பசுஞ்சுடர்வு

“ஏன் நீங்கள் சென்னையில் குடியேறக்கூடாது?” சினிமாக்காரர்களில் இருந்து வாசகர்கள் வரை அடிக்கடிக் கேட்கும் கேள்வி. கோவையில் குடியேறச்சொல்லி அன்புக்கட்டளைகள் பல. ஏன் என்று நானே கேட்டுக்கொள்கிறேன். கோவை எனக்கு பிடித்த ஊர். சென்னையில் அறைகளுக்குள் இருக்கப்பிடிக்கும் – நட்சத்திரவிடுதி என்றால். ஆனாலும் நாகர்கோயிலையே விரும்புகிறேன். பல காரணங்கள். என் நினைவுகள் படிந்த நிலம். என் மூதாதையரின் மண்.

ஆனால் சமீபத்தில் ஊட்டி சென்றபோது ஒன்று தெரிந்தது. ஊட்டியும் எனக்குப்பிடித்திருக்கிறது. அங்கும் நான் கொண்டாட்டமாகவே இருக்கிறேன். அங்கே செல்ல ஆரம்பித்து இந்த முப்பதாண்டுகளில் கொண்டாட்ட மனநிலை இல்லாமல் ஊட்டியில் இருந்ததே இல்லை. அப்போதுதான் ஊட்டிக்கும் நாகர்கோயிலுக்கும் பொதுவாகச் சில இருந்தாகவேண்டும் என்று தோன்றியது.

நேற்று காலை ஒரு மெல்நடை சென்றேன். ஒளிரும் இனிய மழை. குடை எடுத்துக்கொள்ளவில்லை. காற்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. முகில்கள் இளவெயிலில் மின்னிக்கொண்டிருந்தன. இலைகளிலெல்லாம் ஈரம் பளபளத்தது. புல்மலர்க்குலைகளில் நீர்மணிகள் விதைகளுடன் கலந்து தாங்களும் ஒளிர்ந்தன. கணியாகுளம் சாலையில் சென்றபோது ஒரு காட்சியைக் கண்டு நின்றுவிட்டேன். பசுமையின் ஒளி. ஆம், இதுதான் என்னை இங்கே வைத்திருக்கிறது. இதுதான் நகரங்களைவிட்டு அகற்றுகிறது.

பசுமை அளிக்கும் உணர்வுகள் பல. எல்லா வண்ணங்களும் அழகே. எனினும் பசுமையே உயிரின் வண்ணம். தளிர் ஒருவண்ணம். அதில் ஒளி ஊடுருவுகிறது. ஆழ்பசுமை கொண்ட முற்றல் இலைகளில் ஈரம் ஒளியென வழிந்து சொட்டிவிடுகிறது. பசுமைக்குமேல் பசுமை விந்தையான விளைவை உருவாக்குகிறது. ஒற்றை வண்ணத்தாலான ஓவியம். பசுமைபோல ஒளியைக் கொண்டாடும் வண்ணம் வேறில்லை. ஒளிக்காகவே உருவாக்கப்பட்ட வண்ணம் அது. ஒளியை உணவாக்குவது.

ஒளி அருவமானது. விண்ணிலிருந்து பொழிவது. கடுவெளியின் புன்னகை. அதை பருவடிவ அன்னமாக ஆக்குக்கின்றன இந்த இலைகள். கைவிரித்து அள்ளி அள்ளிச் சேர்க்கின்றன. காய்களும் கனிகளும் கிழங்குகளும் ஆக்குகின்றன. புல்லை உண்ணும் எருமையின் மெல்லிய மூச்சொலியை, அதன் உடலெங்கும் ததும்பும் சுவையை, வாலில் சுழலும் பரவசத்தைப் பார்க்கையில் நேரடியாகவே பசுமையை மேயும் உவகையை மானுடர் இழந்துவிட்டார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது

இது ஆவணி. பொன்னோணம் எழும் மாதம். இந்த மாதத்திற்கென்றே ஒரு பசுமைவண்ணம் இங்கே உண்டு. தளிரிடுந்ந தாருண்யமே பொன்னோணம். பழைய சினிமாப்பாட்டு. ஆடியின் சாரலும் மழையும் சற்றே ஓய தளிர்கள் அனலென பற்றிக்கொண்டு பெருகிச்சூழல் அவற்றின்மேல் வெயில் பொழிந்து தேங்கியிருக்கும் வண்ணம். ஓணத்திற்கு மலர்க்களம் அமைப்பார்கள். எங்களூரில் ஒருமுறை என் அக்காக்கள் தளிரிலைகளால் ஒரு பசுங்களம் அமைத்ததை நினைவுகூர்கிறேன்.

பாதைகளின் இருபுறங்களிலுமிருந்து புல் பெருகி எல்லைகவிந்து தடமழிக்க முனைகிறது. குப்பைகளுக்குமேல் பசும்புல்லின் தளிர்ப்போர்வை. வேலிகள் பசுமைகொண்டிருக்கின்றன. பாறைகள்மேல் பசும்பாசி படிந்திருக்கிறது. அன்றெல்லாம் எங்கள் ஊரின் ஓட்டுக்கூரைகளிலும் ஓலைக்கூரைகளிலும்கூட பசுமைதான் நிறைந்திருக்கும். நீர்க்காய்கறிகள் செழிக்கும் பருவம். பீர்க்கு, பூசணி, சுரை. அவை மலர்விடும். நான் பசுமைக்குள் பிறந்து வளர்ந்தவன்

