்கமே. கீழைத்தஞ்சாவூர்க்காரரான என் மாமனார் குமரிமாவட்டம் வந்தாலே “என்ன ஊரு இது, எப்ப பாத்தாலும் மழை, சளியும் காய்ச்சலுமா ஒருநாள் நிம்மதியா தூங்கமுடியுதா?” என அங்கலாய்ப்பார். இந்த ஊரில் எருமையாக வாழ்வதைப்போல் இனிது பிறிதில்லை என்பது என் எண்ணம்.
விடிகாலையில் சாரல்மழையில் நனைந்தபடி நடைசெல்கிறேன். ஊதல்காற்றுவேறு. தலைமயிர் குறைவு என்பதனால் பெரிதாகத் துவட்டிக் காயவைக்கவேண்டியதில்லை. ஒரு நீவு நீவிவிட்டால்போதும். எங்களூரில் பெரும்பாலானவர்களுக்கு வழுக்கை இருப்பது ஏதேனும் பரிணாமவிதியோ என்னவோ.
இந்த மழை தொடங்கும் காலகட்டத்தை திருவாதிரை ஞாற்றுவேல என்று மலையாளநூல்கள் வரையறுக்கின்றன. ஞாறு என்றால் நாற்று. வேலை என்னும் சொல்லுக்கு திருவிழா, கொண்டாட்டம் என்று பொருல். நான் இப்படித்தான் நெடுங்காலம் புரிந்துகொண்டிருந்தேன். ஏனென்றால் எங்களூரில் உண்மையிலேயே அது பெரிய கொண்டாட்டம். எருமைகள் போல மானுடரும் ஆகும் காலம். ஆனால் அது மிகத்தொன்மையான வானியல்கணக்கு என சோதிட ஆய்வாளரான நண்பர் ஒருமுறை சொன்னார். ஞாயிற்று [ஞாயிறு] என்னும் சொல்லின் திரிபுதான் இங்கே ஞாற்று எனப்படுகிறது.
ராசிசக்கரத்தில் ஒரு மீன் கட்டத்தை சூரியன் கடந்துசெல்லும் காலகட்டத்தை ஞாற்றுவேலை என்கிறார்கள். ஞாயிற்றுநிலை என்றே பழைய நூல்கள் சொல்கின்றன. மொத்தம் 27 ஞாற்றுவேலைகள். 27 மீன்களின் பெயர்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மீனிலிருந்து இன்னொன்றுக்கு சூரியன் செல்வது ஞாற்றுவேலைப் பகர்ச்சை எனப்படுகிறது. [பகிர்தல்] ஒரு ஞாற்றுவேலை பொதுவாக பதிமூன்றரை நாட்கள் நீளும். அதில் தொடக்கம் உச்சம் சரிவு என மூன்றுநிலைகள் உண்டு. ஒரு ஞாற்றுவேலை உச்சம் மூன்றுநாட்கள்
பழங்கால கேரள வேளாண்மை ஞாற்றுவேலைக் கணக்குகளின் அடிப்படையில் அமைந்திருந்தது, இன்றைக்கும் பழையதலைகள் அப்படித்தான் கணக்கிட்டுக்கொண்டிருக்கின்றன. எந்தெந்த ஞாற்றுவேலைகளில் மழை எவ்வண்ணம் பொழியும் என்பதற்கு கணக்குகள் உண்டு .ஏப்ரல் பாதியில் கோடையின் வெம்மைக்குள் முதல் ஞாற்றுவேலையான அஸ்வதி தொடங்குகிறது. அதில் கோடைமழை பெய்தாகவேண்டும். அடுத்த ஞாற்றுவேலை கார்த்திகை. அதில் மழை இருக்காது.
