நாள்தோறும்…

நாள்தோறும் சென்று நோக்காதவனிடம் மனைவி கணவனிடம் என நிலம் சினம் கொள்ளும் என்று குறள் சொல்கிறது

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்.

பேராசிரியர் ஜேசுதாசன் சிரித்துக்கொண்டே சொன்னார். “எதிரி ஆயிடும்னு சொல்ல்லேல்ல. ஊடிவிடும்னுதான் சொல்லுதாரு. அதுவும் மனைவி மாதிரி. என்ன இருந்தாலும் நீ கணவன், நான் உனக்குச் சொந்தம், எப்டியும் நாந்தான் உனக்குச் சோறுபோடணும். அது நிலத்துக்கும் தெரியும்.கொஞ்சம் பாத்தாப்போரும் அப்டியே மலந்திரும். பாக்காம இருந்ததே மறந்துபோயிரும். மண்ணு மனுசனை கைவிட்டதில்லை”

நான் இந்தக்குறளை அடிக்கடி நினைவுகொள்வதுண்டு. செல்லான் கிழவன் என்னும் சொல் இருப்பதனாலும், உழவு என்னும் தலைப்பின்கீழ் வருவதனாலும் இக்குறள் வேளாண்மை தொடர்பானது என்று தோன்றுகிறது. ஏன் இதை ஒரு தனிக்கவிதையாக எடுத்துக்கொண்டு நாம் பொருள் கொள்ளலாகாது? நிலம் என்பது ஏன் வயலாக மட்டும் இருக்கவேண்டும்? பசுமையும் மலரும் முகிலும் மலைகளுமாகப் பெருகி நின்றிருக்கும் இயற்கையாக ஏன் அமையக்கூடாது?

பரிமேலழகர் தன் உரையில் இக்குறளில் இரண்டு நுண்பொருள் எடுக்கிறார். எவ்வளவு நிலமிருந்தாலும் நிலக்கிழான் தானே சென்றாகவேண்டும். இன்னொருவரை அனுப்பலாகாது. தூதர்களை அல்ல தலைவனையே தலைவி எதிர்பார்க்கிறாள். அவ்வப்போது சென்றால் போதாது நாள்தோறும் சென்றாகவேண்டும்.

நான் மேலும்பொருள்கொள்வது காலைநடை செல்லும்போதுதான். எங்கிருந்தாலும் பசுமைதிகழும் நிலம் நடுவே நடைசெல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். குமரிநிலம் என் கனவுகளிலும் நிறைந்திருப்பது.  எங்களூரின் ஆறும் மலையும் பசுமையும் என் இளமையை பொலிவூட்டியவை. நான் கல்லூரிக்கு வரத்தொடங்கியபோது வேளிமலையையும் அதன் காலடியில் விரிந்திருக்கும் பசுமையையும் பார்க்கத் தொடங்கினேன். இன்றுவரை நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

ஒரே நிலத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது, நாள்தோறும் பார்ப்பதே உண்மையான இயற்கையனுபவம். ஒரு புதியநிலம் பெரும் மனக்கிளர்ச்சியை அளிக்கிறது.நான் இமையமலையின் இதழடுக்குகளின்முன், ஆல்ஃப்ஸின் கண்நிறைக்கும் பசுமைக்கும் பனிக்கூரைக்கும்முன், அமெரிக்காவின் மாபெரும் கடல்விளிம்புகளைக்கண்டு, ஆப்ரிக்காவின் செந்நிறப்பாலையில் நின்று, ஆஸ்திரேலியப்புல்வெளிகளில் விழிமலைத்து உடல் திறந்துகொள்ளும் அளவுக்கு உள்ளிருந்து எழும் பேருணர்வை அடைந்திருக்கிறேன்.

அவை கிளர்ச்சிகள். நிகர்நிலை குலைவுகள், கொந்தளிப்புகள். புத்தம்புதிய நிலம் அளிப்பது முதற்கண மலைப்பை, பின்னர் உள்ளம் பெருகிவிரிகிறது.சொற்களாக உவகையாக. கைவீசி ஓடவிழைவோம். பாய்ந்து பறந்தலைய எண்ணுவோம். நிகரான நிலங்களை கற்பனையில் இருந்தும் நினைவிலிருந்தும் எடுத்து இணைத்து விரித்துக்கொள்வோம். நம் அகம் செயலூக்கம் கொள்ளும் நிலை அது. நாம் ஒருவரே பலராக ஆகும் தருணம்.

