பனிமலையில்

தும் அகர் சாத் தேனே கா

[நீ என்னுடனிருப்பது வரைக்கும் அழகிய பாடல்களை பாடிக்கொண்டிருப்பேன்]

மகேந்தர் கபூர்

http://meaninngtranslation.blogspot.com/2015/12/tum-agar-saath-dene-ka-lyrics.html

திருவனந்தபுரத்தில் அன்றெல்லாம் இந்திப்படங்கள் கொஞ்சம் பழசாகி மீண்டும் வரும். ஸ்ரீகுமார்-ஸ்ரீவிசாக் இரு அரங்குகளில் ஒன்றில். கல்லூரி முதலாண்டில் திருவனந்தபுரம் சென்றபோது சும்மா ஒன்றுமேதெரியாமல் ஏறி அமர்ந்து பார்த்தபடம் ஹம்ராஸ். யார் நடித்தது,என்ன கதை, என்ன பின்னணி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் விந்தையான ஓர் அனுபவம். அந்தப்படம் வெறும் காட்சியனுபவமாகவே என்னுள் பதிந்துவிட்டது. அதை முழுக்கமுழுக்க கண்களாலேயே அறிந்தேன்

அந்தப்படத்தில்தான் ஒரு பாடலில் இமையமலையின் பனிமுகடுகளின் அழகைக் கண்டேன். தமிழ்ப் படங்களில் கண்டிருக்கிறேன். புகைப்படங்களிலும். ஆனால் விரிந்த திரையில், குளிரூட்டப்பட்ட அரங்கில் அதைக் கண்டது ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது. அன்றெல்லாம் இந்திப்படங்களில் முக்கியமான பாடல்களை மட்டும்  இடைவேளைக்குப்பின் மீண்டும் ஓடவிடும் வழக்கமிருந்தது..அரங்கிலிருந்த பெரும்பாலானவர்களுக்கு அப்பாடல் ஏற்கனவே நன்றாகத் தெரிந்திருந்தது என்பது அவர்கள் கூடவே பாடியதிலிருந்து தெரிந்தது.

நீண்ட இடைவேளைக்குப்பின் தற்செயலாகக் கண்டெடுத்து அதை மீண்டும் பார்க்கையில் அப்பாடலின் அமைப்பே அழகாக இருக்கிறது. ரயில்நிலையத்தில் இறங்குவதிலிருந்து அந்தியில் தோட்டத்தொழிலாளர்கள் செல்வது வரை ஒருநாள். அன்றைய தமிழ்ப்படங்களின் வண்ணப்பீரிடலுடன் ஒப்பிடுகையில் அழகான ஒளிப்பதிவு

ஏ நீல ககன் கி தலே [தர்திரி கா பியார் ஃபலே

[[நீலவானத்தின் கீழே மண்ணில் காதல் விரிகிறது]

மகேந்திர கபூர் 

ஹம்ராஸ் படத்தின் ஏ நீல் ககன் என்ற பாடல் அன்றே கேரளத்தில் மிகமிகப்பிரபலம். இன்றுகூட அதேயளவு புகழுடன் இருக்கிறது என்பதை சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளினூடாக அறிந்தேன்.இசையமைப்பாளர் ரவி பின்னாளில் ரவி பாம்பே என்றபேரில் மலையாளத்தில் பெரும்புகழுடனிருந்தார். மகேந்திர கபூரின் குரலுக்கு கேரளத்தில் அன்றுமின்றும் பித்தர்கள் மிகுதி.

என்னால் இப்போதும் அந்த முகங்களைக் கடந்து பின்னணியின் பனிமலைகளைத்தான் பார்க்க முடிகிறது. பனிமலைகளின் பாடலாகவே ஒலிக்கிறது

 

முந்தைய கட்டுரைமுகில்வண்ணம்
அடுத்த கட்டுரைஅபி- அந்தியின் த்வனி