‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 2

புரவி அருகணையும் ஒலி கேட்டு கனகர் திரும்பி நோக்கினார். புரவிமேல் அமர்ந்திருந்த இளம்வீரனை அவரால் அடையாளம் காணமுடியவில்லை. புரவி புண்பட்டு ஒரு கால் உடைந்திருந்தது. ஆனால் சற்றே தேறி அந்தக் காலை சாய்வாக எடுத்துவைத்து நடந்து வந்தது. அதன்மேல் அமர்ந்திருந்தவன் உடலிலும் அந்தக் கோணல் தெரிந்தது. அருகணையும்தோறும் அவன் மிகவும் இளையோனாகத் தோன்றினான். புரவி நின்று அவன் கால்சுழற்றி இறங்கி அவரை அணுகியபோது அவன் பெண் என அவர் உணர்ந்தார். ஏற்கெனவே எங்கோ கண்டிருந்த முகம். அவர் உள்ளம் வழக்கம்போல் எங்கே என துழாவித் தவிக்கவில்லை. வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார்.

அவள் அணுகி தலைவணங்கி “வணங்குகிறேன் உத்தமரே, தங்களை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை. என் உதவி தேவையாகுமா?” என்றாள். “நீ யார்?” என்று கனகர் கேட்டார். “என் பெயர் சம்வகை… கோட்டைக்காவலர்தலைவி” என்றாள். “ஆம், நாம் பார்த்திருக்கிறோம்…” என்ற கனகர் “நான் இங்கே ஒருவரைத் தேடி வந்தேன். ஒற்றர்களை அனுப்பி அவரை கொண்டுவரச் சொல்லியிருக்கலாம். ஆனால் எனக்கே கிளம்பவேண்டும் எனத் தோன்றியது. அரண்மனையில் அமர்ந்து அமர்ந்து உடலும் உள்ளமும் சலித்துவிட்டன… நான் புரவியேறியும் நெடுநாட்களாகின்றன. அது பிழை என உணர்கிறேன். என்னால் இங்கே வழி கண்டடைய முடியவில்லை” என்றார்.

“நான் தங்களை விழையுமிடத்திற்கு கொண்டுசெல்கிறேன், உத்தமரே” என்றாள் சம்வகை. “நீ இங்கே இருக்கும் சூதர்களை அறிவாயா?” என்று அவர் கேட்டார். “போருக்குமுன் நான் நகரில் உலவியது மிகக் குறைவு. என் தந்தையுடன் யானைக்கொட்டிலுக்குச் சென்றுள்ளேன். அங்காடிகளுக்கும் விழவுகளுக்கும் சென்றுள்ளேன். நகரை முழுக்க பார்த்ததில்லை. நகர்குறித்த உளப்படிவமும் என்னிடமில்லை. ஆனால் இந்தச் சில நாட்களில் இந்நகரை இரவும்பகலும் சுற்றிவருகிறேன். நானறியாத இடங்கள் இங்கே அரிதென்றே எண்ணுகிறேன்” என்றாள். கனகர் “நான் பார்க்கவிழைபவர் ஒரு நிமித்திகர், சூதர். அவர் பெயர் தீர்க்கசியாமர்” என்றார். “விழியிலாதவரா?” என்றாள் சம்வகை.

“ஆம்” என்று வியப்புடன் கனகர் சொன்னார். “அவரை நான் அறிவேன். இங்கே ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தின் முகப்புத்திண்ணையில் குடியிருக்கிறார்…” என்று சம்வகை சொன்னாள். “முன்பு இங்கே தீர்க்கசியாமர் என்னும் சூதர் வாழ்ந்திருக்கிறார். அவருக்காக எழுப்பப்பட்ட ஆலயம் அது. அது ஹிரண்யாக்ஷர் ஆலயம் என பின்னர் அழைக்கப்பட்டது. அங்குதான் சூதர்கள் தங்கள் மைந்தர்களை இசைப்பயிற்சி தொடங்கும்பொருட்டு கொண்டு வந்து அமர்த்தி முதற்கோல் கொடுக்கிறார்கள்.” கனகர் “அங்கிருப்பவரை நீ எப்போது பார்த்தாய்?” என்றார். “இன்று காலைகூட தொலைவிலிருந்து பார்த்தேன்… இசைச்சூதர்கள் அனைவருமே போர்க்களம் சென்றபின் அவ்வாலயம் ஒழிந்துகிடக்கிறது. விழியிழந்த சூதர் ஒருவர் மட்டுமே அங்கே தங்கியிருக்கிறார். விழியில்லாவிட்டாலும் அவர் கோயில்கொண்டிருக்கும் ஹிரண்யாக்ஷருக்குரிய எல்லா பூசனைகளையும் செய்கிறார். சூதர்குடிப் பெண்கள் அவருக்கு உணவும் பூசனைக்குரிய பொருட்களும் அளிக்கிறார்கள். அவர் பெயரும் தீர்க்கசியாமர்தான்” என்றாள்.

