பகுதி இரண்டு : குருதிமணிகள் – 1
கனகர் வழிதவறிவிட்டிருந்தார். அதை தெற்குக் கோட்டையின் கரிய பெருஞ்சுவரில் முட்டிக்கொண்டு நின்றபோதுதான் அவர் உணர்ந்தார். முதலில் அவர் அதை கோட்டை என்றே உணரவில்லை. இருளென்றே எண்ணினார். அணுகுந்தோறும் இருள் அவ்வண்ணமே நின்றிருப்பதுகூட விழிகளுக்கு விந்தையாகப் படவில்லை. மிக அருகே சென்று அவ்விருள் பரப்பின் பருபருப்பை விழிகளால் உணர்ந்த பின்னரே அது சுவரென அறிந்து புரவியை நிறுத்தினார். மூச்சிரைத்தபடி அதை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். சுவர் காற்றில் திரைச்சீலை என ஆடுவதாகத் தோன்றியது. அது தன் களைப்பால் தோன்றுவது என உணர்ந்து கண்களை மூடிக்கொண்டார். கண்களுக்குள்ளும் அவ்விருள் தேங்கியிருந்தது.
அது எந்த இடம் என உய்த்தறிய அவர் முயன்றார். ஆனால் எத்தனை எண்ணியும் சித்தம் திகைத்து திசைகளில் முட்டி நின்றிருந்தது. தெற்குதிசைக்கு கிளம்பியதை எண்ணி எண்ணித்தான் நினைவிலிருந்து எடுத்தார். எனில் இது தெற்குக் கோட்டை. தென்மேற்கா தென்கிழக்கா? எந்த அடையாளங்களும் தென்படவில்லை. அங்கிருந்த குறுங்காடும், அச்சாலையின் இருபுறங்களிலும் இருந்த கைவிடப்பட்ட சிறுவீடுகளும் கல்லால் ஆன சிறிய துர்க்கையன்னையின் ஆலயமும் எந்தச் செய்தியையும் அளிக்கவில்லை. ஏதேனும் ஓர் அடையாளத்திற்காக அவர் விழிகளை சுழற்றினார். அனைத்துமே நன்கறிந்தவை, ஆனால் எந்தத் தனியடையாளமும் அற்றவை.
அஸ்தினபுரியின் ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு இல்லமும் ஒவ்வொரு சாலையும் பிறிதொன்றைப்போலவே உள்ளன. சிதல்கள் தங்கள் கூடுகளை எப்படி ஒன்று பிறிதைப்போலவே கட்டிக்கொள்கின்றன, ஏன் அத்தனை தேன்கூடுகளும் ஒன்றென்றே தோன்றுகின்றன என்று அவர் வியந்ததுண்டு. அவற்றின் உடலென்றான அகம் பிறிதொன்றை இயற்றும் ஆற்றல்கொண்டது அல்ல. மானுட உள்ளம் உடலைக் கடந்து தானெழுவது, உடலை ஆள்வது என்று அவரே அதற்கு விளக்கமும் அளித்துக்கொண்டிருந்தார். ஆனால் மானுடரும் அனைத்தையும் ஒன்றுபிறிதென்றே அமைத்துக்கொள்கிறார்கள். இந்த இல்லம் அஸ்தினபுரியின் அத்தனை இல்லங்களையும் போலத்தான் இருக்கிறது. தனியடையாளம் என்று நாம் எண்ணுவதெல்லாம் மிகமிகச் சிறிய வேறுபாடுகளைத்தான்.
மானுடரால் அவ்வண்ணம்தான் இயலும். ஒரே காலகட்டத்தில் அமைவன ஒன்றுபோலிருக்கின்றன. ஒரே இடத்திலமைபவை ஒன்றுபோலிருக்கின்றன. அகன்று நோக்கினால் அந்நகரமே ஒன்றுபோல் அமைந்தவற்றாலானது. மலைமேல் நின்று நோக்கினால் அனைத்து நகரங்களும் ஒன்றுபோலவே தோன்றக்கூடும். விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு அனைத்து மானுட அமைப்புக்களும் ஒன்றே என்று தோன்றக்கூடும். அனைத்து மானுட முகங்களும் ஒன்றென்றே தோன்றக்கூடுமா என்ன? அனைத்து மானுடரும் ஒற்றை உருவம் கொண்டவர்கள்தானா?
