‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6

பகுதி ஒன்று : இருள்நகர் – 5

கூடத்தை ஒட்டியிருந்த உள்ளறைகளுக்குள் மெல்லிய காலடி ஓசைகள் கேட்கத் தொடங்கின. எவரோ கனகரிடம் “விழித்துக்கொள்ளுங்கள், யானை அணுகுகிறது” என்றார். அவர் “யானையா?” என்றார். “யானை!” என்று மீண்டும் அவர்கள் சொன்னார்கள். “விழியற்றது அது. அதன் வழியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றார் ஒரு முதியவர். அவர் கனகருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்க்கமுடியவில்லை. “யார், நானா?” என்று அவர் கேட்டார். “நீங்கள் விழியற்றவராக ஆனால் நன்று.” மறுகணம் தன்னுணர்வு கொண்டு வாயைத் துடைத்தபின் மேலாடையை சீரமைத்து எழுந்து நின்றார்.

அறையின் மறுபக்க வாயில் திறந்து சத்யவிரதையின் கையைப் பற்றியபடி காந்தாரி சிறிய கால்களை நிலத்தை ஒற்றுவதுபோல் எடுத்து வைத்து, பருத்த உடல் அசைந்தாட, மிக மெல்ல நடந்து வந்தாள். கனகர் “வணங்குகிறேன், பேரரசி” என்றார். “வணங்குகிறேன் அமைச்சரே, அமர்க!” என்றபின் சத்யவிரதையின் தோள்களை பற்றிக்கொண்டு மெல்ல உடலைத் தாழ்த்தி காந்தாரி பீடத்தில் அமர்ந்தாள். அந்த நடையின் விளைவாக அவள் மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். கழுத்திலும் கன்னங்களிலும் நீல நரம்புகள் புடைத்து அதிர்ந்தன. உடலெங்கும் வியர்வை பொடித்திருந்தது. பெருமூச்சுவிட்டு இரு கைகளையும் மடியில் கோத்துக்கொண்டாள்.

கனகர் அவள் தன் மடியில் கோத்துவைத்த கைகளையே பார்த்துக்கொண்டிருந்தார். ஒளி ஊடுருவும் தளிர்களைப்போல் சிவந்தவை, மென்மையானவை. அவள் விரல்கள் ஏன் அத்தனை சிறிதாக இருக்கின்றன என்று எப்போதும்போல் வியந்தார். சிறுமியின் விரல்கள். உண்மையில் சற்று பெரிய குழந்தையின் விரல்கள். பாளையை சற்று முன்னர்தான் கீறி குருத்தென அவற்றை வெளியே எடுத்திருப்பாள் என தோன்றச்செய்பவை. எப்போதும் அவள் கைகளை விரல் கோத்து மடியில் வைத்துக்கொண்டாள். அவளுடைய இயல்பான அமர்வு அது என்றாலும் அப்போதுதான் அதை அவர் அத்தனை கூர்ந்தறிந்தார்.

பருத்த தோள்கள் கொண்ட பெரிய கைகளுக்கு உகந்தது அந்த அமைவுதான். இயல்பாகவே அவள் அதை தெரிவு செய்திருக்கலாம். ஆனால் சென்ற பல நாட்களாகவே மடியில் கோத்த கைகள் இறுகி ஒன்றையொன்று கவ்விப் பற்றிக்கொண்டிருக்கின்றன என்று அவருக்குத் தோன்றியது. அவ்விறுக்கத்தில் முழங்கைகளிலும் தோள்களிலும் தசைகள் அசைவதை காணமுடிந்தது. கைகளை அவள் விலக்கும்போது ஒவ்வொரு முறையும் நெடுமூச்செறிந்தாள். உடனே விரல்கள் தவிக்கத் தொடங்கின. ஒன்றையொன்று நாடி மீண்டும் தழுவிக்கொண்டன. இறுக்கிக்கொண்டன.