“அவரேதான்” என்று கனகர் சொன்னார். “அவரை அரண்மனைக்கு அழைத்துச்செல்லவேண்டும்… அவர் குறிநோக்கிச் சொல்ல சில சடங்குகளை இயற்றவேண்டும்… அரசியின் ஆணை.” சம்வகை “அவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன்” என்றாள். அவர்கள் புரவியில் ஏறிக்கொண்டனர். சீரான நடையில் சூதர்தெருக்களினூடாகச் சென்றனர். “இங்கே எல்லா குடிகளிலும் ஆண்களில்லாமலாகிவிட்டிருக்கின்றனர். போரில் மறவர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆயரும் உழவரும்கூட போருக்குச் செல்வார்கள் என்று இப்போதுதான் காண்கிறேன்…” என்றாள் சம்வகை.  “இது பெரும்போர்” என்று கனகர் சொன்னார். “ஆம், இறுதிப்படைக்கலம்கூட எடுக்கப்பட்டுவிட்டது” என்றாள் சம்வகை. அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என அவருக்குப் புரியவில்லை.

சம்வகை “இங்கே ஆயர்குடியிலும் உழவர்குடியிலும் பட்டினி இல்லை. அவர்களால் உணவை சேர்த்துவைக்கவும் எஞ்சியவற்றால் வாழவும் முடிகிறது. வணிகர்களுக்கு கரந்துவைக்கும் கலை கைவந்தது. உணவில்லாமல் அழிபவர்கள் சூதர்கள். அவர்கள் ஒருநாளுக்கு அப்பால் எதிர்காலம் இல்லை என்னும் எண்ணத்தில் வாழ்ந்தவர்கள்போல் தோன்றுகிறார்கள்” என்றாள். “சூழ்ந்திருக்கும் காடுதான் இன்னமும் உணவை அளிக்கிறது… ஆனால் அதுவும் சின்னாட்களில் ஒழிந்துவிடக்கூடும். அஸ்தினபுரி பாரதவர்ஷத்திலேயே செழிப்பான பெருநகர். ஒரு மாதத்திற்குள் இங்ஙனம் முற்றொழியும் என்பது எண்ணவும் விந்தையே.” அவள் தன்னை அமைச்சராக நடத்தாமல் இயல்பான தோழமையுடன் பேசுவது குறித்து கனகர் முதலில் வியப்பும் பின்னர் எரிச்சலும் அடைந்தார். ஆகவே அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், அமைச்சரே? அரண்மனையிலிருந்து நீங்கள் வேறுவகையில் நோக்கக்கூடும்” என்றாள் சம்வகை. அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய சொல்லின்மையில் தெரிந்த மறுப்பை புரிந்துகொள்ள அவளால் இயலவில்லை. “எனக்குத் தோன்றுகிறது அஸ்தினபுரியைப்பற்றிய புகழ்மொழிகள்தான் அரசர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அறிவை மறைப்பவையாக ஆகிவிட்டன என்று. முடிவில்லாது செல்வம் ஊறும் சுனை என இந்நகரை சூதர்கள் பாடிக்கொண்டிருப்பதை இளமை முதல் நான் கண்டிருக்கிறேன். நானும் அவ்வாறே நம்பினேன். அது சூதர்களின் கற்பனை. அவர்கள் அவ்வாறு நம்ப விழைந்தனர். அந்நம்பிக்கையால்தான் அவர்கள் இங்கே வந்துகொண்டிருந்தனர். அந்நம்பிக்கையை அரசர்களிடம் நிலைநாட்டியமையால்தான் அவர்கள் பொன் பெற்றனர். மேலும் பொன் பெற சூதர்களை ஆற்றுப்படுத்தினர்.”