எதிரே ஒரு சூதர் தலையாட்டி பாடியபடியே வந்தார். கனகர் அவரிடம் “சூதரே, இது எந்த இடம்?” என்றார். அவர் மகிழ்ச்சியுடன் தலையசைத்து “நன்று… நாம் ஒன்றாக உண்போம். ஒன்றாகப் புணர்வோம். ஒன்றாக இருப்பதே நம்மை மகிழ்ச்சியாக்கும்… ஏன் தனிமைகொள்ளவேண்டும்?” என்றார். கனகர் திகைத்து பின் அவருடைய பதறும் விழிகளை கூர்ந்து நோக்கி “இது அரசாணை. இந்த இடம் என்னவென்று சொல்லுங்கள்” என்றார். “ஏன் என்றால் நாம் ஆணவம் கொண்டிருக்கிறோம். நாம் வைத்திருக்கும் அந்தச் சிறிய உறுப்பைக்கொண்டு உலகையே அளக்க விழைகிறோம்.”
அவர் காற்றோசையுடன் நகைத்து “சுங்கச்சாவடியில் முத்திரையிடும் மரத்துண்டு அது என எண்ணுகிறார்கள் சில ஆண்கள். அதைக்கொண்டு ஒருமுறை அழுத்தி எடுத்தால் அந்தப் பெண் அவனுக்குரியதாகிவிடுவாளாம்… எனில் அந்த மாளிகையை அதைக்கொண்டு முத்திரையிடு, மூடா!” என்றார். கனகர் சலிப்புடன் தலையசைத்தார். “அரசே, போரில் எத்தனை ஆயிரம் முத்திரைக்கோல்கள் அவ்வண்ணம் மண்படிந்திருக்கும்? அவற்றைப்பற்றி ஏதேனும் செய்தி உண்டா?” என்றார். “செல்க!” என்றார் கனகர். “வெடிப்பொருளைப் பற்றவைக்கும் கரிய சிறு திரிபோல் அது மானுடரில் அமைந்துள்ளது என்று என் ஆசிரியன் சொன்னான். அது சிதையேறி அனல் பற்றிக்கொள்ளும்போது நீலச்சுடர் எரிவதுண்டா?”
அவருடைய முகம் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. வாயில் மாறாத இளிப்பு தங்கியிருந்தது. கைகள் எதையோ காற்றில் சுழித்துச் சுழித்து அலைபாய்ந்தன. “தேவர்கள் மானுடரை விழிகளைக்கொண்டு அடையாளம் காண்கிறார்கள் என்பார்கள். ஆனால் நான் அறிவேன், பாதாளமூர்த்திகள் மானுடரை அவர்களின் காமச்சிற்றுறுப்பைக்கொண்டே அடையாளம் காண்கிறார்கள். அது மெய்யாகவே ஒரு சிறு கைப்பிடி. அதைப் பிடித்துத் தூக்கி எடுக்கிறார்கள்… ஆம்!” அவர் மீண்டும் நகைத்தார். “அது எப்போதுமே அவர்களை அறிந்திருந்தது… அது மானுட உடலில் இருந்தாலும் அவர்களுக்கு உரியது… ஏனென்றால்…”
கனகர் அத்தனை பொழுது அந்தப் பித்தை ஏன் அப்படி நின்று செவிகொண்டோம் என தன்னை எண்ணியே வியந்தார். புரவியைத் திருப்பி வந்த வழியிலேயே செல்லத் தொடங்கினார். அவர் பின்னாலிருந்து உரக்க கூவினார் “பல்லாயிரம் பேரின் காமச்சிற்றுறுப்புகள்… பல லட்சம். அவற்றை மட்டும் வெட்டிக் கொண்டுவந்திருக்கலாம். அவற்றை இந்நகரில் நடலாம். கருணைக்கிழங்கின் முளைக்கண் போன்றவை அவை. இங்கே அவை முளைத்தெழும். நான் அறிவேன், அகன்ற தளிரிலைகளுடன் அவை முளைக்கும். கருணைக்கிழங்கின் தண்டுபோலவே இருக்கும். ஆனால் கரியவை… அவை பெருமரங்களாக இந்த நகரில் பெருகி நிழல் பரப்பும். இங்கே நாங்களெல்லாம் அதன்கீழ் அமர்ந்து…”
கனகர் தன் உடல் வியர்வைகொண்டிருப்பதை கண்டார். என்ன ஆயிற்று? அச்சொற்கள் தானறியாத எங்கோ சென்று தொடுகின்றன. எதையோ அசைத்துவிட்டிருக்கின்றன. இல்லை, இப்போது நான் தேடுவது வழியை மட்டுமே. ஆனால் வழிகள் என எதுவுமே அகத்தே எழவில்லை. அவர் அஸ்தினபுரியில் எப்போதுமே வழிகளை நினைவுகூர்ந்தவர் அல்ல. கால்கள் நடக்கத்தொடங்கிய நாட்கள் முதல் அந்நகரின் தெருக்கள் அவருக்குரியவையாக இருந்தன. இளமையில் மொத்த நகரிலும் அவர்கள் ஒளிந்து விளையாடுவதுண்டு. வேள்விச்சாலைகள் முதல் அங்காடிகளின் இருண்ட சிறுசந்துகளுக்குள் வரை ஒளிந்துகொள்வார்கள். ஒளிந்துகொள்பவனை தேடிச்சென்று பிடிப்பதில் அவர் தேர்ச்சி கொண்டிருந்தார். ஒளிந்துகொள்பவனாக நின்று அந்நகரை அவர் தன்னுள் எழுப்பிக்கொள்வார். அவன் சென்றவழி நத்தையின் ஒளித்தடம் என தெரியும். அங்கே சென்று அவனை பற்றிக்கொள்வார்.
