விரல்- கடிதங்கள்

.

விரல்

தலைமறைவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

கடந்த மாதம் உங்களுக்கு உடல் காயம் ஏற்பட்ட போது ‘சீக்கிரம் நலம் பெறுங்கள்’ என்று கடிதம் எழுத நினைத்தேன். ரொம்ப சம்பிரதாயகமாக இருக்கும் என்று எழுதவில்லை. ‘விரல்’ கட்டுரையில், உங்களுக்கு வந்த வசை கடிதங்கள் பற்றி படித்த போது ‘யார் இவர்கள்.. எப்படிப்பட்ட மனோநிலை கொண்டவர்கள்..’ என்று திகைப்பு ஏற்படுகிறது. இந்த பரிதாபத்திற்குரியவர்களை கண்டு உங்களை போல் நகைப்புடன் நகர்ந்து சென்று விடுவதுதான்’ சரி. சமிபத்தில் you tubeல், ஓர் மேடை பேச்சில் ஜெயகாந்தன் குறிப்பிட்ட பாரதியாரின் வரிதான் மனதில் தோன்றியது – ‘பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!’. விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்!

 

இப்படிக்கு,

டி. சங்கர்

 

அன்புள்ள ஜெ,

 

இணையத்தில் இந்த புளிச்சமாவு வசைகளை எழுதுபவர்களை நானும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எந்த ஒருவிஷயத்திலும் அறிவார்ந்ததும் நாகரீகமானதுமான எதிர்வினைகளைப் பதிவுசெய்யாத ஒரு கூட்டம் அது. அவர்களுக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும். கூடவே மதக்காழ்ப்பு. கொஞ்சபேருக்கு அரசியல் காழ்ப்பு. அதை எப்படிக் கடந்துசெல்வது என நீங்கள் காட்டுகிறீர்கள்

நன்றி ஜெ

அரசு செல்வராஜ்

 

அன்புள்ள ஜெ,

 

காழ்ப்பை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வதைப்பற்றிய அந்த தாயளி கட்டுரையை பலமுறை வாசித்துச் சிரித்திருக்கிறேன். அதைப்போல இந்தக் குறிப்பை எடுத்துக்கொள்ள முடிவதில்லை. கைவலியை அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியாது. உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்

 

சரவணக்குமார்

இந்தநாளில்…

 

முந்தைய கட்டுரைபோதையும் தமிழகமும்
அடுத்த கட்டுரைஅமேசான்