“ஆம்” என்று அறியாமல் கனகர் சொன்னார். “இந்த நகரம் வரும்செல்வத்தில் பெரும்பகுதியை கொடையென்று அள்ளிக்கொடுத்துக் கொண்டிருந்தது. உண்மையில் வருஞ்செல்வத்தை கணக்கிடுவதைப்போல் பிழை என ஏதுமில்லை. செல்வம் வருவது நிகுதிகளிலிருந்து. சுங்கநிகுதி முதன்மையாக. பிற நிகுதிகள் எழுபத்திரண்டு உள்ளன. ஆனால் அந்நிகுதியை அளிக்கும் நிலத்தைப் பேணுவதென்பது பெருஞ்செலவுகொண்டது. அந்நிகுதியை சேர்த்து தொகுத்து கருவூலம்வரை கொண்டுவருவதென்பது அதனினும் செலவேறியது. வேலிகட்டவும் அறுவடைசெய்யவும் விளைச்சலின் பெரும்பகுதியைச் செலவிடும் வேளாண்மை போன்றது அரசாள்கை.”

அவருக்கே அவருடைய அப்பேச்சு விந்தையாக இருந்தது. ஆனால் பேசத்தொடங்கியதுமே அவர் இயல்படைந்தார். இதுவரை தன்னுள் அனைத்துச் சொற்களும் அலையடித்தமை இதனால்தான். நாவால் தொடர்ச்சியாகப் பேசி நெடுநாட்களாகின்றன. ஆனால் ஏன் இந்த அறியாப் பெண்ணிடம் பேசவேண்டும்? அறியாப் பெண்ணிடமே பேசமுடியும். அறிந்த எவரிடமும் இப்படி சொல்பெருக்க இயலாது. “காவல்பணிக்கு பெரிய படை தேவைப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் ஒரு விந்தை நிகழ்கிறது… கீழ்நிலைப் படைவீரர்களின் எண்ணிக்கை கூடும்போது அவர்களை ஆட்சிசெய்ய தகுதிவாய்ந்த தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கு பலமடங்கு ஊதியம் அளிக்கப்படவேண்டும். கீழ்நிலைப் படைகளுக்கான செலவு மிகுந்தோறும் மேல்நிலைப் படைகளுக்கான செலவு மேலும் ஒருமடங்கு பெருகும்.”

“இன்னுமொரு விந்தை உள்ளது, இவற்றை நான் ஒரு சிறு நூலாகவே எழுதிவிடலாமென எண்ணுகிறேன்” என்று கனகர் சொன்னார். “நிலம் பெருகும்போது படைவீரர்களின் எண்ணிக்கை பெருகுகிறது. அவர்களின் எண்ணிக்கை மேலும் செலவை கோருகிறது. நிலம் நிலையான அளவில் இருக்கும். அதிலிருந்து வருவாயும் வளர்வதில்லை. ஆனால் படை வளர்ந்தபடியேதான் இருக்கும். ஆகவே நிலத்தை பெருக்கியாகவேண்டும். அதற்கு படையெடுப்புகள் தேவையாகின்றன. படையெடுப்புக்கு செலவு மிகுதி. அதற்காக மேலும் நிலம் தேவைப்படுகிறது. நாம் படையெடுக்கக்கூடும் என்றாலே அண்டைநகர்கள் அஞ்சுகின்றன. ஆகவே அவர்கள் படைகளை பெருக்குகிறார்கள். அவர்கள் நம்மீது படையெடுக்கக்கூடும் என்னும் அச்சத்தால் நாம் மேலும் படைபெருக்குகிறோம். அப்படைக்குரிய செலவுக்காக நிலம் நிலம் என வெறிகொள்கிறோம். அதாவது எந்த அரசும் ஒன்று இரண்டு என பெருகமுடியாது. ஒன்று பத்து நூறு ஆயிரம் என்றே பெருகமுடியும்…”

