’மொக்கை’ – செல்வேந்திரன்
மும்மொழி கற்றல்
ஆசிரியருக்கு,
நமது கல்வித் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அல்ல தரக்கேடு எந்த அளவில் உள்ளது என்பதை தான் இனி கணக்கிடவேண்டும். செல்வேந்திரனின் உரை மிக கூர்மையானது சமரசமற்றது. அதற்காக அவருக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள். இப்படி ஒரு சிந்தனை இருக்கிறது என்பது கூட கல்வி வட்டாரம் அறியாது. அவர் சரியாகவே கல்லூரிகளுக்கு வரும் பேச்சாளர்களையும் அவர்கள் உதிர்க்கும் புகழ்மொழிகளையும் விமர்சித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக மாணவர்களுக்கு டண் கணக்கில் தன்னம்பிக்கை அளித்தல், அவர்கள் செய்யும் அனைத்து அற்ப செயல்களையும் சாதனைகளாக ஊக்குவித்தல் என்கிற மனோ வியாதி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கடுமையாக பரவியுள்ளது. நாளாவட்டத்தில் அவர்கள் இதை தனக்குத்தானே நம்பவும் துவங்கி விட்டனர், மாணவர்கள் அறிவு துளைக்கா பசுங்குடியில் உள்ளனர். விமர்சனம் என்பது கல்வித்துறை இதுவரை சந்தித்திராத ஒன்று. இவ்வாறு வெளியில் இருந்து தான் அவர்களுக்கு அது வரவேண்டும். எனக்கொரு கருத்துண்டு, இத்தனை ஆண்டுகள் கல்விக்கு செலவிட்டு 24 வயதில் வெளியே வருகிற ஒருவனுக்கும் கல்விச்சாலைக்கே செல்லாத ஒருவனுக்கும் எந்த வேறுபாடும் காணக்கிடைப்பதில்லை, ஆகவே அனைத்து கல்வி நிலையங்களையும் ஒரு 5 ஆண்டுகளுக்கு மூடினால் கூட இந்த தேசத்திற்கு எவ்வித இழப்பும் இல்லை. மீள் பரிசீலனை செய்து விட்டு மீண்டும் நாம் கல்விக்கூடங்களை திறக்கலாம்.
எத்தகைய கற்சுவரின் முன்பும் பாடம் ஒப்பிக்கும் பயிற்சியை ஆசிரியர்களும், எத்தகைய கண்கவர் அறிவுச்செல்வத்திற்கும் செவி மடுக்காத பயிற்சியை மாணவர்களும் பயின்று தேர்ந்துள்ளனர். ஆகவே 2000 பேர் அமர்ந்த அரங்கில் செல்வேந்திரன் பேசியது ஒரு நூறு இருநூறு பேர்களது செவிகளை தான் அது லேசாக சென்று தடவியிருக்கும். மாணவர்களின் மறதித்திறன் வியக்கத் தக்க அளவில் உள்ளது, அவர்கள் கடந்த ஆண்டு எவற்றை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த ஆண்டு அறிவதில்லை.
அதுபோக நமது ஆங்கில கல்வி முழுத்தோல்வியை அடைந்துள்ளது எனக்கூறலாம். மணிக்கணக்கில் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் கற்பித்து கற்று, லட்சக்கணக்கில் செலவிட்டு நாம் அடைவது ஒரு managable english. சுயமாக ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ நமது மாணவர்களுக்கு தெரியாது. இவர்களின் தற்கொலை கடிதங்களை படித்து பார்த்தல் அவர்கள் சாவதே மேல் எனக்கூறுவோம், முதலில் மொழியை கொன்றுவிட்டு தான் அவர்கள் தற்கொலை செய்கிறார்கள் . என்னசெய்வது ஒரு மாணவன் சுயமாக எழுதுவது இது மட்டும் தான் பொதுப்பார்வைக்கு வருகிறது. தேசிய ஊடகங்களில் நல்ல ஆங்கிலத்தில் பேச நமக்கு எந்த கட்சியின் தரப்பிலும் ஆள் இல்லை, ஆகவே குஷ்பூ போன்றோரிடம் தான் நாம் சொல்லவேண்டியிருக்கிறது. ஆக கடந்த 20 ஆண்டுகளாக பலவருடங்களாக சேர்ந்த மனித மணிநேரங்களையும், கோடிக்கணக்கில் ரூபாய்களையும் ஆங்கிலக்கல்வி என்கிற பெயரில் ஆற்றில் விட்டுவிட்டோம்.
ஒரு பத்தாண்டுகளுக்கு கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என ஒரு மேம்பட்ட கல்வித்திட்டத்தை ஒரு சமரசமற்ற நிபுணர் குழு மூலமாக அமைத்து, கிட்டத்தட்ட 80 % ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து விட்டு, புதிதாக துவங்க வேண்டியது தான். கல்விச்சாலைகளில் Motivational speakers ஸை உடனடியாக சட்டரீதியாக தடைசெய்யவேண்டும், (இதுவரை அவர்கள் ஆற்றிய பணிக்கே உகந்த சிறைத்தண்டனை வழங்க வேண்டும்).
கிருஷ்ணன்.
அன்புள்ள ஜெயமோகன்!
செல்வேந்திரனின் “மொக்கை”என்ற தலைப்பிலான உரையும், “மும்மொழி கற்றல்” பற்றிய கடிதத்துக்கான தங்களின் பதிலும் தமிழகக் கல்வி நிலை தொடர்பான விமர்சனங்களே.இரண்டும் மனதில் ஆழ்ந்த வேதனையையே உருவாக்கின.இரண்டும் யாரும் சொல்லாத,சொல்ல விரும்பாத பிரச்னைகளின் புதிய கோணங்களைத் தொட்டன. பிரச்னைகளை நிர்வாணமாக பார்த்து உண்மைநிலையை உணர்ந்து கொண்டால் மட்டுமே அவற்றின் சரியான தீர்வுகளை நோக்கி செல்ல முடியும்.இந்தி வேண்டாம் என்பதற்கான அரசியலற்ற காரணத்தை மாணவர்களின் கோணத்திலிருந்து சிந்திப்பது புதிதாகஇருந்தது.
மாணவர்களின் உண்மையான அறிவு நிலை எந்த அளவுக்குமோசமாக உள்ளது என்பதை தயவு தாட்சண்யமின்றி பச்சையாக செல்வேந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.இது ஓரிரு நாட்களில் சரி செய்யக் கூடிய இழப்பல்ல.இன்றிலிருந்து தொடங்கினால்தான் அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற முடியும்.இளைஞர்களை உண்மையில் நேசிக்கும் எவரும் இப்படித்தான்நொந்து போக முடியும்.செல்வேந்திரனின் மனிதாபிமானமும்துணிவும் வணங்கத் தக்கவை பாராட்டுக்கள்,செல்வேந்திரன்!
சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.