யானைடாக்டர்- கடிதங்கள் மேலும்

திரு ஜெயமோகன் அவர்களே,

அறம் முதல் நீங்கள் எழுதி வரும் சிறுகதைகள் மிக அருமை. இந்தத் தொடர் சிறுகதை ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் என விரும்புகிறேன். யானை டாக்டர் கதையில் காலிக் குப்பிகளால் யானைக்கு ஏற்படும் அவதியை விவரிக்கும் இடம் மனதை வலிக்கச் செய்தது. இப்படிப்பட்ட சமூகத்தின் அங்கமாக இருப்பதில் வருத்தப்படுகிறேன்.

தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை நானும் என் மனைவியும் படித்து வருகிறோம். உங்கள் எழுத்துக்கள் மன விரிவை அளிக்கின்றன. என் எல்லா எண்ணங்களையும் தமிழில் எழுத சரியாக வரவில்லை. இன்னொரு முறை விரிவாக என் எண்ணங்களை பதிவு செய்கிறேன்.

நன்றி,

ஸ்கந்த நாராயணன்

அன்புள்ள ஸ்கந்த நாராயணன்

நன்றி.

அடிப்படையில் ஒரு மைய மன எழுச்சியை, அல்லது மையத்தேடலை ஒட்டி பல திசைகளிலாக பரவும் கதைகள் இவை. என் மனதில் இவை ஒரே கதையாகவே உள்ளன

கிட்டத்தட்ட உலகமெங்கும் ஒரு இரண்டாயிரம் பேர் ஒருமாதமாக இந்தக்கதைகள் உருவாக்கும் மன எழுச்சியை அப்படியே பின் தொடர்கிறார்கள். இது ஒரு பெரிய விஷயம் என்று நினைக்கிறேன்

ஜெ

யானை டாக்டர் பகுதி 2 is a loaded one. மனது கனமாக இருக்கிறது. அருமை.

மனிதர்கள் ஐடியலிஸத்திற்கு வரவேண்டாம். குறைந்தபட்சம் பொறுப்புணர்வையாவது தக்க வைத்துக் கொள்ளலாம்.

கதையில் ஜெயமோகன் சொல்வது எனக்கு ஒன்றை ஞாபகப்படுத்தியது. எல்லை பாராபட்சமின்றி இது நடக்கிறது. சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் “பொகிமியன் க்ரூவ் க்ளப்” என்ற ஒரு வனப் பகுதி இருக்கிறது. வழக்கம் போல் இதையும் ஒரு கார்ப்ரேட் தான் நடத்துகிறது. இதில் மெம்பராக சேர நீங்கள் பெரிய மனிதராக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிதாய்? மிக. அதாவது நீங்கள் டிக் சேனியாகவோ, ஜார்ஜ் புஷ்ஷாகவோ இருக்க வேண்டும். மெம்பர்ஷிப் ஃபீ – மில்லியன் டாலர்களுக்கு மேல். இப்படி மெம்பரானால் உங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் – வனத்தில் பார்பெக்கியூ பண்ணலாம், கண்ட இடத்தில் சிறு நீர் கழிக்கலாம், பீர் பாட்டிலை எங்கு வேண்டுமானாலும் உடைக்கலாம், கெட்ட வார்த்தையால் திட்டி கத்தலாம், பார்பெக்கியூ வாசனை தொடர்ந்து வந்த மிருகங்களை வேட்டையாடலாம் (அவற்றையே மீண்டும் பார்பெக்கியூ பண்ணலாம்), ஐட்டத்தைக் கூட்டி வரலாம். எது வேண்டுமானாலும் பண்ணலாம். உலகத்தில் பொறுப்புணர்ச்சியை காட்ட வேண்டிய, வழி நடத்திச் செல்ல வேண்டிய தலைவர்கள் இவர்கள்.
(இவற்றை இன்வெஸ்டிகேட்டீவ் ஜர்னலிஸ நிருபர் ஒருவர் புஷ் அண்ட் கோ மேலே சொன்ன அனைத்தையும் பண்ணிய பொழுது ரிக்கார்ட் பண்ணி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்) பரிதாபம் என்னவென்றால், மனித சமுதாயம் (எதிர் கட்சிகள் கூட) அதை அலட்சியப் படுத்தி, இதெல்லாம் ஒரு தவறு என்றே பார்க்கவில்லை, குற்றம் என்றும் நினக்கவில்லை. (அது சரி, மனிதர்களையே ஈராக்கில் கொன்று குமித்த கும்பலிடம் எங்கே போய் நியாயம் கேட்க?)
ஜெயமோகன் இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும். அல்லது யாராவது மொழி பெயர்க்க வேண்டும். உலகம் முழுவதும் மெசேஜ் சென்று சேர உதவியாயிருக்கும்

பகவதிப்பெருமாள் [bags]