“ஆகவே பெருகும் நகரம் மிக விரைவிலேயே அதன் அறுதியெல்லையை சென்றடையும். மகதமும் வங்கமும் அவ்வண்ணம் நம் கண்முன் அழிந்தன. முன்பு அழிந்த பலநகரங்களின் கதைகளை நாம் அறிவோம். அஸ்தினபுரி இவ்வண்ணம் இதுவரை நீடித்தது இதன் அரசர்களின் போர்வல்லமையால்தான். பிரதீபரின் காலம்வரை அத்தனை அரசர்களும் வெல்லற்கரிய போர்வீரர்களாகவே திகழ்ந்தனர். நாம் ஆண்டுக்கு இரண்டு அயல்படையெடுப்புகளை செய்தோம். தொலைநாடுகளை கொள்ளையிட்டு பெரும்செல்வத்துடன் திரும்பினோம். அதைக்கொண்டு இந்நகரை பேணினோம். பீஷ்மரும் படைகொண்டு சென்று வென்று பொருள் கொண்டுவந்திருக்கிறார். பாண்டவர்கள் சௌவீரர்களை வென்று பொருள் கொண்டுவந்தனர். அங்கர் படைத்தலைமை ஏற்றபின் நாம் பதினெட்டு போர்களில் வென்று திறைச்செல்வம் கொண்டுவந்தோம்.”

அவள் அவ்வாறு அவர் பேசுவதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் முகம் விரிந்து விழிகள் நிலைத்தன. கரிய பெரிய உதடுகள் விரிந்து பற்களின் கீழ்நுனிகள் தெரிய அவரை நோக்கிக்கொண்டு வந்தாள். “ஆனால் இப்போர்களுக்கெல்லாம் எல்லை உள்ளது. காட்டில் புலி மான்களை வேட்டையாடி உண்ணும். மான்கள் புல் உண்ணும். புல் வறண்டால் புலிக்கு உணவின்றி ஆகும். நாம் வென்ற அரசர்கள் அனைவரும் சிற்றரசர்களை வென்று திறைகொண்டவர்கள். சிற்றரசர்கள் காடுகளில் வாழும் நிஷாதர்களையும் கிராதர்களையும் வென்று திறைகொண்டவர்கள். இந்நகரம் இங்கே இவ்வண்ணம் செழித்திருக்க காடுகளிலும் தொலைநிலங்களிலும் நூறுமடங்கு ஆயிரம்மடங்கு நிஷாதரும் கிராதரும் அசுரரும் அரக்கரும் சிறுவாழ்க்கை வாழ்ந்தாகவேண்டும்” என்றார் கனகர்.

“ஆனால் இன்று நிலை மாறிவிட்டிருக்கிறது. கிராதர்களும் நிஷாதர்களும் அரசர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நாடுகள் வெல்லற்கரியவையாக மாறிவிட்டன. அசுரர்களும் அரக்கர்களும்கூட ஆற்றல் பெற்று எழுந்துவிட்டனர். ஆகவே வேறுவழியே இல்லை, வென்றுவாழும் அரசர்கள் சுருங்கியாகவேண்டும்… அதை தவிர்ப்பதற்கான அறுதிப்போர் இப்போது நிகழ்ந்தது. அதில் நாம் தோற்றுவிட்டோம். அவர்களே வென்றிருக்கிறார்கள். இனி அவர்களின் காலம் எழவிருக்கிறது. அவர்களிலிருந்து பேரரசுகள்கூட எழலாம்… ஷத்ரியர்நாடுகள் தேய்ந்து மறைந்தாகவேண்டும்… அஸ்தினபுரியும்கூட அதை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது” என்றார் கனகர். “காட்டில் புல் வறளும்போது பெரும்புலிகள் தங்கள் குட்டிகளை கொன்றுவிடும் என்கிறார்கள். அதுதான் நிகழ்ந்ததோ என நான் அஞ்சுகிறேன். ஷத்ரிய குலமே ஒன்றையொன்று கொன்று அழிந்துவிட்டிருக்கிறது… பிறிதொரு யுகத்திற்காக பாரதவர்ஷம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது.”

சம்வகையால் அவர் சொல்வதை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் அவள் அகம் கொந்தளித்துக்கொண்டிருப்பதை முகம் காட்டியது. அவளால் புரவியில் அமர்ந்திருக்கவே இயலவில்லை. “நீ சொல்வது உண்மை. புகழ்மொழிகளால் அரசரின் விழிகள் மறைந்துவிட்டிருந்தன. இந்நகரம் தன் இயல்பை மீறி பெரிதாகிவிட்டிருக்கிறது. இதன் கருவூலம் இதன் நிலத்தை ஆள்வதற்கு போதுமானது அல்ல. ஆனால் அஸ்தினபுரியின் அரசர்கள் கணக்கு பார்ப்பதில்லை. கணக்கிடுவதே இழிவென எண்ணுகிறார்கள். அரசரோ அவர் என்றுமென இங்கே அமைந்திருப்பவர் என எண்ணினார். ஆகவே செல்வத்தை மேலும் மக்களுக்காக அள்ளிச் செலவழித்தார். பாதைகளை அமைத்தார். நீர்நிலைகளை சமைத்தார். நகர்களுக்கு கோட்டைகளை கட்டினார். கழனி பெருக்கினார். கல்விச்சாலைகளை அமைத்தார். கருவூலம் ஒழிந்திருக்கையில் எழுந்தது இப்பெரும்போர். இத்தகைய போருக்குத் தேவையான செல்வம் நம்மிடம் இருக்கவில்லை.”

