எழுத்தாளனின் மதிப்பு

அன்புள்ள ஜெ..

ஹலோ எஃப் எம்’மில் உங்கள் பேட்டி வித்தியாசமான கேட்பனுபவம் தந்தது..பொதுவான நேயர்களும் கேட்கக்கூடும் என்பதை மனதில் வைத்து பேசினீர்கள்.

எழுத்தாளர்க்கு போதிய மரியாதை என்று நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அதற்கு காரணம் நம் மக்கள் அல்லர்..  நம் சராசரி மக்கள் என்றுமே படிப்பு என்பதை மதிக்கக்கூடியவர்கள்..

நான் ஒருமுறை சென்னையிலிருந்து பெங்களூரு பயணித்தேன்..  சரியான கூட்டம். நண்பனுக்கு வாங்கிச் சென்ற வண்ணக்கடல் ( வெண்முரசு) நூலை சும்மா புரட்டிக் கொண்டிருந்தேன்..

அதைப்பார்த்த நடத்துனர் என்னிடம்  , ” சார்.. என் சீட்ல உட்காரந்து வசதியா படிங்க ” என நடத்துனருக்கான தனி இருக்கையை தந்தார்.  உண்மையில் நான் ஏற்கனவே படித்த நூல் என்பதால் சும்மாதான் இலக்கின்றி புரட்டினேன். ஆயினும் அவருக்கு மதிப்பளிக்கும் விதமாக உண்மையிலேயே படிக்கலானேன்

மக்களுக்கு படிப்பின்மீது மரியாதை இருந்தாலும் எழுத்தாளனுக்கு பெரிய அளவில் மதிப்பில்லை என்ற நிலைக்கு காரணம் வெகு ஜன இதழ்களும் சினிமாவும்தான். இலக்கியவாதி என்பவன் புரியாமல் எழுதுபவன் , கிறுக்கன் என்ற பிம்பத்தையே அவை உருவாக்கின..   வெகு ஜன இதழ்களில் எழுதிய சுஜாதா ஒரு திரைநட்சத்திரத்துக்குரிய புகழில் திளைத்தபோது சிற்றிதழ் எழுத்தாளர்கள் அடையாளமின்றி இருந்தனர்

ஆனால் இன்று நிலை வேறு..  வெகு ஜன இதழ்கள் இன்றும்கூட இலக்கியவாதிகளை கேலி செய்தாலும் அந்த காலம் மாதிரி அவர்களால் யாரையும் உருவாக்கவோ அழிக்கவோ முடிவதில்லை..

வெகுஜன இதழ்களில் எழுதி பிரபலமாகி கட்சி ஆரம்பிக்கும்வரை சென்ற எம் எஸ் உதயமூர்த்தியை இன்று யாருக்கும் தெரியவில்லை..

மாறாக இலக்கியவாதிகள் பரவலாக அறியப்படுகின்றனர்..

மக்கள் எப்போதுமே எழுத்துக்கு மரியாதை கொடுத்தாலும் அவர்கள் முன் யார் எழுத்தாளர்கள் என அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

பொய்தெய்வங்களை முன்வைக்கும் பரப்பியல் ஊடகங்கள்தான் எழுத்தாளனை நம் சமூகம் மதிப்பதில்லை என்ற நிலைக்கு காரணம் என நினைக்கிறேன்

ஜனரஞ்சக ஊடகங்கள் செல்வாக்கை இழந்துவரும் இன்றைய சூழலில் நிலை மாறக்கூடும்

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

ஹல்லோ எஃப் எம் என்னிடம் கேட்ட கேள்வி: எழுத்தாளர்களைக் கொண்டாடவேண்டும் என்று சொல்கிறார்களே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எழுத்தாளர்களுக்கு இங்கே உரிய மரியாதை இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் அதற்குச் சொன்ன மறுமொழி: எழுத்தாளர்களை கொண்டாடவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் எழுத்தாளர்களாக மதிக்கப்படவேண்டும். எழுத்து என்பது என்ன, அதன் பின்னணியிலுள்ள உளக்கொந்தளிப்புக்கள் என்ன என்பவை புரிந்துகொள்ளப்படவேண்டும். எழுத்தாளர் எழுத்தாளர் என்பதற்காக மதிக்கப்படவேண்டும், அவர் எழுத்துக்கள் மீதான வாசிப்பு அம்மதிப்பின் விளைவு.