எப்போதுமே சொல்லெண்ணிப் பேசும் காந்தாரி கடந்த நாட்களில் மிகமிகக் குறைவாகவே வாய்திறந்தாள். பெரும்பாலும் முறைமைச்சொற்கள். அச்சொற்களை அவள் சொல்கிறாளா அவள் பொருட்டு அருகிருந்து பிறர் சொல்கிறார்களா என்ற ஐயம் எழுந்தது. காந்தாரியின் உதடுகளை ஒருகணம் நோக்கியபின் விழிதாழ்த்திக்கொள்வது அவருடைய வழக்கம். மிகச் சிறிய செவ்விதழ்கள் அவை. அவர் அகவிழிக்குள் அவை அசைந்து குவிந்து நீண்டு பேசிக்கொண்டே இருக்கும். அவள் மூக்கும் மிகச் சிறியது. முகம் பரந்து அகன்றபோது அவை மேலும் சிறியதாயின. அப்போது அவை மெல்லிய சிவந்த கோடுபோல அசைவில்லாது இணைந்துவிட்டிருப்பதாகத் தோன்றியது. அவள் பேசும்போதுகூட அவருடைய விழிகளுக்குள் அசையா உதடுகளே தெரிந்தன.

காந்தாரியின் உடன்பிறந்த அரசியர் அவளைப்போலவே இருந்தனர். ஆனால் அவள் மட்டும் தனக்கே உரிய பிறிதொரு குரல் கொண்டிருந்தாள். அரண்மனையில் காந்தாரியின் இனிய குரலைப்பற்றி குறிப்பிடாத ஏவலரோ சேடியரோ இல்லை என்பதை அவர் கண்டிருந்தார். இன்குரல் கொண்ட பெண்டிர் அரண்மனையில் பலர் இருந்தனர். பாடகிகளாகிய சேடியர், பாடுவதற்கே பிறந்த விறலியர் வந்து சென்றனர். ஆனால் காந்தாரியின் குரல் வீணை நரம்பொன்றை விரலால் சுண்டுவதுபோல் ஒலித்தது. நூறு மடங்கு பெரிய வீணையின் ஒற்றை நரம்பு சுண்டப்படுவதுபோல் அது கார்வை கொண்டிருந்தது. அவள் குரல் ஒருபோதும் மேலெழுவதில்லை. ஆகவே சொல்லப்படுபவருக்காக மட்டுமே ஒலித்தது.

ஒவ்வொரு சொல்லிலும் எவ்வண்ணமோ அவள் ஆழ்ந்து வெளிப்பட்டாள். அவள் முன் சென்றமர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் அன்னையரை நினைவுகொண்டனர். மிக எளிய ஏவற்பெண்டுகள்கூட தங்கள் அன்னையிடமென அவளிடம் பேசினர். எழுந்து கை நீட்டி உரத்த குரலில் பேசி அவளிடம் கண்ணீருடன் முறையிடுபவர்களை கண்டிருக்கிறார். பூசலிடும் இளம் பெண்களைக்கூட அவர் கண்டதுண்டு. அப்போது அவள் பாரதவர்ஷத்தின் பேரரசி என்பதை அவர்கள் மறந்துவிடுவார்கள். தன் துயரையெல்லாம் அவளே அளிக்கிறாள் என அவர்கள் எண்ணுவது போலிருக்கும். தங்கையர் சூழ்ந்திருக்க முகங்கள் விரிந்து விழிகள் பெருகியவள்போல் காந்தாரி தோன்றுவாள். கூர்ந்து நோக்கும் பதினெட்டு விழிகளுக்குக் கீழே நீலத் துணியால் மூடிக்கட்டிய விழிகள் இரண்டு. ஒன்பது நோக்குவிழியிணைகள் அறியாததை பத்தாவது நோக்காவிழியிணை அறிகிறது.

பெரும்பாலும் காந்தாரி எவருக்கும் எந்த அறிவுரையும் உரைப்பதில்லை. எவரையும் வழிநடத்துவதில்லை. தன்முன் கூறப்படும் அனைத்தையும் கனிவுடன் கேட்டு அருகணைத்து அவர்கள் தோளிலும் தலையிலும் கைவைத்து மெல்ல வருடி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு மெல்லிய குரலில் ஓரிரு சொற்கள் அவர்கள் செவியில் சொன்னாள். பெரும்பாலானவர்கள் அப்பொழுதே உளம் உடைந்து அவள் தொடையிலும் காலிலும் தலைவைத்து விம்மி அழத்தொடங்கியிருப்பார்கள். அங்கிருந்து கிளம்பிச்செல்கையில் தங்கள் இடர்களும் துயர்களும் முற்றிலும் விலகி அனைத்திலிருந்தும் விடுபட்டவர்கள்போல் தோன்றுவார்கள்.