ஒரு கட்டத்தில் அவர் நகரை உணர்வதையே மறந்துவிட்டிருந்தார். செல்லவேண்டிய இடம் தோன்றியதுமே கால்கள் வழியை தெரிவுசெய்துவிடும். நினைத்தபோது சென்றெய்தும் அந்த நகருக்கு அப்பால் அவருடைய சித்தம் சென்றதுமில்லை. சிறுவர்கள் வழிதேடுவதே இல்லை. அவர்களின் உவகையும் கொப்பளிப்பும் வழிகளை அளிக்கின்றன. காற்றுக்கு கதவுகள் திறப்பதுபோல. இச்சாலைகளில் ஏன் ஒரு குழந்தைகூட இல்லை? சிறுவர்கள் இல்லாமல் இச்சாலைகளை நான் கண்டதே இல்லை. ஏனென்றறியாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள். எண்ணியிராமல் கூச்சலிடுவார்கள். அவர்களெல்லாம் எங்கே? உணவுதேட அன்னையருடன் காடுகளுக்குள் சென்றுவிட்டிருக்கக் கூடும்.
இத்தெருக்களில் கட்டடங்களும் தூண்களும் அவ்வண்ணமே உள்ளன. மண்ணும் கல்லும் மாறவில்லை. ஆனால் அவை அனைத்துமே பிறிதாக ஆகிவிட்டிருந்தன. இவற்றை சமைத்திருந்தவர் மானுடரே. பொருட்கள் மானுடரால்தான் தங்களைக் கோத்து தெருவென்றும் நகரென்றும் துலக்கிக்கொண்டன. இந்நகர் இத்தனை ஒழிந்து கிடக்குமென என் அகம் எண்ணியதே இல்லை. இதை எதிர்கொள்ள இயலாது அது உள்வாங்கிக்கொண்டுவிட்டிருக்கிறது. இதை நோக்குவதையே மறுக்கிறது. எனவேதான் எந்த அடையாளத்தையும் பெற்றுக்கொள்வதில்லை.
முதிரா இளமையில் அந்நகரின் பரத்தையர் இல்லங்கள் வழியாக உலவிக்கொண்டிருந்தது அவர் அகம். கற்கையிலும் பணியாற்றுகையிலும் அவர் அகத்தில் ஒரு தன்னுணர்வு அப்பாதைகளை சிக்கலான நூலிழைகளை பிரித்து நீவி எடுப்பதுபோல ஆராய்ந்துகொண்டிருந்தது. கொடிகளைப் பற்றியபடி சென்று கிழங்கைக் கண்டடைவதுபோல அங்குள்ள சாலைகளை தொட்டுத்தொட்டுச் சென்று அவற்றின் இறுதியில் உகந்த பெண்ணை கண்டடைவார்.
அப்பெண்ணை விழவுகளில் கண்டிருப்பார். சாலைகளில் கடந்திருப்பார். அங்காடியில் பொருட்களுக்கு நடுவே பார்த்திருப்பார். மிதக்கும் முகங்களின் அலைகளில் ஒரு துளி. ஓர் அசைவின் கீற்று. ஒரு விழிமின். ஆனால் வழி ஒன்று உள்ளே தெளியும். அதனூடாகச் சென்று அவளை அடைந்த பின்னரே கால்கள் கிளம்பும். அவளைச் சென்றடையும்போது அவள் எப்படி வந்தீர்கள் என்று எப்போதுமே கேட்பாள். இந்நகரில் நானறியாத ஏதுமில்லை என்று அவர் மறுமொழி சொல்வார். அவள் நகைத்து முழு நகரையுமா என்பாள். இந்நகரென்றானது என் அகம் என்று அவர் மறுமொழி சொல்வார்.