தமிழகத்தில் இலக்கியம் மீதான மதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை.சற்றும் இல்லை. இங்கே அறிவியக்கம் மீதான மதிப்பே இல்லை என்பதே உண்மை. நான் எப்போதும் சொல்லிவருவதுதான். அறிவியலாளர் எவருக்கேனும் இங்கே மதிப்பு உள்ளதா? நோபல்பரிசு பெற்ற இரு தமிழர்கள் உள்ளனர். சர் சி.வி.ராமன், வெங்கட்ராமன் இருவரையும் கௌரவிக்கும் முகமாக ஏதேனும் முக்கியமான சாலையோ நினைவுச்சின்னமோ சென்னையில் உண்டா? கணிதமேதை ராமானுஜனுக்கு?

நவீன இலக்கியமுன்னோடி புதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவுச்சின்னம் சென்னையில் உண்டா? ஞானபீடப்பரிசு பெற்ற அகிலனுக்கோ ஜெயகாந்தனுக்கோ ஓர் நினைவகம் இங்கே உண்டா?  அதனுடன் கேரளத்தையும் கர்நாடகத்தையும் ஒப்பிட்டுக்காட்டினேன். அங்கே ஒவ்வொரு ஊரும் அங்கே பிறந்த எழுத்தாளர்களால் அடையாளம் பெறுவதை, கல்லூரிகளில் பள்ளிகளில் அவ்வெழுத்தாளர்களின் படங்கள் இடம்பெற்றிருப்பதைபற்றிச் சொன்னேன் . நான் சொன்னவை எப்போதுமே சொல்லிவருவனதான்.

நான் பேசிக்கொண்டிருப்பது ஒரு வெளிப்படையான விஷயம். ஆனால் என்ன சிக்கல் என்றால் உண்மையில் இதைப்பற்றி தெரியாத ஒருவரிடம் இதைச் சொல்லவே முடியாது என்பதுதான். எந்தக்காரணத்தால் இவர்கள் இலக்கியத்தை, அறிவியக்கத்தை மதிப்பதில்லையோ அதே காரணமே எதிரே வந்து நின்று புரிந்துகொள்ளமுடியாதபடித் தடுக்கும். அதை அறிவின்மேல் ஈடுபாடில்லாத மொண்ணைத்தனம் என்பேன். அதே மொண்ணைத்தனமே என் இக்கூற்றுக்கும் எதிர்வினையாக எழும். எத்தனை காலமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் இதை. என் வருந்தலைமுறைகளும் இந்த மொண்ணைத்தனத்தின் மீதேயே முட்டிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

பொதுவான எதிர்வினைகளிலுள்ள முக்கியமான கருத்துக்கள் இவையே.

அ. எழுத்தாளன் சமூகசேவை செய்யவேண்டும். சமூகத்திற்குப் பயனுள்ளவனாக இருக்கவேண்டும். மக்களுடன் இணைந்து போராடவேண்டும். இல்லாவிட்டால் மதிக்கமுடியாது. [அப்படிப்பட்ட ‘மதிப்பு’ இல்லாத எழுத்தாளனை அடிப்பது அவசியம் என்றும் சில கருத்துக்கள்]

ஆ.  எழுத்தாளன் கண்டபடி எழுதக்கூடாது. மக்களுக்குப் புரியும்படி மக்கள் வாசித்து மகிழ்வதற்காக எழுதவேண்டும். இல்லாவிட்டால் மரியாதை கிடையாது

இ. எழுத்தாளன் நல்லவனாக இருக்கவேண்டும். ஒழுக்கமானவனாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் மதிப்பை எதிர்பார்க்கக்கூடாது

ஈ.  எழுத்தாளன் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, மக்களுக்கு நல்லது அளிக்கக்கூடிய கருத்துக்களைச் சொல்லவேண்டும்.

மொண்ணைக்கருத்துக்கள் என்பவை இவையே. இந்த மொண்ணைக்கருத்துக்கள் முக்கியமானவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் ஒருபோதும் எழுவதில்லை என்பதனால்தான் கேரளத்திலும் கர்நாடகத்திலும் எழுத்தாளர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்கிறேன்.