கனகர் பலமுறை காந்தாரியின் காலில் விழுந்து அழுதிருக்கிறார். அவருடைய துணைவி உடல்நலம் குன்றி மறைந்தபோது முதல்முறை. ஒரே மைந்தன் துறவு பூணுகிறான் என்று அறிவித்து இல்லம் நீங்கியபோது மறுமுறை. விதுரர் இனி திரும்புவதில்லை என அறிவித்து கானேகியபோது அவள்முன் வந்து வெறுமனே பித்தனென அமர்ந்திருந்தார். ஒவ்வொரு முறையும் காந்தாரியின் மெல்லிய தொடுகையினாலேயே இப்புடவியில் தான் தனித்தவன் அல்ல என்ற உணர்வை அவர் அடைந்தார். மீள்வதற்கு வழியொன்றுண்டு என உணர்ந்தபின் எல்லா பயணங்களும் எளிதாகிவிடுகின்றன.

அது ஒவ்வொரு நாளும் நிகழும் ஒன்று. ஆலயத்தில் அமர்ந்த தெய்வத்தை தேடி வருவதைப்போல் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். மேல்கீழ் என்றும் அணுக்கம் அயன்மை என்றும் எண்ணாமல் அவர்கள் அனைவரையுமே தழுவிக்கொண்டு தன் சொற்களை சொன்னாள். தெய்வங்கள் வேறுபாடு பார்ப்பதில்லை. வேறுபாடு பார்க்காததனாலேயே அவை தெய்வங்கள் ஆகின்றன. மானுடரின் துயர்களின் நடுவே அமைந்திருக்கின்றன தெய்வங்கள். ஆயின் மானுடத் துயர்களை தெய்வங்கள் உணர்வதே இல்லை. மானுடமென திரண்டுள்ள ஒன்றை மட்டுமே அறிந்திருக்கின்றன. விழிவிரித்து அவை நோக்கி அமைந்திருப்பது அவ்விரிவை. ஒவ்வொரு துளியிலும் அவை காண்பது முழுமையை.

ஒவ்வொரு துயருக்கும் தனித்தனி விடை சொல்லும் தெய்வங்கள் உண்டா? மாமுனிவர்கள் அவ்வாறு சொல்வதுண்டா? அவ்வாறு தனித்தறிந்தால் அவர்களும் இத்துயருக்குள் உழலத் தொடங்கிவிடுவார்கள். அப்பால் நின்று அனைத்தையும் குனிந்து நோக்குவதால் அவர்கள் பேருருக்கொள்கிறார்கள். அப்பேருருவம் உரைப்பதனால் அவர்களின் சொற்கள் அத்தனை அழுத்தமும் ஆழமும் கொள்கின்றன. யானை எப்போதேனும் துதிக்கையை தன் தோளில் வைத்தால் ஏன் உள்ளம் பெருகியெழுகிறது என கனகர் வியந்ததுண்டு. அதன் எடை. அதன் பேருருவை அறிவிக்கும் அழுத்தம் அது. அது மிக மெல்ல தொடலாம். ஆனால் அது கானகத்திலிருந்து எழுந்து வந்தது. மாமலைகளின் குழவி.

கனகர் காந்தாரியை நோக்கிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருந்தார். அமைதி கலைந்து காந்தாரியே பேசவேண்டுமென்று எதிர்பார்த்தார். அவள் அகம் எவ்வண்ணம் இருக்கிறது என அவரால் மதிப்பிட இயலவில்லை. அந்நாட்களில் அவள் எப்படி உண்டு உறங்கி எழுந்து உரையாடி அமர்ந்தாள்? பெருந்துயர்களும் பெருங்களிப்புகளும் தெய்வங்களுக்கு மட்டுமே உரியவை. மானுடரால் தாள இயலாதவை. இவள் முன் பெய்த துயரின் சிறுதுளி என்னை சிதறடித்து பித்தனாக்கிவிட்டிருக்கிறது. இவள் பெருஞ்சுழியின் உச்சவிசையின் ஆழந்த அமைதியுடன் இருந்துகொண்டிருக்கிறாள்.

காந்தாரி உடலிலிருந்து அகன்றுவிட்டதுபோல் தோன்றியது. அவர் விழிதூக்கி அவள் முகத்தில் துயர் இருக்கிறதா என்று பார்த்தார். அங்கே துயரே வெளிப்படவில்லை. ஆனால் அவள் முகத்தின் தசையமைப்பிலேயே துயர் இருந்தது என்றும் தோன்றியது. அத்துயர் அன்னையருக்குரியது. எல்லா அன்னையரும் எப்போதும் அகலாத துயரொன்றில் அமைந்திருக்கிறார்கள். அன்னைமை என்பதே துயரே என்பதுபோல். அரண்மனை நிறைத்து மைந்தரும் பெயர்மைந்தருமென கொப்பளித்துக்கொண்டிருந்த நாட்களில்கூட அத்துயர் அவள் முகத்தில் இருந்தது.