சென்ற பிறப்பில் இந்நகரில் ஒரு பூனையாக இருந்தேன். பூனையறியாத பாதைகள் இல்லை. குதிரையின் வழி கண்களில். நாயின் வழி மூக்கில். பசுவின் வழி செவிகளில். பூனையின் வழி இருப்பது அதன் ஆத்மாவில். ஆகவே அதன் வழியை அதுவேகூட அறிந்திருக்காது. முந்தைய கணத்தை வைத்து அடுத்த கணம் அது எங்கிருக்கும் என கணிக்க முடியாது. விலங்குகள் அந்தந்த கணங்களில் வாழ்பவை. பூனை அடுத்த கணத்தில் வாழும் சித்தம் கொண்டது. அதன் உடல் அக்கணத்திலிருந்து அடுத்த கணம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அவர் சுட்டிக்காட்டியதும் மஞ்சத்தறையில் இருந்த பூனை எழுந்து நாவால் மூக்கை நக்கி மெல்லிய ஓசை எழுப்பியது.
பரத்தையர் இல்லங்களில் பூனைகள் ஏன் பெருகியிருக்கின்றன என அவர் எண்ணிக்கொண்டார். அவர் பூனைகளில்லாத பரத்தையர் இல்லங்களை கண்டதே இல்லை. நாய்கள் இருப்பதையும் கண்டதில்லை. கண்டதை கண்டதுமே கூவியறிவிக்கும் நாய்களை பரத்தையர் வெறுப்பதில் பொருளுண்டு. அயலாரை வெறுப்பவை அவை. ஆனால் பூனைகளுக்கு அயலாரும் அணுக்கரும் என எவருமில்லை. அவை மானுடரை உண்மையில் பார்க்கின்றனவா என்றே ஐயம் எழும். அவை வாழும் உலகம் மானுடரின் உலகுக்கு நடுவே மானுடர் அறியாமல் பின்னப்பட்டிருக்கிறது.
அவர்களுக்கு அந்தச் சிறுவிலங்கின் மென்மை பிடித்திருக்கலாம். எங்கும் நழுவும் உடலும் ஓசையற்ற நடையும் உகந்ததாக இருக்கலாம். எந்நிலையிலும் நான்கு கால்களில் நிலம் வந்துசேரும் உடலை அவர்கள் விரும்பக்கூடும். இருளிலும் ஒளிவிடும் அவற்றின் விழிகள் அவர்களுக்கு எப்போதும் துணையெனத் தோன்றலாம். பகலில் அவ்விழிகள் நீண்டு வெறிப்பு எனத் தோன்றுவது நிறைவளிக்கலாம். நோக்குக, அதன் முன்கால் ஒரு கணம் முன்னாலிருக்கிறது! அது நிகழ்கணத்தில் பின்னங்காலையும் நெளியும் வாலையுமே வைத்திருக்கிறது. அந்த வால் எப்போதுமே தவித்துக்கொண்டிருக்கிறது. அது இங்கே இக்கணத்தில் இருக்க விழையவில்லை என்று சொல்கிறது…
பரத்தையர்தெருவின் பெண்களுக்கு அத்தகைய பேச்சுக்கள் பிடிக்கும் என அவர் அறிந்திருந்தார். அவர்கள் ஒருவர் போலவே இன்னொருவரை பார்த்துக்கொண்டிருப்பவர்கள். முகங்களை நினைவுகூராதவர்கள். தனித்தெழுபவன் அவர்களில் ஆர்வத்தை உருவாக்குகிறான். தனித்தெழுபவர்கள் இரு வகை என ஒருமுறை ஒருத்தி அவரிடம் சொன்னாள். வன்முறையும் குற்றமும் கொண்டவர்கள். பெரும்பாலும் திருடர்கள். திருடர்களில் சூதாடிகளல்லாதவர்கள் பெரும்பாலும் எவருமில்லை. அன்றி பித்தர்கள். நான் இருவரில் எவன் என்று அவர் கேட்டார். பித்து உள்ளே கரந்த சூதாடி என்று அவள் சொல்லி நகைத்தாள்.
