இந்தியப்பெருமிதம் – கடிதங்கள்

இந்தியப் பெருமிதம்

அன்புள்ள ஜெ

 

இந்தியப்பெருமிதம் என்னும் கட்டுரையை வாசித்தேன். உண்மையில் அதை வாசிக்கும்போது முதலில் கோபம்தான் வந்தது. அதற்குப்பின்னர்தான் கசப்பு. இந்தியாவில் இலங்கை- திருச்சி, சிங்கப்பூர் –சென்னை ஏர் இந்தியா, லங்கா ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒருமுறை பயணம்செய்த எவரும் அதிலுள்ள எந்த வரிகளையும் மறுக்கமுடியாது. பொதுநாகரீகம் என்பதே இந்தியாவில் இன்னும் உருவாகவில்லையோ என்று தோன்றும். சென்றவாரம் வரநேர்ந்தது. என் அருகே இருந்தவர் நேர்காலடியில் இருமி காறித்துப்பிக்கொண்டே இருந்தார். விமானத்தில் தரையில் துப்பும் ஒரு மனித உயிரை முதல்முறையாகப்பார்த்தேன். நடுத்தரவயதானவர். விமானப்பணிப்பெண் அருகிலேயே வரவில்லை. அருவருப்பாக முகம்சுளித்துவிட்டு அப்பால் சென்றாள். இப்படி நாம் இருக்கிறோம். வெட்கம்தான்

 

ஜெயராமன்

 

அன்புள்ள ஜெ

 

இந்தியப்பெருமிதம் வாசித்தேன். இந்தியர்கள் பொதுவாகச் செய்யும் பல கேனத்தனங்கள் உள்ளன White Man Falling என்ற நாவல். பிரிட்டிஷ் ஆசிரியர்  Mike Stocks எழுதியது. வாசிக்கவேண்டிய நாவல். தமிழர்களின் பொதுவான கேனத்தனங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லியிருப்பார். தன் பிள்ளைகளின் பெருமையை வாய்கூசாமல் முன்பின் தெரியாதவர்களிடமும் சொல்வது, விருந்தினர்களிடம் பிள்ளைகளை பாடவும் ஆடவும் சொல்லி கட்டாயப்படுத்துவது, குடும்ப ஆல்பத்தை விருந்தினர்கள் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, பொது இடங்களில் கூச்சலிட்டுப்பேசுவது, பொது இடங்களில் ரவுடிகள் போல நடந்துகொள்வது [ இதற்கு உல்லாசமாக இருப்பது என்று பெயர்] பிறருடைய சொந்தவிஷயங்களை தோண்டித்துருவி கேட்பது, பிறர் இல்லாதபோது வம்புபேசி அவர்களை நேரில் பார்த்தால் கொஞ்சிக்குலாவுவது, பொதுச்சுகாதாரத்தில் அக்கறையில்லாமை, காரைத்திறந்து குப்பையை ஊர்ச்சாலையிலேயே வீசிவிட்டுப்போவது என்று தமிழர்களின் அற்பத்தனங்கள் உலகிலேயே அரிதாகக் காணக்கிடைப்பவை.

 

ராமச்சந்திரன்

அன்புள்ள ஜெ

 

இந்தியப்பெருமிதம் கட்டுரையில் பஃபே பற்றிச் சொல்லியிருந்தீர்கள். பஃபே என்று சொல்லவேண்டுமா புஃபே என்று சொல்லவேண்டுமா என்று இங்கே கட்டுரைகள் உண்டு. ஒரு பஃபே விருந்தில் எப்படி சாப்பிடவேண்டும் எனறு எழுதப்பட்ட முதல்கட்டுரை என நினைக்கிறேன். ஏற்கனவே நீங்கள் பந்தி என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை ஞாபகம் வந்தது [ஆனால் ஒன்று, இந்திய உணவுக்கு பஃபே என்பது கொடுமை]

 

ஆர். கிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6
அடுத்த கட்டுரைஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்