ஜூன் தொடக்கத்தில் திருவாதிரை ஞாற்றுவேலை தொடங்குகிறது. மழை மயிற்பீலி வீசுவதுபோல சுவர்களில் அறைந்தபடி சாய்வாகப் பெய்யவேண்டும். திருவாதிரைக்கு தெளிந்தமழை, புணர்தத்தில் புகைந்த மழை, ஆயில்யம் அடைச்சுமழை, அத்தம் மழை சக்தம் என தொடர்ந்து மழைவந்தாகவேண்டும் என வற்புறுத்தும் பழமொழிகள். அதாவது திருவாதிரை முதல் மழைதான்.மற்ற ஞாற்றுவேலைகளைப் பற்றி கவலைப்படாதவர்கள், தெரிந்திராதவர்கள்கூட திருவாதிரை ஞாற்றுவேலை பற்றி தெரிந்திருக்கிறார்கள். திருவாதிரை ஞாற்றுவேலை தொடங்கியது என நாளிதழ்கள் செய்தி போடுகின்றன.
திருவாதிரை ஞாற்றுவேலையில் விரல் வெட்டி நட்டால் மனிதனும் முளைத்தெழுவான் என்றும் கல் விதைத்தால் மலைமுளைக்கும் என்றும் பாட்டாக்கள் சொல்வதுண்டு. அதாவது ஜூனில் விதைத்தால் செப்டெம்பர் பாதிவரை திரும்பியே பார்க்கவேண்டாம். அக்டோபரில் சோம்பல்முறித்து திரும்பிப் பார்க்கையில் நட்டவிதை எழுந்து இலைவிரித்து தண்டு பருத்து நின்று “என்ன வேய்?’ என்று கேட்கும். பின்னர் அடுத்த மழைக்காலம் ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின் மகர ஞாற்றுவேலையில் தொடங்குகிறது.
இந்தமழைக்காலம் கேரளத்திற்கு கொஞ்சம் கொடுமையானது. உண்மையில் மழையளவு கூடவில்லை. ஆனால் மலைகளை எல்லாம் வெட்டி சாலைகளும் தோட்டங்களும் மாபெரும் கட்டிடங்களுமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள். மலை அப்படியே விண்டு வீழ்கிறது. வெள்ளம் செல்லும் பாதைகளில் எல்லாம் அடைப்புக்கள். நீர் ஊருக்குள் புகுகிறது. சென்ற இரண்டு ஆண்டுகள் கேரளத்திற்கு பெரிய பாடங்களைக் கற்பித்திருக்கின்றன. ஆனால் கற்பார்களா, கற்றாலும் நடைமுறைக்கு வருமா எனத் தெரியவில்லை.
குமரிமாவட்டத்திற்கு இவ்வாண்டு நல்ல மழை, ஆனால் மிகைமழை இல்லை. இப்போது ஒவ்வொருநாளுமென பெய்துகொண்டிருக்கிறது. ஓணம்வரை பெய்யும் என்பது பழைய கணக்கு. நாளும் காலையில் சென்று முகில்மண்டிய வானை நோக்கி நின்றிருக்கிறேன். நான் செல்லும் பகுதிகள் ஒரு மனிதத்தலைகூட தென்படுவதில்லை. சிறகுவிரித்தாடும் தென்னைகள். முகில்சூடிக் கருமைகொண்ட மலைகள். பசுமையின் அலைகளாக ஓடும் காற்று.
மலைகள் கருமைகொள்வது அவை மெல்லமெல்ல கடுவெளி நோக்கிப் பின்வாங்குவதுபோலத் தோன்றும். அவற்றின் முப்புடைவுகள் தெளிவுகொள்கின்றன. பின்னர் மங்கலடைகின்றன. அவை மென்மையான புகைக்குவைகள் என மாறுகின்றன. பசுமை கருமையோ என எண்ணச் செய்கிறது. அவற்றின் மேல்முனைகள் கரைந்து வானில் மறைகின்றன. திரையிறங்கி அவற்றை முழுமையாக மூடிவிடுகிறது. அப்போது மின்னல்கள் வெட்டுமென்றால் மலைமுகட்டுப்பாறைகள் கங்குகள் போல் ஒளிர்ந்தணைவதைக் காணலாம்
முகில்கள் மெல்லிய காக்கைச்சிறகுகள் போலத் தோன்றுகின்றன. அல்லது கருங்குருவிச்சிறகுகள். காக்கைச்சிறகுகள் சற்றே கடினமானவை. கருமையிலிருந்து ஒளிரும் வெண்மைநோக்கிச் செல்லும் பல்லாயிரம் அழுத்தவேறுபாடுகளாலான வெளி. நோக்கும் கணத்தில் அவ்வுருவங்கள் தெரிகின்றன. மறுகணம் வேறொன்றாகின்றன. ஒரு கணத்தை ஒரு வெளியென காணவேண்டுமென்றால் முகில்களையே பார்க்கவேண்டும்.