“ஆனால் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆகவே வேறுவழியில்லை. கொலைக்களத்திற்குக் கொண்டுசெல்லப்படும் பசுவை ஒட்டக்கறப்பதுபோல அஸ்தினபுரியை நிகுதியிட்டு பிழிந்தெடுத்தோம். எத்தனை பொருள்கொண்டுவந்தாலும் போதவில்லை. பாரதவர்ஷத்தின் படைத்தலைமை என்றால் அது செல்வத்தால்தான் இயல்வது. அடியிலாப் பிலத்தில் அஸ்தினபுரியின் செல்வத்தை கொட்டிக்கொண்டே இருந்தோம்” என்றார் கனகர். “உண்மையில் வரி கொள்வது என்பது கொள்ளையேதான். நூறு பொன்னுக்கு ஐந்து பொன் என்ற மேனிக்குத்தான் அறுவடை களம்வந்துசேரும். ஒன்றும் செய்ய முடியாது. நிகழ்ந்ததை அரசர்வரை கொண்டுசெல்லாமலிருக்க முடிந்தது நன்று. போர் முடிவெடுத்தபின் குடியவையைக் கூட்டுவதை தவிர்த்தோம். பேரமைச்சர் விதுரர் இருந்திருந்தால் அவையிலேயே இவை பேசப்பட்டிருக்கும். அவர் இல்லாமலிருந்தது அனைத்து வகையிலும் நலம் பயந்தது.”

அதையெல்லாம் அவர் வேறுஎவரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார் என உணர்ந்தார். சம்வகை “இனி என்ன நிகழும், அமைச்சரே? ஒழிந்த ஓடெனத் திகழும் அஸ்தினபுரியை வென்றிருக்கிறார்கள் பாண்டவர்கள்” என்றாள். அப்போதுதான் அவளை அவர் ஏறிட்டு நோக்கினார். அவளிடம் பேசிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தவராக திகைத்தார். “அவர்கள் இந்நகரை எப்படி மீட்டெடுக்கப்போகிறார்கள்?” என்று அவள் கேட்டாள். அவ்வினாவே அவள் அனைத்தையும் நுணுக்கமாக சொல்தொடர்வதை காட்டியது. ஆகவே அவரால் மேலும் பேசாமலிருக்க இயலவில்லை. “ஆம், மெய்தான். அவர்களிடம் சென்றுசேரும் நகரம் ஒழிந்த கலம்தான்” என்றார். “அதை அவர்கள் நிறைப்பதற்கு இரண்டு வழிகளே உள்ளன” என்றார் கனகர்.

“தொலைநிலங்களில் சிற்றரசுகளாகத் திரண்டிருக்கும் கிராதரையும் நிஷாதரையும் வெல்வது. அவர்களைப் பிழிந்து திறைகொள்வது. அதைச் செய்ய அவர்களால் இயலாது. ஏனென்றால் அவர்களைத் துணைகொண்டே வென்றிருக்கிறார்கள். எனில் எஞ்சியிருப்பது அவர்களிடம் திறைகொள்ளும் பிற ஷத்ரியர்களை வென்றழிப்பது. திறைகொள்ள பாரதவர்ஷத்தில் பிற நாடு இல்லாமலாக்குவது. எனில் அஸ்தினபுரி மேலும் சிலகாலம் முடிபெருகி நீடிக்கும். ஆனால் இருந்த பெருமையை இனி ஒருபோதும் அது சென்றடையாது. பாண்டவர் நால்வரும் திசைவெற்றிகொண்டு திறைசுமந்து வந்தார்களென்றால் ஒரு தலைமுறைக்காலம் அது செல்வம்கொண்டு பொலியும்… ஆனால் அது நீடிக்காது.”

