சிவப்பயல் -கடிதங்கள்

சிவப்பயல்

அன்புள்ள ஜெ,

சீரியசாக எழுதப்பட்ட கட்டுரைகள் நடுவே அவ்வப்போது உங்கள் புன்னகை வந்துசெல்லும் அழகான சின்னக் கட்டுரைகள் உண்டு. ஒரு சித்திரம் அல்லது ஒரு நினைவு. அந்தக்கட்டுரைகள்தான் எனக்கு நெடுங்காலம் நினைவில் நின்றிருக்கின்றன. ஏன் என்று நான் யோசிப்பதுண்டு.

எனக்கு தோன்றுவது இதுதான். இங்கே கருத்தியல் அரசியல் எது சார்ந்து எழுதினாலும் ஒரு எதிர்மறைத்தன்மை அல்லது விமர்சனத்தன்மை வந்துவிடுகிறது. ஆனால் இந்தவகையான கட்டுரைகள் முழுக்கமுழுக்க நேர்நிலையானவை. காலையில் இவற்றை வாசிப்பது ஓர் இனிய தொடக்கமாக அமைகிறது. அன்றுமுழுக்க மனசிலே ஒரு விளக்கு கொளுத்தி வைத்ததுபோன்ற உணர்சி ஏற்படுகிறது.

அத்தகைய கட்டுரை சிவப்பயல். அதில் பலவரிகள் என்னை புன்னகைக்க வைத்தன. உதாரணமாக அந்த பாம்பை எப்போது கழுத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டார்? சூலம் சின்னவயசிலேயே கையில் இருந்ததா? குழந்தைப்பருவத்திலேயே புலித்தோலாடை தானா? சாம்பலை அள்ளிப்பூசும்போது அவ்வப்போது வாய்க்குள்ளும் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்ததா? என்றவரிகளை நினைத்து பஸ்ஸில் சிரித்துக்கொண்டே சென்றேன்

சாரதா

***

அன்புள்ள ஜெ

சிவப்பயல் ஒரு அழகான கவிதைபோன்ற கட்டுரை. இப்போது தமிழில் அழகுகொண்டு வெளிவரும் இலக்கியவடிவம் என்பது இதைப்போன்ற குறுங்கட்டுரைகள்தான். கவிதையும் சிறுகதையும் கலந்த ஒரு வடிவம். இதையே கொஞ்சம் மாற்றி சிறுகதையாக ஆக்கமுடியும். கொஞ்ச வரிகளை மடித்துப்போட்டால் கவிதையும் ஆகிவிடும்.

அனுபவக்குறிப்பு என்பது இதன் பாவனை மட்டுமே. இதன் மையம் கவிதையாகவே வெளிப்படுகிறது. சிவன் என்னும் தீவண்ண தெய்வம் கனிந்து குழந்தையாக ஆகிறது. அதேபோல அப்பா அந்த கெத்தை விட்டுவிடாமலேயே மனசுக்குள் கனிவதுதானே கதை? சிவப்பயல் அப்பாதானே?

மகேஷ் எம்

***

ஜெ

சிவன் உட்பட தெய்வங்களை குழந்தையாக ஆக்கிப்பார்க்கும் மனநிலை எங்கிருந்து வருகிறது? அது இந்து ஆன்மிகத்தில் ஒரு முக்கியமான அம்சம் இல்லையா? நாம் பெற்றோராகிவிடுகிறோம். ஃபாவபக்தியில் அது ஒரு நிலை. நம்மை சிவனுக்கு மகளாக நினைப்பது ஒரு நிலை. சிவனுக்கு அம்மாவாக நினைக்கமுடிவது இன்னொரு மனநிலை. அற்புதமான ஒரு நிலை அது.

எஸ்.மகாலட்சுமி

***

அன்புள்ள ஜெ

குழந்தைகளால் கண்ணைமூடி அமர முடியாது. அமர்ந்தால் தூங்கிவிடும். இல்லாவிட்டால் வெளியே கவனித்துக்கொண்டிருக்கும். அந்த சிவக்குழந்தை வெளியே கவனித்துக்கொண்டு அமர்ந்திருப்பது அற்புதமான சித்தரிப்பு

பாலகிருஷ்ணன்

***

முந்தைய கட்டுரைநீலவானும் மண்ணும்
அடுத்த கட்டுரைசுகிசிவமும் சுப்ரமணியனும்