தடம் – கடிதங்கள்

தடம் இதழ்


அச்சிதழ்கள், தடம்

 

 

அன்புள்ள ஜெ,

நலமா? தடம் இதழ் நிறுத்தப்படுவது குறித்த உங்கள் பதிவு. நான் தடம் இதழ் ஆரம்பித்த சில இதழ்களுக்கு அதை படிப்பதில்லை. முதன்மையான காரணம் உள்நோக்கம் கொண்ட காழ்ப்புணர்ச்சி அரசியல்- பொது பிரச்சினையிலும் இலக்கியத்திலும். திரும்ப திரும்ப மதவாத அரசியலின் ஆபத்து குறித்து மட்டுமே வெவ்வேறு வடிவங்களில் உள்நாட்டு – வெளிநாட்டு எழுத்தாளர்களின் புலம்பல்களை வெளியிடுவது ஆனால் இஸ்லாமிய மதவாதம் குறித்து பேசாமல் இருப்பது, தலித் அடக்குமுறை பற்றி பேசுவது ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத வடநாட்டு பாஜக மீது பழியைப் போடுவது. இந்த டெம்ப்ளேட் விஷயங்களை வாசிக்க நாம் ஏன் பணம் செலவழிக்க வேண்டும்? அரசியல் தவிர்த்து மற்ற துறைகளைப் பற்றியும் பெரிதாக எதுவும் அவ்விதழில் வெளிவந்ததில்லை. வெறும் டெம்ப்ளேட் விஷயங்களை மட்டுமே வெளியிட்டால் யார் படிப்பது?

தமிழிலக்கியத்தில் தவிர்க்க முடியாத படைப்புகளான கொற்றவை , விஷ்ணுபுரம் , பின்தொடரும் நிழலின் குரல் குறித்து எதாவது ஒரு கட்டுரை, விமர்சனம் தடம் இதழில் வந்துள்ளதா? குறைந்தபட்சம் இரவு நாவல் குறித்து?

இதே விகடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தொப்பி திலகம் கட்டுரையை வைத்து சிண்டு முடிந்ததை யாரும் மறக்கவில்லை. தமிழ்நாட்டின் தீயசக்திகளுள் ஒன்று இந்த விகடன். மொத்த விகடன் இதழ்களையுமே இழுத்து மூடினால் தமிழ்நாட்டிற்கு மிக நல்லது என்றே சொல்வேன்.

சங்கரன்.இ.ஆர்

அன்புள்ள ஜெ

தடம் இதழ் நிறுத்தம் பற்றி எழுதியிருந்தீர்கள். தடம் இதழ் ஏன் நின்றது? ஏன் அதை வாசகர்கள் ஏற்கவில்லை? அதை விகடன் நிர்வாகம் இனியாவது உணரவேண்டும். இன்றைக்கு விகடன்மீதும் அந்தக்கசப்பு உள்ளது. அவர்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான , இந்துப் பண்பாட்டுக்கு எதிரான ஒரு சிறு குழுவால் அது நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக கசப்புகளே வெளிவந்தன. ஏன் தடம் நின்றுபோனது? ஏன் உண்மை இதழ் மிகக்குறைவான பிரதிகள் அச்சிடப்படுகிறதோ அதனால்தான். ஏன் வினவு இணையதளம் எவரும் படிக்காமல் ஆரம்பசூரத்தனத்தோடு அடங்கினதோ அதனால்தான். ஏனென்றால் மக்களுக்கு எதிர்மறை விஷயங்க்ளை பேச இஷ்டமில்லை. இவற்றைப்பேசுபவர்களும் ஏதோ சிந்தனையாளர்கள்போல ஒரே விஷயத்தையே திரும்பத்திரும்ப பேசினார்கள். அவ்வப்போது வரும் சில விஷயங்களைத் தவிர தடம் பெரும்பாலும் வினவின் அச்சுவடிவம் மாதிரியே இருந்தது. அதன் இடம் அவ்வளவுதான்.

ஆர்.ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

தடம் இதழில் நீங்கள் எழுதினீர்கள். அவர்கள் உங்களை அவர்களுடைய தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். பெரும்பாலும் அவர்கள் ஒரு பிளான் வைத்து கட்டுரை கேட்க நீங்கள் எழுதி அனுப்பினீர்கள் என்றுதான் படுகிறது. கேட்டதுமே எஸ்.ராமகிருஷ்ணன் அல்லது தோப்பில் மீரான் பற்றி எழுதுபவர் நீங்கள் மட்டும்தான். ஆனால் உங்கள் எந்த நாவலையாவது அவர்கள் பேசியிருக்கிறார்களா? சரி, தமிழில் ஒரு சாதனையாக வந்துகொண்டிருக்கும் வெண்முரசு பற்றி இந்த அச்சிதழகளில் ஒரு வரியாவது வந்திருக்கிறதா? தமிழ் இந்து நாளிதழோ தடமோ தீராநதியோ ஒரு வரி சொல்லியிருக்கிறதா?

உங்கள் இணையதளம் இவற்றைவிடவும் அதிகமாக இலக்கியவாசகர்களால் வாசிக்கப்படுகிறது. ஐம்பது ரூபாய் அதிகம் என நினைக்கிறார்கள் என்று சொன்னீர்கள். உங்களுக்கு எப்போதாவது பணம் கேட்டு கிடைக்காமலாகியிருக்கிறதா? உங்கள் பேச்சைக்கேட்க நான் 300 ரூபாய் கொடுத்து வந்தேன். பெங்களூரிலிருந்து சென்னைக்கு டிக்கெட் போட்டேன். ஓட்டலில் அறைபோட்டு தங்கினேன். மொத்தச்செலவு 4000 ரூபாய். இலக்கியத்துக்காகச் செலவழிக்கலாம். துண்டுப்பிரசுர அரசியலை நம் மேல் திணித்தால் எதற்குச் செலவழிக்கவேண்டும்? துண்டுப்பிரசுரங்கள் சும்மாதான் கொடுக்கபடவேண்டும்

கணேஷ்குமார்

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

 

நான் என் குறிப்பில் சொன்னதுபோல தடம் இதழ் அதற்கான பார்வை கொண்டிருந்தது, அதை முன்வைத்தது. அதற்கு இணைந்தபடி இலக்கியத்தை அணுகியது

 

உங்களுக்கு உவப்பில்லாத தரப்பை முன்வைக்கும் இதழ் நின்றுபோகவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறீர்கள்? அது நின்றால் ஏன் மகிழ்ச்சி அடைகிறீர்கள்? உங்கள் தரப்பு கொண்ட இதழ் மட்டுமே வரவேண்டும் என நினைக்கிறீர்களா என்ன?

 

நீங்கள் அதை எதிர்த்து இன்னொரு இதழ் நடத்தலாம். அவ்வாறு வரும் இதழை ஆதரிக்கலாம். எல்லா தரப்பும் ஒலிக்கும் சூழலை எதிர்பார்ப்பவனே அறிவியக்கவாதி

 

ஜெ

 

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

முந்தைய கட்டுரைஒரு வரலாறு வெளியாகும் பொருட்டு…
அடுத்த கட்டுரைமங்கல இசை மன்னர்கள்