அன்புள்ள ஜெயமோகன்

யானைடாக்டர் கதையின் கடைசியில் டாக்டரும் காட்டிலாகா அதிகாரியும் பேசிக்கொள்ளும் இடம் ஒரு சிறந்த நாடகக் காட்சி போல இருந்தது. சிறுகதை என்ற இலக்கணத்தில் நிற்காமல் குறுநாவல் மாதிரி ஆகவைத்து விட்டது. ஆனால் அந்த உரையாடல் எனக்கு மிகவும் இன்ஸ்பைரிங் ஆக இருந்தது.என்ன ஒரு உணர்ச்சிவேகம். ஒருவர் ஒரு வேல்யூ சிஸ்டத்தில் நின்றுகொண்டு பேசுகிறார். இன்னொருவர் இன்னொரு வேல்யூஸோடு பேசுறார். இருவர் பேசுவதுமே சரி என்று தோன்றுகிறது. ஒரு கடமை வீரனுக்கு இந்த அற்பர்களின் உலகில் என்ன வேலை என்பதும் சரிதான். இந்த உலகில்தான் அவன் வாழ்கிறான், இந்த மனிதர்களை ஏதாவது செய முடியுமா என்று அவன் பார்க்கவேண்டும் என்பதும் சரிதான். இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி இருக்கின்றன. மிகமிக மனசைக் கனக்க வைத்த வரி, இந்தத் தலைமுறை போல அதிருஷடம் இல்லாத தலைமுறையே இல்லை, இதற்கு கிடைப்பதெல்லாம் கொள்கை இல்லாத வெறும் கட் அவுட் உருவங்கள்தான் என்ற வரி. மிகமிக உண்மை. இலட்சியமே இல்லாத தலைமுறை. ஆகவே இலட்சியமே தேவை இல்லை என்று நம்ப ஆரம்பித்த தலைமுறை. பெருமூச்சுவிடவைத்த இடம் அது

அன்பழகன்

அன்பழகன்,

உண்மை. ஆனால் சென்ற காலத்தில் , காந்திய யுகத்தில் , காந்தியின் இலட்சியவாதத்துடன் தொடர்பே இல்லாமல் பலகோடிப்பேர் வாழ்ந்தார்கள். பல கோடிப்பேர் தங்கள் அற்பத்தனத்தை மட்டும் காந்தி மேல் போட்டுப்பார்த்தார்கள்

மனிதர்கள் எப்போதும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்

ஜெ

12 மணி வரை காத்திருந்தது வீண் போகவில்லை.

சிகரம் சிகரமாகத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் -எங்களையும் தூக்கிக் கொண்டு.

என்ன செய்து விட முடியும் எங்களால்?

நல்ல மனிதனாவது எவ்வளவு சிரமம்? நம் முன்னே பேயாட்டம் ஆடும் அகங்காரத்தை விட அற்பமானதொன்றில்லை.

your words make me feel very humble.

எத்தனை மகானுபாவர்களாலனது உலகம்??

இதைப் படிப்பதற்கு முன்பிருந்த நான் இல்லை என்பது மட்டும் புரிகிறது.

வாழ்க

பாலா

நான் உங்களிடமிருந்து நிறைய கடன் வாங்கி இப்படி மொழி பெயர்த்துள்ளேன்.

storied urns record who rest below

இது பன்மையில் வருகிறது. ஒருமையில் என்றால் who rests below என்று வரவேண்டும்.

Urn என்பது அஸ்தியை கொண்டிருக்கும் கலயம். அல்லது சின்னப் பெட்டி. பொதுவாக மூடியுள்ள பீங்கான் குடுவை. தமிழில் அஸ்தி கலயம் அல்லது சமமானதைப் பயன்படுத்தலாம்.

Behold – என்பது பார்ப்பது e.g: Beauty is in the eyes of the beholder

Pass on என்பது ‘கடந்து செல்’ என்ற அர்த்தத்தில் வருவதைப்போலுள்ளது. ஒர் Beholderஐ Pass on/Move on என்று கடந்து செல்லச் சொல்வது வழக்கம்.

I never knew but one, வேறெந்த (நண்பனையும்) அறியேன் இவன் தவிர எனும் அர்த்ததில் உள்ளது.

