மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள் வாங்க…

மங்கல இசை மன்னர்கள் நூல் பற்றி

காவிரிக்கரையோர கிராமம் ஒன்றிற்க்கு துக்கநிகழ்வுக்கான ஒரு பயணம். துக்கவீட்டில் சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருக்க, நேரம் கடத்த அருகாமை திண்ணையொன்றிற்க்கு அழைத்துப்போனார் உடன் வந்த தாய்மாமன். இடிபட காத்திருக்கும் சுத்துகட்டு ஓட்டுவீடு. சிரிதும் பெரிதுமாய் நீள்செவ்வக வடிவிலான பழங்கால திண்ணைகள். புழக்கம் காரணமாய் வலப்பக்க சிறுதிண்ணை மட்டும் பளபளப்பை பரிமளிக்க, இடது திண்ணை மென்தூசியால் மெழுகப்பட்டிருந்தது.

”இது யாரு வீடு தெரியுமா?…” காலஞ்சென்ற பிரபல நாதஸ்வர வித்வான் ஒருவரின் பெயரை சொல்லியபடி ஆரம்பித்தவர், அவரைப்பற்றிய கதைகள் ஒவ்வொன்றாய் சொல்ல ஆரம்பித்தார்.

”அழைச்சிட்டு போறத்துக்கு வண்டி வந்து வீட்டு வாசல்ல நின்னதுக்கப்புறந்தான் குளிக்க கிளம்புவாரு. எல்லாம் முடிஞ்சி, வண்டியேறி கச்சேரிக்கு புறப்படுறதுக்கு நாளு மணி நேரம் ஆயிரும். அதுவரைக்கும் வண்டி அங்கயே நிக்கும்…”

அவர் குறிப்பிட்ட வண்டி போலீஸ் ஜீப். அருகாமை நகர் ஒன்றில் உள்ள கோவில் விழாவிற்க்கு போலீஸ் ஸ்டேசன் சார்பாக நடத்தப்படும் வருடாந்திர மண்டகப்படிக்கான கச்சேரிக்கு செல்வதற்க்கான மோஸ்தர்.

“இப்பவும் அந்த கோவில் விழா வருசா வருசம் நடக்குது. போலீஸ் ஸ்டேசன் சார்பா மண்டகப்படியும் நடக்குது.இவரோட பையன் வாசிச்சிக்கிட்டு இருக்கார்…”

இப்பவும் போலீஸ் ஜீப் வருதான்னு கிண்டல்தொனியில் கேட்க நினைத்த நான் மாமாவின் முகபாவனையை கண்டு நிறுத்திவிட்டேன்.

“இந்த மாதிரி பழய கதையெல்லாம் சொல்லுறதுக்கு இனிமே யாரு இருக்காங்க” என்று அங்கலாய்த்தபடியே புரண்டுபடுத்துவிட்டார்.

பிறகு படித்துக்கொள்ளலாம் என்று பட்டியலில் வைத்திருந்த புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது அந்த பயணம். சென்னை வந்தவுடன் கவிதா பதிப்பகம் சென்று வாங்கிவந்தேன். தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட என் மாமாவிற்க்கான பதிலாய் பல சம்வங்களை அவருக்கே திருப்பி சொல்ல வைக்கும், சுவாரஸ்ய தகவல்கள் அடங்கிய புத்தகம்.

1787 முதல் 1975 வரையிலான 47 தவில் கலைஞர்கள், 1815 முதல் 1988 வரையிலான 81 நாதஸ்வர கலைஞர்கள் குறித்து பிறப்பிடம், பெற்றோர், உடன் பிறந்தோர்,குருநாதர்,மனைவி,பிள்ளைகள்,சிஷ்யர்கள்,முக்கிய நிகழ்வுகள்,சுவாரஸ்ய தகவல்கள் என்ற வடிவத்தில் தொகுத்தளித்திருக்கிறார் திரு பி.எம்.சுந்தரம்.

அறம் தொகுப்பிற்க்குப்பின் ஒரே அமர்வில் இடைவேளையின்றி எனது தந்தையார் படித்து முடித்த புத்தகம். புத்தத்திலிருக்கும் தகவல்கள் பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு “எனக்கே ஆச்சரியமா இருக்கு” என்றபடி யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி என்ற புகழ்வாய்ந்த தவில் கலைஞர் எங்கள் வீட்டு விருந்தினராய் இருநாட்கள் தங்கியிருந்ததையும், அணுக்க சேவகனாய் அவருடன் இருந்த அந்த இரு நாட்களை சிறுபிராயத்துக்கே போய்விட்ட குதூகலத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.

புத்தகம் செய்யும் மாயமொன்றை கண்கூடாய் பார்த்த மற்றுமொரு தருணம்.

தன் வயதையொத்த வித்வான்களை போனில் அழைத்து “ஒம்பாட்டன் என்ன பண்ணீருக்கார்ன்னு தெரியுமா…? என்று ஆரம்பித்து புத்தகத்தின் பல சம்பவங்களை சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு விவரித்து குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.

“சாப்பிட்டபின் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி பழைய கதைகளை எல்லாம் அப்பா சொல்வார்.அவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது.அப்படித்தான் இந்த ஆவணப்படுத்தல் தொடங்கியது.”