அவர் அந்த இடத்தை அடையாளம் கண்டுகொண்டார். அது முன்பு சுமமாலிகை என்னும் பரத்தையின் இல்லம். அவள் இனிய புன்னகை கொண்டவள். அறிவிலாது பேசும் மைந்தரை நோக்கி உள்ளே நகைக்கும் அன்னையின் முகம் கொண்டிருந்தாள். பேசவைப்பதற்குத் தெரிந்தவள். பேசும் ஆண் தன்னை புனைந்து புனைந்து முழுமைகொள்கையில் வென்றதாகவே எண்ணிக்கொள்கிறான். அதை அவள் அறிந்துவிட்டிருக்கிறாள். அதை ஏற்றுக்கொள்கிறாள் எனத் தோன்றுகிறாள். ஆனால் பேதையல்ல என்றும் தெரிகிறாள். ஆகவே மேலும் சொல்லெடுக்கத் தூண்டும் புன்னகையாக காட்சியளிக்கிறாள். அவளிடம் அவர் நெடுங்காலம் பித்துப்பிடித்து கிடந்ததுண்டு. முதல் மைந்தன் பிறப்பது வரை அந்த மையல் நீடித்தது.
இது தெற்குவாயிலை ஒட்டிய பரத்தையர் தெரு என்றால் நிமித்தச் சூதர்தெரு இதற்கு அப்பால்தான். அவர் தேடிச்செல்லும் இடம் அதற்கு அப்பால்தான். அவர் புரவியை நிறுத்தி அந்த இல்லத்தை நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். சுமமாலிகை அங்கிருக்கக் கூடுமா? அவள்தானா அது? இல்லத்தின் உள்ளிருந்து வந்த இளம்பெண் மெலிந்து எலும்புருவாக இருந்தாள். தோல் நிறம் மங்கி விழிகள் உட்குவிந்து வாய் உலர்ந்து நோய்ப்படுக்கையிலிருந்து எழுந்தவள்போல. நடுக்கு கொண்ட கால்களுடன் அவள் அணுகி வந்தாள். “வருக, உத்தமரே! இவ்வில்லம் காத்திருக்கிறது” என்றாள்.
“சுமமாலிகை…” என்று அவர் கேட்டார். “என் அன்னைதான்… சென்ற வாரம் அன்னை இறந்துவிட்டார்கள்… உள்ளே நுழைக, உத்தமரே! இது இனிய இல்லம்” என்றாள் அவள். அவர் அவளை வெறித்து நோக்கிக்கொண்டு நின்றார். “அன்னை எப்படி மறைந்தாள்?” என்றார். “நோய்” என்று அவள் சொன்னாள். “உடன் பசியும் உளச்சோர்வும்.” கனகர் “நீ அவள் மகளா? உன் பெயரென்ன?” என்றார். “ராகினி என்பார்கள்… நான் ஆடலும் பாடலும் பயின்றவள்” என்று அவள் சொன்னாள். “உனக்கும் உடல்நலமில்லையா?” என்று அவர் கேட்டார். “ஆம், இந்நகரில் ஆடவர் என எவருமில்லை. ஆகவே இங்கே எவருமே வருவதில்லை. நாங்கள் உண்பதற்கு ஏதுமில்லை… இங்குள்ள எல்லா இல்லங்களிலும் அடுப்புகள் எரிவதில்லை.”
கனகர் எண்ணியதை அவள் சொன்னாள். “இங்கே எங்களிடம் செல்வமென்றும் ஏதுமில்லை.” கனகர் “ஏன்?” என்றார். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்க, ஈட்டியவை எங்கே சென்றன?” அவள் எரிச்சலுடன் “ஈட்டிய செல்வத்தால் இன்புற்றிருந்த பரத்தையர் எவரையேனும் நீங்கள் இதற்கு முன் அறிந்ததுண்டா?” என்றாள். கனகர் திகைத்தார். “அவை பறிக்கப்பட்டுவிடும்… இம்முறை அரசே பறித்துக்கொண்டது. இறுதிப்பொன் வரை. போர்நிகுதி… அள்ளிக்கொடுத்தவர்களுக்கு அடி விழுந்தது. அவர்களிடம் மேலும் கேட்டார்கள். கரந்துவைத்தவர்களுக்கு மேலும் அடி விழுந்தது. அவர்கள் மேலும் கரந்திருப்பார்கள் என கருதினார்கள்.”