அல்லது விழியின்மைதான் அத்துயராக வெளிப்படுகிறதா? விழிகளிலிருந்துதானே எப்போதும் துயர் வெளித்தெரிகிறது? அவள் உடல் அசைவில்கூட அத்துயர் இருந்தது. புன்னகையில் அத்துயர் வெளிப்பட்டது. அது மைந்தர் துயரோ மகளிர் துயரோ அல்ல. புவித்துயர் அல்ல. தெய்வங்களுக்குரிய துயர். கருவறைக்குள் அமர்ந்திருக்கும் அத்தனை தெய்வங்கள் முகத்திலும் சற்றே துயர் இருப்பதுபோல் அவருக்கு அப்போது தோன்றியது. துயரில்லாத தெய்வம் ஒன்று இப்புவியில் எழக்கூடுமா?

அவ்வெண்ணம் எழுந்ததுமே ஏனென்றறியாமல் அவர் இளைய யாதவரை நினைவு கூர்ந்தார். மாறாத புன்னகை. எந்நிலையிலும் களித்து மகிழ்ந்திருக்கும் விழிகள். அவனும் தெய்வம் என்கின்றனர். கலியுகம் எழுகிறது என்கிறார்கள். ஊழ்கத்திலிருக்கும் தெய்வங்கள் கிருதயுகத்திற்குரியவை. சினந்திருக்கும் தெய்வங்கள் திரேதாயுகத்திற்குரியவை. துயர்கொண்ட தெய்வங்களாலானது இந்த துவாபர யுகம். எழவிருக்கும் கலியுகத்தில் மாறாச் சிரிப்புகொண்ட இம்முகமே தெய்வமென்று ஆகுமோ?

அவர் கட்டுமீறி அலைந்த தன் எண்ணங்களை உலுக்கிக்கொண்டு மீண்டு காந்தாரியை பார்த்தார். இன்று அரண்மனை முற்றோய்ந்து கிடக்கிறது. நூறு மைந்தரையும் ஆயிரம் பெயர்மைந்தரையும் பெற்றவள் ஒருவர்கூட எஞ்சாமல் இங்கு அமர்ந்திருக்கிறாள். இவள் உள்ளம் எவ்வண்ணம் திகழ்கிறது? ஒரு துளி துயர் ஒவ்வொரு மைந்தருக்கெனில்கூட கடலென அது அலையடிக்கவேண்டும். இங்கிருக்கும் அனைத்திலிருந்தும் அகன்று எங்கோ அமர்ந்திருக்கிறாள். அத்துயர் எதையும் அவள் அறிந்ததில்லை என்றால் இவள் அன்னையென்றாகக் கூடுமா என்ன?

இல்லை, என்றுமிருக்கும் துயர் மட்டுமே ஏந்தியிருக்கிறாள். புல்நுனி பனித்துளியை ஏந்தியிருப்பதுபோல். ஒளிரும் வான் சுருண்டமையும் ஒரு முத்து என. அது எவருடைய வரி? சூதன் எவனோ சொன்னது. அப்போது விதுரர் இருந்தார். புன்னகையுடன் “பிறர் துயரை சொல்கையில் சூதர்கள் கவிஞர்களாகிறார்கள்” என்றார். சூதன் நகைத்து “பிறர் துயரை அழகாக்குபவை சூதர்பாடல்கள். தெய்வத்துயரை அழகாக்குவன காவியங்கள்” என்றான். என் எண்ணங்கள்மேல் ஒரு பாறாங்கல்லை ஏற்றிவைக்கவேண்டும். இக்காற்றில் என் அகம் பறந்து அகன்றுவிடக்கூடும். நெடுந்தொலைவு சென்று விரிந்த பாலையில் கூர்முட்களின்மேல் மெல்ல படிந்திருக்கும். மேலும் மேலுமென வீசும் காற்றில் எழமுயன்று கிழிந்துகொண்டே இருக்கும். மீண்டும் பித்துகொள்கின்றன என் எண்ணங்கள்…

