தடம் இதழ்
தடம் இதழ் நின்று போகக்கூடும் என வந்த செய்திகளின் அடிப்படையில் தாங்கள் எழுதி இருந்ததைப் படித்தேன். எனக்கு அதன்முதல் இதழைப் பார்த்ததுமே ஐயம் எழுந்தது. இது நீடிக்குமா என நினைத்தேன். காரணம் அதன் பளபளப்பு; வழுவழுப்பான தாள்கள்.நேர்த்தியான அச்சமைப்பு வண்ணப்படங்கள்; படைப்புகளின் கனம் போன்றவைதாம்.
புதிதாகத் தோன்றுகிற எந்த ஒரு நவீன இலக்கியச் சிற்றிதழுமே மூன்று வகையான வாசகர்களையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.முதல் வகை நவீன இலக்கியத்தை நன்குக் கற்றுணர்ந்தவர்கள். அடுத்து நவீன இலக்கியத்துள் வந்து மரபையும் விட முடியாதவர்கள்;மூன்றாம் வகையினர் நவீன இலக்கியத்தை வாசித்தறிந்து அதனுள் வர இருப்பவர்கள். இவர்கள் மூவரையும் அனுசரித்தே தொடங்கும்இதழில் படைப்புகள் வருதல் நன்று. இவர்களில் ஏதாவது ஒருவரை மட்டும் அந்த இதழ் வசீகரித்தால் அது நீண்ட நாள் வராது. இவைதவிர வேறொன்று அதன் பொருளாதாரப் பலம். விகடன் குழுமத்திற்குப் பொருளாதாரம் பெரிய விஷயமில்லை. ஆனாலும் எத்தனைகாலம்தான் இழப்பைத்தாங்குவார் இந்த நாட்டிலே என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.
தடம் இதழ் உயிரெழுத்தைப் போல் புதிய எழுத்தாளர்க்கு வடிகால் அமைத்துத் தரவில்லை என்றாலும், காலச்சுவடு உயிர்மைபோல நான்கு கோடுகள் போட்டுக்கொண்டு அதிலேயே சுற்றவும் இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தவிர மேற்சொன்ன அந்தஇரண்டிற்கும் விளம்பரங்களும் புலம் பெயர்ந்தோரும் தோள் கொடுத்துத் தூக்கி நிற்கின்றனர். இதழில் ஏற்படும் சிக்கல்கள் பதிப்பகத்தால்தீர்த்துக் கொள்ளப்படுகின்றன.
தீராநதி இன்னும் இயங்குவதற்கான முக்கிய காரணம் அது மேலே நான் சொன்ன மூன்று வகையினரின் பசிக்கும் தீனிபோடுவதால்தான். அதில் இரா, முருகன், மார்க்ஸ், விக்ரமாதித்யன் ஆகியோரை ஒரே இதழில் பார்க்க முடிகிறது. நமக்குப் பிடித்தவரிடம்நாம் பேசிவிட்டுப்போகிறோம். சிறிது நாள் கழித்து இவரும் என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே என்று அடுத்த நிலைக்கு வாசகர்கண்டிப்பாகப் போய்த்தான் தீருவார். மேலும் தீராநதியில் தாளும் சுமார் ரகம்தான்.
நவீன வாசகர்களில் தாங்கள் குறிப்பிட்டு இருப்பதைப் போல் பெரும்பாலோர் இணைய வாசிப்ப்பில்தான் இருக்கிறர்கள். ஒருபதினைந்து சதவீதத்தினர் கூட இதழ்கள் வாங்குவதில்லை. ஆனால் நூல்கள் வாங்குகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்
நான் சிற்றிதழ் தொடங்க வேண்டும் என்று வருபவர்களிடம் எழுந்து விழும் எண்ண அலைகள் போல் இருக்காதீர்கள். தொடர்ந்துநடத்த இயலுமா என்று குடும்பத்திடம், நண்பர்களிடம் கேளுங்கள் என்றுதான் சொல்வேன். அடுத்து இதழ் அமைப்பு, படங்கள்,போன்றவற்றில் அகலக்கால் வைக்காதீர்கள் என்றுதான் சொல்வேன். சங்கு காலாண்டு இதழின் 170-ஆம் வெளியீட்டைக் கொண்டுவந்திருக்கும் என் அனுபவத்தில் தோன்றியதை எழுதி உள்ளேன்.
எப்படியோ சமீப காலங்களில் நின்று போன வார்த்தை, உயிர் எழுத்து, வரிசையில் சேருவேன் என அடம்பிடித்துத் தடம் போய்நின்று விட்டது.
வளவ. துரையன்
அன்புள்ள ஜெ,
தடம் இதழ் குறித்த உங்கள் பதிவை வாசித்தேன். வாசிப்பினில் நுழையும் ஒருவருக்கு அவ்வண்ண இதழ் கொடுக்கும் அனுபவம் அலாதியானது.
இதழில் எனக்கு மிகவும் பிடித்தது பக்க வரைமுறையில்லாத நேர்காணல். நான் அறியாத பலரின் நேர்காணல்களை வாசித்து, பின்னர் அவர்கள் படைப்புகளுக்குள் நுழைத்திருக்கிறேன். போதாமல் சிலரின் நேர்காணல்களை இணையத்திலும், புத்தகங்களாகவும் தேடி வாசித்துமிருக்கிறேன். கவிஞர்களின் நேர்காணல்கள் வேறெங்கும் இவ்வளவு விரிவாக வெளியாகியிருக்குமா எனத் தெரியவில்லை
சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், யுவனிகா ஸ்ரீராம், கலாப்ரியா என கவிஞனை கவிதையியல் பேசவிடும் அற்புத நேர்காணல்கள். வெய்யில், விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் புகைப்பட, வடிவமைப்புக் கலைஞர்களின் உழைப்பு ஒவ்வொரு கேள்வியிலும் வடிவமைப்பிலும் தெரியும். ராமச்சந்திர குஹா, பால் சக்காரியா உள்ளிட்ட பிறமொழிக்கலைஞர்களின் நேர்காணல்கள் அனைத்தும் அழகிய ஆவணம். தடம் நிறுத்தப்பட்டது வருத்தமே.
உடன் விகடன் குழுமத்திலிருந்து சுட்டி விகடன் உட்பட நான்கு இதழ்களை நிறுத்திவிட்டதாக அறிகிறேன். நம் பிள்ளைகளுக்கு அது மிகப்பெரும் இழப்பு. சிறுவர் இதழ்கள் மறைவது ஒரு சமூகத்திற்கு நல்லதல்ல.
சா.விஜயகுமார்.