“ஷத்ரியர்களால் வென்று திறைகொள்ளப்படாத நிஷாதரும் கிராதரும் பிறரும் வளர்ந்து ஆற்றல்பெறுவார்கள். அவர்களிடம் திறைகொள்ளும் ஆற்றலும் அஸ்தினபுரிக்கு இருக்காது. அவர்களிடமிருந்து பேரரசுகள் தோன்றலாம். அப்போது அஸ்தினபுரி வெறும் சொல் என மாறி பாரதவர்ஷத்தின் நினைவில் மறையலாம். காவியங்களில் மட்டும் எஞ்சலாம்… இதை இப்போது சொல்லமுடியாது. எனில் நாம் இவ்வண்ணம் கணிக்கமுடியும்…” என்று கனகர் சொன்னார். சம்வகை அவரை நோக்காமல் தலையைத் தாழ்த்தி எண்ணங்களில் மூழ்கியபடி வந்தாள். எளிய சூதர்குலத்துப் பெண். ஆனால் சூதர்களில் இந்த ஆற்றல் நிகழ்வதில்லை. இவள் பிற குடியின் கலப்புள்ளவள். ஆயினும் அரசியலை இவள் எவ்வண்ணம் புரிந்துகொள்ள முடியும்?

அவர் அவளையே நோக்கிக்கொண்டு சென்றார். தான் சொன்னதையெல்லாம் அவள் எவ்வண்ணம் புரிந்துகொள்கிறாள் என்னும் வியப்பு அவருக்கு ஏற்பட்டது. வேறு ஏதோ ஒருவகையில், அவரால் எண்ணமுடியாதபடி, அவள் அவற்றை விளக்கிக்கொண்டிருக்கிறாள். ஒருவேளை எளிய குழந்தைக்கதையாக. அதற்கே வாய்ப்பு மிகுதி. அவள் சிறுமியென்றே தோன்றினாள். அஸ்தினபுரி போருக்குச் சென்று ஆண்களை இழந்திராவிட்டால் அவளால் இப்படி புரவியில் ஊர்ந்திருக்கமுடியாது. சாலையில் இவ்வண்ணம் சென்றிருக்கவும் முடியாது. அவள் புரவியின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தி திரும்பி “எனில் துவாரகை என்ன ஆகும்?” என்றாள். “ஏன்?” என்று அவர் கேட்டார். “துவாரகையால் தொலைநிலங்களை வென்று கொள்ளைச்செல்வம் அடைய முடியாது. அவர்களிடம் திசைவெல்லும் ஆற்றலும் இல்லை” என்று அவள் சொன்னாள்.

“அவர்களிடம் வணிகம் உள்ளது. கடல்வணிகத்தால் ஈட்டியதே அவர்களின் செல்வம்.” கனகர் மெல்லிய எரிச்சலுடன் அதை சொன்னார். அவள் அவர் சொன்னவற்றை புரிந்துகொண்டிருந்ததே அவரை சீற்றம் கொள்ளச்செய்தது. அது அவரை சிறுமைப்படுத்துவதுபோலத் தோன்றியது. அவளிடம் எது தன்னை பேசவைத்தது? பேசவேண்டியிருந்த உளத்தனிமை மட்டும் அல்ல. அவளிடம் அவரைப் பேசவைக்கும் எதுவோ இருந்தது. அவள் “கடல்வணிகம் நெடுநாள் நீடிக்காது. புதிய அரசுகள் வீறுடன் எழுந்துவரும். கடலோரம் அமைந்த அரசுகளும் இனி திறைச்செல்வம் திரளாதென உணர்ந்து கடல்வணிகத்தில் கருத்தூன்றலாம். துவாரகையில் இளைய யாதவரின் மைந்தர் திறனற்றவர்கள் என்கிறார்கள். அதைவிட அவர்களிடம் ஒற்றுமையும் இல்லை. அங்கே அவர்களுக்குள் ஒரு போர் நிகழ்ந்தால், அயல்வணிகர் ஒருமுறை தாக்கப்பட்டால், அனைவரும் துவாரகையை கைவிடுவார்கள்” என்றாள்.