அ. எழுத்தாளன் சமூகசேவகன் அல்ல. அவனுடைய வேலை எழுத்து. அவன் எதற்காக எழுதுகிறான் என்பது அவனுக்கே பலசமயம் தெரியாது. அவன் ஓர் அடிப்படை உந்துதலால் எழுதுகிறான். அது சிலசமயம் உடனடிப் பலன் அளிக்கும். சிலசமயம் உடனடியாக பலனேதும் அளிக்காது. அதன் முக்கியத்துவம் பல ஆண்டுகளுக்குப்பின் கண்டடையப்படலாம். அவன் செத்தபின் கண்டடையப்படலாம். ஆகவே உடனடியாக சமூகப்பயன்பாடு என்பதைக்கொண்டு எவரும் இலக்கியத்தை அளக்கமுடியாது. மக்களின் பொதுவான இயக்கங்களில் சேர்ந்து செயல்படுபவர்களாக பொதுவாக எழுத்தாளர்கள் இருப்பதில்லை. அவர்களின் வழி தனித்தது. பலசமயம் காலத்தில் மிக முன்னால் செல்வது. மக்கள் அங்கே வந்துசேர மிகவும் பிந்தவும்கூடும். மக்களில் ஒருவனாக மக்களின் பொதுக்கருத்துக்களுடன் முற்றாக இணைந்து செயல்படும் எழுத்தாளன் ஏற்கனவே மக்களுக்குத்தெரிந்தவற்றையே சொல்பவன். விலகி தனிப்பாதை காண்பவனே எப்போதும் முக்கியமான எழுத்தாளன். அவனுடைய எழுத்தை அப்போது பொருள்கொள்ள முடியாவிட்டாலும், அவை உடனடி பயனளிக்காவிட்டாலும் அவை எவ்வகையிலோ ஒரு சமூகத்தின் அறிவார்ந்த செயல்பாட்டுக்கு முக்கியமானவை என உணர்ந்து அவனை மதிப்பதே உயர்பண்பாட்டின்  மனநிலை.

ஆ. எழுத்தாளன் எழுதுவது சிலசமயம் மக்களுக்கு உகந்ததாக புரிவதாக இருக்கும். சிலசமயம் மக்களின் பொதுரசனையையும் அறிவுத்தளத்தையும் கடந்ததாக இருக்கும். பொதுவாக புதியன சொல்லும் எழுத்தாளன் பொது ரசனை, பொது அறிவுத்தளத்தைக் கடந்தவனாகவே இருப்பான்.

இ. எழுத்தாளனின் உள்ளம் உள்ளுணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நம்பிச் செயல்படுவது. ஆகவே அது பாய்ந்து முன்செல்லும் இயல்பு கொண்டது. சமூகம் சராசரிகளுக்காக வகுத்து வைத்திருக்கும் ஒழுக்க அளவுகோல்கள் அதற்கு உகந்தவையாக இருப்பதில்லை. எழுத்தாளனின் அந்த மீறலை அங்கீகரிக்கும் பண்பாடே அறிவார்ந்த பண்பாடு. ஏனென்றால் அந்த மீறல்வழியாகவே அவன் சராசரிகளிடமிருந்து முன்னால் செல்கிறான்

ஈ. மக்கள் என இவர்கள் சொல்வது தங்களைத்தான். தங்களுக்கு பிடிக்காதவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றுதான் இவர்கள் சொல்வதற்குப்பொருள்.பொதுவாக அரசியல்சார்பானவர்களே இலக்கியவாதிகளை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் நம்புவதே உண்மை. அதை ஏற்று தங்கள்பின்னால் மந்தையாகக் கொடிபிடிப்பவர்களே தேவை. மற்ற அனைவருமே எதிரிகள். ஆகவே மாற்றுக்கருத்துள்ள எழுத்தாளர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள், வெறுப்புக்குரியவர்கள். எந்தத்தரப்பையும் சேராத எழுத்தாளன் பொது எதிரி.

நம் சூழலில் எழுத்தாளன் மீதான உச்சகட்ட வெறுப்பு எவரிடமிருந்து வெளிவருகிறது என்று பாருங்கள். பெரும்பாலும் முதிராஅரசியலாளர்களிடமிருந்துதான். அவர்களுக்கு தங்கள் காழ்ப்புகளை கொட்ட, தங்களை நீதிமான்களாகவும் போராளிகளாகவும் காட்டிக்கொள்ள, அதற்கு அடியில் தங்கள் அன்றாட அற்பத்தனங்களை மறைத்துக்கொள்ள ஒர் அரசியல்நிலைபாடு தேவை. அந்நிலைபாட்டை எடுத்ததுமே அதன் வெளிப்பாடாக எழுத்தாளர்களை வசைபாடத் தொடங்குகிறார்கள்