ஆனால் இயற்கை ஊழ்கமென ஆகவேண்டும் என்றால் அந்தக் கொந்தளிப்பு இருக்கக் கூடாது. இயற்கை நம் ஆழத்தை முற்றடங்கச்செய்யவேண்டும். அதற்கு நாம் பழகிய நிலமே உகந்தது. அங்கே நாம் உவகையடைவதையே உணர்வதில்லை. சொல்லப்போனால் சலிப்பு போன்ற ஒரு நிலை அது. உள்ளம் ஓய்ந்து கிடக்கிறது. பலசமயம் தொடர்பற்ற எண்ணங்கள். நாவில் ஏதேனும் பொருந்தாத வரிகள். நினைவு எங்கெங்கோ தொட்டுத்தொட்டுச் செல்லும். நாம் இயற்கையின் மடியில் இருப்பதையே உணர்வதில்லை.

இயற்கையை நம் விழி காண மறுப்பதே இல்லை. அதற்கேற்ப நம் உள்ளம் அமையாமலிருப்பதும் இல்லை. அந்த சோம்பல்நிலையில் நம்முள் நம்மையறியாமலேயே வெளியே இருக்கும் பசுமை ஊறி நிறைந்துகொண்டிருக்கிறது. நாமடையும் ஆழ்ந்த அமைதி அவ்வாறு வருவதே. பின்னர் நினைவுகூர்கையில் நாம் ஓர் உச்சத்தில் இருந்ததை உணர்கிறோம். நம்முள் நாம் முழுமையாகவே புரண்டுவிட்டிருப்பதை, அழிந்து முளைத்தெழுந்துவிட்டிருப்பதை அறிகிறோம்.

பழகிய நிலம் மனைவிபோல. காதலியென அவள் அலைக்கழிப்பதில்லை. பொருந்தாத கூர்முனைகளுடன் குத்திக்கிழிப்பதில்லை. ஒவ்வாத ஒன்றும் அவளில் இல்லை. அவளுக்காக நாம் நம்மை வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம். நமக்காக அவள் நம்மை மெல்லமெல்ல வடிவமைத்துக் கொண்டிருக்கிறாள். நாம் மேலும் செய்வதொன்றும் இல்லை என்பதனால் எழும் மெல்லிய சலிப்புடனேயே அவளை உணர்கிறோம். வெல்வதற்கோ வீழ்வதற்கோ ஏதுமில்லை. கடத்தலுக்கோ ஆதலுக்கோ ஏதுமில்லை. அமைதல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

பழகிய நிலம் தன் அழகை புதுமைக்கிளர்ச்சி எனக் காட்டுவதில்லை.அது கணம்தோறும் மாறுவது என்றாலும் என்றுமிருப்பது என்னும் மாயையை நமக்கு அளிக்கிறது. பழகிய நிலத்தின் முன் நாம் அயலார் அல்ல. நாம் பார்வையாளர் அல்ல. நாம் அதிலொரு பகுதி. நம்மைச் சூழ்ந்துகொள்கிறது. அங்கிருக்கும் மரமும் பாறையும்போலத்தான் நாமும். நாம் அதனுடன் சற்றேனும் முரண்கொள்கையிலேயே அதன் இருப்பை உணர்கிறோம். முற்றாக இசைவுகொள்கையில் அதுவுமில்லை நாமும் இல்லை. இருத்தலின் சலிப்பூட்டும் காலஒழுக்கு மட்டுமே. ஆனால் அதுதான் ஊழ்க நிலை. ஒன்றும் செய்யாதபோதுதான் உள்ளம் கண்டடைகிறது. அலையிலாதபோதே ஆழம் தெளிகிறது.

நாள்தோறும் நாம் சென்று நோக்கா நிலம் நம்முடன் ஊடிவிடுகிறது. மீண்டும் சென்று நோக்குகையில் அப்பால் முகம்திருப்பி நின்றிருக்கிறது. ஆனால் அதனால் அப்படி நிற்க இயலாது. அது உள்ளூர புன்னகைத்துக்கொண்டிருக்கிறது. நாம் ஒரு சொல் கூறுவதற்காகக் காத்திருக்கிறது

***

முந்தைய கட்டுரைஉன்னை அழைக்க மாட்டேன்…
அடுத்த கட்டுரைஅமெரிக்கா நோக்கி…