நூலாசிரியர் சொன்னதுபோலவே நாமும் அந்த கயிற்றுக்கட்டிலுக்கு கீழே அமர்த்து கேட்டுக்கொண்டிருப்பதை போல விவரிக்கப்பட்டிருக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள்.
இதுவரை கேள்விப்பட்டிறாத தகவல்களும். ”சிதம்பரம் நடராஜர் ஆலயத்து எட்டாந் திருநாளில் மட்டும் ஸ்வாமி வீதியுலாவின் போது மல்லாரி வாசிக்கப்படுவது கிடையாது. மாயாமாளவகெளளை ராகத்தில், மிச்ர சாபு தாளத்தில் அமைந்த ‘ஒடகூரு’ என்ற இசை வகை மட்டுமே வாசிக்கப்படவேண்டும்”.

”மல்லாரி வகைகள் மற்றும் வாசிப்பு” பற்றிய இவரது சிறப்புரைகள் பிரசித்தம். 2009ம் ஆண்டு அமெரிக்க கிளீவ்லேண்ட் நகரத்தில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று “மல்லாரி வாசிப்பு” நிகழ்வு. நூலாசிரியர் பி.எம்.சுந்தரம் விளக்கவுரையோடு எனது தந்தையார் தவில் வாசித்த நிகழ்வை அப்போது ஒளிப்பதிவு செய்து அதன் பகுதியொன்றை யூடியூபில்(https://youtu.be/mvBqO8LQJok)பகிர்ந்திருந்தேன்.

தனது தந்தையாருக்கு (தவில் கலைஞர், நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை) சமர்ப்பணமாக “மங்கள இசை மன்னர்களை” எழுதியவர் தனது தாயார் பரதநாட்டிய கலைஞர்,தஞ்சாவூர் பாலாம்பாள் நினைவாக பரதநாட்டிய கலைஞர்களை குறித்து “மரபு தந்த மாணிக்கங்கள்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.

சிலாகிக்க தக்க சுவாரஸ்ய சம்பங்கள் பல இருந்தாலும் முத்தாய்ப்பாய் ஒன்றே ஒன்று மட்டும்.

செம்பொனார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை என்னும் நாதஸ்வர வித்வானிடம் நாச்சியார்கோவில் சக்திவேல் பிள்ளை என்னும் தவில்கலைஞர் பலவருடங்களாக இணைந்து வாசித்துவருகிறார். ஒரு கச்சேரியின்போது சக்திவேல்பிள்ளை ஒருகணம் கவனக்குறைவாய் இருந்துவிட்டார் என்பதற்க்கான “நீயெல்லாம் தவில் வாசிக்க லாயக்கில்லை… குதிரை வண்டி ஓட்டத்தான் லாயக்கு…: என்று கடிந்துகொள்கிறார். இந்நிகழ்விற்க்குப்பின் அடுத்தடுத்த கச்சேரிகளுக்கு வாசிப்பதற்க்கு வரவில்லையெனெ தகவலனுப்பிவிடுகிறார் சக்திவேல் பிள்ளை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கச்சேரி ஒன்றிற்க்கான கும்பகோணம் செல்கிறார் ராமஸ்வாமி பிள்ளை. ரயில் நிலையதிலிருந்து தங்குமிடம் செல்கையில் உடன் வந்தவர் ராமஸ்வாமி பிள்ளையின் காதில் ரகசியமாய் ஏதோ சொல்கிறார். வண்டியோட்டுபவரை பார்த்து பதறுகிறார் ராமஸ்வாமிப்பிள்ளை……….

வண்டியோட்டுபவர் சக்திவேல் பிள்ளை.

“சக்திவேலு! எவ்ளோ பெரிய வித்வான் நீ? இப்படி செய்யலாமா? நான் அன்று எதோ கோவத்தில் சொல்லிவிட்டேன், திரும்பவும் சேர்ந்து வாசிக்கலாம் வா….” என்று வற்புறுத்தி அழைத்தும் மறுத்திவிடுகிறார் சக்திவேல் பிள்ளை.

“உங்களை குருவுக்கு சமானமாக மதிப்பவன். குதிரை ஓட்டத்தான் லாயக்கென்று நீங்கள் சொல்லியபின் எனக்கு அதுதான் சரி….” என்று சொல்லிவிட்டு தன் வாழ்நாளில் கடைசிவரை தவில் வாசிக்காமல் குதிரைவண்டி ஓட்டியிருக்கிறார் சத்திவேல் பிள்ளை.

புத்தகத்தின் உள்ளடக்க வடிவத்தின்படி சக்திவேல் பிள்ளையின் குடும்பம், வாரிசு பற்றிய தகவல்கள் அடுத்த இரண்டு வரிகளில் கொடுக்கப்பட்டிருந்தன.

அதன்படி,

அந்த சக்திவேல் பிள்ளை எனது அம்மாவின் கொள்ளு பாட்டனார்.
முதல்பாராவில் “இந்த மாதிரி பழய கதையெல்லாம் சொல்லுறதுக்கு இனிமே யாரு இருக்காங்க” என்று அங்கலாய்த்த என் தாய்மாமனின் பெயர் சக்திவேல். ஆமாம்,
குதிரைவண்டியோட்டிய சக்திவேல் பிள்ளையின் நினைவாக கொள்ளு பேரனுக்கு வைக்கப்பட்ட பெயர்.

-யோகேஸ்வரன் ராமநாதன்.

***

முந்தைய கட்டுரைதடம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைமோடி முதலை பாலா- கடிதம்