காந்தாரி பெருமூச்சுடன் கலைந்து “என்ன நிகழ்கிறது, அமைச்சரே?” என்றாள். திடுக்கிட்டு உள்ளிருந்து வெளிப்போந்து திகைக்கும் விழிகொண்டு அவளே மேலும் கேட்கும் பொருட்டு கனகர் காத்திருந்தார். “கூறுக, இந்நகரில் ஒரு துளி புதிய உயிரேனும் எஞ்சுகிறதா?” என்றாள் காந்தாரி. கனகர் அவள் கேட்பதென்ன என்று உணர்ந்தும் பேசாமல் இருந்தார். “ஏதேனும் வயிற்றில் ஒரு கரு எஞ்சுகிறது என்று கூறுக, அமைச்சரே! அதை நெஞ்சோடு பற்றிக்கொள்கிறேன்” என்று காந்தாரி சொன்னாள். அந்நாட்களில் முதல்முறையாக அவள் குரலில் இடறலை அவர் அறிந்தார். அவருள் நிறைவுதான் எழுந்தது. ஆம், அன்னைதான், தெய்வமல்ல.

கனகர் இருமுறை நாவில் சொல்லெழத்தொடங்கி அச்சொற்களில் பொருள் திகழாமையை உணர்ந்து தயங்கி முகத்தை மட்டும் அசைத்தார். “நன்று!” என்று காந்தாரியே கைவீசி அக்கணத்தை கலைத்து “இல்லையென்று நானறிவேன்” என்றாள். கனகர் “ஆம் அரசி, இவ்விரு நாட்களில் அனைத்து ஏவலரையும் ஒற்றரையும் அனுப்பி இந்நகரில் ஒரு மங்கையேனும் கருவுற்றிருக்கிறாளா என்று உசாவும்படி ஆணையிட்டேன். எவருமில்லை. கருதிகழ்கையில் இல்லத்தின்முன் மங்கலக்கொத்து சூட்டிவைக்கும் வழக்கம் இங்கிருப்பதனால் கண்டடைவது எளிது. ஒவ்வொரு இல்லத்தையும் ஏவல்பெண்கள் சென்று நோக்கினர். கலைந்த கருக்களுக்காக கட்டிவைக்கப்படும் கரிய நூல்பாவைகள் ஆயிரத்தெழுநூற்று எண்பத்தாறு இல்லங்களில் உள்ளன” என்றார்.

“யானைக்கொட்டில்களில், புரவித்திரளில், தொழுவத்தில் எங்கும் எந்தக் கருவும் எஞ்சவில்லை. நேற்றுவரை எஞ்சியிருந்தது யானைக்கொட்டிலில் நான்கு கருக்குழவிகள். இன்று காலை அவையும் வெளிவந்துவிட்டன” என கனகர் தொடர்ந்தார். காந்தாரி தலையசைத்தாள். பின்னர் “இங்கு அரண்மனையிலும் சூழ்ந்துள்ள அரசகுடிகளிலும்கூட எக்கருவும் எஞ்சவில்லை, அறிந்திருப்பீர்கள்” என்றாள். “சேடியர் உட்பட. ஐநூற்றிஎழுபத்தொன்பது பேர் கருவுற்றிருந்தனர். வெவ்வேறு வளர்நிலைகளில் திகழ்ந்த கருக்கள்… அனைத்தும் குருதியென வெளியேறின. ஒன்பது பெண்டிர் கருவெளியேற்றத்தில் உயிர்விட்டிருக்கிறார்கள்.”

“நிமித்திகர்கள் கவடி நிரத்தி நோக்கினர். பன்னிரு ருத்ரர்கள் நகர் புகுந்திருக்கிறார்கள். இங்குள்ள கருக்கள் அனைத்தையும் அவர்களே உண்கிறார்கள் என்கிறார்கள். அவர்களின் குருதிவிடாய் அணைந்த பின்னரே இங்கிருந்து அகன்று செல்வார்கள்” என்று கனகர் சொன்னார். காந்தாரி அமைதியிலாழ்ந்து சற்றுநேரம் இருந்தபின் “இதற்கு முன் இவ்வாறு நிகழ்ந்துள்ளதா?” என்றாள். “இதற்கு முன் இங்கு நிகழ்ந்த அனைத்துமே ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை சிலநாட்களாக எடுத்து தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தேன். ஓலை ஆவணங்கள் நூறாண்டுகளுக்குப் பின் பட்டில் பொறிக்கப்படும். அவற்றுக்கும் முந்தையவை செப்பேட்டுச்சுருள்களில் பொறிக்கப்பட்டுள்ளன” என்று கனகர் சொன்னார்.

