சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை – ஜெயமோகன்

கவிதை மட்டுமல்ல, கவிதை பற்றி எழுதியது கூட புரியாத ஒரு ஆரம்ப நிலை வாசகன், தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனை சந்தித்தால்?

ஊட்டி குரு நித்யா காவிய முகாமிலிருந்து கோவை ரயில் நிலையம் வரை கவிஞர் தேவதேவன் அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடன் விவாதிக்கவோ, தேர்ந்த கேள்விகளை முன்வைகவோ தேவையான வாசிப்பு பின்புலம் எனக்கில்லை. அதே நேரம், அவருடன் செலவிட கிடைத்த நேரத்தை வீணடிக்கவும் மனமில்லை. மிகுந்த தயக்கத்துடன், நவின கவிதைகள் குறித்த சில அடிப்படைக் கேள்விகளை அவரிடம் முன் வைத்தேன்.

கவிதையின் அரிச்சுவடி பாடம் கூட தெரியாதவனின் கேள்விகள் என புறம் தள்ளாமல், அவர் கூறிய பதிகள் கீழே!

கே: கவிதை எழுதுவது குறித்து…

ஏன் கவிதை எழுத வேண்டும் என எண்ணுகிறீர்கள்? எந்த கவிதையை வாசித்து, எதை வியந்து கவிஞன் ஆக வேண்டும் என எண்ணினீர்கள்? அங்கிருந்து தொடங்குங்கள். அந்த கவிதையில் எது உங்களை கவர்ந்தது? என கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

கவிதை எழுத தொடங்கும் பொழுது, உங்கள் எண்ணங்களை எழுதிப் பாருங்கள்.

நல்ல கவிதையில் அந்த எண்ணங்கள் ‘உசத்தியாக’ இருக்கும். கவிதை எழுதுவது என்பது திரும்ப திரும்ப அந்த ‘உசத்திக்கு’ போவது, அங்கு வாழ்வது. அது போன்ற ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

எனது 25ம் வயதில், (கனவு/மீட்சி) இதழுக்கு தந்த நீண்ட பேட்டியிலும் இதையே குறிப்பிடிருந்தேன். கவிதை எழுதுவதற்கு முதல் படி, கவிஞனாகவே வாழ்வது.

உங்களுக்கு சொல்ல ஒரு விஷயம் இருந்தால், அது தானாக வழி காட்டும். வழி தெரியும்.

கே: கவிதையில் சொல்ல வருவதை நேரடியாக சொல்லக்கூடாதா? எழுதும்பொழுது கவிஞன் எத்தனிப்பது நேரடி பொருளையா, அதில் மறைந்துள்ள பொருளையா?

நேரடியாக கூறுவது, மறைமுகமாக கூறுவது என எதுவும் இல்லை. நீங்கள் கூற வருவது ஒரு அனுபவம். வாசகனுக்கு அது அனுபவமானால் போதும்.

கே: கவிதையின் வார்த்தைகள் தரும் நேரடி பொருளை புரிந்துக்கொண்டால் போதாதா?

நாம் ஒரு சாக்லேட் சாப்பிடுகிறோம். ஒரு தின்பண்டம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது. இது, ஒரு நேரடி அனுபவம். நேரடியான பொருளுக்கான நிறைவு கிடைக்கிறது.

அதற்கு மேல் உங்கள் தேவை என்ன?ஒரு சாக்லேட்டுக்கும் கவிதைக்கும் என்ன வேறுபாடு?

கவிதையின் நேரடி பொருளை புரிந்து ரசிப்பது இவ்வளவு தான். சாக்லேட்டின் சுவை.

ஆனால் கவிதை அதற்கு மேல் எதோ ஒன்றை தொட்டு, உங்கள் சிந்தனை மையத்தை தொட்டு, பெரிய அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு அருமையான அனுபவம் என உணர்கிறீர்கள்.

ஊட்டிக்கு ஒரு பயணம் வருகிறீர்கள். அது என்ன வகை அனுபவம்? இதை பார்த்தேன், அதை பார்த்தேன் என்பது புலன் அனுபவம். சாக்லேட் லெவல். ஆனால், அந்த காட்சி அனுபவத்தை தாண்டி ஒரு அனுபவம் உள்ளது. செரிபரலாக இல்லாத ஒரு அனுபவம்.

புலன் அனுபவமாக பார்ப்பவர்கள், அனைத்து இடங்களையும் பார்க்க வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறர்கள். அல்லது, விடுதிகளில் மது அருந்துகிறார்கள். ஆனால், இதை ஒரு ஆத்மார்த்தமான அனுபவமாக கருதுபவர்கள் அடையும் உணர்வு வேறு. புலன்களுக்கு வெளிய இல்லாமல், உங்களுக்குள் நீங்கள் அடையும் அனுபவம். நேரடி பொருளை கடந்து, கவிதையை அனுகுவது இதற்கு இணையானது.

கே: ஆனால், உங்கள் அனுபவத்தை நேரடியாக எழுதாமல் மாற்றி எழுதுகிறிர்கள். அதன் மூலம் உங்கள் அனுபவத்தை வாசகன் சொன்றடைய வேண்டுமா?

உங்கள் நண்பருடன் உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள். அவர் தனது பிரச்சனைகளை பகிர்ந்துவிட்டு “ஒரே இருட்டா இருக்குபா!”என கூறுகிறார். இதில் நீங்கள் நேரடி அர்த்தத்தை பார்ப்பதில்லை. அவர் என்ன கூறவருகிறார் என புரிந்துக் கொண்கிறீர்கள். இது புரியும் பொழுது கவிதை ஏன் புரிவதில்லை?

