இந்துமத விவாதங்கள்

அன்புள்ள ஜெ

நான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம்

ஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சமீபத்தைய விவாதங்களைச் சொல்கிறேன். இந்துமதம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் என்பதனால் பழ கருப்பையா, சுகி சிவம் போன்றவர்களை மிகக்கேவலமாக வசைபாடுகிறார்கள். உள்ளே போய் பார்த்தால் அவர்களே ஒருவரை ஒருவர் வசைபாடிக்கொள்கிறார்கள். சிறு குழுக்களாக நின்று வெறுப்பை உமிழ்கிறார்கள். இவர்களை புரிந்துகொள்ள அடிப்படை என்ன? நான் இதை உங்களிடம் கேட்கக்கூடாது என எண்ணினேன். சமீபத்தில் வாசித்த ஒரு கட்டுரையே இதை உங்களிடம் கேட்க வைத்தது

ஆர். ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்

இந்த வகையான விவாதங்களைப் புரிந்துகொள்ள முதலில் இங்குள்ள கருத்துத் தரப்புக்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்துமதம் என நாம் இன்று சொல்வது ஒருபோதும் ஒற்றைப்படையான ஒரு கருத்துத்தரப்பாக, அல்லது அமைப்பாக இருந்தது இல்லை. உள்ளூர முரண்பட்டு கடுமையாக விவாதித்துக்கொள்ளும் மாறுபட்ட தரப்புக்களின் பெருந்தொகையாக, ஒருவகை கருத்துவெளியாகவே இருந்துள்ளது. இந்தப் பன்மைத்தன்மையை புரிந்துகொண்டாலொழிய நாம் இந்துமதத்தையும் புரிந்துகொள்ளமுடியாது. அதன் உள்விவாதங்களையும் புரிந்துகொள்ளமுடியாது.

இந்துமதம் என நாம் சொல்வது இந்தியாவில் தொல்பழங்காலம் முதல் இருந்துவந்த வெவ்வேறு தொல்குடிவழிபாடுகள் மற்றும் அவை திரட்டியெடுத்த மெய்ஞானங்கள் ஒன்றுடன் ஒன்று விவாதித்தும் இணைந்தும் உருவான ஒரு அறிவுப்பரப்பு. அந்தத் தரப்புகள் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக்கொண்ட பொதுக்கூறுகளால் ஆனவை. அதேபோலவே தங்கள் தனித்தன்மையைப் பேணிக்கொள்ளவும் முயல்பவை. இச்சித்திரத்தை நாம் வரலாற்றுரீதியாக உருவாக்கிக் கொள்ளமுடியும். அதற்கு சென்ற நூறாண்டுகளில் இந்துத் தொன்மங்களையும் வழிபாட்டுமுறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள்.

இந்த வரலாற்றுரீதியான அணுகுமுறைக்கே எதிர்த்தரப்புக்கள் உண்டு. முதன்மையாக இரண்டு. ஒன்று மரபார்ந்த மதநிறுவனங்களையும் மதநம்பிக்கைகளையும் சார்ந்தவர்களின் தரப்புக்கள். இன்னொன்று, இந்துத்துவ அரசியல்வாதிகளின் தரப்பு.

மரபார்ந்த மதநம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை அவர்களின் தெய்வங்களும் சரி, மரபுகளும் சரி சனாதனமானவை, அனாதியானவை, தெய்வங்களால் உருவாக்கப்பட்டவை, மெய்யாசிரியர்களால் விளக்கப்பட்டு வரையறைசெய்யப்பட்டவை. அவை காலத்தில் பரிணாமம்கொண்டு வந்தவை என்றோ வெவ்வேறு பண்பாட்டுக்கூறுகளின் முயங்கல்வழியாகத் திரண்டவை என்றோ அவர்களால் ஏற்கமுடியாது. அவர்கள் அதை மதநிந்தனை என்றே கருதுவார்கள். ‘பல்லும் நகமும்’ கொண்டு எதிர்ப்பார்கள். அது அவர்களின் நம்பிக்கை.

