ஒருபோதும் விடைபெறாதே!

1976ல் நான் பள்ளியில் படிக்கும்போது வெளிவந்த படம் சல்தே சல்தே. இந்தப்பாடல் அன்றைக்கு இளைஞர்கள் நடுவே பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதற்குக் காரணம் அதன் கடைசி வரிகளை விசில் அடிக்க முடியும் என்பது என இன்றைக்கு நினைக்கிறேன். அன்றெல்லாம் இந்திப்பாடல்கள் தமிழகத்தில் மிகப்பிரபலம். இந்தப்பாடலை விசில் அடிக்க நான் பலமாதங்கள் முயன்று வீணாய்ப்போயிருக்கிறேன்.

இன்று பார்க்கும்போது முதல் ஆச்சரியம் இவ்வளவு தெளிவான அச்சு கிடைப்பது. இந்திப் படங்கள் பெருநிறுவனங்களால் எடுக்கப்பட்டவை. ஆகவே நல்ல அச்சு உள்ளது. ஆனால் தமிழ்ப்படங்களும் மலையாளப்படங்களும் பெரும்பாலும் சிறிய தயாரிப்பாளர்களால் எடுக்கப்பட்டு வெற்றி அல்லது தோல்விக்குப்பின் கைவிடப்பட்டவை. பெரும்பாலான படங்கள் அழிந்துவிட்டன. சில எஞ்சுகின்றன. அவையும் மிகமோசமான காட்சித்தரம் கொண்டவை. நாடாப்பதிவிலிருந்து மின்வடிவுக்கு கொண்டுவரப்பட்டவை.

கபி அல்வித நா கெஹனா – ஒருபோதும் விடைபெற்றுக்கொள்ளாதே – அன்று ஒரு முக்கியமான பல்லவி. கிஷோர்குமாரின் குரல். சிமி கர்வாலை எப்படி தென்தமிழ்நாட்டில் காதலித்தார்கள் என்றெல்லாம் முனைவர்ப்பட்ட ஆய்வுகளால்தான் சொல்லமுடியும்

சினிமாtதான் எவ்வளவு அற்புதமாகக் காலத்தை பின்னோக்கிச் சுழற்றுகிறது!

***

முந்தைய கட்டுரைவிரல்
அடுத்த கட்டுரைதீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்