ஒருவர் ‘விடியுமா?’ என ஒரு நாவல் எழுதுகிறார். உலகம் அழிய போகிறது, நாளை காலை விடியுமா என கேட்டா எழுதுகிறார்? அவர் கூற வரும் பல விஷயங்களை நாம் அந்த வார்த்தை மூலமே சென்று அடைகிறோம்.

நீண்ட நாள் நண்பருடன் சாலையில் செல்லும் பொழுது ஒரு காட்சியை காண்கிறீர்கள்.

“பார்த்தியா?”

“ம்ம்! ஆமால!”

ஒரு காட்சியை இருவர் பார்க்கும் பொழுதும் எண்ணுவது ஒன்றாக உள்ளது.

சில சமயங்களில் வார்த்தைகள் கூட தேவையில்லை. நீங்கள் விழிகளால் சுட்டுகிறீர்கள். நண்பர் ஆமோதிக்கிறார். இங்கு, ஒரு சமிஞை கவிதை ஆகிறது.

கவிதை என்பது ஒரு காட்சி.

பல விஷயங்களை ஒரு காட்சி மூலம் சொல்லிச்செல்வது.

அதை புரிந்துக்கொள்ள ஒருவர் பயின்று வர வேண்டும். நீங்கள் கவிதை வாசிக்க விரும்புகிறீர்கள். இது தான் கவிதை. இப்படி இல்லை என்றால் அது கவிதை இல்லை.

புரிந்தவற்றில் இருந்து புரியாதது நோக்கி செல்ல வேண்டும். கவிதையில் புரிந்த பகுதிகள் ஏன் புரிந்தது என யோசியுங்கள். அது ஒரு அறிவியல்

கவிஞனை வாசித்து பழக்கம் இருந்தால் அவனது மொழி புரியும். கவிதை என்பது கவிஞனின் ஆளுமையின் வெளிப்பாடு. கவிஞன் தான் அடைந்த உண்மையை அசை போட்டுக்கொண்டே இருப்பான். கூறியவற்றையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருப்பான். வாழ்க்கை முழுவதும் அவன் கூறுவது திரண்டு வரும். அவனுக்கென ஒரு அந்தரங்க பாஷை இருக்கும். அதை அறிவதன் மூலம், அவனது கவிதையை புரிந்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை, உங்களுக்கு கவிஞரின் மனநிலை தெரியாது வெறும் கவிதை மட்டும் உங்கள் முன் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். கூற வந்ததை புரிந்துக்கொள்ள அது போதும் என்ற நம்பிக்கையில் தான் அந்த வரி எழுதப்பட்டுள்ளது.

‘மார்கழி மாதம்,
வேறு என்ன வேண்டும்?’

என்று ஒரு கவிதை எழுதுகிறேன்.

இதை வாசிக்கும் பொழுது, உங்களுக்குள் ஒரு மார்கழி மாதத்தை அனுபவிப்பீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்.

ஒருவேளை, மார்கழி மாதம் உங்களுக்கு எந்த உணர்வையும் தரவில்லை என்றால்?

கவிஞன் ஒரு விஷயம் முக்கியம் என எண்ணுகிறான். அதை குறித்து கவிதை எழுதுகிறான். ஆனால், அது உங்களுக்கு எந்த உணர்வையும் தரவில்லை. இப்போது என்ன செய்வது?

ஒருவன் பேசுவது உங்களுக்கு புரியவில்லை என்றால், அவன் ‘psycho’வாக இருக்கக்கூடும்.அவனை குணமடைய செய்ய வேண்டிய பொறுப்பு சமூகத்திடம் உள்ளது. அதற்கு அவனை புரிந்துக்கொள்ள முயல வேண்டும்.

இப்படி ஒரு கவிதை எழுதுகிறான் என்றால், அவன் எப்படிப்பட்ட மனிதனாக இருப்பான்?

– இயற்கையை நேசிகக்கூடியவன்
– வெப்பமண்டல பகுதியை சார்ந்தவனாக இருப்பான்
– குளிரை விரும்புபவன் போன்றவை.

இப்படி அந்த கவிதையின் மூலம் நீங்கள் கண்டடைந்த மனநிலை உள்ள ஒருவன் அந்த கவிதையை எழுதியுள்ளான். அது முக்கியம் என்கிறான். அவனது மனநிலையின் மூலம் கவிதையை புரிந்துக்கொள்ள முயலுங்கள்.

கே: பொரும்பாலும் இணையத்தில், சராசரி கவிதைகளை வாசித்து தொடங்கும் வாசகனுக்கு படிமம் போன்றவற்றை புரிந்துக்கொள்வது, தீவிர கவிதைகளை வாசிப்பது போன்றவை கடினமாக இருக்கிறது.

கவிதை என எழுதப்பட்ட வரியின் மூலம், கவிஞன் கூற வருவது அதன் மேலதிக அனுபவத்தை தான். அது புரிந்தால் நல்லது. புரியவில்லை என்றாலும் தாழ்வில்லை. ஏற்கனவே புரிந்ததன் மூலம் முயற்சி செய்யுங்கள். எற்கனவே கிடைத்த ஒரு திறப்பிலிருந்து அறிவுபுர்வமாக முன்னகர்ந்து அடுத்த திறப்பை அனுக முயற்சி செய்யலாம். டியுப் லைட்டாக இருப்பதில் தவறில்லை. எந்த மனநிலை முந்தைய திறப்பை தந்ததோ அதை தக்கவைத்க்கொள்ளுங்கள். அதிலிருந்து மேலெழ முயற்சி செய்யுங்கள்.

***

முந்தைய கட்டுரைநீரும் நெறியும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதினமணியும் நானும்