கனகர் விழிகளை திருப்பிக்கொண்டார். “படைவீரர்கள் இல்லங்களுக்குள் நுழைந்து சுவர்களையும் தரையையும்கூட அகழ்ந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் சென்றபின் மறுவேளை உணவுக்காக நாங்கள் அலைமோதத் தொடங்கிவிட்டோம்.” அவள் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன. “எல்லா போர்களும் குலமகள்களுக்கு எதிராக நிகழ்பவை என்பார்கள். அது முழு உண்மையல்ல. போர் தொடங்குவதற்கு முன்னரே பரத்தையர் தோற்கடிக்கப்பட்டுவிடுவார்கள்…”
கனகர் புரவியை மெல்ல தட்டினார். அது முன்கால் எடுத்துவைத்தது. “இச்சொற்களுக்காகவேனும் ஏதேனும் அளித்துச்செல்க, அந்தணரே!” என்றாள் அவள். அவர் ஒரு வெள்ளிநாணயத்தை எடுத்து நீட்ட இயல்புக்கு மீறிய விசையுடன் வந்து அவள் அதை பற்றிக்கொண்டாள். இடையாடையில் அதை முடிந்து செருகிக்கொண்டபோது அவள் முகம் மலர்ந்து விழிகள் ஒளிகொண்டன. “படைவீரர்களையும் சொல்லிப் பயனில்லை. அவர்களுக்கு ஆணையிடப்பட்ட செல்வத்தை அவர்கள் வரியாக சேர்த்தேயாகவேண்டும். அந்தணருக்கு வரி இல்லை. ஆயரிடமிருந்து விலங்குகளும் உழவரிடமிருந்து நெல்லுமே கொள்ளத்தக்கவை. பொன்னிருப்பது வணிகர்களிடமும் எங்களிடமும்தான். அவர்கள் வணிகர்களை எலிகள் என்றனர். எங்களை தேனீக்கள் என்று. வரப்புகளை தோண்டியும் கிளைகளில் ஏறியும் புதையலெடுக்கிறோம் என்று ஒரு வீரன் சொன்னான்…” என்றாள்.
“சூதர்களிடமும் அவர்கள் அடித்துப்பிடுங்கினர் என்றார்கள்” என்று அவள் தொடர்ந்தாள். “அவர்கள் இங்கே நகரிலிருந்து எடுத்துக்கொண்டவற்றில் சிறுபகுதியே கருவூலத்திற்குச் சென்றிருக்கும். அரசர்கள் அறிவது அதை மட்டுமே. எத்தனை கூரிய ஆட்சியாளனும் ஆட்சி நிகழும் முழுத் தோற்றத்தை அறிந்துவிட முடியாது. அவர்களுக்கு அது சொல்லப்படுவதில்லை. அவர்கள் அமர்ந்திருக்கும் அரியணையிலிருந்து அதை காணவும் முடியாது. அவர்கள் காணவிரும்பும் வடிவிலேயே ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்துகிறது அரசு.” அவள் “உள்ளே வருக, அந்தணரே… வாயிலிலேயே நின்றிருக்கவேண்டாம்” என்றாள்.
அவர் “இல்லை” என்றார். அவர் செல்லவிரும்பினார். ஆனால் அவள் பேச்சு அவரை தடுத்து நிறுத்தியிருந்தது. அதை அறிந்து அவள் அப்பேச்சையே நீட்டித்தாள். “அன்றாட நெறியின்மைகளினூடாக இயங்குவதே அரசு என்று என் அன்னை சொல்வதுண்டு. அதை காணும் கண்கொண்ட அரசன் கோல்கொண்டு அரியணை அமர முடியாது. தானறிந்த சிறு வட்டத்திற்குள் நெறிநின்று ஆட்சிபுரப்பதாகவே அவன் எண்ணிக்கொள்ளவேண்டும். அது ஒன்றே வழி…” என்றாள். “போர்நிகுதிக்கு ஆணையிடப்பட்டதுமே கொள்ளை தொடங்கிவிட்டது. வேலோடு நின்றான் இடு என்பதும் கோலோடு நின்றவன் கொடு என்பதும் நிகரே.”