“ஆயிரத்தெழுநூறாண்டுகால ஆவணங்கள் நம் அரண்மனையில் உள்ளன என்கிறார்கள். அவற்றுக்கும் அப்பால்கூட நிலவறைகள் உள்ளன. இன்று நாம் எட்டக்கூடிய தொலைவு அவ்வளவுதான். நேற்று நிலவறைக்குள் ஆழத்திலிருந்து செப்பேடுகள் சிலவற்றை எடுத்துவந்தேன். தொன்மையான செப்பேடுகளை சொல்லறிவரே படிக்கமுடியும். தொன்மையான குறிஎழுத்துக்களால் ஆனவை. பழைய செப்பேடுகளில் ஒன்றில் ஒரு செய்தி உள்ளது என இன்று சற்றுமுன்னர்தான் சொல்லறிவர் கூறினர். ஆகவேதான் தங்களை நாடிவந்தேன்.” காந்தாரி வெறுமனே அமர்ந்திருக்க அவர் மேலே சொல்லலாமா என்று ஐயுற்றார். சத்யசேனை சொல்க என கையசைத்தாள். கனகர் தொடர்ந்தார்.

முன்பொரு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது, பேரரசி. அது அரசர் ருக்ஷரின் கோல் திகழ்ந்திருந்த காலம். அன்று அஸ்தினபுரி மிக சிற்றூர். இங்கிருந்து அரசர் ருக்ஷர் ஓர் அரசமண நிகழ்வுக்காக சிந்துநாட்டுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பும்வழியில் செம்புலத்தில் வழிதவறினார். நெடுந்தொலைவு வடமேற்காகச் சென்று காந்தாரப் பெருநிலத்தை நோக்கி செல்லும் பாதையை அடைந்தார். அங்கு அவர் கண்ட சோனக வணிகன் ஒருவன் அவர் வழிதவறிவிட்டதை அறிவித்து திரும்பும் வழியை கற்பித்தான். அதற்குள் அவர்களின் புரவிகள் மடிந்துவிட்டிருந்தன. வழியிலேயே அவர்கள் சுமையென எண்ணி செல்வங்களை வீசிவிட்டிருந்தனர். மெலிந்து கருகி கந்தலாடை அணிந்த இரவலர்போல் மாறிவிட்டிருந்தனர். அரசரின் இலச்சினையாலேயே அவரை வணிகன் அடையாளம் கண்டான்.

நீரும் உணவும் இன்றி களைத்திருந்த அரசரும் குழுவினரும் அவ்வணிகன் அளித்த உணவுடன் அவன் காட்டிய சிறுசோலை நோக்கி சென்றனர். அவர்கள் திரும்பச்சென்று அருகிருக்கும் சிற்றூரை அடைவதற்கு உதவும்பொருட்டு அவன் தன்னிடமிருந்த ஒட்டகங்களில் ஒன்றை அளித்தான். அதில் உணவையும் நீரையும் மட்டும் ஏற்றிக்கொண்டு அவர்கள் நடந்துசெல்லவேண்டுமெனப் பணித்தான். அதற்கு அரசர் அளித்த பொன்னை அவன் பெற்றுக்கொள்ளவில்லை. சோனக வணிகர்களின் நெறிகளின்படி அவர்கள் பாலைநிலச் சோலைகளிலோ ஊர்களிலோ வைத்து விற்கப்படும் பொருட்களுக்கே விலைபெற்றுக்கொள்ளவேண்டும். பாலையில் அலைபவரிடம் வணிகம் செய்வதென்பது விண்ணில் எரிவடிவாக எழுந்துள்ள தெய்வத்திற்கு உகக்காத பெரும்பழி.

அது முள்மரங்கள் சூழ்ந்த பாலைநிலக் காடு. அனலே மண்ணென்றானதுபோல் சிவந்த மென்பூழி சுழித்துச் சூழ்ந்த சோலைக்குள் சிறிய ஊற்றில் நீர் இருந்தது. உணவுண்டபின் சோலையில் இளைப்பாறுகையில் அவர்களுடன் சென்ற இளம் படைவீரனொருவன் நோயுற்றான். அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. நோயுற்றவனை அங்கிருந்து கொண்டு செல்ல எவ்வழியும் இல்லை. அவனை என்ன செய்வதென்று வினா எழுந்தது. வீரன் ஒருவனை துணைக்கு அங்கே விட்டு விட்டுச் செல்லலாம் என்றனர். அவ்வாறு வீரனை விட்டுச்சென்றால் அரசருடன் செல்லும் காவலரில் ஒருவன் குறைவான் என்று அமைச்சர் சொன்னார். அவர்களுக்குரிய உணவையும் அங்கே விட்டுச்செல்லவேண்டியிருக்கும். அவர்கள் எத்தனை நாட்கள் அங்கே தங்கவேண்டியிருக்குமென்றும் சொல்ல இயலாது.