நம்பிக்கைகளுடன் விவாதிக்கக்கூடாது என்பது என் நிலைபாடு. ஏனென்றால் நம்பிக்கையும் ஆராய்ச்சியும் நேர் எதிரானவை. நம்பிக்கையாளர்கள் ஆராய்ச்சி என்னும் அணுகுமுறையையே எதிர்க்கையில் எதை விவாதிக்கமுடியும்? அவ்வாறு எதிர்க்காமல் அவர்களால் செயல்படவும் முடியாது.

அவர்களின் ஆராய்ச்சி என்பது அவர்களின் மதமரபுகளில் மூலநூல்களும் ஆசிரியர்களும் என்ன சொல்லியிருக்கிறார்கள், சடங்குகளும் ஆசாரங்களும் சரியான வடிவில் என்ன என்பதாகவே இருக்கமுடியும். இரண்டு தலைப்புக்களிலேயே அவர்களின் ஆராய்ச்சி இருக்கும். நடைமுறைகள்சார்ந்த நம்பிக்கைகள் [சம்பிரதாயங்கள்] அவற்றுக்குரிய தொல்சான்றுமுறைகள் [பிரமாணங்கள்] ஆகியவை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். அவற்றைப்பற்றி அறிய அவர்கள் உதவியானவர்கள்.

இந்துத்துவ தரப்பினர் இந்துமதத்தின் வேறுபாடுகள் முரண்பாடுகள் அனைத்தையும் மழுங்கடித்து இந்துமதம் என்னும் ஒற்றைப்பரப்பை உருவாக்கமுயல்பவர்கள். இவர்களுக்கு மதமோ ஆன்மிகமோ உண்மையில் முக்கியமே அல்ல. இவர்களுக்கு அரசியலும் அதனுடாக வரும் அதிகாரமுமே முக்கியமானவை. அதற்கான களமே மதமும் ஆன்மிகமும். அதற்கான கருவிகளைத் தேடியே அவர்கள் மத, ஆன்மிக தளங்களுக்குள் நுழைகிறார்கள். அவர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களின் பரப்பாகவே மதத்தைப் பார்க்கிறார்கள். அது எந்த அளவு சமப்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அளவு சிக்கலற்றது. ஆகவே இடைவெளியே இல்லாத ‘தரப்படுத்தல்’ மட்டுமே அவர்களின் பணியாக இருக்கும்.

இத்தரப்படுத்தலால் இந்துமதம் போன்ற பிரிந்துபிரிந்து வளர்ந்து செல்லும் தன்மைகொண்ட மதம் இறுக்கமாக அமைப்பாக ஆகிவிடுவதைப்பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. உள்விவாதங்கள் மறுக்கப்படும்போது காலப்போக்கில் ஒற்றை அதிகார மையமாக இது மாறிவிடும் என்றும் அவர்கள் அறிவார்கள், அதையே அவர்கள் விழைகிறார்கள். மூர்க்கமான விவாத மறுப்பு இந்துமதத்தின் ஞானம் செயல்படும் முறைமைக்கே எதிரானது என அறிவார்கள், ஞானம் செயல்படக்கூடாதென்றே எண்ணுகிறார்கள். அவர்கள் இந்துமெய்ஞான மரபின் எந்த ஞானியையும் எந்த பேரறிஞரையும் தங்கள் அரசியலுக்கு ஒத்துவராதவர்கள் என்றால் இழிவுசெய்ய, வசைபாட எந்தத் தயக்கமும் கொள்வதில்லை. அவர்களும் வரலாற்றுரீதியான அணுகுமுறையை அஞ்சுகிறார்கள். வசைபாடியே அதை ஒழிக்க நினைக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை மதநிறுவனங்கள் சார்ந்த, ஆசாரத்தில் ஆழமான பிடிப்புள்ள பழைமைவாதிகளை மதிக்கிறேன். அவர்களே மெய்யான தூய்மைவாதிகள். அவர்களுக்கு எந்தக்கருத்துச்சூழலிலும் தவிர்க்கமுடியாத இடமுண்டு. அவர்கள் சென்றகாலத்தின் பிரதிநிதிகள். மரபின் தொடர்ச்சிகள்.நிலைச்சக்திகள். அவர்கள் இல்லையேல் எந்த மத- தத்துவ – ஆன்மிக அமைப்பும் அடித்தளமில்லாமல் காகிதவீடுபோல பறந்துசெல்லும். ஆனால் அரசியல்ரீதியாக மத – ஆன்மிக செயல்பாடுகளை தரப்படுத்த முயல்பவர்களை எதிர்க்கிறேன். அவர்கள் காலப்போக்கில் இந்துமெய்யியலின் அடிப்படையையே அழித்துவிடுவார்கள். இதையே எப்போதும் சொல்லிவருகிறேன்.