கனகர் “அதனாலென்ன ஆகும்?” என்றார். “இல்லை” என அவள் தயங்கினாள். “சொல்” என்றார் கனகர். “துவாரகை அழியும் என்று சொல்லப்படுகிறது” என்றாள். “எவர் சொன்னது?” என்றார் கனகர். “நாம் காணப்போகும் தீர்க்கசியாமர் அதைச் சொன்னதாக சொல்லப்படுகிறது… நான் அவரைப் பார்க்கச்சென்றபோது அவ்வாறு கேள்விப்பட்டேன்.” கனகர் “வெறும்கதை… யாதவர்கள் வந்து அவரிடம் குறிகேட்டனரா என்ன?” என்றார். “இல்லை…” என அவள் மேலும் தயங்கி “அமைச்சரே, இன்று அஸ்தினபுரியின் பெண்டிரால் மிகமிக வெறுக்கப்படுபவர் இளைய யாதவரே என அறிந்திருப்பீர்கள்” என்றார். அதை ஒற்றர்வழி பலமுறை கேட்டிருந்தபோதிலும் கனகர் திகைப்படைந்தார். அது ஒரு பெண்ணின் குரல்வழியாக வந்ததனால்தான் எனத் தெரிந்தது.

“இங்கே ஒவ்வொரு இடத்திலும் அன்னையரும் கன்னியரும் அவரை வசைபாடுகிறார்கள். உளமுடைந்து தீச்சொல்லிடுகிறார்கள். இங்கு பல இல்லங்களில் அவருடைய நினைவாக நீலச் சோழிக்கற்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது என அறிந்திருப்பீர்கள். அவற்றைத் தூக்கி வந்து வெளியே வீசினார்கள். தெருவெங்கும் அவை இறைந்துகிடந்தன. நான் உணவுதிரட்ட காட்டுக்குச் சென்றபோது ஒரு மைந்தன் உதிர்ந்துகிடந்த மயில்பீலி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு ஓடிவந்து அன்னையிடம் காட்டினான். அன்னை சீறி அதைப்  பிடுங்கி அப்பால் வீசி மைந்தனை அறைந்தாள். அந்த இழிபொருளை இனி கையாலும் தொடுவாயா என கூச்சலிட்டாள். அமைச்சரே, இங்கே அன்னையர் மயில்களைக் கண்டாலே கற்களால் அறைந்து துரத்துகிறார்கள். அவை இங்குள்ளோரால் தெய்வமெனவே வழிபடப்பட்டவை. இன்று அஞ்சி காட்டுக்குள் சென்று மறைந்துவிட்டன.”

“ஆம்” என்றார் கனகர். “மூதன்னை ஒருத்தி தன் குடியின் பதினேழு மைந்தரை போரில் இழந்தாள். அவளுடைய குடியில் எஞ்சிய ஒற்றைக்கருவும் குருதியெனக் கரைந்தது. அவள் சீறியபடி தன் காலடி மண்ணை இடக்கையில் எடுத்தபடி ஓடி ஹிரண்யாக்ஷரின் ஆலயமுகப்புக்கு வந்தாள். அங்கிருந்த அஜபாகரின் சிற்றாலயத்திற்கு முன்னால் நின்று இளைய யாதவரின் குடி முற்றழியும்படி தீச்சொல்லிடுவதற்கு கையை தூக்கியபோது அப்பாலிருந்த தீர்க்கசியாமர் கூவி அதை தடுத்தார். அந்த மூதன்னையுடன் இணைந்து நூறு மூதன்னையர் அதேபோல காலடி மண்ணை இடக்கையில் எடுத்தபடி வந்தனர். அனைவரும் திகைத்து நிற்க தீர்க்கசியாமர் உங்கள் சொல் அவரை அழிக்கும், அன்னையரே. ஆனால் தீச்சொற்கள் இடும் உரிமை தெய்வங்களுக்கே உரியது. மானுடர் தீச்சொல்லிட்டால் அவர்கள் அதை தங்களை நோக்கியும் ஏவிக்கொள்கிறார்கள் என்று அறிக என்றார். அனைவரும் தயங்கி கைதாழ்த்தினர். தெய்வங்களின் நெறியே அவருக்கு அழிவை அளிக்கும். அவர் குடி எச்சமில்லாமல் முற்றழிவதை அவர் காண்பார். அவர் நகரில் ஒரு கல்லேனும் எஞ்சாது என்று அறிக என்றார். அன்னையர் திகைத்து பின்னர் ஓலமிட்டனர்.”

