தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்
அன்புள்ள ஜெ
சாம்ராஜ் அவர்கள் தமிழில் பகடி எழுத்து பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அவருடைய முதல்வரிகளிலேயே தமிழிலக்கியத்தைப்பற்றிய ஒரு பிழையான மதிப்பீடு இருப்பதுபோல எனக்குப்பட்டது. தமிழில் முழுக்கமுழுக்க பகடி எழுதிய, வேறொன்றையும் எழுதாத இலக்கியப்படைப்பாளிகள் இல்லை. ஆனால் தமிழில் எழுதிய எல்லா முக்கியமான படைப்பாளிகளும் ஆழமான பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார்கள். தமிழிலக்கியத்தின் வலிமையான ஒரு பகுதியாகவே பகடி எழுத்து இருந்துகொண்டிருக்கிறது
சாம்ராஜின் பிரச்சினை என்னவென்றால் அவர் அரசியல்பகடியை மட்டுமே பகடி என நினைக்கிறார். அரசியல்பகடி உண்மையில் கொஞ்சம் மேலோட்டமானது. அதற்குள் அரசியல்நிலைபாடு, அதுசார்ந்த பார்வைதான் உள்ளது. அதற்கேற்ப கூட்டி உருவாக்கப்பட்டதாகவே அந்தப்பகடி இருக்கும். அரசியல்பகடியே கூட பகடி இலக்கியமாக ஆகவேண்டுமென்றால் அதில் மனித இயல்புகள் பகடி செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆகவே நல்ல பகடி என்பது எப்போதுமே மனிதர்களின் அடிப்படைகளை நோக்கிச் சிரிப்பதுதான்
அப்படிப்பட்ட பகடியை எழுதாத தமிழிலக்கியவாதிகள் மிகக்குறைவே. அந்தப்பகடிக்கதைகள் எல்லாமே தமிழில் கொண்டாடப்பட்டுள்ளனவே ஒழிய அவற்றை எவரும் இலக்கியமல்ல என்று சொன்னதில்லை.பகடி எழுதாத சிலர் உண்டு. உதாரணமாக மௌனி,. லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், வண்ணதாசன் போன்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் ரொமாண்டிஸிஸத்தை எழுதியவர்கள். மற்ற அனைவருமே பகடி எழுதியிருக்கிறார்கள். உண்மையில் தமிழ் பகடிஎழுத்தின் உச்சம் அவர்கள்தான்
தமிழில் பகடிஎழுத்தின் சாதனைகள் புதுமைப்பித்தனிலேயே காணக்கிடைக்கின்றன. அரசியல்பகடியும் குணச்சித்திரப்பகடியும் கலந்து அமைந்தவை. கட்டிலைவிட்டிறங்காக்கதை, எல்லாம் முடிவிலே இன்பம் போன்றவை அரசியல்பகடிகள். பால்வண்ணம்பிள்ளை, பூசணிக்காய் அம்பி போன்றவை குணச்சித்திரப்பகடிகள். அவருடைய எழுத்தில் நேர்பாதி பகடி எழுத்துக்கள்தான்.
அடுத்த தலைமுறையில் தி.ஜானகிராமன் அற்புதமான பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார். தஞ்சைமராட்டியர் பற்றிய அவருடைய கதைகளை கிளாஸிக் என்றே சொல்லவேண்டும். மூன்றுகிழவர்கள் பென்ஷன் வாங்கப்போகும் கதைதான் அதில் உச்சம் என்று சொல்லவேண்டும். தேவர்குதிரை, கோதாவரிக்குண்டு என பலகதைகளை அற்புதமான குணச்சித்திரப்பகடிகள் எனலாம்.
கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் கதைகளிலிருந்து நுட்பமான பகடிக்கதைகளை தனியாகவே சேர்த்து எடுக்கலாம்.கி.ராவின் நாற்காலி அழகான பகடிக்கதை. சுந்தர ராமசாமியின் பகடிக்கதைகள் தொடக்கம் முதலே புகழ்பெற்றவை. பிரசாதம் அதிகார அமைப்பைக் கேலிசெய்யும் கதை. லவ்வு முதலிய பலகதைகளைச் சுட்டிக்காட்டலாம். தவிர்க்கவே கூடாத பெயர் கிருஷ்ணன்நம்பி. தமிழின் அரசியல்பகடிகளில் ‘தங்க ஒரு’ ஒரு உச்சகட்டப்படைப்பு.