சிறில் அலெக்ஸ்

அன்புள்ள ஜெயமோகன்

யானை டாக்டர் அருமையான மறக்கமுடியாத சிறுகதை. எந்த உள்ளர்த்தங்களும் இல்லாத அப்பட்டமான இந்தக்கதை என்னுடைய மனதில் வேர்விட்டு வளர்ந்தது போல எந்தக்கதையும் வளர்ந்ததில்லை என்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். இந்தக்கதையின் எத்தனையோ ஆழ்ந்த அர்த்தங்களை கவனித்துக்கொண்டே இருந்தேன். இந்தக்கதையின் சூழலாக வரும் காட்டின் விவரிப்புதான் என்னை கவர்ந்தது. குரங்குகளை நம்பி மான்கள் இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து உள்ள காட்டு வாழ்க்கை. செல்வாவை விட் பெரிய வி ஐ பி யார் என்று டாக்டர் கேட்கும் இடத்தில் மனம் அடக்கமுடியாமல் பொங்கி விட்டது. அற்பத்தனமே இல்லாத மனம் என்ற வரியை அரற்றிக்கொண்டே இருந்தேன். உடனே மேன் வெய்ன் இன்செக்ட் என்ற பைரனின் வரியுடன் அந்த அவ்வரி இணைந்துகொண்டு என் மனம் குலுங்கிவிட்டது. மனிதன் என்னவகையான உயிர். காட்டில் அவன் செய்வது அங்கே உள்ளஅந்த அற்புதமான சங்கீதத்தை குலைப்பதுமட்டும்தானே. யானைக்காலில் முள்ளாக குத்தி ஏறுவது மனிதனின் அற்பத்தனமும் குரூரமும் கொண்ட நாகரீகம் அல்லவா? அந்த வரியுடன்,  யானை எவ்வளவு அற்புதமாக வலியை பொறுத்துக்கொள்ளும் , மனிதன் எப்படியெல்லாம் பரிதவிப்பான் என்று யானைடாக்டர் சொலும் வரி இணைந்துகொண்டது. ஒன்றுடன் ஒன்று இப்படி பல வரிகளை இணைத்து இணைத்து இந்தக்கதையை நான் மனசுக்குள் வாசித்துக்கொண்டே இருந்தேன். அருவருப்பூட்டும் புழு கைக்குழந்தையாக மாறும் அனுபவம்தான் காட்டில் வாழ்வதன் அனுபவம். காட்டை அறிய காட்டுக்குள் இருக்கவேண்டும், இல்லாவிட்டால் காடுஎன்பது வெறும் தகவல்தான் என்று டாக்டர் சொல்லும் இடம் அதனுடன் இணைந்துகொண்டது.அற்புதமான அனுபவத்துக்கு நன்றி ஜெ

சரவணன்

அன்புள்ள சரவணன்

உணர்வு என்ற பொதுசரடால் இணைக்கப்படும்போது அந்த சித்தரிப்புகள் எல்லாமே அந்த பொது உணர்ச்சியின் படிமங்களாக ஆகிவிடுகின்றன

ஜெ

நியுஃபௌன்ட்லேன்ட் நாய் ஒன்றின் கல்லறை வாசகம்.

புகழறியாத, ஆனால் பிறப்பினால் மட்டுமே உயர்த்தப்பட்ட
ஒரு தற்பெருமைகொண்ட மனித மைந்தன் பூமிக்குத் திரும்பும்போது
சிற்பியின் கலை பெருந்துயரை மீதமின்றி பறைசாற்றுகிறது
கதைகள் பொறித்த அஸ்திக் கலயங்கள்
கீழே துயில்பவனை பதிவுசெய்கின்றன
எல்லாம் முடிந்த பின்பு
கல்லறை மேலே தெரிவது
அவன் யார் என்பதல்ல
அவன் யாராய் இருந்திருக்க வேண்டும் என்பதே.

ஆனால் இந்த எளிய நாய்
வாழ்கையில் உறுதியான நண்பன்
முதலில் வரவேற்பவன்
முன்நின்று காப்பவன்
அவனது நேர்மையான நெஞ்சம்
இன்னும் அவனின் உரிமையாளனுக்கு சொந்தம்
அவனுக்காகவே அது பணிபுரிகிறான்,
போராடுகிறான்,
உயிர்வாழ்கிறான்,
மூச்சுவிடுகிறான்.
முழுமதிப்பும் கவனிக்கப்படாமல்
கௌரவமின்றி வீழ்கிறான்,
மண்ணில் அவன் கொண்டிருந்த ஆன்மா
விண்ணில் மறுக்கப்படுகிறது

மனிதன், வெற்றுப் பூச்சி!
மன்னிக்கப்படுவோம் என நம்புகிறான்.
தனக்கு மட்டுமான சொர்க்கத்தை உரிமைகோருகிறான்

ஓ மனிதனே! நீ சிறு கணமே தங்கிச் செல்பவன்
அடிமைத்தனத்தால் இழிவுற்றவன் அல்லது
அதிகாரத்தால் சீரழிந்தவன்
உன்னை நன்கறிந்தவர்
உன்னை விட்டு அருவருத்து விலக வேண்டும்
அசையும் புழுதியின் தரம்கெட்டக் குவியலே
உன் காதல் காமம்,
உன் நட்பு முழுவதும் பொய்மை,
உன் புன்னகைகள் போலித்தனம்,
உன் வாக்குகள் மோசடி.

இயல்பிலேயே இழிந்தவனே,
பெயரால் மட்டுமே மேன்மையடைந்தவனே
நட்புள்ள விலங்குகள் ஒவ்வொன்றும்
உன்னை வெட்கத்தால் சிவக்கச்செய்யும்

ஏய்! தற்செயலாய் இந்த எளிய
அஸ்தி கலயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவனே
கடந்து போ-
உன் அழுகைக்குகந்தவர்கள் யாரையும் இது பெருமை செய்யவில்லை:
ஒரு நண்பனின் மிச்சங்களைக் குறிக்க இந்த கற்கள் எழுகின்றன;
வேறெந்த நண்பனையும் அறியேன் அவனைத்தவிர.
இதோ இங்கே அவன் கிடக்கிறான்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பு- கடிதங்கள்