சொல்முட்டி திகைப்பெழுந்த கணத்தில் அரசர் பிறிதொரு எண்ணமில்லாமல் வாளை உருவி வீரன் தலையை வெட்டி அங்கேயே வீழ்த்தினார். “நன்று, இச்சிக்கல் இங்கே முடிந்தது. கிளம்புவோம்” என்று கூறி ஒட்டகத்தை கிளப்பும்படி கைகாட்டினார். வீரர்கள் திகைத்துப்போயிருந்தாலும் மறு சொல் இன்றி உடன் கிளம்பிவிட்டனர். வெட்டுண்ட வீரனின் உடல் கிடந்து துள்ளியது. அவன் காலை உதைத்து எழுந்து விழுந்தபோது குருதி தெறித்து அங்கே பதினொரு சிறு கற்களாக பதிட்டை செய்யப்பட்டிருந்த தெய்வங்களின் மேல் பட்டது. அவர்கள் பன்னிரு ருத்ரர்கள். நெடுங்காலமாக விடாய்கொண்டு காத்திருந்த அவர்கள் அக்குருதியை பலியெனப் பெற்றனர்.

பலியால் எழுந்த பதினொரு ருத்ரர்களும் செம்முகிலென உயர்ந்து வானில் ஒரு பெருஞ்சிறைப் பறவையென மாறினர். நாடுகளையும் நதிகளையும் கடந்து அஸ்தினபுரியின் மேல் வந்து இறங்கி இங்கு அமைந்திருந்த அரண்மனையின் குவைமாடத்தின் உச்சிமேல் அமர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் நகரில் உள்ள அனைத்து கருக்களையும் உறிஞ்சிக்குடித்தனர். ஆயிரத்தெட்டு பெண்டிர் கருவழிந்தனர். ஆயிரத்தெட்டு பசுக்கள் கருக்களை இழந்தன. நூற்றெட்டு யானைகள் குருதி வழிய கரு உமிழ்ந்தன. நகரெங்கும் கருவறைக்குருதி பரந்திருந்தது.

பிறக்காது போன குழந்தைகளின் கண்கள் கரை வந்து விழுந்த மீன்கள்போல் துடித்தன என்று அச்செய்யுள் கூறுகிறது. வானிலிருந்து குருதி மழை பொழிந்து நகரை நிரப்பியது. அதில் அவ்விழிகள் கிடந்து துள்ளித்துடித்தன. சில விரல்கள் புழுக்கள்போல் நெளிந்தன. இருள் பரவி நகர் மூடியபோது பல்லாயிரம் குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்டன. அன்று இங்கிருந்த அந்தணர்கள் அஞ்சி வேதம் ஓதியபடி தங்கள் இல்லங்களுக்குள் மறைந்துகொண்டனர். தங்கள் வாள்களையும், வேல்களையும் பொருளற்றதாக்கும் எதிரியைக் கண்டு படைவீரர்கள் திகைத்தனர்.

நிமித்திகர் கவடி நிரத்தி மெய் கண்டு உரைக்க, தன் செயலால் நகர்மேல் பெரும்பழி வந்ததை உணர்ந்து திகைத்து, பின் உளம் கொந்தளித்து தன் உடைவாளை உருவி கழுத்தில் பாய்ச்சிக்கொள்ள சென்றார் அரசர். அமைச்சர் அவரை தடுத்தார். அவர் கைகளை பற்றிக்கொண்டு “அரசே, நகர் மேல் பழி வந்தது உங்களால் என்றால் அப்பழியை நீங்கள் அகற்றிவிட்டுச் செல்வதே முறையாகும். உயிரை மாய்த்துக் கொள்வதனால் உங்களுக்கு பெருமை சேராது. நீங்கள் இழைத்த பழி அவ்வண்ணமே நீடிக்கும். அதைச் சுமந்தபடி சென்று மூதாதையரை காணவேண்டியிருக்கும்” என்றார். “நான் என்ன செய்வது, அமைச்சரே?” என்று அரசர் விழிநீர் உகுத்தார். அமைச்சர் அவைகூட்டி ஒரு வழியை கண்டடைந்தார்.