“நகரின் செல்வத்தில் பெரும்பகுதி வேல்முனையில் கொள்ளப்பட்டுவிட்டது. அவற்றில் பெரும்பகுதி இந்நகரிலேயே எங்கெங்கோ புதைக்கப்பட்டிருக்கும். போருக்குப் பின் திரும்பிவந்து வாழ்வதற்கு அவை தேவை என வீரர்கள் எண்ணியிருக்கலாம். போருக்குப் பின் திரும்பி வருவோம் என்னும் நம்பிக்கை இல்லாது படையில் சென்ற எவரும் இருக்க முடியாது. அச்செல்வம் இந்நகருக்கு அடியில் கூறப்படாத சொல் என இனி பல நூறாண்டுகள் இருக்கும். உணவில்லாவிட்டாலென்ன, நாமனைவரும் செல்வத்தின் மேல் அல்லவா நடமாடிக்கொண்டிருக்கிறோம்.”
கனகர் எண்ணியிராதபடி சினம்கொண்டார். அவர் விழிகளில் அதைப் பார்த்த அவள் “அவர்களும் எதுவும் செய்யமுடியாதுதான்…” என்றாள். கனகர் “எவரும் எதுவும் செய்யமுடியாது. அவர்களுக்கு ஆணையிட்டவர்களுக்கும் வேறுவழியில்லை. இத்தகைய போர்நகர்வுக்கு எல்லையில்லாத செல்வம் தேவையாகிறது… அஸ்தினபுரியே அத்தனை படைகளுக்கும் செலவிட வேண்டியிருந்தது” என்றார். “எவரையும் குறைசொல்ல முடியாது… அவரவர் ஊழ்நெறிப்படி இயங்கினர்” என்ற ராகினி “நீங்கள் விழைந்தால் இல்லத்திற்குள் வந்து…” என்றாள். “தாழ்வில்லை… நான் சூதர்தெருவில் ஓர் இடத்தை தேடிச்செல்கிறேன், சற்றே வழிதவறி வந்தேன்” என்றார்.
“எனக்கு இந்நகரில் எந்த வழிகளும் தெரியாது. எல்லா வழிகளினூடாகவும் இங்கே வந்துகொண்டிருப்பார்கள். நாங்கள் எங்கும் செல்வதில்லை. கருவறைத் தெய்வங்களும் பரத்தையரும் நிகர் என்பார்கள்” என்று அவள் சொன்னாள். சிரித்தபடி “போர் சூழத் தொடங்கியதுமே பெருவணிகர் இடம்பெயர்ந்துவிட்டனர். செல்வங்களை ஒளித்துக்கொண்டனர். எங்களுக்கும் வரவிருப்பதென்ன என்று தெரியும். ஆனால் இந்த வீடுகளை விட்டு எங்கும் செல்லமுடியாது. ஈமத்தாழியை தன் உடலெனச் சுமந்தலையும் ஆமைகள் போன்றவர்கள் நாங்கள்” என்றாள் ராகினி.
கனகர் மீண்டும் புரவியை தட்டியபின் “இங்கே பூனைகள் நிறைய இருந்தனவே?” என்றார். “ஒருநாள் உணவில்லாமல் ஆனதுமே அவை கிளம்பி காடுகளுக்குள் சென்றுவிட்டன…” என்று ராகினி சொன்னாள். “அங்கே காடுகளில் இருளில் மின்மினிகள்போல் அவற்றின் விழிகள் ஒளிவிடுவதாகச் சொன்னார்கள்.” கனகர் உளம்நடுங்க புரவியை முன்னே செலுத்தினார். அவள் பின்னால் வந்தபடி “இங்கே ஆண்கள் வரத்தொடங்க இன்னமும் ஒரு தலைமுறைக்காலம் ஆகும், அந்தணரே. நாங்கள் இந்த இல்லங்களுக்குள்ளேயே மடிந்து மட்கி அமைவோம். இன்றுள்ள இளையோர் வளர்ந்து தங்கள் காமத்தைக் கண்டடையும்போது எங்கள் வெள்ளெலும்புகளிலிருந்து பெண்கள் முளைத்தெழக்கூடும்… வெண்ணிற காளான்களைப் போன்று…” என்றாள். அவருடைய புரவி சென்றுகொண்டே இருந்தது. அவள் அதன் கடிவாளத்தைப் பற்றியபடி “நீங்கள் உள்ளே வரலாமே” என்றாள். கனகர் அவள் கையை விலக்கி “இல்லை, நான் சென்றாகவேண்டும்” என்று புரவியை செலுத்தினார்.