ஒட்டுமொத்தமாக மதம்சார்ந்த விவாதங்களில் நம் சூழலில் கேட்கும் குரல்கள் என்னென்ன? ஐந்து பெருந்தரப்புக்களாக இவற்றை ஒழுங்கமைத்துப் பார்க்கலாம்.

ஒன்று இந்துமதத்தின் ஏதேனும் ஒரு பிரிவின்மேல் ஆழ்ந்த பற்றுகொண்டு அதில் ஈடுபடுபவர்கள் பிறரை மறுத்து எழுப்பும் விவாதங்கள். உதாரணமாக, சைவ வைணவ பிரிவுகளின் குரல்கள்.. அவை நம்பிக்கை வெளிப்பாடுகள், ஆகவே பொதுவிவாதத்திற்குரியவை அல்ல என்பதே என் எண்ணம். ஆனால் அவ்விவாதம் எழுவதை தடுக்கவும் முடியாது. ஏனென்றால் அது நம்பிக்கையின் இயல்பு. அந்த விவாதம் நாகரீக எல்லையைக் கடக்காதவரை, இந்துமத எல்லைகளை இழிவுசெய்யாதவரை நன்று.

இரண்டாம்வகை விவாதம்  இந்துத்துவ அரசியலாளர்களுடையது. அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒற்றைப்படையான ஒரு இந்துமத உருவகத்திற்கு எதிரானது என அவர்கள் எண்ணும் அனைத்தையும் வசைபாடி மறுப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அனைத்துக்குரல்களையும் எதிரிக்குரல்கள் என்று சித்தரிப்பது அவர்களின் பாணி. இவர்களுக்கு மதப்பிரிவுகளில் நம்பிக்கைகொண்டவர்களும் எதிரிகள்தான். மதத்தை ஆய்வுநோக்கில் அணுகுபவர்களும் எதிரிகள்தான்.

மூன்றாவது தரப்பு, இந்தியவியலாளர்களுடையது. இந்தியவியல் என்பது இந்தியவரலாறு, தத்துவம், மெய்யியல் ஆகியவற்றை புறவயமான ஓர் அறிவுத்துறையாகப் பயிலும்பொருட்டு ஐரோப்[ப்பிய அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. மோனியர் விலியம்ஸ் முதல் நார்மன் போலக்,வெண்டி டானிகர் வரை அதன் அறிஞர் நிரை மிகப்பெரியது. இந்துமெய்யியலை கண்டடைய, தொகுக்க அவர்கள் எடுத்த முயற்சி போற்றற்குரியது. அவர்கள் இல்லையேல் இந்தியமெய்ஞானம் அழிந்திருக்கும். இந்திய மெய்ஞானம் ஒற்றை கருத்தமைப்பாகத் தொகுக்கவும்பட்டிருக்காது.

அவர்களுக்குள் பலதரப்பினர் உண்டு. பலகருத்துநிலைகளை அவர்கள் முன்வைப்பதுண்டு. அது சார்ந்த விவாதங்களும் உண்டு. அவர்கள் ஒவ்வொருவரையும் பயின்று அவர்களின் கருத்துக்களை புறவயமாக பரிசீலித்து ஏற்றுக்கொள்ளுவதே நாம் செய்யவேண்டியது.

நான்காவது, மதத்தை அழிக்க எண்ணும் நாத்திக அரசியல் தரப்பு. இவர்களுக்கு மதம் என்பது மூடநம்பிக்கை. பழைமை. நிலப்பிரபுத்துவம். அதை அழிக்கும் அரசியலே விடுதலைக்குரியது. இவர்களில் பல உட்தரப்பினர் உண்டு. திராவிட இயக்கம்போல மதத்தை ஒட்டுமொத்தமாக வெறும்மூடநம்பிக்கை என எதிர்ப்பவர்கள். மதம்சார்ந்த அறிதல்களோ அதற்கான அறிவார்ந்த முயற்சியோ இவர்களுக்கு இருப்பதில்லை. இன்னொரு தரப்பினர் இடதுசாரிகள். இவர்களில் மதத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் ஒரு முரணியக்கப் பரிணாமத்தால் உருவாகி வந்தது என கருதும் பேரறிஞர்கள் முதல் எளிய தொண்டர்கள் வரை உண்டு. மூன்றாம் தரப்பு அயோத்திதாசர்- அம்பேத்கர் வழிவந்த தலித் ஆய்வாளர்கள். இவர்களுடையது சமூகவியல்கோணத்தில் மட்டுமே இந்துமதத்தை அணுகுவது.