நித்ய சைதன்ய யதி ஊட்டியில் பெரும்பாலான நாட்களில் தன் ஓவியநிலையுடன் ஏதேனும் மலைவிளிம்பில் சென்று அமர்வார். வெண்ணிறத்தாளில் கிராஃபைட் [பென்சில்முனைத்] தூளை எண்ணையில் குழைத்து சுட்டுவிரல்தொட்டு கருமுகில்குவைகளை வரைவார். அலையலையாக, குவைகளாக, சுருள்களாக. முதலில் எண்ணைக்கறை போலத் தோன்றும். முகில்களாக உருக்கொள்கையில் பின்னாலிருக்கும் வெண்ணிறக் காகிதம் கண்கூசும் வானொளியாக முகில்களை ஊடுருவி பீரிடும்.
வரைந்ததுமே அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார். பலசமயம் அவரைக் காணவருபவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவற்றை அவர் சேர்த்து வைப்பதில்லை. வரைவது முகில்களைக் கூர்ந்து பார்க்கும்பொருட்டு மட்டுமே. ஓவியம் வரையத்தெரியாவிட்டாலும் வரையலாம் என்று நித்யா சொல்வார். ஒருமாதிரி பார்க்கும்படியான நிலக்காட்சியை வரைய ஒருமாதகாலப் பயிற்சி போதும். சட்டகத்தின் ஜியோமிதியையும் வண்ணக்கலவையையும் பயின்றால்போதும். வரைந்தபின் கிழித்து வீசிவிட்டால் பிரச்சினை இல்லையே.
ஏனென்றால் நம்மால் வெறுமே நிலக்காட்சியை பார்க்க முடிவதில்லை. எண்ணங்கள் ஊடறுக்கின்றன. நினைவுகள், ஒப்பீடுகள். அவற்றை அவ்வப்போது சொல்லாக ஆக்கிக்கொள்வோம். வரைவது அந்நிலக்காட்சியை கூர்ந்து மிகக்கூர்ந்து பலமணிநேரம் பார்க்கச் செய்கிறது. அது ஓர் ஊழ்கம்.
நான் வானின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை நாற்பது நிமிடம் அணுவணுவாக கூர்ந்து நோக்குவதை என் ஊழ்கமுறையாகக் கொண்டிருக்கிறேன். அக்காட்சியுடன் வந்தமையும் எண்ணங்களை தவிர்த்துவிடவேண்டும். உதறக்கூடாது, மேலே படியும் மெல்லிய ஆடையை என நழுவவிடவேண்டும். நோக்குதலன்றி உளச்செயலேதும் நிகழக்கூடாது. நாற்பது நிமிடங்களில் ஐந்து நிமிடம் அவ்வாறு அமையுமென்றாலும்கூட ஊழ்கம் நிறைவடைந்தது என்றே பொருள்.
இன்றுகாலை முகில்கள். ஓருபுள்ளியில் இருந்து அதேபுள்ளிவரை. பின்னர் அதை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டேன். நித்யா வரைவதுபோல வரைய எனக்குப் பயிற்சி இல்லை என்பதனால். அவ்வண்ணங்களை எப்படிச் சொல்லாக்குவதென்று வரும் வழியில் எண்ணிக்கொண்டேன். சாம்பல்நீலம், வெண்கருமை என கலவைகளாகவே தோன்றிக்கொண்டிருந்தது. சொற்களை வண்ணம்போல கலந்துகொண்டே இருக்கவேண்டும். ஓர் எல்லையில் அந்த வண்ணம் சொல்லாகிவிடும். உடனே அப்படியே தூக்கி வீசிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடவேண்டும்.
***