பசுமைக்குமேல் அன்றி வேறெங்கு விழும் கதிரொளியும் வீண் என்று படுகிறது. அமுது ஒழுகி வற்றி மறைகிறது. இலைகளில் ஊரும் புழுக்கள் பச்சைநிறம் கொண்டிருக்கின்றன. அவையும் பச்சையம் கொண்டிருக்கின்றனவா என்ன? ஆனால் பச்சைநிற வண்ணத்துப்பூச்சிகள் இல்லை. பசுமஞ்சள் நிறச் சிறகுகொண்டவை உண்டு. அவை பச்சைத்தளிர்களில் அமர்கையில் தளிரென்றே மயங்கவைக்கின்றன

கொஞ்சம்கூட கற்பனாவாதம் இல்லாத நவீனத்துவ எழுத்தாளர்களை நான் எப்போதும் ஒருபடி கீழாகவே வைத்திருக்கிறேன். கற்பனாவாதம் இல்லாதவர்கள் தான் என்னும் மையத்தைக் கடந்து இப்புவிப்பேருருவைக் காணவே முடியாது. இருப்பென்பதைக் கடந்து வெளியென்பதை உணர இயலாது. அவர்களுக்கு திளைத்தல் இல்லை, பறத்தல் இல்லை, இன்மையென்றாதல் இல்லை. பெருநிலைகள் ஏதுமில்லை. பெருநிலைகள் கற்பனை அல்ல. ஆனால் கற்பனை இன்றி அங்கே செல்ல இயலாது.

தமிழில் கற்பனாவாதம் என காணக்கிடைப்பவைகூட பெரும்பாலும் காமம்சார்ந்தவை. காமம்சார்ந்த கற்பனாவாதம் மிக எளியது. அது தன்னில் தொடங்கி தன் இன்னொரு வடிவில் முடிவது. கற்பனாவாதக் காதலின் காதலி என்பவள் அவனுடைய ஆடிப்பாவை அன்றி வேறு எவர்? இயற்கைநோக்கி விரியும் கற்பனாவாதம் பேருருக்கொண்டது. வானை உணர்கையில் அது முடிவிலி. காமம் இயற்கையின் கொச்சையான வடிவம். இயற்கையில் காமம் இயல்பான ஒரு துளி

இப்போது படிக்கையில் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளே உச்சமெனத் தோன்றுகிறது. அவ்வப்போது தோன்றி அடுத்த தலைமுறைக்குப் பொருளிழக்கும் அன்றாடச்சிக்கல்களும் இருப்பின் தவிப்புகளும் கவிதையால் தொடப்பட்டு ஒளிர்ந்து கவிதை கடந்துசென்றதும் இருளில் மூழ்கி பின்னகர்ந்து விடுகின்றன. உலகக்கவிதையின் மகத்தான வரிகளில் மிகப்பெரும்பாலானவை இயற்கையைப்பற்றியவையே.

வெறும் இயற்கைவர்ணனையே பெருங்கவிதையாகக்கூடும். ஏனென்றால் இயற்கையை பொருள்கொள்ளச் செய்வது மொழி. மொழியை இயற்கை பொருள்கொள்ளச் செய்கிறது. மாறி மாறி நோக்கிக்கொண்டு ஒன்றையொன்று வளர்த்தபடி மாளாத்தவத்தில் அமைந்திருக்கின்றன இருபேரிருப்புக்களும். இயற்கைமுன் திகைத்து தன் எல்லையை உணர்கையில் மொழி கவிதையாகிவிடுகிறது. ஆகவேதான் நான் தேவதேவனிடம் மீண்டும் மீண்டும் சென்றுகொண்டிருக்கிறேன்


பச்சைக்குடில் என மூடிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இலைத்திரைக்கு அப்பாலிருக்கும் பசிய வயல்வெளியில் நின்றிருக்கும் பசுஞ்சுடர்வெயிலை நோக்கிக்கொண்டிருக்கிறேன். இங்கே பசுமை அன்றி வேறேதுமில்லை. மானுடர்கூட. என் இல்லத்திலிருந்து ஐந்துநிமிட நடை. ஊட்டி அன்றி வேறெங்கேனும் இது அமையக்கூடுமென தோன்றவில்லை. இங்கே அமர்ந்து வெறும் விழிகளாக என்னை ஆக்கிக்கொண்டிருக்கிறேன்.ஓவியனாக இருந்திருந்தால் பச்சை வண்ணத்தை அன்றி  எதையும் தூரிகையால் தொட்டிருக்கமாட்டேன்.

பசுமை என்னும் சொல் பொருளிழக்கிறது. ஆனால் இங்கிருந்து கிளம்பியபின் அச்சொல்லில் இவையனைத்தும் வந்து அமர்ந்திருக்கும். சொல்துறத்தலும் சொல்சூடிக்கொள்ளுதலும் இலக்கியவாதியின் ஊசலின் இரு எல்லைகள். மறுபிறப்பெனில் இங்கே பச்சைநிறப்புழுவென உடலே ஒளி கொண்டு இலைமேல் ஒட்டி உடலால் வெயிலை அருந்தி காலமில்லாது அமர்ந்திருக்கவேண்டும் என்று கற்பனைசெய்துகொண்டேன். இந்த மறுபிறப்பு என்பதுதான் எத்தனை முடிவற்ற வாய்ப்புகளை அளிக்கிறது நமக்கு.

***

முந்தைய கட்டுரைசை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது
அடுத்த கட்டுரைமீள்கை