அன்று இங்கே தீர்க்கசாரதர் என்னும் விழியிலாத முதுநிமித்திகர் இருந்தார். அவரை அழைத்து வரும்படி அமைச்சர் ஆணையிட்டார். தீர்க்கசாரதர் களம் வரைந்து கருநீக்கி கணித்து குறித்தபடி பழிநிகர் சடங்குகள் செய்யப்பட்டன. அரசர் அச்சடங்குகளைச் செய்ததும் இந்நகர் முழுக்க நிறைந்திருந்த இருள் அகன்றது. விண்ணில் இருந்து ஒளி இறங்கி அனைத்து மூலைகளையும் துலங்கச்செய்தது. இருண்ட மூலைகளில் திகழ்ந்த கருநாகங்கள் அகன்றன. மரக்கிளைகளில் சேக்கேறியிருந்த காகங்கள் மறைந்தன. நகர் மேல் ஏழு நாட்கள் மழை பொழிந்தது. வானம் இருளாமலேயே பெய்த மழையாதலால் ஒவ்வொரு துளியும் ஒளி கொண்டிருந்தது. வைரமணிக்கற்களென நீர்த்துளிகள் நகர் மேல் விழுந்து பளிங்கு வழிவதுபோல் ஓடைகளாயின என்று பாடல் கூறுகிறது.

ஏழு நாள் மழையில் முற்றாக கழுவப்பட்டது. பன்னிரு நாட்களில் முழுமையாக மீண்டது. நாற்பத்தொரு நாட்களில் நூற்றெட்டு பெண்கள் கருவுற்றிருக்கும் செய்தியை அரசர் அறிந்தார். நூற்றெட்டு நாட்களில் பன்னிரு யானைகளும் நாற்பத்தொரு பசுக்களும் கருவுற்றிருக்கும் செய்தி வந்தது. அதன்பின் அரசர் முடி துறந்து தன் மைந்தனை அரியணை அமர்த்தி கானேகி விண் புகுந்தார். அவருடைய முதல் மைந்தரான சம்வரணர் முடிசூடினார். தன் தந்தை இயற்றிய அச்சடங்கை ஏழாண்டுகளுக்கு ஒருமுறை அவர் விழாவென்றே தொடர்ந்தார். ஏழு தலைமுறைகளுக்குப்பின் அச்சடங்கு மறைந்து போயிற்று.

“சொல்லறிவர் நூற்றெட்டு வரிகள் கொண்ட செய்யுளாக இந்நிகழ்வை படித்து எடுத்துரைத்தார்” என்று கனகர் சொன்னார். “என்னென்ன சடங்குகள்?” என்று காந்தாரி கேட்டாள். “அவை செப்பேடுகளில் இல்லை. என்ன சடங்குகள் என்பதை முன்பு நிகழ்ந்தவற்றைச் சார்ந்து நாம் முடிவெடுக்கவும் இயலாது. கோள்கள் அமைந்துள்ள கோணங்களும் அன்றிருந்தோர் வாழ்வின் தருணங்களும் இணைந்து அச்சடங்குகளை முடிவெடுக்கின்றன. மருந்தும் சடங்கும் நாள்கண்டு கூறவேண்டும் என்பது தொல்கூற்று” என்று கனகர் கூறினார்.

காந்தாரி பெருமூச்சுவிட்டாள். “இத்தருணத்தில் நாம் இயற்றக்கூடுவதொன்றே, அரசி. தீர்க்கசாரதரின் வழிவந்த நிமித்திகர் எவரேனும் இன்று இருக்கிறார்களா என்று கேட்போம். அவர்கள் ஆணையிடுவதை செய்வோம்” என்றார். காந்தாரி “அவ்வண்ணம் எவரோ இருக்கிறார்கள் அல்லவா?” என்றாள். “ஆம், தீர்க்கசியாமர் என்னும் விழியிழந்த நிமித்திகர் இருக்கிறார். ஆனால் முதியவரல்ல” என்றார் கனகர். காந்தாரி “அவரை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய மூதாதையை கண்டிருக்கிறேன். இங்கு என் முதல் மைந்தன் பிறந்தபோது நாள்குறிக்க வந்தவர் அவர்” என்றாள். “அவரை அரண்மனைக்கு அழைத்து வர தாங்கள் ஆணையிட்டால் ஆவன செய்கிறேன். ஆவதென்ன என்று அவர் கூறட்டும்” என்று கனகர் கூறினார்.

முந்தைய கட்டுரைஅஞ்சலி : ‘ஜக்கு’ ஜெகதீஷ்
அடுத்த கட்டுரைஇந்தியப்பெருமிதம் – கடிதங்கள்