எழுத்தாளனை வெறுப்பவர்கள் எவர்? ஐரோப்பியப் பண்பாட்டில் இயல்பாகவே அறிவுவழிபாடு உண்டு. அந்த மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டவர்கள் எழுத்துமேல் மதிப்பு கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே இந்தியாவில் கிறித்தவர்கள் அறிவொளிக்காலத்திற்கு முந்தைய கிறித்தவ உள்ளம் கொண்டவர்கள். உச்சகட்ட அறிவெதிர்ப்புதான் அவர்களின் இயல்புநிலை. விதிவிலக்குகள் தமிழக அளவில் ஒரு பத்திருபதுபேர் இருந்தாலே அதிகம். மிச்ச அத்தனைபேருமே மோகன் சி லாரசரசின் உளநிலைகொண்டவர்கள்.  இஸ்லாமியர் அவர்களின் நம்பிக்கை அன்றி எல்லாமே எதிர்க்கப்படவேண்டியவை என நினைப்பவர்கள். அவர்களிலும் மீறி அறிவுமீதான மதிப்பு கொண்டு எழுபவர் சிலரே.

இந்துமரபு என்றுமே கல்வியை, ஞானத்தை வழிபடுவதற்கு வழிகாட்டுவது. ஒர் எளிய இந்து எந்தக் கல்விமானையும் மதிப்பவன். ஆனால் இங்கே இன்று இந்துமதம் சார்ந்த விழுமியங்களில் நம்பிக்கைகொண்ட இந்துக்கள் மிகமிகக் குறைவு. உலகியல்வெறியே  இந்துக்களை ஆள்கிறது. மதவழிபாடே கூட உலகியல்பேரம்தான். உலகியலுக்கு உதவாத அறிவின்மேல் இங்கே மதிப்பு இல்லை. இந்துக்களில் உலகியலுக்கு உதவாத அறிவின்மேல் மதிப்புகொண்டவர்கள் பல்லாயிரத்தில் ஒருவர்.

இங்கே உள்ள இந்துத்துவர்கள் போல இந்துக்களின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு எதிரானவர்கள் இல்லை. தங்கள் தரப்பில் நின்று கொடியேந்தாத அனைவரையும் பற்றி அவர்கள் பேசும் மொழிநடையை கவனியுங்கள். ஓர் இந்து, அவனுக்கு அடிப்படை இந்துமெய்யியலின் மெல்லிய மதிப்பேனும் இருந்திருந்தால், ஒருபோதும் அச்சொற்களில் அவ்வுணர்வுகளில் ஓர் அறிஞனை, எழுத்தாளனைப் பற்றிப் பேசமாட்டான். அவன் தனக்கு முற்றிலும் எதிரானவன் என்றால்கூட. நான் சொல்லும் சொற்களை நான் சொல்வதைப்போலவே சொல்லாத எவனும் இழிந்தவன், அயோக்கியன்,அழித்தொழிக்கப்படவேண்டியவன் என்னும் நிலைபாடு கொண்டவர்கள் இவர்கள். இவர்களே இன்று இந்துக்குரல் என அறியப்படுகிறார்கள்.

இடதுசாரிகளும் திராவிட இயக்கச்சார்பானவர்களும் தங்களவர் அல்லாத அனைவரையும் எதிர்க்கும், இழிவுசெய்யும் உளநிலைகொண்டவர்கள்தான் – ஆனால் இப்போது பார்க்கையில் ஒப்புநோக்க மேலும் சற்று அறிவார்ந்தசெயல்பாடுகள்மேல் மதிப்பு கொண்டவர்கள் அவர்களே என படுகிறது. இதுதான் நம் சூழல்

இன்னின்ன வகையில் இருந்தால் எழுத்தாளனை மதிப்போம் என்பது மதிப்பல்ல. நிபந்தனைகளே இல்லாமல், அவன் எழுத்தாளன் என்பதனால், எழுத்தினூடாக தன்னை முன்வைப்பவன் என்பதனால், அளிக்கப்படும் மதிப்பே உண்மையானது. அப்படி மதிக்கப்படும் சூழலிலேயே எல்லாவகையான வெளிப்பாடுகளும் நிகழும். அதுவே ஓர் அறிவார்ந்த சூழலை உருவாக்கும். அதுவே புதியன நிகழச்செய்யும். அறிவார்ந்த வளர்ச்சியை இயல்வதாக்கும். அதையே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்

ஜெ

***

முந்தைய கட்டுரைகல்வி- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3