அசோகமித்திரன் சொல்லவே வேண்டாம். எத்தனை கதைகள். ரிக்ஷா என்ற சிறிய கதை உடனடியாக நினைவுக்கு வருகிறது. சமகால அரசியலை நையாண்டிச்செய்யும் கதைகள், மனிதர்களின் நுட்பமான பாவனைகளை பகடிசெய்யும் கதைகள் என ஒரு இருபதுமுப்பது சிறந்த கதைகளை அசோகமித்திரனில் தெரிவுசெய்யமுடியும். பகடிக்காகவே ப.சிங்காரம் போற்றப்பட்டார். புயலிலே ஒரு தோணியில் மலாக்காத்திருவள்ளுவரும் பிறரும் சேர்ந்து மதுக்கடைகளில் வெளிப்படுத்தும் நையாண்டி தமிழ்மரபின்மேலெயே முன்வைக்கப்பட்ட உச்சகட்ட பகடி. ‘தன்னிடம் மும்மடங்கு படை இருந்தும் சற்றும் தயங்காமல் ரோமல் மேல் படையெடுத்த மான்ட்கோமரீ!” அந்த மதுரைச்சித்தரிப்பில் உள்ள நையாண்டிகளை எப்படி மறக்கமுடியும்?
தமிழில் அரசியல்பகடிகள் எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதியையும் ஆதவனையும் எப்படி விட்டுவிடமுடியும்? இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி சுதந்திரபூமி ஆகிய தொடக்கநாவல்கள் முதல் வேதபுரத்துவியாபாரிகள் வரை அனைத்துமே பகடி இலக்கியங்கள் அல்லவா?
அடுத்த தலைமுறை எழுத்தாளர்களில் திலீப்குமார் தமிழில் அழகிய பகடிக்கதைகளை எழுதியவர். அவர் எழுதிய ‘தீர்வு’ ‘கடிதம்’ போன்ற கதைகள் சிறந்த உதாரணங்கள். நாஞ்சில்நாடனைப் பற்றி சாம்ராஜே சொல்லிவிட்டார். அதற்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் பல பகடிக்கதைகளை எழுதியிருக்கிறீர்கள். மாடன்மோட்சம் ஒரு கிளாசிக் உதாரணம்.எஸ்.ராமகிருஷ்ணன் நல்ல பகடிக்கதைகளை எழுதியிருக்கிறார். உதாரணமாக ‘ராமசாமிகளின் மறைக்கப்பட்ட வரலாறு’ போன்றகதைகளைச் சொல்லலாம். யுவன் சந்திரசேகர், இரா.முருகன் படைப்புகளிலும் பகடிக்கதைகள் உண்டு. அரசூர் வம்சம் முழுக்கமுழுக்க பகடி.
நான் நினைவிலிருந்தே இதை எழுதுகிறேன். ஒரு வாரம் நேரம் எடுத்துக்கொண்டால் உலக இலக்கியத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த பகடி எழுத்தின் தரத்தைச்சேர்ந்த நூறு பகடிக்கதைகளை தமிழிலகியத்திலிருந்து என்னால் எடுத்து அளிக்கமுடியும். தமிழ்நவீன இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்று நுட்பமான பகடிதான். ஆனால் பிரபல ஊடகங்களில் வரும் பகடி போல அது வெளிப்படையானதாக இருக்காது. உதாரணமாக திலீப்குமாரின் கடிதம். அதில் குஜராத்திகள் கிண்டல்செய்யப்பட்டிருப்பதை சாமானியவாசகன் இருமுறைவாசித்தால்தான் கண்டுகொள்ளமுடியும்
உண்மையில் மேலே சொன்ன பகடிக்கதைகளின் வரிசையில் வைக்கத்தக்க சில கதைகளைத்தான் ஷோபாசக்தி எழுதியிருக்கிறார். முந்தையதலைமுறையின் பகடிக்கதைகளுடன் ஒப்பிடும்போது ஷோபாவின் கதைகள் நுட்பங்கள் அற்று வெளிப்படையாக இருக்கின்ரன இன்று அந்தப்பகடிக்கதைகளின் நுட்பம் இல்லாமல் உரக்கக்கூவும் பகடியாகவே தெரிகின்றன. அவற்றை அரசியல்கேலி என்றுதான் சொல்லவேண்டும். பகடி என்பது வாசகனால் கண்டுபிடிக்கப்படுவது. ஆசிரியரே சொல்வது அல்ல
ஆகவே சாம்ராஜ் தமிழ் நவீன இலக்கியத்தில் பகடி இல்லை, அவை அங்கீகரிக்கப்படவில்லை என்பது வாசிப்பின் பின்புலத்திலிருந்து வந்த வரியாகத்தெரியவில்லை
ஆர்.ஸ்ரீனிவாசன்
***