“மானுடராயினும் தெய்வமாயினும் இங்கே மண்மீதிலங்குகையில் மண்ணுக்குரிய நெறிகளாலேயே ஆளப்படுவார்கள் என்று தீர்க்கசியாமர் கூறியதாகச் சொல்வார்கள்” என்று அவள் சொன்னாள். “அச்செய்தியைக் கேட்டபின் அன்னையர் சோர்ந்து அழுதபடி ஆங்காங்கே அமர்ந்துவிட்டார்களாம். அவர்களால் மீண்டும் தங்கள் இல்லம்வரை நடப்பதுகூட இயலவில்லை என்றார்கள்.” கனகர் நீள்மூச்செறிந்தபடி புரவியில் அமர்ந்திருந்தார். “அது மெய்யென்றாகவேண்டும் என்றே நான் எண்ணுகிறேன்” என்று சம்வகை சொன்னாள். “அவருடைய புகழ் கேட்டே நான் வளர்ந்தேன். தெய்வமென்றே என்னுள் அவர் திகழ்கிறார். ஆனால் இப்பேரழிவுக்குப் பின் அவர் அதன் விளைவை அடையவில்லை என்றால் இப்புவியின் நெறிகளில் பிழை நிகழ்கிறது. அவர் பிறருடைய அழிவை நிகழ்த்தியவர். தனக்கும் அதையே நிகழ்த்திய பின் அவர் விண்மீண்டாலொழிய இது முழுமையடைவதில்லை.”

கனகர் ஒன்றும் சொல்லவில்லை. அவளும் சொல்லடங்கி புரவியிலேயே அமர்ந்திருந்தாள். அவர்கள் ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தை அடைந்தார்கள். இசைச்சூதர்களின் நான்கு தெருக்கள் முட்டிக்கொள்ளும் முனையில் அமைந்த ஹிரண்யாக்ஷரின் ஆலயத்தருகே  புழுதி மண்டிக்கிடந்தது. கனகர்  புரவியை கடிவாளத்தை சற்றே இழுத்து நிறுத்தினார். அங்கே  சூதர்குலச் சிறுவர்களுக்கு யாழ் தொட்டளிக்கும் சடங்கு நிகழும் மேடையில் ஒரு அங்காடி நாய் படுத்திருந்தது. ஆலயம் திறந்திருந்தது. கருவறையில் பொன்னாலான விழிகளுடன் கையில் யாழுடன் ஹிரண்யாக்ஷர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் அரியும் மலரும் பொரியும் வெல்லமும் படைக்கப்படும் பெரிய பலிமேடையில் ஒற்றை எண்ணைவிளக்கு மட்டும் எரிய கைப்பிடி அன்னம் படைக்கப்பட்டிருந்தது.

ஆலயத்திற்கு வலப்பக்கமாக அஜபாகரின் சிறிய மண்சிலை இருந்தது. அதற்குச் சூட்டப்பட்ட மலர்மாலைகள் சருகுகளாகிவிட்டிருந்தன. அவர் விழிகளால் தீர்க்கசியாமரை தேடினார். சில கணங்களுக்குப் பின்னர்தான் உயிருள்ள விழிகளைத் தேடுகிறோம் என்று உணர்ந்தார். நோக்கை விலக்கி மீண்டும் நோக்கியபோது தூணில் ஒட்டியபடி  கிழிபட்ட கட்டைவிரல்கள் கொண்ட கையால் மடியில் வைத்த பேரியாழை வருடியபடி அமர்ந்திருந்த தீர்க்கசியாமரை கண்டார். அவர் தலைமயிர் வளர்ந்து சுருள்கற்றைகளாக பின்னால் சரிந்திருந்தது. அவற்றில் சடைத்திரிகளும் இருந்தன. ஓரிரு நரைமயிர்கள் தெரிந்தன. அவருடைய தோள்கள் குறுகி முன்னால் வளைந்து மேலும் கூனல் விழுந்திருந்தது. மூக்கு முதுகழுகின் அலகுபோல கூர்ந்து வளைந்திருக்க உதடுகள் உள்ளடங்கியிருந்தன.

புரவிக்குளம்படிகளை அவர் முன்னரே கேட்டிருந்தார். அவர்கள் இறங்கியதும் திரும்பி அவர்களை தன் செவ்விழிக்கோளங்களால் நோக்கினார். கனகர் கடிவாளத்தை புரவியின்மேல் வீசிவிட்டு அவரை நோக்கி நடந்தார். தீர்க்கசியாமர் புன்னகை செய்து “வருக அரசி, அமைச்சருக்கும் நல்வரவு” என்றார்.

முந்தைய கட்டுரைமணற்கடிகை
அடுத்த கட்டுரை1000 மணிநேர வாசிப்பு