திகைத்தவர்போல அவர் புரவியில் அமர்ந்திருந்தார். என்ன இடர் என ஒருவாறாகப் புரிந்தது. அவர் புரவியூர்வதே இல்லை. எப்போதும் தேரிலேயே நகரில் சென்றுகொண்டிருந்தார். புரவியூர்கையில் உள்ளே இருக்கும் தன்னுணர்வு அதில் அமரவில்லை. அது தேரை செலுத்துகிறது. புரவியின் கழுத்தைத் தடவிக்கொண்டிருந்தார். அது உடலைச் சிலிர்த்தபடி சென்றது. அந்தச் சூதனின் சொற்கள் நினைவிலெழுந்தன. அவை ஒரு பெரிய சொல்லொழுக்கின் துளிகள். அவன் என்னதான் சொல்லிக்கொண்டிருந்தான்? எவரிடம்? அவனுடன் வந்தபடி ஏதேனும் தெய்வங்கள் அதை செவிகொண்டனவா?
சூதர்தெரு முற்றொழிந்ததுபோல் கிடந்தது. ஆண்கள் என எவருமே கண்ணுக்குப்படவில்லை. சில திண்ணைகளில் சோர்ந்த குழந்தைகள் படுத்திருந்தன. அவற்றைப் பேணும் சிறுமியர் வெறித்த விழிகளுடன் அவரை நோக்கினர். போர்முறைமைகள் தொடங்கி எத்தனை நாட்களாகியிருக்கும்? மூன்றுமாதம் கடந்திருக்கவில்லை. அதற்குள் நகரிலிருந்து பொலிவனைத்தையும் உறிஞ்சி அகற்றிவிட்டிருக்கிறது. தெருக்களில் சருகும் குப்பையும் குவிந்து கிடந்தன. காற்று அள்ளிக் குவித்த புழுதி அத்தனை சுவர்களுக்குக் கீழேயும் எழுந்து கிடந்தது. பல இல்லங்களில் எவருமிருக்கவில்லை. காற்று வீசுகையில் குடுமிகளில் முனகிச்சுழலும் கதவுகளுடன் அவை அகன்று வாய்திறந்து கிடந்தன. அவருடைய புரவியின் குளம்படியோசை அவற்றின் அறைகளுக்குள் இருந்து எதிரொலித்தது.
எதிரில் ஒரு கிழவி கூன்விழுந்து மடிந்த முதுகுடன் கைகளையும் கால்களைப் போலவே வீசியபடி பசுபோல நடந்து வந்தாள். புரவியைக் கண்டதும் கண்களைச் சுருக்கியபடி நின்று நோக்கினாள். இரு விழிகளும் இரு வெண்புள்ளிகள்போலத் தெரிந்தன. வாய் சுருங்கி குவிந்திருந்தது. அவருடைய புரவி அருகணைந்ததும் இயல்பாக கைநீட்டி இரந்தாள். அவர் கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினார். சூதர்குடியினர் இரந்ததை அவர் கண்டதே இல்லை. சிலகணங்களுக்குப் பின் அவர் ஒரு வெள்ளிநாணயத்தை எடுத்து அவளை நோக்கி நீட்டினார். அவள் விசையுடன் அருகே வந்து அதை வாங்கி அப்படியே வாய்க்குள் போட்டுக்கொண்டாள்.
அவர் திடுக்கிட்டு நெஞ்சதிர்ந்தார். என்ன செய்கிறாள்? அவள் அந்த நாணயத்தை குதப்பிக்கொண்டிருப்பதை கண்டார். புரவியைத் தட்டி முன்செலுத்தியபோது அவர் வியர்த்திருந்தார். என்ன நிகழ்ந்தது? கரை உடைந்து நீர்வெளியேறுவதுபோல இந்நகரிலிருந்து அனைத்தும் வெளியேறிவிட்டிருக்கின்றன. மானுடர், செல்வம், மொழி, ஓசைகள். போர்கள் என்றுமென நிகழ்பவை. அவை ஆண்டுதோறும் காட்டிலெழும் எரிபோல. அழிவது மேலும் எழுவதற்காக. பழையன கழிந்து புதியன எழுவதற்காக. இது ஊழித்தீ. எஞ்சியது என்ன? எஞ்சுவதிலிருந்து எழுவது எது?
அவர் மீண்டும் கரிய சுவரை சென்றடைந்துவிட்டிருந்தார். அது நேர்முன்னால் பெருகிச்சூழ்ந்து நின்றிருந்தது. அதன் விரிசல்கள், பொருக்குகள், கருகிய பாறைப்பாசிப் பரவல்கள். உள்ளத்தில் ஒரு சொல்லும் எஞ்சாமல் அவர் அதை நோக்கிக்கொண்டு நின்றிருந்தார்.