திராவிட இயக்கத்தவருக்கு இந்துமதம் பற்றிய அறிதல்கள் பெரும்பாலும் முழுச்சூனியம். அவர்கள் தங்கள் கருவிகளை இடதுசாரிகளிடமிருந்தும் அயோத்திதாசர்- அம்பேத்கர் போன்றவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்கிறார்கள். திராவிட இயக்கத்தினரின் மதம்சார்ந்த ஆய்வுகளும் கருத்துக்களும் எவ்வகையிலும் கவனத்திற்குரியன அல்ல. தலித் ஆய்வாளர்களின் மதம்சார்ந்த கருத்துக்கள் இந்துமதம் குறித்த சித்தரிப்பில் விடுபட்டுவிடும் சில முக்கியமான தளங்களை கருத்தில்கொள்வதற்கு மிகமிக இன்றியமையாதவை.

மார்க்ஸிய நோக்கில் மதத்தை ஆராய்பவர்களின் குரல்களை மதத்தை அறியவிரும்புபவன் ஒருபோதும் தவிர்க்க முடியாது. அவர்களின் ஆய்வுக்கருவிகள் புறவயமானவை. சான்றுகளை தொகுப்பதற்கு அவர்கள் கைக்கொள்ளும் முறைமைகள் இந்தியவியலாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவை. அவர்கள் ஒருவகையில் இந்தியவியலாளர்களின் நீட்சிகள். அவர்களின் பார்வைக்கோணத்தை மறுப்பதற்குக்கூட அவர்களைப் பயின்றாகவேண்டும். இந்துமெய்மரபின் உள்ளடுக்குகளை, அவை உருவாகிவந்த சமூகப்பொருளியல் சூழலை, அவற்றுக்கிடையேயான முரண்பாட்டையும் விவாதங்களையும் , அவற்றின் தத்துவார்த்தமான மதிப்பை புரிந்துகொள்ள இவர்கள் இன்றியமையாதவர்கள். எந்தத் தரப்பினருக்கானாலும்.

ஐந்தாவது தரப்பு, மாற்றுமதத்தினர். இவர்களுடையது பெரும்பாலும் மதவெறி.தன் மதமே உயர்ந்தது, அதை நிறுவுவது மதக்கடமை என்னும் எண்ணம். தமிழ்ச்சூழலில் இவர்கள் தங்களை திராவிட இயக்க ஆதரவாளர்களாகவோ தலித் இயக்க ஆதரவாளர்களாகவோ  மாற்றுருக்கொண்டு முன்வைப்பார்கள். சிலர் அரிதாக தங்களை இடதுசாரிகளாகச் சித்தரித்துக்கொள்வார்கள்.இவர்கள் அடையாளம்கண்டுகொள்ளப்படவேண்டியவர்கள்.

இவற்றில் நீங்கள் எங்கே நின்றிருக்கிறீர்கள், உங்கள் அணுகுமுறை எதனுடன் ஒத்துப்போகிறது என்பதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். அது இல்லாமல் இப்படி அவ்வப்போது எழும் பொதுவான விவாதங்களில் ஈடுபடுவதும் நிலைபாடு எடுப்பதும் குழப்பத்தையே உருவாக்கும். உங்கள் நிலைபாடும் எதிர்வினையும் தெளிவாகியது என்றால் அத்தனைபேரையும் ஒட்டுமொத்தமாக ‘இந்துமதம் பற்றி பேசுபவர்கள்’ என்னும் அடையாளத்திற்குள் அடைக்கமாட்டீர்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைமோடி முதலை பாலா- கடிதம்
அடுத்த கட்டுரைபாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம்